தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிகதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
மாணிக்க மாடமாளிகை எங்கும் விளக்கெரிய
நறுமணம் கமழும் பஞ்சணையில் உறங்கிடும்
மாமன் மகளே, மணிக்கதவினைத் திறந்திடு
அத்தையே அவளை எழுப்பி விடுங்கள்!
ஊமையா? செவிடா? மயக்கத்தில் இருக்கிறாளா?
ஏதேனும் மந்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறாளோ?
மாயங்கள் செய்கின்ற மாதவன் வைகுந்தன்
நாமத்தைச் சொல்லவேண்டாமா? எழுந்திரு தோழியே!
பொருள்:
இன்று ஆண்டாள், இன்னொரு தோழியின் வீட்டிற்குச் சென்று அவளை எழுப்பப் பார்க்கிறாள். மாமன் மகள் என்று ஆண்டாள் அழைப்பதால், உறவுக்காரப் பெண் என்பது தெரியவருகிறது. இந்தத் தோழி மிகவும் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவள் என்பதை முதல் வரியிலேயே தெரிவித்து விடுகிறாள் ஆண்டாள்.
அவள் வசிக்கின்ற வீடு பெரிய மாட மாளிகையாய், பலவித நவரத்தினங்கள் பதித்து, மிகுந்த வேலைப்பாடுகளுடன் பலவிதமான அழகான அலங்காரங்கள் செய்யப்பட்ட வீடு போல் இருக்கிறது. ஜன்னல் வழியாகப் பார்க்கையில், அவள் படுத்திருக்கும் படுக்கை அறையோ வீட்டை விட இன்னும் அழகாக இருக்கிறதாம். அறையெங்கும் பலவிதமான விளக்குகள், தூக்கத்தைக் கெடுக்காத வண்ணம் மிக மெலிதாக எரிந்து ஒளி வீசிக்கொண்டு இருக்கிறதாம். அதோடு, அந்த விளக்குகள் புகை தெரியாதபடி, மயக்கும் நறுமணத்தைப் பரப்பிக்கொண்டு இருக்கிறதாம். அந்த தோழியோ அந்த அழகிய அறையில், பல வித இரத்தினங்கள் பதிக்கப்பட்ட, அழகான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டப் பெரியக் கட்டிலில், மெத்துமெத்தென்று இருக்கும் இலவம் பஞ்சு அடைக்கப்பட்ட மெத்தையில், தலையணையில் சாய்ந்து, சுகமாக உறங்கிக்கொண்டு இருக்கிறாள். அந்த அறையையும் கட்டிலையும் காணுகின்ற அந்தச் சூழ்நிலையில், உறக்கம் வராதவர்களுக்கு கூட, படுததவுடனே உறங்கிவிடும் அளவிற்கு இருந்தது என விவரிக்கிறாள் ஆண்டாள்.
இப்படி உலகத்தை மறந்து உறங்கிக்கொண்டிருக்கும் என் மாமன் மகளே எழுந்திரு. எழுந்து வந்து வாசல் கதவைத் திறந்து விடு என்று அழைக்கிறாள் ஆண்டாள். ஆனால் அவள் எழுந்திருக்கவில்லை. அதனால் அத்தையைப் பார்த்து, அத்தையே அவளை எழுப்பி விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறாள். அப்படியும் தோழி எழுந்திருக்க வில்லை. அதனால், அவளை கேலி செய்து பேசினால் எழுந்துவிடுவாள் என்று எண்ணி, அத்தையிடம், நாங்கள் இவ்வளவு சொல்லியும், பாடியும் எழுந்திடாமல் இருக்கிறாளே, இவளுக்கு காது கேட்காமல் போய்விட்டதா? ஒன்றுமே பேசாமல் இருக்கின்றாளே, வாய்ப்பேச முடியாத ஊமையாகிவிட்டாளா? இல்லை மிகுந்த அசதியில் அல்லது ஏதாவது மயக்கத்தில் இருக்கின்றாளா? ஒருவேளை ஏதாவது மாய மந்திரத்தில் சிக்கி எழமுடியாதபடி கிடக்கின்றாளா? ஏன் எழுந்திருக்க வில்லை? என்று வினவுகிறாள் ஆண்டாள். இப்படிக் கேட்டால், சினம்கொண்டு எழுந்துவிடுவாள் என்று நினைத்தால் ஆண்டாள், ஆனால் அவளோ எழுந்திருப்பது போல தெரியவில்லை.
இறுதியாக ஆண்டாள், என்ன மாயமந்திரம் செய்திருந்தாலும், கண்ணன் பெயரை சொன்னால், அதிலிருந்து விடுபட்டு எழுந்துவிடுவாள் என்று எண்ணி. நாம் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத பெரும் மாயங்கள் செய்கின்ற மாதவனை, அந்த வைகுண்ட நாதனின் பல அழகியப் பெயர்களை எல்லாம சொல்லி அவன் புகழ் பாடவேண்டாமா? நீ இப்படி உறங்கிக் கிடக்கின்றாயே சீக்கிரம் எழு, நாம் நம் பாவை நோன்பை தொடங்கலாம் என்று கூறுகிறாள். அதுவரையில் உறக்கத்தில் இருந்த அந்தத் தோழி, அந்த மாயக் கண்ணனின் பெயரைக் கேட்டதும், சட்டென்று எழுந்துவிடுகிறாள். ஒரு வழியாக அவளையும் அழைத்துக்கொண்டு மற்றத் தோழிகளை எழுப்பப் புறப்படுகின்றாள் ஆண்டாள்.
உட்பொருள்:
இந்தப் பாடலில் ஆண்டாள் தன் தோழியை எழுப்புவதாகப் பாடினாலும், இந்த பாடல், மானிடர்கள் அனைவருக்குமான ஒரு பாடலாகும். நாம் அனைவருமே பலவித மாயைகளில் சிக்குண்டு கிடக்கிறோம். பெரிய வீடு, நிறைய செல்வம், சொகுசான வாழ்க்கை, சுகபோகங்கள் என்று நிலையில்லாத புற பொருட்கள் மீது பற்றுக்கொண்டு அதிலேயே உழன்றுக் கொண்டு இருக்கின்றோம், ஆனால் உணமையான மகிழ்ச்சி இதுவல்ல. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு உண்மையான மகிழ்ச்சி அடையவேண்டும் என்றால், நிலையான ஒரு இடம் வேண்டுமென்றால், அது அந்த இறைவனை அடைவது தான். அதற்கு நாம் அவன் பெயரை உச்சரித்து இந்த மாயவலையில் இருந்து மீளவேண்டும். அதற்காகத் தான் ஆண்டாள் பாடுகிறாள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 8 - கீழ்வானம் வெள்ளென்று பாசுரம் 10 - நோற்றுச் சுவர்க்கம்