Chidhambaram Natarajar Temple

Aandaal

பாசுரம் 3 - ஓங்கி உலகளந்த

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
பூங்க்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

 ஆண்டாள்.

 

எனது எளிய வடிவம்:

மூவடியாலே மூவுலகளந்த பெருமாள் புகழ்பாடி
    பாவை நோன்பிருந்து நீராடிநாம் வழிபட்டால்
தீங்கேதும் இல்லாது மாதம் மூன்று மழைபெய்து
    தேங்கும் நெற்பயிர் நீரிடை மீன்கள் நீந்தும்
பூக்களில் தேனருந்தி வண்டுகள் மயங்கி கண்மூடும்
    ஆக்கூட்டம் மகிழ்ந்து கன்றுகள் உண்டபின்
வாங்கிட முடியாவண்ணம் பாலைச் சொரியும்
    நீங்காத செல்வம் நிலைத்து நிறைந்திடு மெங்கும்
வாருங்கள் தோழியரே!

 

பொருள்:

'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்ற முதல் வரியில் ஆண்டாள், விஷ்ணு பகவானின், தசாவதாரத்தின் வாமன அவதார கதையை சொல்லாமல் சொல்லிவிட்டாள். மாபலி அரசனின் ஆணவத்தை அழிக்கும் வண்ணம், குள்ள உருவத்தில் இருந்து விஸ்வரூப தரிசனம் கொடுத்து மூன்று அடிகளால் மூவுலகை அளந்த அந்த பெருமானின் புகழ் பாடி, பாவை நோன்பிருந்து, நீராடி வழிபட்டால் எனென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை இப்பாடலில் படம்பிடித்துக்காட்டுகிறாள் ஆண்டாள். இவ்வுலகில் நேரும் பல துன்பங்களுக்கு காரணம், மழை பொய்த்துவிடுவது தான். இதை தான் திருவள்ளுவரும்,

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

என்று கூறுகிறார். அப்படிப்பட்ட அரும் மழை பெய்தால் என்னென்ன நேரும் என்பதை சொல்ல சொல்ல, நம் மனத்திரையில் அந்த காட்சிகள் விரிவதைக் காணலாம், கண்ணபெருமானை நோன்பிருந்து வழிபட்டால், மாதம் மூன்று முறை பொய்க்காமல் மழை பொழியும். வேண்டிய அளவு பெய்யும் மழையால், பூமியில் எல்லா உயிர்களும் செழித்து வளரும். எங்கும் பசுமையாகக் காட்சியளிக்கும். வயல்களில் நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கும். பயிர்களுக்கிடையில் இருக்கும் தேங்கிய நீரில், மீன்கள் நீந்தி விளையாடும். சோலைகளில் எல்லாம் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும். அந்த மலர்களை தேடிவரும் வண்டுகள், வேண்டுமளவு தேனை உண்டு, அந்த மலர்களிலேயே, 'உண்ட மயக்கம் தொண்டனுக்கும்' என்பது போல் கண்மூடி கிறங்கி உறங்கி இருக்குமாம். செழித்து வளர்ந்த பசும்புற்களை உண்டு கொழுத்தப் பசுக்கள், கன்றுகள் குடித்தது போக மிச்சம் உள்ள பால் அமுதத்தை, பால் கறக்க கொண்டு வரும் குடங்கள் கொள்ளாத வண்ணம், குடம் குடமாய் பால் சுரக்குமாம். வள்ளல் போல அள்ளிக்கொடுக்குமாம்.

இவ்வாறாக, நீர்வளம், நிலவளம், பால்வளம் என எல்லா வளங்களும் பெருகும். இந்த வளங்களால் உண்டாகும் செல்வங்கள் எல்லாம், நம்மை விட்டு விலகாமல் நிலைத்து நிறைந்து இருக்கும். ஆதலால் வாருங்கள் தோழியரே என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

மும்மாரி பற்றி மேலும் அறிய இந்த இணைப்பை பாருங்கள்

பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்

 

பாசுரம் 2 - வையத்து வாழ்வீர்காள்                                                                                                                          பாசுரம் 4 - ஆழிமழைக் கண்ணா!

 

தொடர்புடைய கட்டுரைகள்

Rainfall

மும்மாரி

Aandaal

பாசுரம் 17 - அம்பரமே தண்ணீரே

Aandaal

பாசுரம் 30 - வங்கக்கடல் கடைந்த

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net