காலை முழுவதும் சுட்டெரித்து, இன்றையப் பொழுதிற்குத் தன் கடமை முடிந்தது என்று எண்ணிய கதிரவன், மேற்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து சென்றதால், வெளிச்சம் குறைந்து, இருள் பரவத்தொடங்கியது.
வாசலில் விளையாடிக்கொண்டிருந்த
கலைவாணியை அழைத்த அவள் அம்மா, விளக்கேற்றுவதற்காக விளக்கில் சிறிது எண்ணெய் ஊற்ற சொன்னார்.
சரி என்ற கலைவாணி, எண்ணெய்யை ஊற்றிவிட்டு, அப்பாவென்று அழைத்துக்கொண்டு தன் தந்தையிடம் வேகமாக வந்தாள்.
“அம்மா என்னை, விளக்கில் எண்ணெய் ஊற்ற சொன்னார்கள். எனக்கு அதில் ஒரு சந்தேகம் அப்பா?” என்றாள் கலைவாணி.
என்ன சந்தேகம், என்ன எண்ணெய் என்றா?
இல்லை, எண்ணெய் - எண்ணை, எது சரி என்று?
நல்ல கேள்வி. தமிழ் வகுப்பில் பகுபதம், பகாப்பதம் என்று படித்திருப்பாயல்லவா.
ஆமாம்.
எண்ணெய் என்ற சொல்லைப் பிரித்தால் எள் + நெய் என்று வரும். எள்ளிலிருந்து எடுத்த நெய், அதனால் எள் + நெய் ஆனது.
எள் + நெய் என புணரும் போது, ள் திரிந்து ண் ஆக மாறுகிறது (இலக்கணத்தில் இதற்குத் திரிதல் விகாரம் என்று பெயர்). அதனால் எண் + நெய் எண்ணெய் ஆக மாறுகிறது.
ஆனால் நெய் பாலிலிருந்து அல்லவா கிடைக்கும்?
உண்மையில் பசும்பாலிலிருந்து எடுப்பதால் அது பசு நெய் என்று அழைக்கப்பட்டு பிறகு நெய் என்று ஆகிவிட்டது.
ஆனால் நெய் எதிலிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். ஒரு பொருளிலிருந்து வழவழப்பான் திரவம் (Oil) எடுக்கப்பட்டால், அது நெய் எனப்படும்.
ஆக, எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய், எள் + நெய் = எண்ணெய்
தேங்காயிலிருந்து எடுக்கப்படும் நெய் தேங்காய் நெய்
கடலையிலிருந்து எடுக்கப்படும் நெய் கடலை நெய்
ஆனால் நாம் எல்லாவற்றையும் எண்ணெய் என்றே அழைக்கப் பழகிவிட்டோம். கடலை எண்ணெய் என்பதைப் பிரித்துப் பார்த்தால் கடலை + எள் + நெய், கடலை, எள் இரண்டையும் அரைத்து எடுத்த நெய் என்பது போன்ற பொருள் தரும்.
இப்போது நாம் சென்று கடலை நெய் கொடுங்கள் என்றால், கடலை எவ்வளவு, நெய் எவ்வளவு வேண்டும் என்று கேட்ப்பார்கள் அல்லது கடலைநெய்யா என்று நம்மை விநோதமாகப் பார்ப்பார்கள்.
ஆக, எண்ணெய் என்றாலே, எள்ளிலிருந்து எடுக்கப்படுவது தான். அது உடலுக்கு நன்மை தரும் என்பதால் நல்லெண்ணெய் என்றும் அழைக்கின்றோம்.
மிக்க நன்றி அப்பா, அப்படியானால் எண்ணை என்பது தவறா?
எண்ணை எனபதும் சரிதான், ஆனால் அதன் பொருள் வேறு. எண் என்றால் எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு சொல். 'ஐ' எனும் வேற்றுமை உருபு சேர்ந்து எண்ணை என்று பொருள் தருகிறது.
உதாரணமாக், கடிதத்தில் அஞ்சல் பெட்டி எண்ணை எழுதினேன்.
இப்பொழுது எனக்கு, இரண்டுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறது. நன்றி அப்பா. ஆனால், தேங்காய் எண்ணெய், கடலையெண்ணெய் என்று சொல்வது தவறு என்று தெரிந்தும், அப்படித் தவறாகவே உபயோகப்படுத்துவதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது.
ஆமாம், அதனால் தான் எதையும் பழகும் பொழுது சரியாக பழகிக்கொள்ளவேண்டும். ஏனென்றால் பழக்கங்கள் தான் பின்னர் வழக்கங்களாக மாறிவிடுகின்றன.
அப்படியென்றால் பழக்கம் வழக்கம் இரண்டும் வேறு வேறு பொருள் கொண்ட சொற்களா?
ஆம் அதைப் பற்றி இன்னொரு நாள் சொல்கிறேன். எண்ணெய் தான் சரி என்பதைத் தெரிந்துக்கொண்டாய். இப்பொழுது உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு நன்றாகச் சிந்தித்துப் பதில் சொல்லவேண்டும் சரியா?
சரி அப்பா, கேளுங்கள்.
"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்" என்ற ஒரு பழமொழி இருக்கிறது அல்லவா? அதற்கு என்ன பொருள்?
ஓ.. தெரியுமே.
கெட்டது செய்பவர்களுக்கு ஒரு காலமென்றால். நல்லவர்களுக்கும் நிச்சயம் ஒரு நல்ல காலம் வரும் என்று பொருள். அதே போல், வலிமையானவர்களுக்கு ஒரு காலம் வந்தால். பலமில்லாதவர்களுக்கும் ஒரு காலம் வரும் என்றும் பொருள் கொள்ளலாம்.
நீ இரண்டாவதாக சொன்னது, கிட்டத்தட்ட சரி. உண்மையான பொருள் என்ன தெரியுமா?
"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்" என்பதில் யானையும், பூனையும் யானை பூனை அல்ல.
என்னப்பா குழப்புறீங்க?
குழப்பவில்லை, நாம் முதலில் பார்த்த நெய் தான் இங்கும் பார்க்கப் போகிறோம்.
ஆ நெய் என்பது தான் ஆனை என்று மருவி, பின்பு யானை ஆகி விட்டது
பூ நெய் என்பது பூனை என்று மருவி விட்டது.
ஆ என்றால் பசு. ஆ நெய் என்றால் பசும்பாலிலிருந்து கிடைக்கும் நெய் என்று பொருள். அதே போல் பூ நெய் என்றால் பூவிலிருந்து கிடைக்கும் நெய், அதாவது தேன் என்று பொருள்.
அதாவது பசுவின் நெய்யை அதிகமாக உட்கொண்டு உடல் கொழுத்தால், பூவின் நெய்யான தேனை மருந்தாக உட்கொள்ள வேண்டிய காலம் வந்தே தீரும் - என்பது தான் இதன் சரியான பொருள். குழந்தையாக இருக்கும்பொழுதும், இளமையிலும் நெய் அதிகம் சேர்த்துக்கொள்வோம். ஆனால் முதுமையிலோ அல்லது நோய்வாய்ப்பட்ட சமயத்திலோ நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாது. சில கசப்பான மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள நேரலாம், அப்பொழுது கசப்பை மறக்கடிப்பதற்காகத் தேன் கலந்து எடுத்துக்கொள்வார்கள். அது மட்டுமல்லாமல் தேன் உடலுக்கும் நல்லது, சில நோயிற்கும் மருந்தாகும்.
அதனால் தான்
ஆ நெய்யிற்கு ஒரு காலம் வந்தால், பூ நெய்யிற்கும் ஒரு காலம் வரும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
அப்பா, எனக்கு யானையும் பிடிக்கும் ஆ நெய்யும் பிடிக்கும், அதே போல் பூனையும் பிடிக்கும் பூ நெய்யும் பிடிக்கும்.
மிகவும் நல்லது.
(சிரிப்பு)
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.