மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நீரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீகாள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலா ரெம்பாவாய்!
ஆண்டாள்
எனது எளிய வடிவம்:
மார்கழி மாதம் பௌர்ணமித் திருநாளின்று
சீரும்சிறப்புடைய ஆயர்ப்பாடிக் கன்னியரே
நீராடப் போகலாம் வாருங்கள் அனைவரும்!
கூர்வேல் கொண்டு காக்கின்ற நந்தகோபன் குமரனும்
பேரெழில்விழியாள் யசோதையின் இளஞ்சிங்கமுமான
கார்வண்ணமேனியும் சிவந்த விழிகளும்
சூரியன் சந்திரன் போல் முகமுமுடைய
நாராயணன் நமக்கு நல்பரிசுகள் தருவான்
வாருங்கள் விரைவாய் குளித்து பாவை நோன்பிருக்க
பார்போற்றும் நம்மை தோழியரே!
பொருள்:
ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்ப்பாடியாகவும், தன் தோழிகளை கோகுலத்து கோபிகைகளாகவும் எண்ணி, செல்வச்செழிப்புக் கொண்ட இவ்வாயர்பாடியில் வாழும், அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே, இறைவனுக்கு விருப்பமான இந்த மார்கழி மாதத்தில், பால் போல் மின்னும் பௌர்ணமி நன் நாளின் விடியற்காலையில் நீராடி பாவை நோன்பு இருக்கலாம் வாருங்கள் என்று தம் தோழிகளை எழுப்பிட பாடுகிறாள்.
அப்படி சீக்கிரம் எழுந்து நீராடி விரதம் இருந்தால், நாம் விரும்பும் பரிசை நந்தகோபன் யசோதையின் மகனான கிருஷ்ணன் தருவான். (பக்தி மிகுதியில் இறைவனை ஒருமையில் விளிப்பது இலக்கியத்தில் உண்டு) ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தையாக இருக்கும் பொழுது, கிருஷ்ணனால் தன் உயிருக்கு ஆபத்து நேரும் என்று எண்ணிய தாய்மாமனான கம்சன் எப்படியாவது கிருஷ்ணனை கொல்லவேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தான், அதனால் அவனிடமிருந்து தன் மகனைக் காப்பாற்றுவதற்காக, கூர்வேல் கொண்டு கண்ணும் கருத்துமாக பாதுக்காத்துக் கொண்டிருந்தார் தந்தையாகிய நந்தகோபன். அந்த கிருஷ்ணன் எப்படிப் பட்டவன்? அழகிய விழிகளைக் கொண்ட யசோதையின் இளம் சிங்கமாம் அவன். கார்மேகம் போல் கருத்த மேனியும், சிவந்த விழிகளும், அரக்கர்களை அழிக்க உஷ்ணமான சூரியன் போன்ற சுட்டெரிக்கும் முகமும், பக்தர்களுக்கு அருள்புரிய சந்திரன் போன்று குளுமையுடைய அழகிய முகமும் உடையவன். அப்படிப்பட்டவன் நம் நோன்பினால் மகிழ்ந்து நாம் விரும்புகின்ற பரிசுகளைத் தருவான். ஆதலால் சீக்கிரம் எழுந்து குளிக்க வாருங்கள். பாவை நோன்பிருக்கும் நம்மை இந்த உலகத்தார் போற்றுவார்கள்.
உட்பொருள்:
கிருஷ்ணனைக் காதலித்து, அவனையே கணவனாக அடையவேண்டும் என்று நினைப்பவள் ஆண்டாள். ஆனால் இப்பாடலில், கருணை வடிவான ஆண்டவனின் அருளை தாம் மட்டும் பெறாமல், உலகத்தில் உள்ள மக்கள் அனைவருமே இறைவனின் அருளைப் பெறவேண்டும் என்பதற்காக, மக்களை எல்லாம் தம் தோழியராக எண்ணி, நாம் உலக மாயை என்னும் உறக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று ஆவல்கொண்டு அழைக்கிறாள். அவன் பாதம் அடைவது தான் நாம் பெறக்கூடிய அரும்பெரும் பரிசாகும் என்பதை விளக்குகிறாள்.
பக்தியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்