நம் செம்மொழியாம் தமிழ் தந்த ஓர் அழகான, பொருள் பொதிந்த சொல் துறவி.
துறவிகள் பற்றி நாம் அதிகம் கேள்விப்படிருக்கிறோம், பலர் துறவிகளைப் பார்த்து இருப்பீர்கள். முற்றும் துறந்த முனிவர்கள் பற்றி நிறையப் படித்து இருக்கிறோம். உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டு இறைவனுடைய பாதங்களைப் பற்றக் காத்திருப்பவர்கள் அவர்கள்.
(நான் போலிச் சாமியார்கள், போலித் துறவிகளைப் பற்றி பேசவில்லை)
நாம் அறிந்த, பார்த்த, படித்த, கேள்விப்பட்ட துறவிகளில், பெருமபான்மையானவர்கள், ஏன் 99.99% ஆண்கள் தான். அப்படி இருக்கையில், ஏன் அவர்களை துறவி என்று அழைக்கிறோம்? துறவன் அல்லது துறவர் என்று தானே சொல்லியிருக்க வேண்டும்? முனிவர் என்று சொல்கிறோமே அது போல.
இப்படி ஒரு எண்ணம் எனக்குத் திடீரென்று தோன்றியது. ஏன் துறவி என்று அழைத்தார்கள் என்று எனது சிறு ஆராய்ச்சி தான் இக்கட்டுரை.
பொதுவாக நம் தமிழில், பெரும்பாலான பெண்பால் சொற்களின் ஈற்றெழுத்து 'இ' என்ற ஒலியில் தான் முடியும். அதாவது 'இ' என்று விகுதி பெண்பாலைக் குறிக்கும், விதிவிலக்காக சில சொற்கள் 'ஐ' விகுதி கொண்டு முடியும். ('அன்' என்ற விகுதி ஆண் பாலைக்குறிக்கும்)
எ.கா:
அழகன் - அழகி
இறைவன் - இறைவி
தலைவன் - தலைவி
கணவன் - மனைவி
பாடகன் - பாடகி
தோழன் - தோழி
ஒருவன் - ஒருத்தி
(அதே போல் 'ஐ' விகுதியில், ஆசிரியை, இரசிகை, தமக்கை என சில சொற்கள் உள்ளன)
இப்படி பல சொற்களை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி இருக்கையில், ஆண்களைக் குறிக்கும் ஒரு சொல்லுக்கு ஏன் 'துறவி' என்று சொல்லவேண்டும்? இப்படி சிந்தித்துப் பார்க்கையில் எனக்கொரு உண்மை புரிந்தது. அதனால் தான் நம் முன்னோர்கள், தமிழில் 'துறவன்' என்ற சொல் இல்லாமல் 'துறவி' என்று மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்று புரிந்துக்கொண்டேன்.
துறவி என்று சொல் ஏன் வந்தது?
பொதுவாகவே பெண்கள், கனிவும், கருணையும் கொண்டவர்கள். தாயுள்ளம் படைத்தவர்கள். தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்துள்ளவர்கள். பல குடும்பங்களில், பெண் பிள்ளைகள், தாயைவிட தந்தையிடம் அதிக பாசத்துடன் இருப்பார்கள். அதே போல் அண்ணன் தம்பிகளிடமும் பிரியம் வைத்திருப்பார்கள். அது மட்டுமில்லாமல், அந்த வீட்டில் இருக்கும் வீட்டு விலங்குகள், செல்லப்பிராணிகள், ஏன் செடிகொடிகள் என அனைத்தின் மீதும் பாசம் வைத்திருப்பார்கள்.
அப்படி அளாவில்லாப் பாசத்துடன் இருக்கையில், திடீரென்று ஒரு நாள், திருமணம் முடிந்த பின், யாரோ ஒரு ஆடவனை நம்பி, இதுவரை வாழ்ந்து வந்த வீடு வாசல், தோட்டம், ஊர் என அனைத்தையும் விட்டுவிட்டு, தந்தையின் பெயரையும் கூட விட்டு விட்டு, தம் குடும்பத்தினர் மேல் பாசம் இருந்தாலும், தம் குடும்பத்தை விட்டுவிட்டு, அதாவது துறந்துவிட்டு இன்னொரு வீட்டில் தமது வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான ஆண்களால் இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை நிச்சயமாகச் செய்யமுடியாது. (தற்போது இந்நிலை மாறி விட்டது, திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்துக்கொள்ள முற்படுகிறார்கள்)
முனிவர்கள் போல் முற்றிலும் துறக்காவிட்டாலும், கிட்டத்தட்ட எல்லாவற்றையும் துறந்துவிட்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறாள் ஒரு மனைவி. அப்படிபட்ட மனைவி எனும் அந்த அற்புத உறவை சிறப்பிப்பதற்காகத் தான், முற்றிலும் உலகப் பற்றுகளைத் துறந்துவிட்டு வருபவர்களை 'துறவன்' என்று அழைக்காமல் 'துறவி' என்று அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இப்படி தாங்கள் பிறந்த குடும்பத்தை விட்டுவிட்டு வந்து புதிய ஒரு குடும்பத்தை உருவாக்கும் பெண்கள், எக்காரணம் கொண்டும், குடும்பச் சுமை அல்லது சூழ்நிலைக் காரணமாக, அந்த குடும்பத்தை விட்டுவிட்டு சந்நியாசம் செல்வதில்லை. குடும்பத்தை ஒழுங்காக நடத்துவதையே அவர்கள் வாழ்நாள் தவமாகப் புரிகிறார்கள்.
ஆனால் பல ஆண்கள், குடும்பச்சுமை தாங்காமல், அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள திராணியில்லாமல், குடும்பத்தை தவிக்க விட்டுவிட்டு சந்நியாசம் தேடி சென்றுவிடுகிறார்கள். அதனால் தான் குடும்பத்தை நிர்கதியாய் விட்டுவிட்டு சந்நியாசியாக ஆன துறவிகளை விட, மனைவிகள் உயர்ந்தவர்கள் ஆவர்.
இதையே தான் திருவள்ளுவர் கூட
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள் - 48)
என்ற குறளில் கூறியுள்ளார். அதாவது, தானும் நல்வழியில் நடந்து, மற்றவர்களையும் அறம் தவறாத நல்ல வழியில் நடக்கச் செய்பவர்களின் இல் வாழ்க்கையானது, துறவறம் பூண்டு தவம் செய்பவர்களின் தவத்தை விட வலிமையானது என்கிறார் வள்ளுவர். இந்தக் குறள், தங்கள் குடும்பத்திற்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து, எதற்காகவும் குடும்பத்தை விட்டுக்கொடுக்காத எல்லா மனைவிகளுக்கும் பொருந்தும்.
துறவி என்பது பெண்பால் தான்
இப்படி பிறந்தக் குடும்பத்தின் பந்த பாசங்களை முழுவதும் விடமுடியாவிட்டாலும், நமது கலாச்சாரம், வாழ்க்கை முறை காரணமாக, அவர்களை விட்டுவிட்டு, மனதில் சுமந்துக்கொண்டு புதிய தவம் மேற்கொள்ளும் மனைவி எனும் உயர்ந்த உறவை சிறப்பிப்பதற்காக தானோ என்னவோ, பற்று நீக்கி வரும் ஆண்களை 'துறவன்' என்று அழைக்காமல் 'துறவி' என்று அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நம் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், பெண்கள் துறவிகளாக ஆன சான்றுகள் அதிகமில்லை. காரைக்கால் அம்மையார், ஔவையார் போன்ற வெகு சிலரே இருக்கிறார்கள். சமணத்தில் சிலர் இருக்கலாம்.
பெண்கள் வீட்டைப் பார்த்துக்கொள்வதும், ஆண்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டிவருவதும் நம் வழக்கமாக இருந்தது. ஆண்களை முதன்மைப் படுத்தியே நம் வாழ்க்கை முறை இருந்ததால், நாம் வாழ்வில், பல தொழிகளைச் செய்பவர்களைக் குறிக்க ஆண்பால் சொற்கள் தான் அதிகம் உள்ளன. அல்லது இருபாலருக்கும் பொதுவான் ஒரு சொல்லாக இருக்கும். உதாரணமாக, உழவன், காவலன், வணிகன், ஓவியன், கலைஞன் என பல சொற்கள் உள்ளன.
அப்படி இருந்தும், பற்றுகளை நீக்கி வரும் ஆண்களுக்கு ஆண்பால் சொல்லை வைக்காமல் பெண்பால் சொல்லை வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்றால் அதற்கு நிச்சயம் இது தான் காரணமாக இருக்கவேண்டும்.
ஆதி காலம் தொட்டு இந்த விஞ்ஞான காலம் வரை, ஒரு குடும்பத்தை விட்டு வந்து இன்னொரு குடும்பத்தைக் காக்கும், மனைவி எனும் அதிசயப் பிறவி, விட்டுக்கொடுத்த இன்னொன்று தான், அழகான சொல்லான 'துறவி'.
அதனால் பெண் இனத்தை சிறப்பிப்பதற்காகத்தான் ஆண்களுக்கு, பெண்பால் சொல்லை வைத்து பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பது என் எண்ணம். ஆண்களைக் குறிக்கும் 'துறவி' என்ற சொல் பெண்பால் தான் என்பது திண்ணம்.
உங்கள் கருத்து என்ன?
பெண்களைப் போற்றுவோம்!
மனைவியை மதிப்போம்!
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.