வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பார்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரெஎம்பாவாய்!
ஆண்டாள்.
எனது எளிய வடிவம்:
வையகத்தில் வாழ்பவரே நம்பாவை நோன்பிற்கு
கடைபிடிக்க வேண்டியவை சொல்லுகின்றேன் கேளுங்கள்
பாற்கடலில் துயிலும் பெருமாளின் அடிதொழுது
நெய்பால் உண்ணாது வைகறையில் நீராடி
மையிட்டு மலர்ச்சூடும் ஒப்பனைகள் செய்யாமல்
தீவினைகள் செய்யாது தீயச்சொற்கள் சொல்லாது
தானமும் தர்மமும் அத்தனையும் அளித்து
நன்னெறியில் மகிழ்ந்து வாழ்வோம் தோழியரே!
பொருள்:
மார்கழி மாதத்தில் நோன்பிருக்க அழைக்கும் ஆண்டாள், அந்த நோன்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இந்த இரண்டாம் பாசுரத்தில் எடுத்து உரைக்கிறாள்.
'பையத்துயின்ற' என்று ஆண்டாள் சொன்னதற்குக் காரணம், பெருமாள் மானிடர்களைப் போல உறங்குவதில்லை. உறங்கும் பாவனையில் சிந்தனைவயப்பட்டிருக்கிறான் என்று பாடுகிறாள். அப்படி பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாளின் அருளைப் பெற, நோன்பிருக்கும் பொழுது, அதிகாலையில் எழுந்து நீராடி, நெய், பால் போன்ற உணவுகளை உண்ண வேண்டாம் என்று கூறுகிறாள். ஏன் நெய்யும் பாலையும் மட்டும் சொல்கிறாள்? ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆயர்பாடி போல் பசுக்கள் அதிகம் உள்ளன. அதனால் அங்கு பாலும் நெய்யும் அதிகம் கிடைக்கும். அப்படி நிறைய கிடைக்கும் ஒன்றை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது தான் கட்டுப்பாடு. நெய்யும் பாலும் கிடைக்காத இடத்தில், அவற்றை உண்ணாமல் இருப்பது சிறப்பல்ல, கிடைக்கும்பொழுதும் அதை தொடாமல் இருப்பது தான் சிறப்பு. வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து, கட்டுப்பாடு கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டாள் இதைக் கூறுகிறாள்.
அடுத்து, பெண்களுக்கு விருப்பமான ஒப்பனைகள் செய்வதை, செய்யவேண்டாம் என்று கூறுகிறாள். ஏன் ஒப்பனைக் கூடாது? மையிட்டு, மலர்சூடி ஒப்பனைகள் செய்யும் பொழுது, கவனம் இறைவனின் மேலிருந்து விலகிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் நம் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக இவற்றை வலியுறுத்துகிறாள். மேலும், பெரியோர்கள் எந்தெந்த செயல்களையெல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்களோ, அவற்றை செய்யாமலும், பிறரைப் பற்றி புறம் பேசாமலும் இருக்கவேண்டும் என்றும் கூறுகிறாள். அடுத்தவரைப் பற்றி அவதூறு பேசும்பொழுது நம்மை அறியாமலே நம் மனதில் வெறுப்பு உருவாகக்கூடும் என்பதற்காகத்தான் புறம் சொல்லக்கூடாது என்கிறாள். செய்யக்கூடாது என பலவற்றை சொன்ன ஆண்டாள், என்ன செய்யவேண்டும் என்பதை ஒரே வரியில் சொல்லிவிட்டாள். அதாவது, யாசகம் கேட்டு வருபவர்களுக்கு தம்மால் இயன்றதை கொடுக்கவேண்டும். அப்படி முடியாதபோது, யாரால் கொடுக்கமுடியுமோ அவர்களை அடையாளம் காட்டி உதவிடவேண்டும் என்கிறாள். இப்படி நல்ல நெறிகளில் நடந்து, மகிழ்ந்து நோன்பிருப்போம் வாருங்கள் தோழியரே என்று அழைக்கிறாள்.
உட்பொருள்:
இறைவனின் அருளைப் பெற்று அவனைச் சரணடைய, பக்தியோடு கட்டுப்பாடும், இறை சிந்தனையில் இருந்து கவனம் சிதறாமலும் இருக்கவேண்டும். மனதை ஒருமுகப்படுத்துவது தான் மிகவும் சிரமமானக் காரியம். அதை தான் இந்தப்பாடல் உணர்த்துகிறது.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்
பாசுரம் 1 - மார்கழித் திங்கள் பாசுரம் 3 - ஓங்கி உலகளந்த