சேராத இடம் சேர்ந்தால், மதிப்பு இருக்காது. இருக்கின்ற மதிப்பும் போய்விடும்.
நம் நாட்டில் பலர், அரசியல்வாதிகளின் பின் சென்று தமது வாழ்க்கையும் பொன்னான நேரத்தையும் வீணாக்கி விடுகிறார்கள். தொண்டர் என்ற பெயரில், அவர்களுக்காக உழைத்து உழைத்து, அரசியல்வாதிகளை வளமாக்கி, தங்கள் வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள். அதே போல பல இளைஞர்கள் நடிகர் நடிகைகள் பின் சென்று தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். ஒருவர் பின் செல்வது அல்லது ஒருவரை பின்பற்றி செல்வது தவறல்ல, ஆனால் அப்படி செல்லுகையில் தன் தனித்தன்மையை இழந்துவிடுவது தான் தவறு.
ஒரு சின்ன உதாரணம்.
"I" (ஐ) என்பது ஆங்கிலத்தில் எழுத்தா? சொல்லா?
அது எழுத்து மற்றும் சொல் என இரண்டு பிரிவுகளிலும் வரும்.
(தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் பற்றி அறிந்துக்கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்)
ஆனால் அதே ஆங்கிலத்தில் Q என்ற ஒரு எழுத்தும் Queue (வரிசை) என்ற ஒரு சொல்லும் இருக்கிறது. இரண்டையும் உச்சரித்தால் 'க்யூ' என்ற ஒலி தான் வரும்.
ஏற்கனவே 'Q' என்ற ஒலியுடன் எழுத்து ஒன்று இருக்கையில், அதே ஒலி தரும் எழுத்தோடு 'ue' என்ற எழுத்துகளை சேர்த்து, ஒருமுறை அல்ல இரண்டு முறை சேர்த்து மறுபடியும் 'க்யூ' என்று தான் உச்சரிக்கிறோம்.
அந்த 'Q' என்ற எழுத்தின் பின். Queue போல வரிசை வரிசையாக எத்தனை 'ue' வந்தாலும், அந்தச்சொல் 'க்யூ' என்று தான் ஒலிக்கும், அதை Queue' என்று தான் சொல்ல முடியும். அந்த 'ue' என்ற எழுத்துகளுக்கு எந்த பயனும், பலனும் இல்லை. எப்படி ஒரு எண்ணில் புள்ளிக்குப் பின் எத்தனை எண்கள் வந்தாலும், அவற்றிற்கு ஒரு பெரிய மதிப்பில்லையோ அது போல தான் இந்த 'ue' என்ற எழுத்துகளும். அதற்கு எந்த மதிப்பும் இல்லை.
இந்த 'ue' என்ற எழுத்துகளைப் போல தான், நம்மில் பலரும் யார் யார் பின்னோ சென்று, தங்கள் இளமையையும், நேரத்தையும், வாழ்வையும் இழந்துவிடுகிறார்கள். யார் பின்னே செல்கிறார்களோ, அவர்களுக்காக எத்தனை உழைத்தாலும், அந்த உழைப்பின் பலனோ சிறப்போ உழைத்தவர்களுக்கு துளியும் கிடைக்காமல், சிறிதும் பயன்படாமல், அந்த யாரோ ஒருவருக்கு சென்றுவிடுகிறது.
உயர்ந்து வளர்ந்த பெரிய பெரிய மரங்களுக்கு அடியில் எத்தனை செடிகள் இருந்தாலும், அந்த மரங்களைப் போன்று உயர்ந்து வளர்ந்துவிட முடியாது. அதுபோல தான், நாமும் யாருக்காவது கீழ்பணிந்து அடிமையாய் இருக்கலாம், ஆனால், அந்த அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு தனித்து வந்தால் தான், தங்கள் தனித்துவத்தை உணர்ந்து உயரமுடியும். இல்லையென்றால் அந்த மரத்தடியிலேயே வாழ்க்கை முடிந்து விடும்.
ஆங்கிலத்தில் "A, E, I, O, U" என்ற எழுத்துகள், உயிர் எழுத்துகள் ஆகும். அவை இன்றி எந்த சொற்களும் அமைக்க முடியாது.
ஆனால் அப்படி உயர்வான உயிர் எழுத்துகளான "U மற்றும் E", 'Q' என்ற சாதாரண எழுத்தின் பின் சேர்ந்து தமது உயர் பண்பான உயிர் என்ற சிறப்பை இழந்து உயிரற்று போய்விட்டன.
இதை தான்
'மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து" (குறள் 458)
என்று கூறியுள்ளார் திருவள்ளுவர். அதாவது, சிறந்த மனம் கொண்ட சான்றோராக இருந்தாலும் கூட, அவர்கள் யாருடன் சேர்ந்திருக்கிறார்களோ அதை பொருத்து தான் அவர்களுக்கு புகழ் உண்டாகும்.
'Q' க்கு பின் வரும் "U மற்றும் E" போல் இல்லாமல், யாருடன் இருந்தாலும் இணைந்தாலும், நம் தனிச்சிறப்பை இழந்து விடாமல் இருக்கவேண்டும். அப்படி தனித்தன்மையை இழக்கும் சூழல் வரும் பொழுது, அவர்களை விட்டு பிரிந்து, தனித்து வந்து தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டும்.
"சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..." என்பது போல் பலரின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. கர்ணன், சேராத இடத்தில் சேர்ந்ததால் மதிப்பிழந்தாலும், தன் தனித்துவத்தை இழக்கவில்லை. நட்புக்காக தன் உயிரையே இழந்தான். ஆனால் நம்மில் பலரோ, சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து, இந்த 'ue' போல், பயனற்று இருந்து முழு வாழ்க்கையையும் பொருளற்றதாக மாற்றிவிடுகிறோம்.
'I' என்ற எழுத்து தனித்து நின்றாலும், தனித்து நின்று, தன் பெருமையை இழந்து விடாமல் இருக்கிறது.
நாமும் அந்த "I" போல உயர்ந்து நிற்போம், ஆனால் "I"யை விட்டுவிட்டு, அதாவது "நான்" என்ற ஆணவத்தை விட்டுவிட்டு :-)
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.