Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 5 - மாயனை மன்னு

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனை துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூவித் தொழுது
வாயினாற் பாடி மனதினாற் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

மாயக் கண்ணனான மதுராவில் பிறந்தவனை
    தூயநீர் பெருக்கெடுத்து ஓடும் யமுனைநதி தலைவனை
ஆயர் குலத்தினில் தோன்றிய ஒளிமிகுந்தவனை
    தாயிற்கு புகழ் சேர்த்த தாமோதரனை
தூயவுடல் மனதோடு பூக்கள்தூவி வணங்கி
    வாயினால் அவன்புகழ் பாடி மனதாலே சிந்தித்தால்
போய்விடும் நமை விட்டு நாம்
    அறிந்தோ அறியாமலோ செய்தசெய்யும் பிழைகள்யாவும்
தீயில் எரிந்து காணாமல் போய்விடும்
    ஆகையினால் நோன்பிருக்க வாருங்கள் தோழியரே!

 

பொருள்:

சென்ற பாசுரத்தில் மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்று கண்ணனுக்குச் சொன்ன ஆண்டாள், இந்த பாசுரத்தில் அந்த கண்ணனின் சிறப்புகளை தன் தோழியருக்கு எடுத்து கூறுகிறாள். அது மட்டுமன்றி, மனிதர்களாகிய நாம், செய்யும் வினைகளால் (பாவம்) தான் நமக்கு மீண்டும் மீண்டும் பிறவி ஏற்படுகிறது. இப்பிறவிச் சுழலில் இருந்து விடுபட ஒரு எளிய வழியையும் இந்தப் பாடலில் நமக்கு காட்டுகிறாள் ஆண்டாள்.

கண்ணன் என்றாலே மாயக் கண்ணன் தான், பல மாயங்கள் செய்தவன் அந்தக் கண்ணன், கோபிகையர்களிடம் குறும்பும் செய்வான், அரக்கரகளை அழித்தும் விடுவான். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான். அப்படிப்பட்ட மாயக்கண்ணன், வடக்கில் உள்ள மதுராவில் பிறந்தவன். தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடும் புனிதமான யமுனை நதிக்கரையில் வளர்ந்தவன், அந்த நதிக்கு மேலும் புனிதம் சேர்த்த தலைவன். பசுக்களை மேய்க்கும் ஆயர் குடியில் பிறந்து வளர்ந்து, பிரகாசிக்கும் மணி போல் ஒளி வீசுபவன். பெற்ற தாயான தேவகிக்கும், வளர்த்த தாயான யசோதைக்கும் புகழ் சேர்த்தவன். (இங்கு குடல் என்று சொல்லியிருப்பது வயிறைக் குறிகிறது, அதாவது பெற்ற வயிறு என்றூ சொல்வோம் அல்லவா?)

அப்படிப்பட்டச் சிறப்பு வாய்ந்தவனின் புகழை, வாய்மணக்க நம் வாயால் பாடி, அதே நேரம் மனமும் அவனையே சிந்தித்து இருந்தால், நாம் இது வரை தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழைகள் மட்டுமல்லாது, இனிமேலும் தெரியாமல் செய்யும் பிழைகளும், தீயினில் விழுந்த தூசு போல் எரிந்து காணாமல் போய்விடும். அதனால், நாம் செய்யும் தவறுகளால் ஏற்படும் பிறவிகள், வரமால் போக வாய்ப்புண்டு. அதனால் வாருங்கள் தோழியரே நாம் நீராடி அவனை வணங்கலாம் என்று தன் தோழிகளை அழைக்கிறாள்.

தாமோதரன் பெயர்க் காரணம்

தாம + உதரன் = தாமோதரன். தாம் என்றால் கயிறு (தாம்புக் கயிறு), உதர என்றால் வயிறு.

கண்ணன் சிறுவனாக இருக்கும் பொழுது மிகுந்த குறும்புகள் செய்வான், வெண்ணெய்யை திருடி உண்பான். கோபிகளை அடிக்கடி வம்பிழுத்து அவர்களைப் பாடாய் படுத்துவான். அதனால் அவர்கள் யசோதையிடம் சென்று முறையிடுவார்கள். தாய் யசோதை கண்டித்தும், கண்ணன் தன் குறும்புகளை விடாமல் இருந்ததால், பொறுத்து பொறுத்துப் பார்த்த யசோதை, கண்ணனை வீட்டில் ஒரு தூணில் கட்டிவைக்க எண்ணினாள். அங்கு இருந்து ஒரு தாம்புக்கயிறை எடுத்து வயிற்றோடு தூணில் கட்டப்பார்த்தாள். ஆனால் கயிறு போதவில்லை. இன்னொரு கயிறை கொண்டு சேர்த்து கட்டினாள், அப்போதும் முடியவில்லை. இதுபோல் பல கயிறுகளை சேர்த்துக் கட்டக் கட்ட, மாயக் கண்ணனின் வயிறும் பெருத்துக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் 'அட கடவுளே' இது என்ன இந்த பிள்ளை இப்படி என்னை சோதிகிறானே என்று அலுத்துக்கொண்டாள். உடனே, கண்ணன் தன் பழைய நிலைக்கு வந்தான், உடனே அவனை யசோதை தூணோடு சேர்த்துக் கட்டிவிட்டாள். இறுக்கிக் கட்டியதால் ஏற்பட்ட தழும்பை உடையவன். இப்படி தாம (கயிறு) கொண்டு உதர (வயிறு) வயிற்றைக் கட்டியதால் தான், தாம் + உதர சேர்ந்து தாமோதரன் என்ற பெயர் ஏற்பட்டது.

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 4 - ஆழிமழைக் கண்ணா!                                                                                                                                பாசுரம் 6 - புள்ளும் சிலம்பின

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net