ஒரு சொல் ஓர் எழுத்து கேளீரோ...
அமைதியான அந்த ஞாயிறு காலையில், இதமான தென்றல் வீச, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழைப் படித்துக்கொண்டிருந்த தன் தந்தையை, மெல்ல அழைத்தாள் கலைவாணி.
என்னம்மா?
வார்த்தை அல்லது சொல் என்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து உருவாகும் ஒன்று தானே அப்பா?
ஆமாம், அதிலென்ன சந்தேகம் உனக்கு?
அம்மா, என்னைத் தோட்டத்தில் பூப்பறித்து வரச்சொன்னார்கள். பூ என்பது எழுத்தா? சொல்லா?
அட, அருமையான கேள்வி கலைவாணி. பூ என்பது இரண்டிற்கும் பொருந்தும். அது எழுத்தும் ஆகும், சொல்லும் ஆகும். தமிழில் இது போன்ற பல ஓரெழுத்து சொற்கள் உள்ளன. தமிழுக்கே உள்ள பல சிறப்புகளில் இதுவும் ஒன்று.
இதற்கு "ஓரெழுத்து ஒரு மொழி" என்று பெயர். ஓரெழுத்தும் பொருள் தரும் சொல்லாக மாறும், பேறு (வரம்) பெற்ற பெருமையுள்ள மொழி நமது தமிழ்மொழி.
அப்படியா? என்னென்ன ஓரெழுத்துச் சொற்கள் உள்ளன? அதை சொல்லுங்கள் அப்பா.
கண்டிப்பாய் சொல்கிறேன். ஆர்வம் இருக்கும்பொழுது கற்றுக்கொண்டால், அது என்றுமே மறக்காது.
உனக்கு ஒன்று தெரியுமா? தமிழில் உள்ள பெரும்பாலான நெடில் எழுத்துகளுமே ஒரு சொல்லாகவும் பொருள் தரும் என்று. வேறு எந்த மொழிகளிலும் இத்தனை ஓர் எழுத்துச் சொற்கள் கிடையாது. பரவலாக பேசப்படும், ஆங்கிலத்தில் கூட ‘A’ மற்றும் ‘I’ என்ற இரண்டு ஓரெழுத்து சொற்கள் மட்டும் தான் உண்டு.
சரி அப்பா. ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் தான் இருக்கிறது, அதனால் அதில் ஓரெழுத்து சொற்கள் இருக்கலாம். ஆனால், நமது தமிழில் தான் 247 எழுத்துகள் உள்ளதே, அப்புறம் ஏன் இத்தனை ஓரெழுத்துச் சொற்கள் தமிழில் இருக்கிறது?
மறுபடியும் நல்ல கேள்வி கலைவாணி. அத்தனை எழுத்துகள் இருப்பது தான், தமிழின் வளமைக்கு ஒரு முக்கிய காரணம். சொல்வளம் மிக்கது நம் மொழி. நீ கேட்ட கேள்விக்கு, எனக்கு சரியான பதில் தெரியாது. ஆனால், ஏன் அவ்வாறு வைத்திருப்பார்கள் என்று ஒருவாறு என்னால் யூகிக்க முடியும்.
மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை, குறில் எழுத்துகளுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை என்பதை நீ அறிவாய் அல்லவா? இரண்டு மாத்திரை அளவு கொண்டுள்ளதால், நெடில் எழுத்துகளுக்கு, கூடுதல் சிறப்பாக, தனி சொல் எனும் பெருமையும் வழங்கப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.
சரி, நீ முதலில் கேட்ட கேள்விக்கு விடை இதோ:
நாம் அடிக்கடி உபயோகப்படுத்து ஓரெழுத்து சொற்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். மற்ற ஓரெழுத்து சொற்களையும் அவற்றின் பொருளையும் அதற்கு கீழே கொடுத்துள்ளேன்.
தற்போது உபயோகத்தில் இருக்கும் ஒற்றை எழுத்துச் சொற்கள்.
ஆ பசு (ஆவின் பால்)
பெற்றம், மரை, எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர். (தொல். பொ. 615.)
ஈ ஈ என்னும் பறவை ; தேனீ ; வண்டு, கொடுத்தல், அழிவு
அழிவு - ஈபாவஞ் செய்து (திருவாய். 2, 2, 2)
ஐ அழகு, கடவுள், அரசன், ஆசான், ஐந்து, தந்தை, தலைவன்,
கணவன், வியப்பு, மென்மை, நுண்மை
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். குறள் எண் : 771 )
என்னைமுன் -> என் ஐ முன்
பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர் - சாலமன் பாப்பையா
கா காப்பது, காவல் (காத்தேன், காப்பேன், காக்கிறேன்)
கலைமகள், சோலை, கற்பகமரம், காவடித்தண்டு, துலாக்கோல்
காவெனப் பெயரிய கலைமகளை (காஞ்சிப்பு. வீராட்ட. 45).
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (குறள் எண் : 1163)
காவடித்தண்டு காதல் துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன - சாலமன் பாப்பையா
கை கரம், யானைத்துதிக்கை, கதிர், பக்கம், சிறகு, சேனை,
செய்யத்தக்கது, ஒப்பனை, ஆற்றல், ஆள், சிறுமை,
உலகவொழுக்கம், ஒழுங்கு, குற்றம்
துதிக்கை - தூங்குகையா னோங்கு நடைய (புறநா. 22).
கதிர் - செங்கைநீட்டித் தினகரன் றோன்றலும்
(திருவிளை. விடை. 20)
சிறகு - கோழி கைத்தலத்தைக் கொட்டி (அரிச். பு.
விவா. 195)
சேனை - கைவகுத்து (தணிகைப்பு. சீபரி. 467)
சிறுமை - கைஞ்ஞானங் கொண்டொழுகுங்
காரறிவாளர் (நாலடி, 311).
கோ இறைவன், அரசன்/பேரரசன், தந்தை, தலைமை, மலை,
குயவன், பசு, எருது, தேவலோகம்/சுவர்க்கம், வானம், பூமி,
திசை, கதிர், வச்சிராயுதம், அம்பு, கண், சொல், மேன்மை, நீர்,
இரசம், இலந்தைமரம்
தகப்பன் - நின்கோ வரினு மிங்கே வருக(கலித். 116)
தலைமை - ஐவர் வந்து கோச்செய்து குமைக்க
(தேவா. 997, 6)
குயவன் - மூதூர்க் கலஞ்செய்கோவே (புறநா. 256, 7)
கண் - கோலானைக் கோவழலாற் காய்ந்தார்
(தேவா. 520, 7)
சோ மழைப் பெய்வதைக் குறிக்கும் ஓர் ஒலிக்குறிப்பு, அரண்,
உமை, வாணாசுரன் நகர்
வாணாசுரன் நகர் - சோவி னருமையழித்த மகன்
(நான்மணி.2)
தா கொடு, வலிமை, வருத்தம், கேடு, குற்றம், பகை, பாய்கை, குறை
வலிமை - தாவே வலியும் வருத்தமு மாகும் (தொல்.
சொல். 344)
வருத்தம் - தா விடுமி னென்றான் (சீவக. 749)
குற்றம் - தாவில் வெண்கவிகை (கம்பரா.
கோலங்காண். 1)
குறை - தாவரும்பக்க மெண்ணிரு கோடியின்
றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள். 40)
தீ நெருப்பு, கோபம், அறிவு, தீமை, நஞ்சு, நரகம், விளக்கு, உணவைச் செரிக்கச்செய்யும் வயிற்றுத் தீ , வழிவகை
தை ஓர் மாதம், பூசநாள், மகரராசி, நாய்க்கடுகு செடி, தையல், தாளக் குறிப்பினுள் ஒன்று, அலங்காரம், மரக்கன்று, ஊடுருவு, தொடுத்தல்
ஊடுருவுதல் - மேனிதைத்த வேள்சரங்கள் (கம்பரா.
உலாவியல். 15)
தொடுத்தல் - தொடலை தைஇய மடவரன் மகளே
(ஐங்குறு. 361)
அலங்கரித்த - தைஇய மகளிர் (கலித். 27, 19)
தோ நாயைக் கூப்பிடும் ஒலி
பா பாட்டு,; பரப்பு, தேர்த்தட்டு, கைம்மரம், நெசவுப்பா, பஞ்சுநூல், நிழல், கடிகாரவூசி, காப்பு, பருகுதல், தூய்மை, அழகு, பாம்பு,
பூனைக்காலிக் கொடி
பூ மலர்; அலர்; அழகு; கொடிப்பூ, கோட்டுப்பூ , நீர்ப்பூ , புதற்பூ என நால்வகைப்பட்ட மலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின் தலைச்சூடு; நிறம்; நீலநிறம்; பொலிவு; மென்மை; யானையின் நுதற்புகர்; யானையின் நெற்றிப்பட்டம்; கண்ணின் கருவிழியில் விழும் வெண்பொட்டு; விளைவுப் போகம்; ஆயுதப் பொருக்கு; தீப்பொறி; நுண்பொடி; தேங்காய்த் துருவல்; சூரியனின் கதிர்படுதற்கு முன்னுள்ள பூநீற்றின் கதிர்; இலை; இந்துப்பு; வேள்வித் தீ; கூர்மை; நரகவகை; பூப்பு; பூமி; பிறப்பு.
பை நிறம்; அழகு; பசுமை; இளமை; உடல்வலி; துணி, தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்; பாம்புப்படம்; குடல், மூத்திரப்பை முதலிய உடல் உறுப்பு; நாணயவகை; கோபி; விரி
பைந்தமிழ்
இளமை - பைதீர் பாணரொடு (மலைபடு. 40).
போ செல், ஒழி
வா வர, வருமாறு அழைப்பது, தாவுதல்
வை கூர்மை; போடு, வைக்கோல்; புல்; திட்டு/வைதல்/வசவு
வைக்கோல்.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் : 435)
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்- சாலமன் பாப்பையா
நா நாக்கு; சொல்; நடு; மணி முதலியவற்றின் நாக்கு; தீயின் சுடர்; திறவுகோலின் நாக்கு; நாகசுரத்தின் ஊதுவாய்; துலைநாக்கு; அயல்; பொலிவு.
நாக்கு - யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. (குறள் - 127)
மணியின் நாக்கு - வாயிற் கடைமணி நடுநா நடுங்க.
(சிலப். 20, 53).
வார்த்தை - நம்பிநாவினு ளுலகமெல்லா நடக்கும்
(சீவக. 316)
நீ முன்னிலை ஒருமைப் பெயர்
மா விலங்கு; யானை, குதிரை, பன்றி ஆகியவற்றின் ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; மாங்கனி, மாமரம்; செல்வம்; பெருமை, பெரிய, வலிமை, நிறம், அழகு
விலங்கு - மாவு மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பேரெச்சம் (புறநா. 28)
அன்னம் - மடநடை மாயினம் (கலித். 92, 17).
மை கண்ணுக்கிடும் அஞ்சனம்; மசி; கருநிறம்; இருள்; பசுமை; களங்கம்; கருமேகம்; வானம்; குற்றம்; பாவம்; அழுக்கு
அதிகம் பயன்படுத்தப் படாமல் இருக்கும் மற்ற ஒற்றை எழுத்துச் சொற்கள்:
ஊ ஊண்(உணவு), ஊன்(இறைச்சி), தசை/சதை
ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவனும்" (தொல்:7:67)
ஏ மிகுதி, அடுக்கு, இறுமாப்பு, அம்பு, மேல் நோக்குதல், இகழ்ச்சி
அம்பு - "பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து எல்லாரும்
அறிய நோய் செய்தனவே" (குறு:72:1:2)
ஓ ஒழிதல், ஓவியம், சென்று தங்குகை, மதகுநீர் தாங்கும்
பலகை, கொன்றை, ஓம், பிரமன், ஒலிக் குறிப்பு (மகிழ்ச்சிக்
குறிப்பு, வியப்புக் குறிப்பு, தெரிதல் குறிப்பு, நினைவுக் குறிப்பு)
ஒழிதல்: "நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து" (அக:11:12)
ஓவியம்: "உருவு கிளர் ஓ வினைப் பொலிந்த பாவை"
(அக:142:21-2).
ஒலிக்குறிப்பு: "ஓ என்னும் யாமம் கொள்பவர் நெடு நா ஒண்
மணி" (நற்:132:8-9).
ஓம் - அல்லற் பிறவி அழிப்பானே ஓ என்று
(சிவபுராணம்)
ஔ நிலம்/பூமி, அநந்தன் என்னும் பாம்பு, கடிதல்
கீ கிளி முதலிய சில பறவைகளின் குரல்
கூ குயில் மற்றும் சில பறவைகளின் ஒலி (கூவுதல்), பெரும்
சத்தம் போடுதல் (கூக்குரல்), பூமி
கூவுதல் - கோகிலங்களி கூக்கொண்டு சேருங்
குளிர்பிண்டியானை (திருநூற். 1)
பூமி - கூநின் றளந்தகுறளென்ப (வள்ளுவமா. 14).
கே திணறு (கேவுதல்)
கௌ கொள்ளு (பயறு)
சா இற, கெடு, காய்ந்துபோ, தேயிலைச்செடி
சீ திருமகள், ஒளி, சிறப்பைக் குறிக்கும் ஓர் அடைமொழி (ஸ்ரீ), சீழ், சளி, இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு, அலட்சியம்
இலக்குமி - சீதனங்கோடு புயங்கை கொண்டார் (கந்தரந். 8)
சீழ் - சீ பார்ந் தீமொய்த்து (திருவாச. 25,3)
சளி - குமிழ்மூக் குவைகாணுமிழ்சீ யொழுக்குவ
(மணி.20, 48)
அலட்சியம் - சீயேது மில்லாதென் செய்பணிகள்
கொண்டருளும் (திருவாச.10, 12)
சூ வெறுப்பு முதலியனவற்றை உணர்த்தும் ஒலிக் குறிப்பு, விலங்குகளையோட்டுங் குறிப்பு, சுளுந்து, பனங்கதிர் முதலியவற்றைக் கருக்கிப் பொடித்துத் துணியிற்கட்டி யமைக்கும் வாணவகை.
சே சிவப்பு, காளை, இடபராசி, அழிஞ்சில்மரம், வெறுப்புக்குறி
காளை - சேவேறு சேவடிக்கே சென்றூதாய் (திருவாச. 10, 1)
சேவடி - சிவந்த பாதம் (இவ்விடத்தில் சிவப்பு என்பது
தாமரை நிறத்தைக் குறிக்கும்)
சை இகழ்ச்சிக் குறிப்பு, பொருள்/செல்வம்
சையெனத் திரியேல் - ஆத்திசூடி
சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் - கொன்றை வேந்தன்
சௌ சிறுமி
தூ தூய்மை, தூயது, வெண்மை, பற்றுக்கோடு, வலிமை, பகை,
இறைச்சி, பறவையின் இறகு, இகழ்ச்சிக் குறிப்பு
தூய்மை - தூமலர் துவன்றிய (மலைபடு.51)
வெண்மை - தூமதி வாக்கிய கிரணம் (காஞ்சிப்பு. நாட்டு . 96)
வலிமை - தூவெ திர்ந்த பெறா அத்தாவின் மள்ளரொடு
(பதிற்றுப். 81, 34)
இறைச்சி - நெய்கொணிணந்தூ நிறைய வமைத்திட்ட
அடிசில் (பு. வெ. 10, முல்லை .8)
பறவையினிறகு - தூவிரிய மலருழக்கி (திவ். பெரியதி. 3.,6,1)
தே தெய்வம், தலைவன், நாயகன், கொள்ளுகை, மாடுகளை ஓட்டும் ஒலிக்குறிப்பு
தெய்வம் - தேபூசை செய்யுஞ்சித்திரசாலை
தௌ (தௌவை) மூத்தாள், மூதேவி
பீ மலம், தொண்டிமரம், அச்சம்,; பெருமரம்
பே அச்சம்; மேகம்; 'இல்லை' என்னும் பொருள் தரும் சொல்
அச்சம் - பேஎமுதிர் கடவுள் (குறுந். 87)
நுரை. - பேஎநாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை (இறை. 7, உரை)
யா யாவை; ஓர் அசைச்சொல்; ஒரு மரவகை; அகலம்
யாவை. பெண்ணிற் பெருந்தக்க யாவுள் (குறள், 54)
யானை யொடித்துடெஞ்சிய யா (குறுந். 232)
வீ அழிவு; சாவு; நீக்கம்; மடிவு; மலர்; பூந்தாது/மகரந்தம்; பறவை
மலர் - வீகமழ் நெடுஞ்சினை (புறநா. 36).
மகரந்தம் - பூவணையின் வீயை (மேருமந். 1058).
வே வேவு, வேகு, மறைப்பது என்ற பொருளும் உண்டு
ஞா கட்டு, பொருந்து
நூ எள்; யானை; அணிகலன்
நே அன்பு ; ஈரம்
ஈரம். - நேஎ நெஞ்சின் . . .கவுரியர் மருக (புறநா 3).
நை ஓர் இகழ்ச்சிக்குறிப்பு, நைவு
மீ மேலிடம்; உயரம்; வானம்; மேன்மை
மேலிடம் - நாண்மலர் வான்மீ யகத்தே வர (திருநூற். 84).
ஆகாயம் - மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா.
நிகும்பலை. 149)
மேன்மை - வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாடா
வுலகத்து (திவ். நாய்ச். 13, 7).
மூ மூன்று, மூப்பு
ஏவா மக்கள் மூவா மருந்து - கொன்றைவேந்தன்
மே மேல், மேம்பாடு; அன்பு
சில குறில் ஒற்றை எழுத்துச் சொற்களும் உள்ளன:
அ அழகு, கடவுள், சுக்கு, திப்பிலி
திருமால். அவ்வென்சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20)
உ சிவனைக் குறிக்கும் ஒரு சொல். சிவசக்தி எனப்படும், அவ்விடம்
அவ்விடம்: "மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன உக் காண்" (கலி:146:20-2)
சிவசக்தி: "பாரும் உகாரம் பரந்து இட்ட நாயகி" (மூல:1751).
நம் முன்னோர்கள் (நம் பெற்றோர் உட்பட) எழுதும் பொழுது, முதலில் 'உ' என்று எழுதிவிட்டு தான் தொடங்குவார்கள். சிலர் பிள்ளையார் சுழி என்றும் சொல்வார்கள்.
க பிரமன், ஆன்மா, உடல், காற்று, அக்கினி
பிரமன். கவ்வென்ப தயன்பேர் (காஞ்சிப்பு. தலவி. 26)
கு பூமி
செ செம்மை, சிவப்பு, சிறப்பு/மேன்மை போன்றவற்றைக் குறிக்கும் சொல். செங்கதிர், செந்தமிழ், செவ்வாய், செம்பருத்தி
து உணவு, அனுபவம், பிரிவு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை (குறள் எண் : 12)
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் - மு.வ
சில உயிரெழுத்துகள் தமிழ் எண்களாகவும் வருகிறது. அவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம்.
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.