Chidhambaram Natarajar Temple

மனிதநேயமிக்க‌ நீதிபதி பிராங்க் காப்ரியோ

மனிதநேயமிக்க‌ நீதிபதி பிராங்க் காப்ரியோ

அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ (Frank Caprio)

கருணை மிகுந்த தீர்ப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ இன்று (ஆகஸ்ட் 21, 2025) காலமானார். அவருக்கு வயது 88.

கருணையோடு நகைச்சுவை உணர்வும் மிக்கவர் நீதிபதி பிராங்க் காப்ரியோ (He was famous for his compassionate and humorous approach to Justice).  இவர் அமெரிக்காவின் 'ரோடு ஐலேண்ட்'  (Rhode Island) என்ற மாகாணத்தில் உள்ள 'ப்ரோவிடன்ஸ்' (Providence) நகரில் உள்ள நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக‌, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து இருக்கிறார்.

எல்லா வழக்குகளிலும் கனிவுடனும், மனிதாபிமானத்துடன் விசாரணை செய்து மனசாட்சி படி தீர்ப்பு வழங்குவதால், இவரது நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் இவர் வழங்கும் தீர்ப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அவரது விசாரணை மற்றும் தீர்ப்புகள், கருணை அடிப்படையிலும், எவர் மனதையும் புண்படுத்தாமலும், காண்பவர் மனம் திருப்தி அடையும் வகையில் இருக்கும்.

'Caught in providence' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வாயிலாக மற்றவர்களுக்கு அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியின் சிறு சிறு வீடியோ காட்சிகள் (Video Clips) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாகவும் உலகம் முழுவதும் பிரபலமானார். பலருக்கும் தம் தீர்ப்பின் மூலம் இன்னொரு வாய்ப்பு வழங்கியதால் 'இரண்டாவது வாய்ப்பு வழங்கும் மன்னன்' (King of Second Chance) என்றும் அழைக்கப்பட்டார்.FrankCaprio 1

முதன் முதலில் நீதிபதியாக பதவி ஏற்று அவர் சந்தித்த முதல் வழக்கில் சற்று கடுமையாக நடந்துக்கொண்டாராம். முதல் நாள், முதல் வழக்கு என்பதால் அவரது தந்தையும் அவரின் வழக்கு விசாரணையைக் காண நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அந்த வழக்கு, போக்குவரத்து விதிமீறியதால் விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்ட தவறிய ஒரு பெண் மீது சுமத்தப்பட்ட வழக்கு. அந்தப் பெண் நான்கு குழந்தைகளுக்கு தாயான‌ ஒரு ஏழைப் பெண். அந்த வழக்கில் அவர் கடுமையாக நடந்துக்கொண்டு அந்தப் பெண் அபராதத்தைக் கட்டவேண்டும் என்று தீர்ப்பளித்தார். அவர் வழங்கிய அந்தத்தீர்ப்பு, அவர் தந்தைக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவு, கேப்ரியோவிடம் அவர் தந்தை, அந்த ஏழைப்பெண்ணுக்கு நீ வழங்கியத் தீர்ப்பால் இன்று இரவு நான்கு குழந்தைகள் பட்டினியால் வாடியிருப்பார்கள் என்று கூறினார். அந்தப்பெண்ணி நிலையைப் பார்த்தால், அபராதத்தைக் கட்டியதால் இரவு உணவிற்கு அவர்களிடம்  நிச்சயம் பணமிருந்திருக்காது. நீயும் இதுபோன்று வறுமையில் கஷ்டப்பட்டு வந்தவன் தானே, அதை எண்ணிப்பார்க்க வில்லையா? என்று கேட்டார் அவர் தந்தை. அந்தச்சொல் அவரை மிகவும் பாதித்தது. அடுத்த நாளிலிருந்து விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் கருத்தில் கொள்ள ஆரம்பித்தார்.

சிறு வயதில் வறுமையில் வாழ்ந்து, கஷ்டப்பட்டு, அதன் மூலம் பெற்ற அனுபவ‌ங்களாலும், தந்தை வழங்கிய அறிவுரையாலும், வழக்கு விசாரணைகளில், கருணையோடு, பிறருடைய சூழ் நிலைகளையும் அறிந்துக்கொண்டு தீர்ப்பு வழங்கும் குணத்தைக் கடைபிடித்து நற்பெயரை பெற்றார்.

கணையப் புற்று நோயால் (pancreatic cancer) பாதிக்கப்பட்டு, மருத்துவமணையில் சிகிச்சையில் இருந்த நீதிபதி காப்ரியோ, சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலாமானார்.

நீதிபதி காப்ரியோவிற்கு ஜாய்ஸ் காப்ரியோ (60 வயது) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள், ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

மறைந்த நீதிபதி கேப்ரியோ அவர்கள், இனிவரும் காலங்களில் மரியாதைக்குரிய நீதிபதி என்று மட்டும் நினைவுகூரப்பட மாட்டார். அதற்கு மேல், ஒரு தந்தையாக, நல்ல கணவனாக, தாத்தாவாக மற்றும் நல்ல ஒரு மனிதனாகவும் மக்கள் மனங்களில் நிறைந்து இருப்பார்.

எல்லா நீதிபதிகளும், வாதங்கள், சாட்சிகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இவரைப் போல மனிதாபிமானத்தோடும் மனசாட்சியோடும் விசாராணைகள் மேற்கொண்டால், பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவார்கள்.

கடவுளுக்கு முன், எல்லோருடைய கடைசி புகலிடம் நீதிமன்றங்கள் தான். அந்த நீதிபதிகள் நேர்மையோடும் மனிதாபிமானத்தோடும் இருந்தால், அவர்களும் கடவுளாகவே போற்றப்படுவார்கள்.

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Spring and Fall time change

வெளிச்சத்தை சேமிக்க முடியுமா?

தமிழ்நாடா? தமிழகமா?

தமிழ்நாடா? தமிழகமா?

Sep 11 2001 Terrorist Attack 20th Anniversary

செப் 11, 2001 - தீவிரவாதத் தாக்குதல்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net