Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 4 - ஆழிமழைக் கண்ணா!

ஆழிமழைக் கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியில் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந்த் தோளுடையப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைப்போல்
வாழ உலகினிற் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

ஆழிமழைப் பெய்திட கண்ணா ஒன்றுசெய்ய மறவாதே
    கடலில் புகுந்து நீரெடுத்து ஆர்ப்பரித்து மேலேறி
மேகமதில் புகுத்தி கருமை நிறமாக்கி
    திடமான அகன்ற தோளுடைய பதம்நாபன் கையிலுள்ள
சக்கரமாய் மின்னல்மின்னி வலம்புரிசங்காய் இடியிடித்து
    வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென நிற்காமல் மழைபெய்து
உலக உயிர்களை வாழ வைத்திடு; நாங்களும்
    மார்கழியில் நீராடி மகிழ்ந்திடுவோம்; வாருங்கள் தோழியரே!

 

பொருள்:

சென்ற பாசுரத்தில், மழைபெய்தால் எனென்ன நன்மைகள் நேரும் என்பதைப் படம்பிடித்துக் காட்டிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் மழை எப்படி பொழியவேண்டும் என்று கட்டளை இடுகிறாள். கடவுள் மீது பக்திக்கொண்டவர்கள், கடவுளிடம் வேண்டுவார்கள். கடவுளைத் தவிர வேறெதுவும் எண்ணாதவர்கள், அந்தப் பக்தியில் திளைத்து, அந்த கடவுளிடமே உரிமையாக, இவற்றை செய்யவேண்டும் என்று, 'கைகரவேல்' என கட்டளையிடுகிறாள்.

இன்று நாம் அறிவியல் பாடங்களில், மழை எப்படி பெய்கிறது என்று படிக்கிறோம். ஆனால் ஆண்டாள், அன்றே, மழை இப்படித்தான் பெய்கிறது என்பதை விளக்கி, இதுபோல் மழைபெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். வருண பகவான், மழை பொழியவைக்கிறார், ஆனால் ஆண்டாளுக்கு எல்லாமே கண்ணன் தான், அதனால் வருணபகவானைக் கூட 'ஆழி மழைக்கண்ணா' என்று அழைக்கிறாள். கண்ணன் என அழைத்து, நான் சொல்வதை செய்யாமல் இருந்துவிடாதே என்று கூறுகிறாள். அது என்ன?

கடலில் பெருகியிருக்கும் நீரை, கடலில் புகுந்து எடுத்து, ஆர்பரித்துக்கொண்டு வானேறி, மேகங்களில் சேர்த்துவிடு. அதனால் அந்த வெண்மையான மேகங்கள் கறுத்து கார்மேகமாய் ஆகட்டும். மேகம் கறுத்திருப்பதை, 'ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து' என்கிறாள் ஆண்டாள். ஊழிக்காலம் என்பது, பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்தபின் இருக்கும் அந்த நிலை. அப்பொழுது எங்கும், இறைவன் ஒருவனைத் தவிர இருள் மட்டும் தான் இருக்கும், ஆண்டாளுக்கு எல்லாமே கண்ணன் என்பதால், ஊழி முதல்வன் என கண்ணனை குறிப்பிட்டு இருக்கலாம். (ஆனால் என்னைப் பொறுத்த வரையில், ஊழி முதல்வன் என்பது, சிவனைத் தான் குறிக்கும், இது என்னுடைய கருத்து)

அப்படிக் கறுத்த மேகம் எப்படி மழை பொழிய வேண்டுமாம்? வலிமையான அகன்ற தோளுடைய, பதபநாபன் கையில் இருக்கும் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான, சுதர்ஸன சக்கரம் போல் மின்னல் மின்னி, இன்னொரு ஆயுதமான வலம்புரி சங்கிலிருந்து புறப்படும் நாதம் போல் இடி இடித்து, மற்றொரு ஆயுதமான வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் போல், மழை சரம் சரமாக பொழியவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். 'சார்ங்க முதைத்த சரமழைப்போல்' என்று ஆண்டாள் கூறக் காரணம், ஒரு பந்தை உதைத்தால் எப்படி வேகமாகப் போகுமோ, அதுபோல் மெதுவாக இல்லாமல், வேகமாக பொழியட்டும் என்று பொருள் பட கூறுகிறாள். (அம்பு மழை என்று கூற கேள்விப்பட்டு இருபீர்கள், மழை போல் அம்புகள் வந்தன என்பது அது. ஆனால் இங்கு அம்பு போல் மழை பெய்யவேண்டும் என்று கூறுகிறாள், அதாவது யுத்தத்தின் போது, நிற்காமல் அம்புகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருப்பதைப் போல மழையும் நிற்காமல் தொடர்ந்து பொழியவேண்டும் என்று ஆசைப்படுகிறாள்)

இந்த மாதரி மழைப்பெய்து உலக உயிர்களை நன்றாக வாழ வை, அப்படி மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பினால், நாங்களும் மார்கழி மாதத்தில் மகிழ்ந்து நீராடி நோன்பிருக்க முடியும் என்று பாடுகிறாள் ஆண்டாள்.

திருமாலின் பஞ்சாயுதங்கள்

  • பாஞ்சசைன்யம் - சங்கு
  • சுதர்சனம் - சக்கரம்
  • கௌமோதகி - கதை
  • சார்ங்கம் - வில்
  • நந்தகம் - வாள்

 

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 3 - ஓங்கி உலகளந்த                                                                                                                                                 பாசுரம் 5 - மாயனை மன்னு

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net