Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 6 - புள்ளும் சிலம்பின

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிந்தேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

அதிகாலைப் பறவைகளின் இனிய ஓசையும்
    நடைதிறந்த கோவில் சங்கின் நாதமும்
செவிதனில் விழவில்லையா எழுந்திரு தோழியே
    நச்சுப்பால் கொடுத்த அரக்கி பூதகி மற்றும்
சகடனெனும் அசுரனையும் கொன்று; பாற்கடலில்
    பள்ளிகொண்டிருக்கும் அந்தப் பெருமாளை யோகியர்
ஹரி ஹரி என துதிக்கும் பேரொலி கேட்கவில்லையா
    மகிழ்ந்து உள்ளம் குளிரட்டும்; எழுந்திரு தோழியே!

 

பொருள்:

கடந்த ஐந்து பாசுரங்களில், எல்லா தோழியரையும் எழுப்பிட பாடிய ஆண்டாள், இந்தப் பாடலில், பெருமாள் மீது பக்தி கொண்ட ஒரு தோழியை மட்டும் எழுப்பிட பாடுகிறாள். அவளுக்கு, அந்த காலைவேளையில் நடைபெறும் நிகழ்வுகளையும், ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் பொழுது நடந்த இரு நிகழ்வுகளையும் கூறி சீக்கிரம் எழுந்திரு, பெருமாளை தரிசிக்க செல்லாம் என அழைக்கிறாள்.

அதிகாலையில் பறவைகள் எல்லாம் எழுந்து மெதுவாக சோம்பல் முறித்துப் பாடிடும் இந்த இனிய ஒலிகள் எல்லாம் உன் காதில் கேட்கவில்லையா? பறவைகளின் அரசனான அந்த கருடனை வாகனமாகக் கொண்ட அரசனான பெருமாளின் கோவில் திறக்கப்பட்டு காலைவேளையில் ஊதுகின்ற அந்த வெண்சங்கில் இருந்து புறப்பட்டு வருகின்ற நாதமும் காதில் விழவில்லையா? என்று கேட்கும் ஆண்டாள், ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் பொழுது புரிந்த இரு லீலைகளை இருவரிகளில் முழுவதும் கூறுகிறாள்.

குழந்தை கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் பல வழிகளில் முயல்கிறான். சிறு குழந்தையாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல, பூதகி என்னும் அரக்கியை அனுப்புகிறான். அவள் ஒரு அழகான பெண்ணாக மாறி, குழந்தை கிருஷ்ணனனை தூக்கி, மார்போடு அணைத்து, தன் மார்பகங்களில் இருந்து நஞ்சு கலந்து பாலை ஊட்டுகிறாள். ஆனால் குழந்தையாக இருந்தாலும் கிருஷ்ணர் அவதாரமல்லவா? அவருக்கு இந்த சூழ்ச்சி தெரியாதா என்ன? அதனால், பாலோடு பூதகியின் உயிரையும் உறிஞ்சி அவளைக் கொன்று விடுகிறார். தாய்ப்போல் தாய்ப்பால் கொடுத்ததால் அவளை துன்புறுத்தாமல், பால் குடிக்கும்பொழுதே அவள் உயிரை அமைதியான முறையில் எடுத்து, அவள் தாய்மைக்கு மதிப்பளிக்கிறார் கிருஷ்ணர். இந்தக் கதையை தான் 'பேய்முலை நஞ்சுண்டு' என்ற இரு சொற்களில் சொல்லிவிடுகிறாள் ஆண்டாள்.

பூதகியை கிருஷ்ணன் கொன்று விட்டதால், அடுத்து சகடன் எனும் அரக்கனை அனுப்புகிறான் கம்சன். யசோதை குழந்தை கிருஷ்ணனை தூக்கிக்கொண்டு மாட்டு வண்டியில் ஓரு இடத்துக்குச் செல்கிறாள். வழியில் வெயில் அதிகமாக இருப்பதால், குழந்தையை வண்டிக்கு அடியில் நிழலில் படுக்க வைத்துவிட்டு, ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிறாள் யசோதை. அந்த நேரத்தில் சகடன், வண்டிச்சக்கரமாக மாறி, அந்தச் சிறு குழந்தை மேல் விழுந்து நசுக்கிக் கொன்று விடலாம் என்று எண்ணி, கைகாலை ஆட்டிக்கொண்டிருக்கும் அந்த குழந்தை மேல் விழப்பார்க்கிறான். இதை அறிந்த குழந்தைவடிவில் இருக்கும் பெருமாள், தன் கால்களால் சகடனை ஓங்கி உதைக்கிறார். சகடன் மடிந்து விடுகிறான், 'கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி' என்ற வரியில் இந்தக் கதையையும் சொல்லுகிறாள் ஆண்டாள்.

அப்பேற்பட்ட கண்ணன், பாற்கடலில், ஆதிசேஷன் என்ற நாகத்தை மெத்தயாக்கி பாற்கடலில் பள்ளிக்கொண்டு இருக்கின்றான். அவனை முனிவர்களும் யோகிகளும் 'ஹரி ஹரி' என்று துதித்துக்கொண்டிருக்கும் பேரொலி உனக்கு கேட்கவில்லையா? சீக்கிரம் எழுந்திரு, மார்கழி நீராடி நாமும் அந்த கண்ணனைக் காண செல்லலாம். உள்ளம் மகிழ்ந்து குளிரட்டும், வா தோழியே என்று அழைக்கிறாள்.

 

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 5 - மாயனை மன்னு                                                                                                                                         பாசுரம் 7 - கீசு கீசு என்றெங்கும்

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net