Maruu - Grammar

மரூஉ

தெரிந்த இலக்கணம் தெரியாத விளக்கம். அது என்ன தெரியாத விளக்கம் என்று கேட்கிறீர்களா? கட்டுரையை முழுவதும் படித்துப் பாருங்கள்.

சொற்கள் எப்படி உருவாகின என அறிந்துக்கொள்வது எப்பொழுதும் சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சொல்லாராய்ச்சி தான் இந்தக் கட்டுரை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்கள் இப்படி தான் உருவாகியிருக்கும் என்பது என் கணிப்பு. சற்றே நீண்ட பதிவு இது, அதனால் வாசகர்கள் அனைவரும் சிறிது பொறுமையாக, இக்கட்டுரையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,

நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இலக்கணச் சொல் - மரூஉ.  ஒரு சொல் காலப்போக்கில் சில எழுத்துகள் தோன்றியும், திரிந்தும், கெட்டும், இலக்கணம் சிதைந்து, தானே மருவி(மாறி) வழங்கப்படுவது மரூஉ எனப்படும். அதாவது, தொன்றுதொட்டு வழங்கி வந்த ஒரு சொல், காலப்போக்கில், எழுத்துகளிலோ அல்லது ஒலியிலோ சற்று மாற்றம் அடைந்து அதே பொருளில் வருவது மரூஉ எனப்படும். அப்படி மருவி வரும் சொற்கள், பெரும்பாலும், இலக்கணப்படி அமைந்துவிடும், ஆனால் சில சொற்கள், இலக்கணப்படி அமையாமல், ஒரு சில பிழைகளுடனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில கடினமான சொற்கள், அன்றாட பயன்பாட்டிற்கு ஏதுவாக, எளிதாக உச்சரிப்பதற்காக மருவியிருக்கலாம். இவ்வாறு இலக்கணப்படி மருவிய சொற்களும், இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்களும் மரூஉ மொழி என அழைக்கப்படுகிறாது. அந்த மரூஉ பற்றி சில சுவையானத் தகவல்களைத் தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். (மரூஉ என்ற சொல்லில் கூட ஒரு இலக்கணம் இருக்கிறது - அது என்ன தெரியுமா? விடை இப்பதிவின் இறுதியில் இருக்கிறது)

மரபு என்பது, நம் முன்னோர்கள் கடைபிடித்த நல்லொழுக்கத்தை, நல்ல பழக்கவழக்கங்களை, மாற்றாமல், மீறாமல் அப்படியே கடைப்பிடிப்பது தான். அதே போல், தமிழ் இலக்கணத்திலும், நம் சான்றோர்கள் (முன்னோர்கள், பெரியவர்கள்) எப்பொருளை, எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே நாமும் பயன்படுத்துவது தான் இலக்கண மரபாகும். அப்படி மரபு மீறி வழங்கும் சொற்களை 'வழூஉ' என விலக்கி வைத்தார்கள். ஆனால், காலப்போக்கில் பெருமபான்மையான மக்கள் வழுவிய சொற்களை பயன்படுத்தத் தொடங்கியதால், ஒருவர் கருத்துகளை மற்றொருவர் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில், வழுவியச் சொற்களை 'மரூஉ' என வகைப்படுத்தி ஏற்றுக்கொண்டார்கள்,

பெரும்பாலும், மருவி வரும் சொற்கள், அதே பொருள் கொண்டிருக்கும். சில சமயம் மருவி வரும் புது சொற்கள் வேறு பொருள் கொண்டிருக்கும்.

காலப்போக்கில் பல சொற்கள் மருவியதுண்டு.

எ.கா::

தெங்குகாய் - தேங்காய்
என் தந்தை   - எந்தை
எள் நெய்       - எண்ணெய் (இதைப் பற்றி விரிவாக படிக்க இந்த இணைப்பைப் பாருங்கள்)
நன் செய்       - நஞ்சை
புன் செய்       - புஞ்சை
புரி நூல்          - பூணூல்
கோவில்         - கோயில் (கோயில் என்பது இலக்கணப்படி தவறு - கோவில் என்று தான் சொல்ல வேண்டும் - மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப் பாருங்கள்)

பேச்சுவழக்கில் சில சொற்கள் மருவுவதுண்டு.

எ.கா:

வேண்டும்            - வேணும்
போகவேண்டும் - போகணும் / போணும்
வேண்டாம்           - வேணாம்
தெரியவில்லை   - தெரியலை / தெரிலை
இருக்கிறது           - இருக்கு
முழுவதும்             - முழுதும் / முழுசும்
தண்ணீர்               - தண்ணி
போய்விட்டான்   - போய்ட்டான்
தந்துவிட்டான்     - தந்துட்டான்
வந்துவிட்டது        - வந்துருச்சு

இதே போலத் தான் பல ஊர்ப் பெயர்களும் மருவியுள்ளன.

(எ.கா)
பூவிருந்தவல்லி - பூந்தமல்லி.

எனக்குத் தெரிந்து மருவிய ஊர்களின் பெயர்களை, பதிவின் இறுதியில் தொகுத்துள்ளேன். இன்னும் பல ஊர்ப்பெயர்கள் இப்படி மருவியிருக்கலாம், உங்களுக்குத் தெரிந்த ஊர்ப்பெயர்களைக் கருத்துப் பகுதியில் தெரிவியுங்கள்.

சொற்கள் மட்டுமல்ல, பல பழமொழிகளும் கூட, காலப்போக்கில் மருவி அதன் உண்மையான பொருள் மறைந்து, முற்றிலும் வேறு பொருளைத் தரும் வகையில் மாறிவிட்டன. இப்படி பொருள் மாறியப் பழமொழிகள் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

உதாரணத்திற்கு ஒன்று:

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்திவிட வேண்டும்

உண்மையான பழமொழி

ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்திவிட வேண்டும்.

தெரிந்த இலக்கணம், தெரியாத விளக்கம்

சரி, கட்டுரையின் தொடக்கத்தில், தெரிந்த இலக்கணம், தெரியாத விளக்கம் என்று சொன்னேன் அல்லவா? அது என்ன விளக்கம் என்று இப்பொழுது பார்க்கலாம், இதோ...

ஒரு சொல்லில் அடுத்தடுத்து இரு குறில் எழுத்துகள் இருந்தால், முதல் குறில் நெட்டெழுத்தாகிறது, அதாவது நெடிலாக மாறுகிறது, இரண்டாம் குறில் மறைகிறது, சொல் சுருங்கி புதிய சொல்லொன்று உருவாகிறது, அதேபோல், அடுத்தடுத்து ஒரு குறில் மற்றும் ஒரு மெய்யெழுத்து இருந்தால், குறில் நெட்டெழுத்தாகி, மெய்யெழுத்து மறைந்து அந்தச். சொல் சுருங்குகிறது. இப்படி மாறும் நெட்டெழுத்துகள், பெரும்பாலும், எந்த குறில் எழுத்து இருந்ததோ, அதற்கான இன நெடிலாகத் தான் இருக்கும். ஒரு சில சொற்களில், மட்டும், அந்த வருக்கத்தைச் சேர்ந்த வேறு நெடில் வரும். எந்தச்சொல்லில் இருந்து புதிதாக மருவியதோ, அச்சொல்லுக்குத் தொடர்புடைய ஒரு சொல்லாக தான் புதிய சொல்லும் இருக்கிறது, பொருளும் அவ்வாறே.

இதில் இன்னொரு சுவையான செய்தி என்னவென்றால், இந்த இலக்கணப்படி மருவும் சொற்கள், எந்த சொல்லிலிருந்து மருவியதோ, அந்த சொல்லின் மாத்திரை அளவு தான் இருக்கும் அல்லது அதைவிட அதிகமாகத்தான் இருக்கும், குறையவே குறையாது.

இரண்டு குறில் - 2 மாத்திரை, ஒரு நெடில் - 2 மாத்திரை, அதனால் புதிய சொல்லின் மாத்திரை அளவு மாறாது

அதே போல், குறிலும், மெய்யுமாக இருக்கும்பொழுது, 1 1/2 மாத்திரையிலிருந்து 2 மாத்திரையாகிறது.

எ.கா:

பொழுது - போது
1 + 1 + 1 (3) 2 + 1 (3)

செ ய் தி - சே தி
1 + 1/2 + 1 (2 1/2) 2 + 1 (3)

அண்ணாமலை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும், "கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்கு சரியா வரும்!" என்று. அதுபோல் இங்கேயும் கூட்டிக் கழிச்சுப் பாருங்கள் கணக்கு சரியா வரும் :-)

பெரும்பாலும் பெயர்ச்சொற்கள் மட்டும் தான் இப்படி மருவி வரும். விதிவிலக்ககாக ஒரு சில வினைசொற்கள் மருவி வரலாம். ஆனால், எல்லா சொற்களையும் நாம் இதை போன்று மருவிப் பார்க்கக்கூடாது, பொருள் முற்றிலும் மாறுபட்டு பெரும் பிழை ஏற்பட்டுவிடும்.. மருவும் சொல்லுக்குத் தொடர்புடையதாக தான் பெரும்பாலும் மருவிய சொற்களும் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

எனக்குத் தெரிந்த சொற்களை, இங்கே பதிவிட்டுள்ளேன். இதில் விடுபட்டுள்ள, உங்களுக்குத் தெரிந்த சொற்களை, கருத்துப் பகுதியில் தெரிவியுங்கள். நன்றி.

அகலமரம்    - ஆலமரம்
அகப்பை      - ஆப்பை
அகங்காரம் - ஆங்காரம்
அய்யா          - ஐயா (சான்றோர்களை குறிக்கும் பொழுது, 'ஐயா' என்று தான் சொல்லவேண்டும், ஏனென்றால் 'ஐயா' நான்கு மாத்திரை,     அய்யா 3 1/2 மாத்திரை தான். அதனால் உயர்ந்தோர்களை ஐயா என்று தான் அழைக்கவேண்டும். அய்யன் வள்ளுவர் என்று சொல்லாமல் ஐயன் வள்ளுவர் என்று கூறுவது தான் சிறப்பாக இருக்கும்)

இடுகை            - ஈகை
இடுதல்             - ஈதல்
இல்லவள்        - இல்லாள்
எகனை            - ஏனை (எதுகை)

கழல்               - கால்
கழனி             - கானி - காணி
கயிலை         - கைலை
கவிதை         -  காதை
குதித்தாடல் - கூத்தாடல்

செய்தி             - சேதி
செய்யவன்     - சேயவன் - சேயான் / சேயோன்
முதலில் உள்ள குறில், மெய் 'செய்' இரண்டும் மருவி நெடிலாக மாறி சேயவன் ஆனது. அதே போல் நடுவில் உள்ள 'யவ' இரண்டும் மருவி 'யோ' என நீண்டது.

தந்தை               - தாதை
தரு                     - தா
தயிரியம்          - தைரியம் (தயிர் - தைர் என்று மாறவில்லை)
தயிலம்             - தைலம்
திகதி                 - தேதி (தீ க்குப் பதிலாக தே என மாறியிருக்கிறது)
தெய்வம்            - தேவம் - தேவன்
தெய்வ ஆரம்   - தேவஆரம் - தேவாரம்
தெரிவு              - தேர்வு (இதில் இரு குறிலும் நெட்டெழுத்தாக மாறி கூடவே ஒரு மெய்யும் சேர்ந்து மருவியிருக்கிறது)
தொகுப்பு          - தோப்பு

பகுதி                  - பாதி
பரவு                   - பாவு
பயித்தியம்      - பைத்தியம்
புகும்                 - பூம் (காவிரி புகும் பட்டிணம் - காவிரிபூம்பட்டிணம்)
புகுந்து              - பூந்து (சந்துக்குள் பூந்து போய்விட்டான்)
பெயர்               - பேர்
பெயரன்          - பேரன் (நாம் அடிக்கடி பயன் படுத்தும் பேரன்/பேத்தி சொற்கள் மாறியுள்ளதைப் பாருங்கள்)
பெயர்த்தி       - பேத்தி
பொழுது           - போது (வந்தபொழுது - வந்தபோது)

மகன்                 - மான் (அதியன் மகன் - அதியன்மான் - அதியமான், கோமகன் - கோமான், புத்திமான், கல்விமான், )
மச்சினன்         - மச்சான் (சி - சா என நீண்டது)
மிகுதி                - மீதி
மெட்டு              - மேடு (மெட்டு - என்றால் இசை மெட்டு மட்டும் அல்ல, ஒரு இடத்தில் பள்ளம் தோண்டுகையில், நடுவில், அந்தப் பள்ளத்தின் உயரத்தை அளக்க விட்டும் வைக்கும் ஒரு இடம் மெட்டு என்று அழைக்கப்படும்)
மொகனை       - மோனை 

வரு                     - வா
வயிரம்              - வைரம்
வழக்கு              - வாக்கு
விகிதம்             - வீதம்

பின் வரும் மருவிய சொற்களைப் பாருங்கள், இவற்றில் இறுதியில் வரும் குறில்கள் நெடிலாய் மாறுகின்றன.

அரவு   - அரா
இரவு   - இரா
உலவு  - உலா
கனவு  - கனா
நிலவு  - நிலா
நோய்  - நோ
வினவு - வினா

மேலே உள்ள சொற்களை, கடைக்குறை என்று சிலர் சொல்வார்கள், ஆனால் அது தவறு என்பது என் கருத்து.. 'குறை' எனும் இலக்கணப்படி, ஒரு சொல்லில், எழுத்தொன்று குறையும், ஆனால் புது எழுத்து வராது. அதே போல் பொருளும் மாறாது,

சான்று:

உள்ளம் - உளம் ('ள்' என்ற எழுத்து குறைந்திருக்கிறது - இது இடைக்குறை)

தமிழில் உள்ள 'குறை' எனும் இலக்கணத்தைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

பின் வரும் சொற்கள் எல்லாம், நாம் இப்பொழுது பார்த்த இந்த இலக்கணப்படி மாறியிருக்கலாமோ என்பது என் எண்ணம்:

அகல்           - ஆல் (அகல் என்பதற்கு அகன்ற பெரிய மரம் என்று ஒரு பொருள் இருக்கிறது, ஆல் என்றால் ஆல மரம்)
அகழி          - ஆழி (இரு பெரும் நிலபிரேதசங்களுக்கு இடையில் அகழி போல் இருக்கும் நீர், ஆழி என்று அழைக்கப்பட்டிருக்கலாம்)
அய்யா        - ஆயா
அடிமை      - ஆமை (ஆமை, எதிர்க்காமல் ஓட்டுக்குள் அடங்கி கிடப்பதால்)
உறக்கம்     - ஊக்கம் (உறக்கம் தொலைத்தால் தான் உழைக்க முடியும். உறக்கம் மருவி தான் ஊக்கம் வந்திருக்குமோ?)

கரடு             - காடு

சுட்டு            - சூடு

தகவு            - தகை
தகவல்        - தாவல் (தகவல் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விரைவாக தாவி செல்வதால்,
திரவம்         - தீவம் (தீவு - கடைக்குறை)
தெரு            - தேர் (தெருவில் வலம் வருவதால் இருக்கலாம்)

நியதி            - நீதி (ஒழுக்கம், இப்படி தான் இருக்கவேண்டும், வரையறை, முறை என பொருள் தரும் நியதியில் இருந்து தான் நீதி என்ற சொல் பிறந்திருக்கும்)
நிழல்             - நீல் (இதில் இருந்து தான் நீலம் என்ற சொல் வந்திருக்குமோ?)
நுவல்             - நூல் (நுவல் என்றால் சொல் (வினை) என்று பொருள். பல செய்திகளை, கருத்துக்களை சொல்வதால், இச்சொல்லில் இருந்து நூல் என்ற சொல் பிறந்திருக்கலாம்)

பறவை          - பாவை (பெண்களை பல பறவைகளுடன் ஒப்பிடுவதால், தோன்றியிருக்குமோ?)
பிருடம்          - பீடம்
பெட்டை        - பேடை - பேதை

முரடன்           - மூடன் (சில முரடர்கள் சிந்திக்காமல் முட்டாள் தனமாய் ஏதாவது செய்துவிடுவதுண்டு)
முந்தையர்     - மூதையர் என்றாகி, பின்பு மூதாதையர் என்று ஆகிவிட்டது போல் தெரிகிறது.

வண்ணம்        - வாணம் (வண்ணமாய் மின்னும் தீ / மத்தாப்பு - வாண வேடிக்கை)
வழங்கு            - வாங்கு (வழங்கினால் தான் வாங்க முடியும், அதனால் இந்த சொல்லில் இருந்து வாங்கு தோன்றியிருக்கலாம்)
விரும்பு            - வீம்பு (ஒன்றை அதிகம் விரும்பும் பொழுது தான் அதை அடைய வேண்டும் என்ற வீம்பு வருகிறது, விரும்பு மருவி தான் வீம்பு வந்திருக்குமோ?)

இவை போல் மட்டும் இல்லாமல், இரு சொற்கள் இடம் மாறியும், அதே பொருளைத் தரும் வகையில் சில சொற்கள் உள்ளன, அப்படி உள்ள இரண்டு சொற்களுமே பயன்பாட்டிலும் உள்ளன. அவை:

கால்வாய் -> வாய்கால் .
இல்முன்    -> முன்றில் (இல்லத்தின் முன்)
இல்வழி (வீட்டுக்குள் செல்லும் வழி) -> இது வழியில் (வழி இல்) என்று மாறுகிறது. இவ்விதிப்படி, வழியில் என்பது "வாயில்' என்றாகிறது.
நகர்ப்புறம் -> புறநகர்
தசை            -> சதை

தமிழில் உள்ள சில விகுதிகள் கூட இந்த இலக்கணப்படி தான் தோன்றி இருக்கிறது என எண்ணுகிறேன்:

முதலிரண்டு குறில் நெடிலாய் மாறுகிறது:

அவன் - ஆன் (சொன்னான்)
அவள்  - ஆள் (சென்றாள்)
அவர்   - ஆர் (வந்தார்)

இதே போல் 'அன்' ஆண் பால் விகுதி, நெடிலாய் மாறுவதையும் பார்க்கலாம்:

இறைவன்  - இறைவா
மனிதன்     - மனிதா
நண்பன்     - நண்பா
தோழன்     - தோழா
வேலன்       - வேலா
தயாளன்    - தயாளா
மாறன்        - மாறா
மாமன்        - மாமா
பையன்       - பையா
வாசகன்      - வாசகா
தச்சன்          - தச்சா
திருடன்        - திருடா
வீரன்            - வீரா
இளைஞன்  - இளைஞா
மன்னன்      - மன்னா
அண்ணன்   - அண்ணா

(ங், ந் ஆகிய இரண்டு எழுத்துகளில் 'அன்' விகுதி இல்லை)

தமிழில் மட்டுமல்ல, மலையாளத்தில் உள்ள சில சொற்கள் கூட இப்படித்தான் உருவாகியிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக:

மகனே - மானே - மோனே
மகளே - மாளே - மோளே

(மலையாளமே தமிழில் இருந்து உருவானது தானே).

சரி மரூஉ என்ற சொல்லில் ஒளிந்திருக்கும் இலக்கணம் தெரியுமா? அது அளபெடையாகும் - ஒலிச்சுவைக்காக, இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடிலை மூன்று மாத்திரையளவில் ஒலிக்கச்செய்வதற்காகப் புலவர்கள் அதனுடைய இன எழுத்தான குறில் எழுத்தையும் சேர்த்து எழுதுவார்கள். அளபெடைகள் செய்யுளில் தான் வரும், பேச்சுவழக்கில் அளபெடைகள் கிடையாது. திருக்குறளில், அளபெடைகளை நிறைய இடத்தில் காணலாம்.

சான்று:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (2)

அளபெடையை உச்சரிக்கும் பொழுது அளபெடுக்கும் நெடிலை நீண்டு உச்சரிக்க வேண்டும். உதாரணமாக மரூஉ என்பதை பலர் "மரூ உ - மரூவு" என உச்சரிப்பார்கள் ஆனால் அது தவறு. அதை "மரூ ஊ" என, அந்த நெடிலை மூன்று மாத்திரை அளவு உச்சரிக்க வேண்டும்.

வழூஉ மற்றும் மரூஉ ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு - ஒரு சிலர் மட்டும் ஒரு சொல்லைத் தவறாக உச்சரித்தால் அது வழூஉ, அதுவே அதை பலரும் பல காலமாகத் தொடர்ந்துப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அது மரூஉ. பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதால், மக்கள் நலன் கருதி, கருத்துப் பரிமாற்றத்துக்கு எளிதாக உதவுவதால் அதையும் ஒரு இலக்கணமாக்கி ஏற்றுக்கொண்டார்கள் நம் முன்னோர்கள், இப்படித் தான் நம் தமிழில், பல வடமொழிசொற்களும் கலந்திருக்கும் என்பது என் கருத்து, யாரும் வலுக்கட்டாயமாகத் திணித்து இருக்கமாட்டார்கள், ஆனால் இன்று ஆங்கிலமும் அது போல தமிழில் அதிகம் கலந்துக்கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுதே இதை சரிசெய்யவில்லை என்றால், வருங்காலத்தில் இவையெல்லாமே தமிழ்ச்சொற்களாகி விடும் ஆபத்து உள்ளது.

எப்பொழுதும் உண்மைகளை உரக்கச் சொல்லவேண்டும், இல்லையென்றால் 'உண்மை' கூட 'ஊமை'யாகிவிடும்!

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

மருவிய ஊர்ப் பெயர்களின் பட்டியல் இதோ. இதில் விடுபட்டுப்போன ஊர்ப் பெயர்களை தெரிவியுங்கள், இப்படியலில் சேர்த்துக்கொள்கிறேன்.

அறம் தாங்கி                     - அறந்தாங்கி - அறந்தை
ஈர ஓடை                              - ஈரோடு
உதகமண்டலம்                 - உதகை
உறையூர்                             - உறந்தை
உகுநீர்க்கல்                         - ஒகேனக்கல்
ஏரிக்காடு                            - ஏற்காடு

கரூவூர்                                 - கரூர்
கன்னியாக்குமரி              - குமரி
காவிரி புகும் பட்டிணம்  - காவிரிபூம்பட்டிணம்
கும்பகோணம்                   - குடந்தை
குன்றூர்                               - குன்னூர்
கோணியம்மன் புதூர் / கோவன் புதூர் - கோயம்புத்தூர் - கோவை

சிற்றம்பலம்                       - சிதம்பரம் (சிற்றம்பலம் -> சிற்றம்பரம் -> சித்தம்பரம் -> சிதம்பரம்)
சின்னத்தறிப்பேட்டை     - சிந்தாதிரிப்பேட்டை
சேரலம்                                - சேலம்
சேய்ஞலூர்                          - சேங்கனூர்
செங்கழுநீர் பட்டு              - செங்கல்பட்டு - செங்கை
சைதாப்பேட்டை                - சைதை

தஞ்சாவூர்                             - தஞ்சை
தர்மபுரம்                              - தாம்பரம்
தில்லையம்பலம்                - தில்லை (சிதம்பரம்)
திருச்சிராப்பள்ளி               - திருச்சி
திருத்தணிகை                    - திருத்தணி
திருநின்றவூர்                       - தின்னனூர்
திருநெல்வேலி                     - நெல்லை
திருவல்லிக்கேணி              - டிரிப்லிக்கேன்
திருவிற்கோலம்                  - கூவம்

நாகப்பட்டினம்                    - நாகை

பழம் உதிர் சோலை           - பழமுதிர்சோலை
பல்லவன் தாங்கல்             - பழவந்தாங்கல்
புதுக்கோட்டை                    - புதுகை
புதுச்சேரி                              - புதுவை
பூவிருந்தவல்லி                    - பூந்தமல்லி
பொழில் ஆட்சி                    - பொள்ளாச்சி

மன்னார்குடி                        - மன்னை
மயிலாப்பூர்                         - மயிலை
மாயூரம்                                - மாயவரம்
மா அம்பலம்                       - மாம்பலம்

வெற்றிலைக்குண்டு / வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு

தொடர்புடைய கட்டுரைகள்

One letter words in Tamil

ஒரு சொல் கேளீரோ...

Numbers and Grammar

எண் இலக்கணம்

Thiruvannamalai Temple

உயிரோடு உயிர் சேர்ந்தால்...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net