கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்ப் பாடி பறைகொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
கீழ்வானம் வெளுத்துவிட்டது எருமைப் பசுக்கூட்டமெல்லாம்
மேய்வதைப் பார்; தோழியர்பல சென்றுவிட மீதுமுள்ளோரைப்
போகவிடாமல் உனக்காக காக்கவைத்து உன்னை
எழுப்புவதற்காக வந்துநிற்கிறோம் குதூகலமுடைய அழகானப்
பெண்ணே எழுந்திரு! பெருமாளைப் பாடிபரிசு பெறலாம்!
குதிரைவடிவிலும் மல்லர்களாகவும் வந்த அசுரர்களைக் கொன்ற
தேவாதி தேவனானப் பெருமாளைச் சென்று வணங்கினால்
ஆஹா எனமகிழ்ந்து அருள்வானே! எழுந்திரு தோழியே!
பொருள்:
முதல் பாசுரத்திலிருந்து நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும். ஆண்டாள் அதிகாலையிலிருந்து நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், ஒவ்வொரு தோழிகளின் வீடுகளுக்கும் சென்று, தம் பாடல்களின் மூலம் சொல்வதைப் பார்க்கலாம். பறவைகள் எழுந்தவுடன் வரும் மெல்லிய சத்தம், பின்பு நிறைய பறவைகள் எழுந்துவுடன் கேட்கும் பெரும்சத்தம், தயிர்கடைகின்ற சத்தம் என்று வரிசையாகக் கூறுகிறாள், அதாவது அதிகாலையில் இருந்து ஒவ்வொரு தோழியாக எழுப்ப எழுப்ப நேரம் போய்க்கொண்டே இருக்கிறது என்பதை நாம் அறியலாம். அப்படி இந்தப் பாடலில், இன்னொரு தோழியின் வீட்டிற்குச் சென்று அவளை எழுப்புகிறாள்.
பாடலின் முதல் வரியில், 'கீழ்வானம் வெள்ளென்று' என தொடங்குகிறாள். அதாவது இதுவரை விடிந்தாலும் இருட்டாக இருந்தது, ஆனால், இப்போது கிழக்கு திசையில் மெலிதாக வெளிச்சம் கோடு போல் வர தொடங்கிவிட்டது. இவ்வூரில் எல்லோர் வீடுகளிலும் பசு, எருமைகள் உள்ளன. அதனால் வெளிச்சம் வரத் தொடங்கியதுமே, அவை எல்லாம் மேய்ச்சலுக்கு கிளம்பி விட்டன.
விடிந்ததும், அந்த எருமைகள் முதலில் வீட்டைச் சுற்றியுள்ள சிறு சிறு புற்களை மேயுமாம். அதன் பிறகு ஒவ்வொரு மாடுகள் வர வர, அவை எல்லாம், ஊர் எல்லையில் உள்ள பெரிய நிலப்பரப்புகளில், பரவி சென்று மேய்ந்திடுமாம். அதை தான் 'சிறுவீடு மேய்வான்' என்கிறாள் ஆண்டாள். இந்த மாடுகளை எல்லாம் பார், மேய்வதற்குச் சென்றுவிட்டன. ஆனால் நீ இன்னும் உறங்குகிறாயே எழுந்திரு என்று சொல்கிறாள் தோழியிடம்.
அப்படியும் எழுந்திருக்காத போது,. நான் முதலில் அழைத்தப் போதே பல தோழிகள் குளிப்பதற்கு கிளம்பிவிட்டார்கள். அவர்களில் சிலரை போகவிடாமல் தடுத்து உனக்காக காக்க வைத்துள்ளேன், எப்பொழுதும் கலகலவென்று குதூகலமாய் இருப்பவள் அல்லவா நீ? (கோது கலம் என்பது தான் பின்பு குதூகலம் என மருவிவிட்டது) ஏன் இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாய்?. எழுந்திரு அழகானப் பெண்ணே என்று சற்று குழைவாகக் கூறுகிறாள் ஆண்டாள்.
இவ்வளவு சொல்லியும் எழுந்திருக்க மறுக்கும் தோழியிடம், கண்ணனின் இரண்டு லீலைகளை விளக்குகிறாள். கேசி என்ற அரக்கனை, குழந்தைக் கிருஷ்ணனனைக் கொல்ல அனுப்புகிறான் கம்சன். அவன் குதிரை வடிவில் தன் வந்து, வாயை அகலத் திறந்து, கண்ணனைக் கொல்லப் பார்க்கிறான். கண்ணனோ, அவன் வாயைப் பிளந்து அவனைக் கொன்றுவிடுகிறான், இதை தான் 'மாவாய் பிளந்தானை' என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள், 'மா' என்றால் விலங்கு என்று ஒரு பொருள் உண்டு, இவ்விடத்தில் அது குதிரையைக் குறிக்கிறது.
பூதகி, சகடன், கேசி ஆகிய அரக்கர்களை அனுப்பியும் கண்ணனைக் கொல்ல முடியவில்லை என்றதால் கவலைப்பட்ட கம்சன், வேறு ஏதாவது தந்திரம் செய்து தான் கண்ணனைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து திட்டம் தீட்டுகிறான். கண்ணனை அவன் இடத்திற்குச் சென்று தான் நம்மால் கொல்லமுடியவில்லை. அதனால் அவனை தந்திரமாக நம் இடத்திற்கு வரவைத்து கொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறான். அதன்படி, கண்ணன் மற்றும் பலராமனை தன் அரன்மணையில் நடைபெறும் யாகத்திற்கு அழைக்கிறான். அப்படி அவர்கள் வரும் பொழுது, மல்யுத்தத்தில் தேர்ச்சிப்பெற்ற இரண்டு மல்யுத்த வீரர்களைக் கொண்டு அவர்களை கொன்று விட வேண்டும் என்பது தான் அவனது திட்டம். ஆனால் பரமாத்மாவான கண்ணனிடம் அவன் திட்டம் பலிக்குமா? அவர்கள் இருவரையும் கண்ணன் கொன்று விடுகிறான். இது தான் 'மல்லரை மாட்டிய' என்ற வரியில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். இரண்டு கதைகளை ஒரே வரியில் சொல்லி விட ஆண்டாளால் தான் முடியும்.
இப்படி சிறப்பு வாய்ந்த தேவர்களுக்கெல்லாம் தேவராக விளங்கக்கூடிய நம் பெருமாளை சென்று நாம் வணங்கினால். அவன் நம் பக்தி கண்டு ஆஹா என்று மகிழ்ந்து நமக்கு அருள்தருவான். ஆதலால் சீக்கிரம் எழுந்திருப் பெண்ணே நாம் பாவை நோன்பிற்கு போகலாம் என்று தன் தோழியை இந்த பாசுரம் மூலம் அழைக்கிறாள் ஆண்டாள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்