Chidhambaram Natarajar Temple

Ina Ezhuthukal

நண்பன் டா....

நண்பன் டா.... என்றதும், இது ஏதோ சந்தானம் நகைச்சுவை காட்சியைப் பற்றி அல்லது ஏதாவது திரைப்படம் சம்பந்தபட்ட செய்தி என்று எண்ணிவிடவேண்டாம்.  நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாம் பேசும் தமிழ்மொழியின் எழுத்துகளுக்கும் உண்டு.  அதைப் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.

தமிழில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளது என்று நம் எல்லோருக்கும் தெரியும், இதில் சில எழுத்துகள், வேறு சில எழுத்துகளுடன் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டு, இணைபிரியாமல் எப்பொழுதும் அல்லது பெரும்பாலும் கூடவே வரும்.  இவ்வெழுத்துகளை தமிழ் இலக்கணம் இன எழுத்துகள் என்று அழைக்கிறது. அதாவது அவை நட்பெழுத்துகள் ஆகும்.

இந்த எழுத்துகள் அனைத்தும் நாம் அனைவரும் அறிந்தது தான், ஆனால் இவை தான் இன எழுத்துகள் என்று தெரியாமலேயே, நாம்  உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றைத் தெளிவாக அறிந்துக்கொண்டால், பெரும்பாலான எழுத்துப்பிழைகளை நாம் தவிர்த்துவிட முடியும்.

இன எழுத்துகள்

முதலில் இனம் என்றால் என்ன? ஏதாவது ஒரு வகையில் ஒன்றுக்கு ஒன்று, ஒரு ஒற்றுமை இருந்தால், அவற்றை சேர்த்து சொல்லும் பொழுது இனம் என்று சொல்லலாம். உதாரணமாக, 'உயிரினம்' என்றால், மனிதன், விலங்கு, பறவை என, உயிர் உள்ள அனைத்தும் அதனுள் அடங்கும்.  அதுவே, மனித இனம் என்று சொல்லும் பொழுது, உயிரனங்களிலேயே, ஆறறிவு ஆற்றல் கொண்டவர்கள் என்ற வகையில் வேறுபடுகிறது.  அதிலும், தமிழ் பேசும் நல் வாய்ப்புப் பெற்ற நாமெல்லாம் தமிழினம் என்று பெருமையாகச் சொல்லுகிறோம். அதே போல், தமிழ் எழுத்துகளில், சில எழுத்துகளை, அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமையை வைத்து இன எழுத்துகள் என்று இலக்கணம் கூறுகிறது.

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலில், இன எழுத்துகள் எந்த அடிப்படையில் பிரிக்கபடுகிறது என்று கூறப்பட்டுள்ளது:

தானம் முயற்சி அளவு பொருள் வடிவு

ஆன ஒன்று ஆதிஓர் புடைஒப்பு இனம் ஏ  -  71

அதாவது,

1) எழுத்துகள் பிறக்கும் இடம்

2) எழுத்துகள் உச்சரிக்கும் முயற்சி

3) எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு

4) எழுத்தகள் தரும் பொருள்

5) எழுத்துகளின் வடிவம்

ஆகிய சிறப்பமசங்களைக் கொண்டு, அவ்வெழுத்துகளை, இன எழுத்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றோ, அதற்கும் மேற்பட்ட அம்சங்களோ, ஒத்துப்போனால் அவை இன எழுத்துகள் ஆகும்.

உயிரெழுத்துகளில் இன எழுத்துகள்

உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும் என்பது நமக்குத் தெரியும். இந்த குறில் எழுத்துகளும், நெடில் எழுத்துகளும் ஒன்றுக்கொன்று இன எழுத்துகள் ஆகும்.  அவை ஓசையின் அடிப்படையிலும், வடிவத்திலும், உச்சரிக்கும் முயற்சியின் அடிப்படையிலும் இன எழுத்துகளாக மாறுகின்றன.

நெடில்  குறில்

ஆ      அ

ஈ       இ

ஊ      உ

ஏ       எ

ஓ      ஒ

ஐ மற்றும் ஔ ஆகிய இரண்டு எழுத்துகளுக்கும் இணையான குறில் எழுத்துகள் இல்லை, இருந்தாலும், அவற்றுக்கு இன எழுத்துகள் உண்டு, அவை

ஐ     இ   (அ + இ = ஐ,  அது மட்டும் அல்லாமல் ஐ என்று சொல்லும் பொழுது இ என்ற ஒலியில் அது முடிகிறது)

ஔ   உ   (அ + உ = ஔ, அது மட்டும் அல்லாமல் ஔ என்று சொல்லும் பொழுது உ என்ற ஒலியில் அது முடிகிறது) 

அ, ஆ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ எல்லாம் வடிவத்தில் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கிறது. அதே போல், அவற்றை உச்சரிக்க நாம் எடுக்கும் முயற்சியும், ஒலி பிறக்கும் இடமும் ஒரே மாதிரி இருக்கின்றன.

இ, ஈ இவை இரண்டையும் நாம் உச்சரிக்க எடுக்கும் முயற்சியும், அவற்றின் ஒலி தோன்றும் இடமும் ஒன்றாக இருக்கிறது.

கவிதைகளிலும் செய்யுள்களிலும், இந்த இன எழுத்துகளை அடிக்கடிக் காணலாம். அவை ஒலி நயத்தைக் கூட்டுகிறது. எடுத்துக்காட்டாக ஔவைப்பாட்டி அருளிய ஆத்திசூடியைப் பார்க்கலாம்:

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்....

பழமொழிகளில் கூட இவற்றைப் பார்க்கலாம்:

அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

ஆடிக் காற்றி அம்மியே பறக்கும்

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது

இன்னும் பல....

ஆகையினால்,  நெடிலும் குறிலும் ஒன்றுக்கொன்று இன எழுத்துகள் ஆகும்

மெய்யெழுத்துகளில் இன எழுத்துகள்

மெய்யெழுத்துகளில் இன எழுத்துகளைப் பார்க்குமுன், மெய்யெழுத்துகளைக் கூட நாம் மூன்று வகையாகப் பிரிக்கிறோம். எப்படி? வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம்.  அவற்றின் உச்சரிப்பு ஒலியினை வைத்து அவை மூன்று வகையாகப் பிரிக்கப்ட்டிருந்தாலும், அவற்றை இன எழுத்துகள் என்று கூறாமல், மெய்யெழுத்துகளில், எவை ஒன்றோடு ஒன்று இணையாக வருகிறதோ, அவற்றை மெய்யெழுத்து இன எழுத்துகள் என்கிறோம்.  அதனால், மெய்யெழுத்துகளில், மெல்லினமும், வல்லினமும் இன எழுத்துகள் ஆகும்.

மெல்லின எழுத்துகளுக்கு, வல்லின எழுத்துகள் இன எழுத்துகள் ஆகும்.

மெல்லினம்  வல்லினம்

ங்              க்

ஞ்              ச்

ண்             ட்

ந்               த்

ம்              ப்

ன்              ற்

இந்த எழுத்துகளைப் பார்த்தோமேயானால், சில மெல்லின எழுத்துகளும் அதனுடைய வல்லின எழுத்துகளும் எப்பொழுதும் தொடர்ந்தே வரும்.  மற்ற மெல்லின எழுத்துகள், அதுனுடைய இன எழுத்துகளுடன் பெரும்பாலும் சேர்ந்து வரும்.  எப்படி எனபதை உதாரணங்களுடன் பார்ப்போம்.

ங் - க்  ->   'ங்' கைத் தொடர்ந்து 'க' வரிசை எழுத்துகள் மட்டும் தான் வரும்

            சிங்கம், அங்கே, அங்கி, செங்கல், பொங்கு, தங்கை, வேங்கை

ஞ் - ச்  ->   'ஞ்' சைத் தொடர்ந்து 'ச' வரிசை எழுத்துகள் மட்டும் தான் வரும் (விதிவிலக்கு - அஞ்ஞானம், விஞ்ஞானம்...)

            அஞ்சு, வஞ்சி, தஞ்சம், மஞ்சள், தஞ்சை, களஞ்சியம், காஞ்சி

ம் - ப்   ->  'ம்' மைத் தொடர்ந்து பெரும்பாலும், 'ப' வரிசை எழுத்துகள் வரும். (விதிவிலக்கு - அம்மா, இம்மை, அம்மி...)

            அம்பு, நம்பிக்கை, கம்பர், தம்பி, கொம்பை, அம்பாரம், பம்பரம்

ண் - ட்  ->  'ண்' ணைத் தொடர்ந்து பெரும்பாலும் 'ட' வரிசை எழுத்துகள் மட்டும் தான் வரும். (விதிவிலக்கு - கண்ணன், தண்ணீர்...)

             பண்டம், ஆண்டு, சண்டை, வண்டி, குண்டு, அண்டா, உண்டோ

             இவற்றை எளிதில் மறக்காமலிருக்க, 'டண்ணகரம்' என்று சொல்வார்கள். அதாவது 'ண்' க்குப் பிறகு 'ட்' வரிசை

             எழுத்துகள் வரும் என்பதைக் குறிக்க.

ந் - த   ->   'ந்' தைத் தொடர்ந்து பெரும்பாலும் 'த' வரிசை எழுத்துகள் மட்டும் தான் வரும் (விதிவிலக்கு - அந்நியர், எந்நாடு...)

             அந்த, இந்தியா, இந்து, காந்தி, தந்தம், மந்தி, தந்தை, குந்தவை, செந்தாமரை

             இவற்றை எளிதில் மறக்காமல் இருக்க, 'தந்நகரம்' என்று சொல்வார்கள், அதாவது 'ந்' க்குப் பிறகு 'த்' வரிசை         

             எழுத்துகள் வரும் என்பதைக் குறிக்க.

ன் - ற்  ->   'ன்' னைத் தொடர்ந்து, பெரும்பாலும், 'ற' வரிசை எழுத்துகள் மட்டுமே வரும். (விதிவிலக்கு -  கன்னி, தென்னை...)

             அன்று, இன்று, என்று, வென்று, தென்றல், கொன்றை, அன்றில், நன்றி, தொன்று

             இவற்றை எளிதில் மறக்காமலிருக்க,  'றன்னகரம்' என்று சொல்வார்கள்.  அதாவது 'ன்'க்கு பிறகு, 'ற்'

             வரிசை எழுத்துகள் வரும் என்பதைக் குறிக்க.

அது மட்டுமல்ல,  புணர்ச்சி விதிகளின் படி, ஒற்றைச் சொல் எழுத்துடன், வல்லின சொற்கள் சேரும்பொழுது, அங்கு அவற்றுடைய இன எழுத்துகள் தோன்றும்.  உதாரணமாக:

பூ + தோட்டம் =  பூந்தோட்டம்

தே + காய்    =   தேங்காய்

மா + கனி    =   மாங்கனி

பூ + சிட்டு    =  பூஞ்சிட்டு

பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெறுவதைப் போல், மெல்லின எழுத்துகளோடு சேர்ந்து, வல்லின எழுத்துகள் கூட மென்மையாக ஒலிக்கும். உதாரணமாக:

அங்கம் என்று சொல்லும் பொழுது 'ங்' க்கு அடுத்து வரும் 'க' மென்மையாக ஒலிப்பதைக் காணலாம்.

அதே நேரத்தில்,

அக்கம்  என்று சொல்லும் பொழுது 'க்' க்கு அடுத்து வரும் 'க' வன்மையாக ஒலிப்பதைக் காணலாம்.

அதே போல் தான் மற்ற வல்லின எழுத்துகளும்.

பஞ்சம்   பச்சை

சண்டை  சட்டை

பந்து     பத்து

கும்பம்   குப்பி

வென்று  வெற்று

ஆகையினால், மெல்லின எழுத்துகளுக்கு வல்லின எழுத்துகள் இன எழுத்துகள் ஆகும். இவறைத் தெரிந்துக்கொள்வதன் மூலம், நாம் செய்யும் பெரும்பாலான எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க முடியும்.  உதாரணமாக,  மூன்று சுழி 'ண' எங்கு வரும், இரண்டு சுழி 'ன' எங்கு வரும் என்றக் குழப்பம் நீங்கும்,  அதே போல் அவை இரண்டும், எந்த ஒரு சொல்லின் முதலிலும் வராது, அதனால், சொல்லின் முதலிம் வரும் எழுத்து 'ந' வரிசை எழுத்தாகத் தான் இருக்கும் என்பது எளிதாகப் புரிந்துவிடும்.

இடையின இன எழுத்துகள்

இடையின எழுத்துகளுக்கு என்று தனியாக இன எழுத்துகள் இல்லை.  இடையின எழுத்துகளே ஒன்றுக்கொன்று, அவற்றுக்கான இன எழுத்துகளாக வரும்.  உதாரணமாக:

பெயர், தயிர், அவர், இவள், கழல், கயிறு, செயல், வளர், குரல், பிறர்...

இந்த இன எழுத்துகளையும், அவற்றின் பயனையும் தெரிந்துக்கொள்வதன் மூலம், நமது பெரும்பாலான எழுத்துப்பிழைகளை நாமே திருத்திக்கொள்ள முடியும்.  மற்றவர்கள் எழுதியப் பிழைகளையும், அவர்களுக்கு நம்மால் சுட்டிக்காட்ட முடியும்.

இப்ப சொல்லுங்க நண்பர்களே, மெல்லின எழுத்துகள் வல்லின எழுத்துகளைப் பார்த்து 'நண்பேண்டா" என்று சொல்வது சரிதானே!

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திக்கலாம்.

அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

 

தொடர்புடைய கட்டுரைகள்

Maruu - Grammar

மரூஉ

One letter words in Tamil

ஒரு சொல் கேளீரோ...

Numbers and Grammar

எண் இலக்கணம்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net