"கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை, வர வர நம்மளோட விளையாடறதே வேலையாப் போச்சு...." இந்த வின்னர் பட வடிவேலு காமெடி போல தான் இருக்கிறது, சனாதன ஹிந்துக்களின் நிலை.
தமிழகத்தில், சனாதன ஹிந்துக்கள் அனைவரும் கைப்பிள்ளைகளைப் போல இருப்பதால் தான், புதிதுப்புதிதாய் நிறைய கட்டதுரைகள் வந்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லையென்றால், அவர்கள் நம்மை மேலும் மேலும் மிதித்துக்கொண்டே தான் இருப்பார்கள். இதை எல்லா ஹிந்துக்களும் உணர வேண்டும். வெறுமனே கோவிலுக்குச்சென்று சாமி கும்பிட்டு, திருவிழாக்களைக் கொண்டாடினால் மட்டும் போதாது, வெறுப்புப் பேச்சு பேசும்பொழுது நம் எதிர்ப்பை கடுமையாகத் தெரிவிக்க வேண்டும்.
சனாதன வெறுப்புப் பேச்சுகள்
இந்த மாதிரி ஆட்கள், நம் சனாதன தர்மத்தை கேவலப் படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வெறுப்புணர்வில், ஹிந்துக்களின் மனம் புண்படும் படி, எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். எடுத்துக்காட்டுக்குச் சில இதோ...
"கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி' என்று நம் ஹிந்துக் கோவில்களுக்கு முன் மட்டும் எழுதி, சிலை வைப்பது.
"கடவுள் இராமர் படத்திற்கு, செருப்பு மாலையிட்ட கீழ்த்தரமானச் செயலைச் செய்தது.
"இராமர் என்ன இஞ்சினியரா? எந்தக் கல்லூரியில் படித்தார்" என்று கேலிப்பேசியது.
மீனாட்சி திருக்கல்யாணத் திருவிழாவை அசிங்கப்படுத்தும் வண்ணம், 'சுந்தரேஸ்வரருக்கும் மீனாட்சி அம்மனுக்கு முதலிரவு எங்கு நடக்கும்" என்று தங்கள் மன விகாரத்தை, கேட்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் வெளிப்படுத்தியது.
"நாவில் சரஸ்வதி நடனமாடுகிறாள்" என்ற சொற்றொடரை மிகவும் அருவருக்கத் தக்க வகையில் பேசி, தங்களின் கேவலமான எண்ணத்தைக் வெளிக்காட்டியது.
'இராமன் அணிலின் முதுகில் தடவியதால் மூன்று கோடுகள் இருக்கிறது. சீதை முதுகில் எத்தனை கோடுகள் இருக்கிறது?' என்று வக்கிர எண்ணத்தில் கேட்டது.
"மகாபாரதம் முழுக்க முழுக்க விபச்சார ஏடு" என்று மகாமட்டமாகப் பேசியது.
"நாமம் என்றால் என்ன?. பட்டை என்றால் என்ன?" என்று காதுகூசும் அளவிற்கு நாராசமான விளக்கம் கொடுத்தது
"இந்து என்றால் திருடன்" என்று வன்மம் கக்கியது.
"இந்துக்கள் விபாசாரியின் மகன்" என்று தரம்தாழ்ந்து அநாகரிகமாகப் பேசியது
"அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில்" என்று அசிங்கமாகப் பேசியது.
கந்தசஷ்டி கவசத்தின் பொருளைப் புரிந்துக்கொள்ளும் பக்குவமின்றி, அதை இழிவுபடுத்தியது.
விநாயகர் சிலைகளை உடைத்தது.
"சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போல ஒழிக்க வேண்டும்" என்று பொறுப்பின்றி வெறுப்பை உமிழ்ந்தது.
திருப்பரங்குன்ற மலை விவகாரம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால் சமீபகாலமாக இந்துக்களுக்கு சற்று சுரணை வந்து, எதிர்ப்புக் காட்டத்தொடங்கி இருக்கிறார்கள், இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி. அமைதியாக இருப்பவர்கள் ஆர்ப்பரித்து எழுந்தால் என்ன ஆகும்? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். மற்ற மதங்களைப் பற்றியெல்லாம் எதுவுமே கூறாமல், ஹிந்து மதத்தை மட்டுமே இழிவுபடுத்தும் வேண்டும் என்ற வகையில் இவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் ஏதோ ஒரு உள் நோக்கம் இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
கடவுள் இராமரை இழிவுப்படுத்தியக் கயமை
சென்னையில் சமீபத்தில், ஆழ்வார் ஆய்வு மையம் சார்பில், திரைப்படப் பாடலாசிரியாரும், கவிஞருமான வைரமுத்து அவர்களுக்கு கம்பன் விருது அளிக்கப்பட்டது. இந்த விழாவில் தான் கவிஞர் வைரமுத்து அறிவுபூர்வமாகப் பேசுகிறேன் என்று எண்ணி, தேவையற்ற கருத்தைக் கூறி, கோடானுகோடி மக்கள் வணங்கும் அவதாரப்புருஷனான ஸ்ரீராமபிரானை அவமதித்திருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் மீது மதிப்பு இருந்தது உண்மை, ஆனால் அந்த மதிப்பை அவராகவே கெடுத்துக்கொண்டு வருகிறார். சமீபகாலமாகத் தான் சார்ந்த இயக்கத்தை திருப்திப்படுத்தும் வகையில் மிகவும் தரம் தாழ்ந்துப் பேசியும் எழுதியும் வருகிறார். ஒருகாலத்தில் அவரது கவிதைகளை மிகவும் இரசித்துப் படித்ததுண்டு, ஆனால் வரவர அவர் மேல் உள்ள மதிப்பு, கோடைக்கால மேட்டூர் அணை போல மிக வேகமாகக் குறைந்து, வறண்டு அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. ஆனால் அவர், மற்றவர்கள் மனம் புண்படுமே என்பதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்பட்டது/படுவது போல தெரியவில்லை, அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்துக்கொண்டு இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.
அன்று நாம் போற்றி வணங்கும் ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அசிங்கமாக எழுதினார். இன்று ஏகபத்தினி விரதனும், பல கோடி மக்களின் கடவுளுமான இராமபிரானை, புத்திசுவாதீனமில்லாதவர் என்று இழிவுப்படுத்திப் பேசியிருக்கிறார்.
இது போன்று இழிவாகப் பேச இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதே போல பிறமதத்துக் கடவுள்களைப்பற்றிப் பேச இவருக்குத் துணிவிருக்கிறதா? முதலில் மற்றவர்களின் நம்பிக்கையப் பற்றி ஏன் தேவையில்லாமல் இப்படி பேசவேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் பேசலாமா? வார்த்தை ஜாலங்களால் வசைபாடி வரம்பு மீறலாமா?
மதத்திற்கு ஆங்கிலத்தில் 'ஃபெய்த்' (Faith) என்றும் சொல்லுவார்கள். Faith என்றால் நம்பிக்கை. அது அவரவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் நம்பிக்கையில்லாத ஒருவர் அந்த நம்பிக்கையைப் பற்றி ஏதும் பேசாமல் செல்லவேண்டும். வைரமுத்து அவர்களுக்கு எங்கள் நம்பிக்கையில் உடன்பாடு இல்லையென்றால் ஏன் அதில் வீணாக மூக்கை நுழைத்து இப்படி அசிங்கப்பட வேண்டும்?
கம்பர் விருதும் வம்புப் பேச்சும்
கம்பர் பெயரில் விருது வாங்கிக்கொண்டு, அந்தக் கம்பர் உயர்வாகச் சித்தரித்த இராமபிரானை, சிறுமைப்படுத்த எப்படி இவரால் முடிந்தது? தன் கருத்தை நியாயப்படுத்துகிறேன் பேர்வழி என்று அதற்கு மட்டமாக ஒரு வியாக்கியானம் வேறு. அதாவது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (இ.பி.கோ) 84 ஆவது பிரிவின் படி மன நோயாளிகள் குற்றம் செய்தால் அவர்களைத் தண்டிக்க முடியாது. இராமன் புத்திசுவாதீனம் இழந்துவிட்டதால், வாலியைக் கொன்றதற்காக அவரை குற்றம் சொல்ல முடியாது, அதனால் கம்பர் இராமன் என்ற குற்றவாளியைக் காப்பாற்றிவிட்டார் என்று ஏதோ இராமருக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணி ஏதேதோ பிதற்றியிருக்கிறார். இராமர் புத்திசுவாதீனம் இல்லாதவராம், குற்றாவாளியாம், என்ன ஒரு செருக்கு இவருக்கு இருக்கு?
முதலில் கம்பர் காலத்தில் ஏது இந்தியத் தண்டனைச்சட்டங்கள்? கம்பருக்கு இந்தச் சட்டங்கள் தெரியவில்லையென்றாலும் சமூகம் தெரிந்திருக்கிறது என்று ஒரு சமாளிப்பு வேறு. சரி ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், இந்தியத் தண்டனைச் சட்டமான இ,பி,கோ (Indian Penal Code) என்பது பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita) என்று மாற்றப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு மாறியச் சட்டத்தின் பெயர் கூட சரியாகத் தெரியவில்லை, ஓராயிர ஆண்டுகளுக்கு முன் கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில், அந்தக் கதையின் நாயகனான, கடவுள் இராமரை எப்படி குறை கூற முடிகிறது இவரால்?
வாலியின் கேள்வி
இலக்கியத்தில் அல்லது கவிதைகளில் உள்ள எந்தச்சொல்லுக்கும், எந்தச் சூழ்நிலைக்காக எழுதப்படுகிறதோ, அதற்கேற்ப பொருள் கொள்ள வேண்டும் என்பது 'கவிப்பேரரசு' என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கவிஞருக்கு எப்படி தெரியாமல் போனது?
'கோஇயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத வொண்ணா
உருவத்தாய்; உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற
அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை
திகைத்தனை போலும் செய்கை'
என்பது கம்ப ராமாயண பாடல்.
'சித்திரத்தில் வரைய முடியாத வண்ணம் அழகான வடிவுடைய உருவத்தை கொண்ட இராமனே, அரசர்களுக்கு உரிய நீதி வழுவாத அறநெறியானது உங்கள் குலத்தில் பிறந்தவருக்கு எல்லாம் உடைமை போல உரியது அல்லவா?" "அப்படி இருக்க, எப்படி என் மேல் அம்பு எய்து கொல்லத் துணிந்தாய்? உனது உயிருக்கும் உயிரான, ஜனக மகராஜன் பெற்ற, நடையில் அன்னப்பறவையை யொத்த, பாற்கடலைக் கடைந்தப் பொழுது கிடைத்த அமிழ்தம் போல் வாய்த்த, உன் மனைவியான சீதா தேவியைப் பிரிந்ததால் ஏற்பட்டத் தடுமாற்றத்தில், இப்படி நீதி தவறி செய்துவிட்டாயோ?" என்பது தான், வாலி இராமனைப் பார்த்துக் கேட்பதாகக் கம்பன் கூறியது.
புத்திசுவாதீனம் இல்லாதவர் யார்?
இந்தப் பாடலில் வரும் "திகைத்தனை போலும் செய்கை" என்ற வரிக்குத் தான் வைரமுத்து அவர்கள் புதிதாக ஒரு விளக்கம் கொடுத்து, அதற்காக எழுந்த எதிர்ப்பைக் கண்டு இன்று, ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்துப்போய் நிற்கிறார். அவர் பாஷையிலேயே சொல்லவேண்டுமென்றால், புத்திசுவாதீனம் இல்லாதவர் போல் நிற்கிறார்.
திகை என்றால் மலைப்பு, பிரமிப்பு, வியப்பு, தடுமாறுதல், மயக்கம் என்பது தான் பொருள்; மதியிழப்பது அல்ல என்று இதுவரை நான் தேடிப்பார்த்த அகராதிகள் எல்லாம் கூறுகின்றன. 'திகைத்தனை' என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்க, வைரமுத்து அவர்களுக்கு அது மயங்குதல் என்று பொருள் தான் சரி என்று தோன்றியிருக்கிறது. பராவாயில்லை ஆனால் மயங்குதல் என்றால் புத்திசுவாதீனமில்லை என்று அவராகவே அர்த்தம் (அநர்த்தம்) கொண்டு இராமரைப் புத்திசுவாதீனமில்லாதவர் என்று கூறியிருக்கிறார் என்றால், நிச்சயம் இராமரை இழிவு படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் மேலோங்கி இருந்து இருக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது.
சிந்தையிலும் பிறமாதரை நினைக்காதவராகிய ஸ்ரீராமபிரானை ‘புத்தி சுவாதீனம் இல்லாதவர்’ என்று கூறுவது அகந்தையல்லவா? அப்படி கூறியவரை நிந்தை செய்யாமல் இருந்தால் அது விந்தையல்லவா? கோடானுக் கோடி மக்கள் வணங்கும் கடவுளை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அப்படி கூறியுள்ளார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. திகைத்தல் என்ற சொல்லுக்கு புத்திசுவாதீனம் இல்லாதவர் என்ற ஒரு பொருளை, நல்ல புத்தியுள்ள எவரும் சொல்ல மாட்டார்கள்.
தன்மேல் அம்பெய்த இராமனை பார்த்து வாலி கேட்பது தான் மேலே உள்ளப் பாடல். தர்மமே வடிவான இராமபிரான் என் மீது அம்பு எய்தி என்னைக் கொல்ல நினைத்தாய் என்றால் ஒரு வேளை, 'எது சரி? எது தவறு?" என்று எடுத்துரைக்கப் பக்கத்தில் தமது பிரியமான மனைவி இல்லாததால் இது போன்று தடுமாறி செய்துவிட்டாயா? என்று தானே அந்த வானர மன்னன் வாலி கேட்கிறார். இதற்கு இப்படி ஒரு புது விளக்கம் அளித்து புளகாங்கிதம் அடைந்துள்ளார்.கவிப்பேரரசு. அப்படி என்றால் உண்மையிலேயே புத்திசுவாதீனம் இல்லாதவர் யார்?
இராமனைப் போற்றிய வாலி
ஆனால் அந்த ஒரு சொல்லை எடுத்து தமக்கு தேவையானப் பொருளை கூறி மட்டம் தட்டிய வைரமுத்து அவர்கள், அதே வாலி, இறக்கும் தருவாயில், இராமனைப் பார்த்து,
"ஏவுகூர் வாளியால்
எய்து; நாய் அடியேன
ஆவிபோம் வேளைவாய்
அறிவுதந்து அருளினாய்
மூவர் நீ; முதல்வன் நீ
முற்றும் நீ; மற்றும் நீ
பாவம் நீ; தருமம் நீ
பகையும் நீ; உறவும் நீ"
என்று போற்றி கூறுகிறார்.
உலகிலுள்ளோர் அனைவரும், இராமனை வணங்கித் துதித்து, தங்களுக்கு வீடுபேறு எனும் மோட்சம் தர மாட்டானா என்று ஏங்கித் தவிக்கும்போது, அந்த அறத்தின் வடிவமான இராமனே, நாயைப் போன்ற அடியேனான என்னைத் தேடி வந்து எனது ஆவிபோகும் நேரத்தில் வீடு பேறு அருளினான் என்றால் நான் எவ்வளவு புண்ணியம் செய்து இருப்பேன்' என்று குறிப்பிட்டதை வசதியாக மறைத்துவிட்டார். அது மட்டும் அல்ல, அந்த இராமனை "மூவர் நீ; முதல்வன் நீ" என்று சொல்கிறார் வாலி, அதாவது மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் நீ தான் என்று போற்றுகிறார். ஒருபடி மேலே போய் அவர்களைவிடவும் முதல்வன் நீயே என்று பாராட்டுகிறார். இது தான் வாலியின் கூற்று,
அது மட்டுமல்ல, இறுதியில், அழுதுக்கொண்டு இருந்த தன் மகன் அங்கதனை அழைத்துத் தேற்றி
“நாயகன், இராமன், செய்த நல்வினைப் பயன் இது’
"“மால் தரும் பிறவி நோய்க்கு
மருந்து” என, வணங்கு, மைந்த!"
என்று ஆறுதல் கூறுகிறான். திருமாலின் அவதாரமான இராமபிரான், நம் பிறவி நோய்க்கு மருந்து. அவரை நீ வணங்கவேண்டும் என்று இறக்குமுன் தன் மைந்தனுக்கு அறிவுரை கூறுகிறார் வாலி. மெய்ஞானம் பெற்ற வாலி தம் தவறுணர்ந்து இராமனைப் போற்றுவதை, அகங்காரத்தாலோ இல்லை அஞ்ஞானத்தாலோ உணராமல் விட்டுவிட்டாரோ இந்த அதிசயக் கவிப்பேரரசு,
அது மட்டுமல்ல, இராமாயணம் முழுவதுமே, வரும் பல கதாப்பாத்திரங்கள் இராமனை போற்றுகின்றார்கள். இப்படியிருக்க, இவறையெல்லாம் மறைத்துவிட்டு, வசதியாக மறந்துவிட்டு ஒரே ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கும் தவறான பொருள் கொடுத்து, இராமனை புத்தி சுவாதீனம் இல்லாதவன்" என்று அவ்வளவு பெரிய சபையில் கூற எவ்வளவு திமிர் இருக்கவேண்டும். நமக்குப் பின் பெரிய அதிகார பலம், அடியாட்கள் பலம் எல்லாம் இருக்கிறது என்ற ஒரு கர்வம் தானே.
அலங்கார வார்த்தைகளால், அவதூறு செய்தாலும் அப்பாவித் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தான் அவருக்கு, தமிழர்கள் மீதான எண்ணமோ? தம்மைக் கவிப்பேரரசு என்று எண்ணிக்கொண்டு கர்வத்தில் இருப்பதால், அப்பாவி மக்கள் எல்லோரும் தாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்று ஏளனமாக எண்ணிவிட்டாரோ?
இதே கவிஞர் வைரமுத்து. எத்தனைப் பாடல்களில் மயக்கம், மயங்குதல் என்று பயன்படுத்தி இருப்பார்? அப்பொழுதெல்லாம் புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் என்ற பொருளில் தான் எழுதியிருப்பாரோ? அந்தக் கதாநாயகர்கள் அல்லது கதாநாயகிகள் புத்திசுவாதீனம் இல்லாதவர்கள் தானா? நாம் தான் வேறு பொருளில் புரிந்துகொண்டுவிட்டோமா?
தலைக்கனத்திற்குத் தக்க பதிலடி
அந்த மேடையில் இருந்த பல 'அறிஞர்கள்' இதைக் கேட்டு இரசித்துக்கொண்டு அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் அதே மேடையில் இருந்த 'கம்பவாரிதி' என்று அன்போடு அழைக்கப்படும் திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள் தக்க பதிலடியை கவிஞர் வைரமுத்துவிற்கு அதே மேடையிலேயே அளித்தார்கள். அதற்கு தனி தைரியம் வேண்டும்.
"தாழ்ந்தவர்களை உயர்த்த வேண்டுமே தவிர, உயர்ந்தவர்களை நாம் தாழ்த்தக் கூடாது, அது ரொம்ப முக்கியமானது, ஒரு புலவனுடையக் கருத்தை விளங்காமல், நான் அதற்கு வியாக்கியனம் செய்கிறேன் என்பது மிகப் பெரிய தவறு" என்றார். ஒரு கவிச்சக்கரவர்த்தி, பார்த்துப் பார்த்து, இரசித்து இரசித்து உயர்வாகப் படைத்த ஒரு அற்புதக் கதாப்பாத்திரத்தைத் தாழ்த்தவேண்டும் என்று எண்ணத்துடன் மேடையேறி வருவது தவறு என்று கூறிய கம்பவாரிதி அவர்கள், மஹாகவி பாரதியார் பாடலுடன் வைரமுத்துவிற்கு விளக்கம் கொடுத்தார்கள். அந்தப்பாடல் வரிகள்
"அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்"
எத்தனை நூலகளைப் படித்தால் என்ன, கவிதையைப் படைத்த கவியின் உள்ளத்தை அறிந்துக்கொள்ள முடியாமல், நூலாசிரியர் என்ன சொல்கிறாரோ அதை உணர்ந்துக்கொள்ள முடியாமல், அதில் புதைந்திருக்கும் ஆழ்ந்த உட்பொருளை புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் சிலர் என்பது இப்பாடலின் விளக்கம். இதை விட அடுத்தப்பாடல் தான் சிறப்பு.
"பதியும் சாத்திரத்து உள்ளுரை காணார்
பானைத் தேனில் அகப்பையப் போல்வார்"
எப்படி தேன் பாத்திரத்திலேயே இருக்கும் கரண்டிக்குத் தேனின் சுவை தெரிவதில்லையோ, அது போலத்தான் பல நூல்களைக் கற்றவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், அந்த நூல் சொல்லும் உணமையானக் கருத்துகளைப் புரிந்துக்கொள்வதில்லை என்று நெற்றியில் அடித்தது போல் தெளிவாக வைரமுத்து அவர்களின் அறியாமையைப் பாரதியாரின் பாடலைகொண்டு அழகாகப் படம்பிடித்துக்காட்டினார் கம்பவாரிதி அவர்கள். கம்பராமாயணத்தைப் படித்ததாக சொல்லும் கவிஞர் வைரமுத்து, அந்தக் கதையின் நாயகனை, கம்பர் போற்றிய இராமனை தரக்குறைவாக விமர்சிக்கிறார் என்றால், ஒன்று சரியாகப் படித்துப் புரிந்துக்கொள்ளவில்லை, அல்லது இழிவுபடுத்த வேண்டுமென்பதே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
தம்மை தோற்கடித்தற்காக தமிழர்கள் அனைவரையும் 'சோற்றாலடித்த பிண்டங்கள்' என்று ஆத்திரத்தோடு கேலி செய்த போது கூட சிறிதும் கோபம் கொள்ளாமல், சுரணையின்றி மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுத்த அதிபுத்திசாலிகள் தான் நாம். ஆனால் தமிழகத்தில் பிறக்காமல், ஈழத்தில் இருந்து வந்தாலோ என்னவோ வீரத்துடன் பொறுமையாகவும் அதே சமயம் அருமையாகவும் பதிலளித்த கம்பவாரிதி அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.
திமிருக்குக் கிடைத்தப் பரிசு
ஆனால் கவிஞர் வைரமுத்துவிற்கு அந்த மேடையிலேயே இன்னொரு தரமான சம்பவமும் நடந்தது. தன்னுடைய வினோதமான கருத்தை தெரிவித்துவிட்டு, பார்வையாளார்கள் எல்லோரும் தன்னை கைத்தட்டி ஆரவாரம் செய்து பாராட்டப்போகிறார்கள் என்ற இறுமாப்பில் இறுதியாக,
'அதனால், ராமன் மனிதன் ஆகிறான்; கம்பன் கடவுளாகிறான்"
என்று தனக்கே உரிய பாணியில் கவித்துவமாகப் பேசிப் பேச்சை நிறுத்தி பார்வையாளார்களைப் பார்த்துக் காத்து நின்றார். சபையில் உள்ள அனைவரும் கைத்தட்டி கரவொலி எழுப்பப் போகிறார்கள் என எதிர்பார்த்துக்கொண்டு. ஆனால் பாவம், யாரும் கைத்தட்டவும் இல்லை கரவொலி எழுப்பவுமில்லை. அதுவே அவரின் திமிருக்குக் கிடைத்த உடனடிப் பரிசு.
மீ டூ (#MeToo) குற்றச்சாட்டு
இதே கவிஞர் வைரமுத்து, கடவுள் இராமபிரானின் 'ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்' என்ற, தன் மனைவியைத் தவிர வேறு பெண்களை மனதாலும் எண்ணாத பெரும் குணத்தை, ஆண்களை அவமதிப்பதற்காகத் துணைக்கு அழைத்துள்ளார்.
'காதலன்' என்ற திரைப்படத்தில் வரும் இவரது ஒரு பாடலில் "பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் இராமன் கிடையாது" என்று எழுதியிருப்பார். அப்போது மட்டும் இராமனுக்குப் புத்திசுவாதீனம் இருந்தது, இப்போது இல்லையா?
அது சரி, ஆண்களில் யாரும் இராமன் இல்லை என்று எல்லா ஆண்களைப்பற்றியும் கூற இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவர் என்ன ஒட்டுமொத்த ஆண்களின் பிரதிநிதியா? (ரெப்ரஸ்ண்டேட்டிவா ) சில ஆண்கள் என்று சொல்லியிருக்கலாம், அல்லது பல ஆண்கள் என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் ஆண்கள் என்று அனைவரையும் சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது.
ஒருவேளை தாம் அப்படி என்பதால் அனைவரும் அப்படி தான் இருப்பார்கள் என்று எண்ணிவிட்டாரோ? இவர் மீது சொல்லப்பட்ட #மீ டூ (#MeToo) குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று இவர் பாடல் மூலமாகவே நிரூபணமாகிறது. ஏனென்றால் இவரும் ஒரு ஆண் தான் அல்லவா?
அவரைப் பெரிய கவிஞர் என்று நாம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியதால், அவருக்குத் தலைக்கனம் ஏறிவிட்டதா? அதனால் தான் இப்படி தான் தோன்றித்தனமாக நம் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி பிதற்றிக் கொண்டிருக்கிறாரா?
மன்னிப்புக் கேட்டு மனம் திருந்தவேண்டும்
தம் தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல், மீண்டும் மீண்டும் இதுபோல் பேசிக்கொண்டிருந்தால், தமிழக மக்கள், அவரை வைக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாக வைப்பார்கள். உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம், இதுவரை அமைதியாக இருந்த நானும், அவர் தவறைச் சுட்டிக்காட்ட, கண்டனம் தெரிவிக்க எனது எதிர்ப்பை தெரிவிக்க முனைந்துவிட்டேன்.
எதுகை மோனையில் எது பேசினாலும் ஏமாளித்தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என இனியும் ஏளனமாக எண்ணவேண்டாம்.
இனி இது போல் இழிவாகப் பேசுவர்கள், எழுதுபவர்களைக் கண்டால் அனைத்து சனாதன ஹிந்துக்களும் தங்கள் எதிர்ப்பை ஏதாவது வகையில் தெரிவிக்கவேண்டும். அப்பொழுது தான் இது போன்ற திமிர்ப்பிடித்தவர்கள் திருந்துவார்கள்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல், ஒவ்வொருவராக இது போன்றவர்களின் செயல்களைத் துணிந்து சுட்டிக்காட்டவேண்டும். ஒரு கட்டத்தில் கண்டிப்பாக உணர்ந்துக்கொண்டு திருந்திவிடுவார்கள், இல்லை திருத்தப்படுவார்கள்.
கைப்பிள்ளைகள், கிளிப்பிள்ளைகள் போல் இல்லாமல் கீரிப்பிள்ளைகள் போல் சீறினால், நச்சுப்பாம்புகள் விஷத்தைக் கக்காமல் புற்றுக்குள் பதுங்கிக்கொள்ளும்.
அப்போது தான் கட்டதுரைகளின் கொட்டம் அடங்கும், கட்டமும் சரியாகும்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனை விடவும், கவியரசு கண்ணதாசனை விடவும் தன்னை உயர்ந்தவராக எண்ணிக்கொள்ளும், 'கவிப்பேரரசு' என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று விரும்பும் கவிஞர் வைரமுத்துவை, நாங்கள் வணங்கும் கடவுள் இராமரை இழிவுப்படுத்தியதற்காக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.