கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
வலியன் குருவிகள் பேசும் பேச்சுகள்
கேட்க வில்லையோ அறியாப் பெண்ணே
மணம்பரப்பும் கூந்தலுடையப் பெண்களின் பேச்சும்
தயிர்க் கடைகையில் வரும்சத்தமும் அசையும்
ஆபரணங்கள் எழுப்பு ஓசையும் கேட்கவில்லையா?
எங்கள் தலைவியே நீயேஇப்படி நாராயணனாகிய
கேசவன் புகழ்பாட்டைக் கேட்டும் உறங்கலாமா?
ஒளிப்படைத்த அழகுடையவளே எழுந்திரு தோழியே!
பொருள்:
சென்றப் பாடலில், பெருமாள் மேல் பக்திக்கொண்ட தோழியை எழுப்பிட குழந்தைக் கண்ணனின் லீலைகளை சொல்லியும் இன்னும் உறங்கும் தோழியைக் கண்டு சற்று சினம் கொண்டு, உரிமையோடு செல்லமாகக் கண்டித்து, அந்தக் காலை வேளையில் நிகழும் மற்ற நிகழ்வுகளையும் கூறி மீண்டும் எழுப்புகிறாள் ஆண்டாள்.
முதல் வரியில் ஆண்டாள் குறிப்பிட்டுள்ள ஆனைச்சாத்தன் என்பது ஒரு பறவையாகும். (இப்பறவைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்) பகலெல்லாம் இரைத்தேடப் பிரிந்துச் செல்வதால், அதிகாலையில் தன் இணைப் பறவைகளிடம் கீச்சு கீச்சு என்று மனிதர்கள் போலவே பேசிக்கொண்டிருக்குமாம் இந்த ஆனைச்சாதன் பறவைகள். ஒரு குருவி பேச, மறு குருவி பதில் சொல்லுமாம். இதை தான் 'ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம்' என்று ஆண்டாள் கூறுகிறாள். பறவையின் சத்தம் என்று சொல்லவில்லை ஆண்டாள், 'பேச்சரவம்" என்று கூறுகிறாள், பறவைகள் பேசும் சத்தம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறாள் ஆண்டாள். அப்படி அந்தப் பறவைகள் பேசும் பெரும் சத்தம் கேட்கவில்லையா? பறவைகள் எழுந்து பேசிக்கொண்டிருக்கின்றன, ஆனால் நீ இன்னும் பெருமாளை வணங்க எழுந்திருக்காமல், அறிவில்லாப் பேய்போல் உறங்கிக்கொண்டிருக்கிறாயே பெண்ணே என்று தன் தோழியை ஆண்டாள் உரிமையோடு கோபித்துக்கொள்கிறாள்.
இப்படி தன் தோழியை ஆண்டாள் எழுப்பும் போது, காற்றில் மலர்களின் நறுமணம் வீசுகிறது. ஆண்டாளுக்கு இந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியும். ஆய்ச்சியர் பெண்களின் கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து வருகிறது. (குறுந்தொகையில், புலவர் இறையனார் இயற்றிய 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி' என்ற பாடலில், பாண்டிய அர்சன் செண்பகபாண்டியனின், பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டா? என்ற கேள்விக்கு விடையாய் உள்ள பாடல் நினைவுக்கு வருகிறது) அந்த ஆய்ச்சியர், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே, அவர்கள் தயிர் கடையும் ஓசையும் கேட்கிறது. இங்கே ஆண்டாள், 'கைபேர்த்து' என்று குறிப்பிடுகிறாள். அதாவது, ஆயர்பாடியில் இருக்கும் தயிர் மிகவும் கெட்டியாக இருக்கிறது. அதை மத்தினால் கடைவது, பேர்த்து எடுப்பதை போல் ஓசை எழுப்புகிறதாம். அதோடு தயிர் கடைகையில், ஏற்படும் அசைவுகளால், ஒன்றோடு ஒன்று உரசும், கழுத்தில் அணிந்த ஆபரணங்கள் மற்றும் வளையல்களின் ஓசையும் கேட்கிறது. இத்தனை ஓசைகள் கேட்டும் எப்படி உன்னால் உறங்கமுடிகிறது. இந்த தோழியை ஆண்டாள் 'நாயகப் பெண்பிள்ளாய்' என்று விளிக்கிறாள். அதாவது, அவள் தான் எல்லா தோழிகளுக்கு தலைவியாம். தலைவியான நீயே இப்படி உறங்கிக் கிடக்கலாமா என்று அங்கலாய்த்துக் கொள்கிறாள் ஆண்டாள்.
இந்த சத்தங்களை எல்லாம் விட, கேசி என்னும் அரக்கனைக் கொன்றதால் கேசவன் என்ற பெயர்க்கொண்ட நாராயணமூர்த்தியின் புகழை நாங்கள் எல்லோரும் உரக்கப் பாடுவதைக் கேட்டுமா இன்னும் உறங்குகிறாய்? ஒளி வீசும் அழகானத் தோற்றமுடையவளே சீக்கிரம் கண் விழித்து எழுந்திரு, கதவைத் திற,. நாம் நாராயணனை தரிசிக்க செல்வோம் என்று தோழியை எழுப்புகிறாள். முதலில் 'பேய்ப்பெண்ணே' என்று கடிந்துக்கொண்ட ஆண்டாளே பின்பு அவளை 'தேச முடையாய்' என்று புகழ்ந்து பாடுகிறாள். புகழுக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டோ என்ன? ஒளிப் படைத்த முகம் என்று புகழ்ந்ததும், மனம் மகிழந்து, இனியும் ஆண்டாளைக் காக்க வைக்கக்கூடாது என்று எழுந்துவிடுகிறாள் தோழி.
ஆனைச்சாதன் பறவை என்றால் என்ன?
இப்படி ஒரு பறவையைப் பற்றி கேள்விப்படதில்லையே என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அல்லவா? ஆனால் நாம் கிராமங்களில் கண்டிப்பாக இப்பறவையைப் பார்த்திருப்போம். அந்தப் பறவைக்கு கரிக்குருவி, கரிச்சான் குருவி, வலியன், ரெட்டைவாலி மற்றும் பரத்வாஜப் பறவை என்று பல பெயர்கள் உண்டு. பரத்வாஜ முனிவர் ஒரு சமயம் இந்தக் குருவி வடிவில் சென்று பரந்தாமனை வழிபட்டார் என்பதால் இது பரத்வாஜப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது என்று ஒரு பழங்கதை உண்டு. இதை செம்போத்து பறவை என்றும் சிலர் சொல்கிறார்கள், ஆங்கிலத்தில் Drongo என்பது இதன் பெயர். சரி, இத்தனை பெயர்கள் இருக்கையில், அதை ஆண்டாள் ஏன் ஆனைச்சாத்தன் என்று அழைக்கிறாள்?
ஆனை என்பது யானையின் மரூஉ. யானையைப் போன்ற வலிமையைக் குறிக்கிறது. அதனால் தான் 'வலியன்' என்று இப்பறவையை மக்கள் அழைக்கிறார்கள்.
சாத்தன் என்பது ஊரைக்காக்கின்ற எல்லை சாமி, ஐயனார்.
இப்பறவைகள் வலிமையான, துணிவு மிக்க பறவைகள். இப்பறவையைக் கண்டு மற்ற பெரியப் பறவைகளான, கழுகு, வல்லூறு போன்றவைகளே அஞ்சுமாம். இந்தப் பறவை ஒரு மரத்தின் உச்சியில் கூடு கட்டினால், மற்ற சிறு பறவைகள் அந்த மரத்தில் மற்ற கிளைகளில் பயமில்லாமல் தங்கள் கூடுகளைக் கட்டுமாம். அப்படி யானை போன்ற வலிமையுடன், மற்றச் சிறு பறவைகளை எதிரிகளிடம் இருந்து காப்பதால், இதற்கு ஆனைச்சாத்தன் என்ற பெயர் வந்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், "ஆனைச் சாத்தன்" என்பது அடியவரின் (யானையின் வலிமைக்கு ஒப்பான) ஐம்புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி, தன் வசம் சேர்த்துக் கொள்ளும் பரந்தாமனை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. அதனால் தான் ஆண்டாள், பெருமாளைப் பற்றி பாடும் பாட்டில் ஆனைச்சாத்தன் என்ற பெயரை பயன்படுத்துகிறாள்.
காசும் பிறப்பும் என்று ஆண்டாள் குறிப்பிடுவது என்ன?
இந்த இடத்தில் காசும் பிறப்பு என்பது, திருமணமான பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் 'தாலி' என்ற ஆபரணத்தைக் குறிக்கிறது.
காசு - காசு மாலை
பிறப்பு - ஆமைத்தாலி, அச்சுத் தாலி, பொடிப்பொடியாக சிறு சிறு உருவங்கள் கொண்டு கோர்த்து இருக்கும் ஒரு கழுத்து அணியும் ஆபரணம்..
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 6 - புள்ளும் சிலம்பின பாசுரம் 8 - கீழ்வானம் வெள்ளென்று