மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு தொகுதியில் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ என்ற தலைப்பில் உள்ளது இந்தப் பாடல்.
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
துன்ப மினியில்லை, சோர்வில்லை தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
நல்லது தீயது நாமறியோம் அன்னை நீ
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!
பாரதியார், பெரும்பாலான தமது பாடல்களில், இந்த உலகைக் காத்து இரட்சிக்கும் அன்னை பராசக்தியிடம் தான் தன் ஆசை, கோபம், துன்பம், வேட்கை என அனைத்தையும் கொட்டி, முறையிட்டு, உள்ளத்தைத் திறந்துக் காட்டி பாடியிருக்கிறார். ஒரு பக்தனாக மட்டுமல்லாமல், பெற்ற தாயிடம் உரிமையோடு உரையாடும் ஒரு மகனாக தான் பல இடங்களில் மனமுவந்துப் பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.
அப்படி தான், இப்பாடலிலும், அன்னை பராசக்தியைக் கண்ணம்மாவாக உருவகித்து, தன் குலதெய்வமாகப் போற்றி, தன் உள்ளக் கிடக்கை முழுவதையும் கொட்டியிருக்கிறார். உன்னிடம் முழுமையாக சரணடைந்துவிட்டேன், இனி என்னை நீ தான் கரைசேர்க்க வேண்டும் என்று முறையிடுகிறார்.
உண்மையான இறைபக்தி என்பது இறைவனிடம் முற்றிலும் சரண்டைவது தான். அதை தான் பாரதியாரும் இப்பாடல் மூலம் அன்னை பராசக்தியிடம் சரணடைந்து தம் கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்.
இசைஞானி இளையராஜா குரலில்:
பாம்பே ஜெயஸ்ரீ குரலில்:
இனி இந்த பாடலின் பொருளைப் பார்க்கலாம்....
நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
உன்னை சரணடைந்து விட்டேன் என் தாயே கண்ணமாவாகிய பராசக்தியே. உன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டேன்.
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாது என்று..
சாதாரண மனிதனைப் போல், செல்வத்தையும், வாழ்க்கையில் உயர்ந்திட, உயர்ந்த பதவிகளையும், பெரும் புகழையும் விரும்பித் தவிக்கும் என்னை, எந்தக் கவலைகளும் என்னைத் துன்புறுத்தி தாக்கிவிடக் கூடாது என உன்னை நம்பி சரணடைந்து விட்டேன் தாயே கண்ணமா.
பொன் என்பது இங்கு அனைத்து செல்வங்களையும் குறிக்கிறது. இந்த வரியைப் பார்த்தவுடன், ஏதோ பாரதியார் இவற்றுக்கெல்லாம் ஆசைப்பட்டு பாடியிருக்கிறார் என எண்ணிவிடக் கூடாது. கவிஞர்கள் தங்களைப் பற்றிக் கூறுவது போல மற்றவர் நிலையை விளக்குவார்கள் அல்லது படம் பிடித்துக் காட்டுவார்கள். அப்படி நம்மை போன்று ஆசைகளில் உழல்பவர்களுக்காகத் தான் பாடுகிறார். இது போன்று ஆசைகள் வந்தாலே, துன்பமும் பின்தொடர்ந்துவரும் என்பதால் தான் பாராதியார் இவை வராமல் காக்கவேண்டும் என்று பாடுகிறார்., இங்கு 'தின்னத் தகாது' என்கிறார். அதாவது கவலை உள்ளத்தில் வந்து விட்டால், எப்படி கறையான் எல்லாவற்றை அரித்துவிடுமோ அது போல், கவலையும் உள்ளத்தை அரித்து தின்று விடும்.
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கு என்று
மனிதனை வறுத்தும் வறுமை, பயம் போன்றவை என் உள்ளத்தில் விரும்பி குடிபுகுந்து என்னை வாட்டி வதைக்கின்றது. இவை என்னை கொன்றுவிடாமல் போக்கிட, என்னை காத்திட உன்னிடம் சரணடைந்துவிட்டேன் தாயே. என்னை காப்பாயாக என வேண்டி பாடுகிறார் பாரதியார்.
பெரும்பாலும் நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு தேவையில்லாத பயம் இருந்துக்கொண்டே இருக்கும். அந்த பயத்திலேயே பாதி உயிர் போய்விடும், அதே போல் தான் வறுமையும், வறுமை எவ்வளவு கொடியது என்று நம் அனைவரையும் விட பாரதியாருக்குத் தான் நன்கு தெரியும். நாட்டு மக்களுக்காக வீரத்துடன் பாடியவர் வீட்டில் வறுமை தானே தாண்டவமாடியது. இந்த வறுமையும், அச்சமும் என்னை விரும்பி என்னிடத்தில் வந்து புகுந்து கொண்டன. பயத்தில் பாதி உயிர் போகிறது என்றால், வறுமையில் மீதி உயிர் போய்விடும், அதனால் தான் வாழ்வில் இவை இரண்டும், தன் இல்லத்திலும் உள்ளத்திலும் குடி புகுந்து கொன்றுவிடக் கூடாது என, பராசக்தியிடம் வேண்டுகிறார் மகாகவி.
தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நான் செய்த தவறுகளை எண்ணி எண்ணித் தவிப்பதை விட்டுவிட்டு, உன்னுடைய நற்செயல்களால் எம் வாழ்க்கை நிறைவு பெறவேண்டும் என்பதால் உன்னை சரணடைந்துவிட்டேன்.
சற்று ஆராய்ந்துப் பார்த்தால் என் செயல், அதாவது நம் செயல் என்று எதுவுமே இல்லை என்பது புரியும். எல்லாமே அவன் செயல் என்று சொல்லுவோம் அல்லவா? அது போல எல்லாமே உனது செயல் கண்ணம்மா, எனது எனது என்று எண்ணாமல் எல்லாவற்றையும் உன் பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிட்டேன். அதனால் இனி நான் புரியும் என் செயல் அனைத்தும் உன் அருளால் நல்லபடியாக நிறைவேறி மன நிறைவு பெற உன்னிடம் முழுவது சரணடைந்துவிட்டேன். துன்பம் வந்தால் கூட அது உன் செயல் என்று எண்ணி பொறுமையாகவும் அதிலிருந்து நீயே மீட்டெடுப்பாய் என்று நம்பிக்கையுடனும் உன்னை சரணடைந்து விட்டேன். அதனால் என் வாழ்வு நிறைவு பெறும்.
துன்பம் இனி இல்லை, சோர்வு இல்லை தோற்பு இல்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
உன்னை நம்பி விட்டேன். இனி எனக்கு எந்த ஒரு துன்பமும் இல்லை, சோர்வுகள் இல்லை, தோல்விகள் இல்லை. அன்புமிகுந்து தர்மம் காட்டும் வழியில் சென்று நல்லறங்கள் செய்திட உன்னை சரணடந்துவிட்டேன்.
இறைவனை முழுமையாக சரணடைந்துவிட்டால், நமக்கு ஒரு நம்பிக்கைப் பிறக்கும். எந்த ஆபத்து வந்தாலும் இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை, அந்த நம்பிக்கை நாம் புரியம் நற்செயல்களை. எந்த ஒரு தடையும் தடங்கலுமின்றி நிறைவேற வைக்கும். அதனால் துன்பம் என்ற சொல்லுக்கே இடமில்லை. அதே போல் உடலும், உள்ளமும் சோர்வடையாது, தோல்வி பயமும் கிடையாது, மனம் மகிழ்ந்து, அன்பு வழியில் அறம் எல்லாம் பெருக அருள் செய்வாய் என்று உன்னை சரணடைந்துவிட்டேன்.
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை நீ
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக
எது நல்லது, எது கெட்டது என்பது எனது சிற்றறிவுக்குத் தெரியாது. அதனால் நல்லது நடக்கவும், தீயவை விலகவும் நீ தான் அருளவேண்டும் என்று உன்னை முழுவதுமாக சரணடைந்துவிட்டேன்.
எது நல்லது? எது தீயது? என்பதை அறிந்துக்கொள்ள கூட நமக்கு நல்ல அறிவு வேண்டும். இதை தான் வள்ளுவர் "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றார். நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்து ஆராய்ந்து அறியும் அறிவு எமக்கு இல்லை, அந்த ஆற்றலை நீ தான் அருளவேண்டும் என்று வேண்டுகிறார். (இன்னொரு பாடலில் "வல்லமைத் தாராயோ" என்று பாடியிருக்கிறார்). அதனால் எங்களுக்கு எது நல்லது என்பதை நீ தான் எடுத்துக் காட்டி நன்மையை நிலை நாட்ட வேண்டும். அது போல தீமைகள் எங்களை நெருங்காமலும், தீயவற்றை நாங்கள் செய்யாமல் இருக்கவும், நீயே துணை புரிய வேண்டும் தாயே என்று வேண்டி சரணடைகிறார் மகாகவி பாரதியார்,
அருஞ்சொற் பொருள்:
நின்னை - உன்னை
தகாது - கூடாது
மிடிமை - வறுமை
மேவி - விரும்புதல், அடைதல்
குடிமை - குடி புகுவது
நின் - உனது
வண்ணம் - நிறம், இவ்விடத்தில் வகை என்ற பொருளில் வருகிறது
தோற்பு - தோல்வி
நெறி - வழி
ஓட்டுக - போக்குக
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.