Chidhambaram Natarajar Temple

Numbers and Grammar

எண் இலக்கணம்

எண் இலக்கணம் என்றவுடன், ஆஹா, மறுபடியும் இலக்கணமா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. தமிழ் இலக்கணத்தில் உள்ள, "திணை, பால், எண், இடம், காலம்" பற்றி சொல்லப்போகிறேன் என்று பயந்துவிட வேண்டாம். இது வேறு.

எண் என்ற சொல்லுக்குத் தமிழில்

பல பொருள் உண்டு.  ஆனால், எண் என்றவுடன் உடனே, நமக்கு நினைவுக்கு வருவது, அது எண்ணிக்கையைக் குறிக்கும் என்பது தான். 1,2,3.. என்ற எண்களைத் தமிழில் எழுதும்போது ஒன்று இரண்டு மூன்று... என்று எழுதுகிறோம். அட இது கூட தெரியாமலா இருக்கோம் என்று நீங்கள் "எண்ணுவது" தெரிகிறது. ஆனால், அதே ஒன்று இரண்டு மூன்று, சில இடங்களில், ஒரு என்றும் சில இடங்களில் ஓர் என்று மாறுகிறது அல்லவா? அதைப் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். அதே போல் தான் இரண்டு மூன்று என்ற மற்ற எண்களும்.

அவை ஏன் மாறுகிறது, எப்படி மாறுகிறது என்பதை பார்க்கலாம்.

ஒன்று

தமிழ் நூல்கள், செய்திதாள்கள் படிக்கும்போதோ, அல்லது பேசும் பொழுதோ, ஒரு அல்லது ஓர் என்ற இரண்டு சொற்களையும் பார்த்திருப்போம். ஆனால் எப்பொழுது ஒ (குறில்) அல்லது ஓ (நெடில்) உபயோகப்படுத்த வேண்டும் என்ற குழப்பம் சிலருக்கு இருக்கலாம். அதற்கான விடை மிக எளிது. உதாரணமாக கீழே உள்ள சொற்றொடரைப் பாருங்கள்:

ஓரூருல ஒரு வீரன் இருந்தானாம்...

இதைப் பிரித்து எழுதிப்பார்த்தால், நமக்கு அந்த வினாவிற்கு விடை கிடைத்து விடும். இதைப் பிரித்து எழுதினால்

"ஓர் ஊரில் ஒரு வீரன் இருந்தானாம்" என்று வரும்.

என்ன உங்களுக்கு விடை தெரிகிறதா? ஆம் சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்.

ஒன்று என்ற எண்ணிக்கைக்கு அடுத்து வரும் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் நெடிலும், உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கினால் குறிலும் வரும்.

சில உதாரணங்கள்:

ஒரு + அடி = ஓர் அடி = ஓரடி
ஒரு + ஆயிரம் = ஓராயிரம்
ஒரு + இடம் = ஓரிடம்
ஒரு + ஈசல் = ஓரீசல்
ஒரு + உடல் = ஓருடல்
ஒரு + ஊஞ்சல் = ஓரூஞ்சல்
ஒரு + ஐந்து = ஓரைந்து
ஒரு + எண் = ஓரெண்
ஒரு + ஏடு = ஓரேடு

சில திரைப்பட பாடல்களில் கூட கேட்டிருப்பீர்கள்:

ஒரு நாள் போதுமா...
ஒரு பெண்ணைப் பார்த்து...
ஒரு தங்க ரதத்தில்...
ஒரு கோப்பையிலே என்...
ஒரு பொய்யாவது சொல் பெண்ணே...
ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

ஓராயிரம் பார்வைகளில்...
ஓராயிரம் நிலவே வா...
ஓராறு முகமும்...
ஓர் இனம்...

சொன்னது சரி தான், ஆனால் இவன் ஏதோ சும்மா அடிச்சு விடுகிறான், என்று நினைத்தீர்கள் என்றால், அந்த நினைப்பை உடனே அழித்துவிடுங்கள். இதை நான் சொல்ல வில்லை. நம் முன்னோர்கள் வகுத்த இலக்கண நூல்கள் சொல்கிறது.

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில், இது பற்றி விளக்கமாக கூறப்பட்டு இருக்கிறது:

எண்ணிறை யளவும் பிறவுமெய்தின்
ஒன்று முதெல்ட் டீறா மெண்ணுண்
முதலீ ரெண்முத னீளு மூன்றா
றேழ்குறு கும்மா றேழல் லவற்றின்
ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
ஏகு மேற்புழி என்மனார் புலவர்.            (நன்னூல் - 188)

முதலிரண்டு எண்களும் - உயிர் வரும் வழி நீளும், மெய் வரும் வழி நீளா.

மூன்று, ஆறு, ஏழு ஆகிய மூன்று எண்களும் - உயிர் வரும் வழி குறுகாது, மெய் வரும் வழி குறுகும்

இறுதி வரியில் வரும் "ஏகு மேற்புழி என்மனார் புலவர்", அதைப் பிரித்து எழுதினால்,
"ஏகும் ஏற்புழி என்கிறார் புலவர்" என வரும். ஏற்புழி என்றால், ஏற்குமிடத்தில், அதாவது ஏற்குமிடத்தில் மட்டுமே இந்த மாற்றங்கள் ஏற்படும், சில இடங்களில் நிகழாமல் போகலாம் என்று குறிப்பிடுகிறார். விதி ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் என்பதை போல், சில இடங்களில் இது நிகழாமல் போகலாம்.

சரி, இரண்டு எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.

இரண்டு

இரண்டு என்ற எண்ணிக்கைக்கு அடுத்து வரும் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் நெடிலும், உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கினால் குறிலும் வரும்.

இரு + பத்து = இருபது
இரு + முறை = இருமுறை
இரு + கோடு = இருகோடு
இரு + மலர் = இருமலர்
இரு + வடிவம் = இருவடிவம்
இரு + நூறு = இருநூறு (நாம் சொல்லும் பொழுது இறநூறு என உச்சரிப்போம், ஆனால் இருநூறு தான் சரி)

இரு + அடி = ஈரடி
இரு + ஆயிரம் = ஈராயிரம் (இரண்டாயிரம் என்று வழக்கில் இருக்கிறது)
இரு + உயிர் = ஈருயிர்
இரு + எட்டு = ஈரெட்டு
இரு + ஏழு = ஈரேழு

 

மூன்று

மூன்று என்பது, மற்ற சொற்களுடன் சேரும் பொழுது, 'ன்று' கெட்டு, சில இடங்களில், மு எனவும், சில இடங்களில் மூ என்றும் மாறுகிறது. நன்னூலில் குறிப்பிட்டுள்ளது போல், உயிர் வரும் வழி குறுகாது, மெய் வரும் வழி குறுகும்.

மெய்யெழுத்து வரும்பொழுது, மூ என்ற நெடில் மு என்ற குறிலாக குறுகி ஒலிக்கிறது.

மூன்று + பத்து = முப்பது
மூன்று + பாட்டன் = முப்பாட்டன்
மூன்று + தமிழ் = முத்தமிழ்
மூன்று + கனி = முக்கனி
மூன்று + கோடி = முக்கோடி
மூன்று + கோணம் = முக்கோணம்
மூன்று + கூடல் = முக்கூடல்
மூன்று + சந்தி = முச்சந்தி
மூன்று + முறை = மும்முறை
மூன்று + மூன்று = மும்மூன்று
மூன்று + படை = முப்படை
மூன்று + நூறு = முந்நூறு

உயிர் எழுத்து வரும்பொழுது, மூ என்ற நெடில் குறுகாமல், நெடிலாகாவே ஒலிக்கிறது.

மூன்று + அர் (விகுதி) = மூவர்
மூன்று + ஆயிரம் = மூவாயிரம்
மூன்று + உலகு = மூவுலகு
மூன்று + ஏழு = மூவேழு
மூன்று + இசை = மூவிசை
மூன்று + இடம் = மூவிடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை)
மூன்று + இனம் = மூவினம் (வல்லினம், மெல்லினம், இடையினம்)

மூன்று வேந்தர்கள் - மூவேந்தர்கள் <= மட்டும் விதிவிலக்கு

சிலவற்றை மட்டும் கொடுத்துள்ளேன். மற்றவற்றை நீங்கள் கண்டுபிடியுங்கள்.

(மேல் உள்ள சொற்களை பார்த்தால் - சில வாரங்களுக்கு முன் பார்த்த உடும்படுமெய் இங்கு வருவதை காணலாம். அக்கட்டுரையை இங்கே உடும்படுமெய் பார்க்கலாம்.)

நான்கு

நால் / நான்கு (நால் என்பது தான் காலப்போக்கில் நாலு என்று மாறிவிட்டது)

நால் + அடியார் = நாலடியார்
நால் + ஆயிரம் = நாலாயிரம்
நால் + அர் (பன்மை விகுதி) = நால்வர் (அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்)

நால் என்ற சொல், சில சொற்களுடன் சேரும் பொழுது மாற்றம் பெறும்.

க, ச, த, ப என்ற வல்லின எழுத்துகளுக்கு முன் வரும்பொழுது, "ல்" என்பது "ற்" ஆக மாற்றம் பெறும்.
ஞ, ந, ம, என்ற மெல்லின எழுத்துகளுக்கு முன் வரும்பொழுது, "ல்" என்பது "ன்" ஆக மாற்றம் பெறும்.

நால் + கால்(லி) = நாற்கால்(லி)
நால் + சந்தி = நாற்சந்தி
நால் + பத்து = நாற்பது

நால் + நூறு = நானூறு
நால் + நிலம் = நானிலம்
நால் + மறை = நான்மறை
நால் + முகன் = நான்முகன்

நாலாவிதம்/நானாவிதம் <= விதிவிலக்கு

ஐந்து

ஐ என்பது ஐந்து என்ற பொருளில் வரும்

ஐந்து உடன் மற்ற உயிர்மெய் சொற்கள் சேரும் பொழுது, 'ந்து' கெட்டு ஐ மட்டும் நின்று சேர்கிறது. அப்பொழுது, வருமொழிக்கு இணையான இனவெழுத்து அங்கு வருகிறது.

 

ஐந்து + பது = ஐ + பத்து = ஐம்பது (ம் - ப வின் இன எழுத்து)
ஐந்து + பூதம் = ஐம்பூதம்
ஐந்து + கோணம் = ஐ + கோணம் = ஐங்கோணம் (ங் - க வின் இன எழுத்து)
ஐந்து + தொழில் = ஐ + தொழில் = ஐந்தொழில் (ந் - த வின் இன எழுத்து)

(இன எழுத்துகள் பற்றிய கட்டுரையைப் படிக்க -> இன எழுத்துகள்)

ஐந்து உடன் உயிர் எழுத்து சொற்கள் சேரும் பொழுது:

ஐந்து + ஆறு = ஐயாறு (திருவையாறு என்ற திருத்தலம் ஞாபகம் வருகிறதா?)
ஐந்து + ஏழு + ஐயேழு

 

ஆறு

ஆறு, மேலே நன்னூலில் குறிப்பிட்டபடி, மெய்யெழுத்துகளுக்கு முன் வரும்பொழுது அறு என்று குறுகுகிறது.

ஆறு + சுவை = அறுசுவை
ஆறு + படை = அறுபடை
ஆறு + முகம் = அறுமுகம் (ஆறுமுகம் என்று தான் வழக்கில் உள்ளது)
ஆறு + பத்து = அறுபது
ஆறு + நூறு = அறுநூறு (நாம் சொல்லும்பொழுது அறநூறு என்று உச்சரிப்போம், ஆனால் அறுநூறு என்பதே சரி)

உயிரெழுத்துகளுக்கு முன் வரும்பொழுது குறுகாமல், அப்படியே ஒலிக்கிறது.

ஆறு + அடி = ஆறடி
ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்

 

ஏழு

மூன்று, ஆறு போல், ஏழும், உயிர் வரும் வழி குறுகாது, மெய் வரும் வழி குறுகும்.

ஏழு + பத்து = எழுபது
ஏழு + பிறப்பு = எழுபிறப்பு
ஏழு + வகை = எழுவகை
ஏழு + கடல் = எழுகடல்
ஏழு + நூறு = எழுநூறு (நாம் சொல்லும்பொழுது எழநூறு என்று உச்சரிப்போம், ஆனால் எழுநூறு என்பதே சரி)
(சில இடங்களில் ஏழ்கடல், ஏழ்பிறப்பு என்றும் வழங்கப்படுகிறது)

ஏழு + அடி = ஏழடி
ஏழு + ஆயிரம் = ஏழாயிரம்
ஏழு + இசை = ஏழிசை
ஏழு + உலகம் = ஏழுலகம்
ஏழு + ஊர் = ஏழூர்

 

எட்டு

எட்டு என்பது சில இடங்களில் எண் ஆக மாற்றம் பெறுகிறது.

எட்டு + பத்து எண்பது
எட்டு + நூறு எண்ணூறு
எட்டு + குணம் = எண்குணம்
எட்டு + திசை = எண்திசை
எட்டு + கோணம் = எண்கோணம்

மாறாத இடங்கள்

எட்டு + அடுக்கு = எட்டடுக்கு
எட்டு + ஆயிரம் = எட்டாயிரம்
எட்டு + தொகை = எட்டுத்தொகை

 

ஒன்பது

ஒன்பது என்பது, இரண்டு இடங்களில் மட்டுமே மாற்றம் பெறுகிறது.

ஒன்பது + பத்து = தொண்ணூறு
ஒன்பது + ஆயிரம் = தொள்ளாயிரம்

(இந்த இரண்டிற்கும், இவை ஏன் அப்படி வருகிறது என்பதை நன்னூல் (193) இலக்கணம் விளக்குகிறது - அவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம்)

பத்தில் ஒன்று குறைந்து = ஒன்பது
நூறில் பத்து குறைந்து = தொண்ணூறு
ஆயிரத்தில் நூறு குறைந்து = தொள்ளாயிரம்

என்று அமைந்திருக்கிறது.

 

பத்து

பத்து - பதின், பன் என மாற்றம் பெறுகிறது.

பத்து + ஒன்று = பதினொன்று
பத்து + இரண்டு = பன்னிரண்டு
பத்து + மூன்று = பதிமூன்று
பத்து + நான்கு = பதிநான்கு (பதினான்கு என்று எழுதுவதும் உண்டு)
பத்து + ஐந்து = பதினைந்து
பத்து + ஆறு = பதினாறு
பத்து + ஏழு = பதினேழு
பத்து + எட்டு = பதினெட்டு
பத்து + ஒன்பது = பத்தொன்பது
பத்து + பாட்டு = பத்துப்பாட்டு

 

பன்மடங்கு - பல மடங்கு, பத்து மடங்கு அல்ல
பன்மொழி - பல மொழிகள்
பன்னாட்டு - பல நாடுகள்
இவ்விடங்களில், பன் என்பது பல என்ற பொருளில் வருகிறது.

அட, எண்களில் இத்தனை மாற்றங்களா ஏற்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது அல்லவா. தமிழ் மொழி, ஒரு கடல். அதாவது ஓர் ஆழமான கடல் போன்றது. அதில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டே இருக்கலாம். கடல் என்றாலே ஆழமாகத்தானே இருக்கும், அது எங்களுக்குத் தெரியாதா, அதை ஏன் மறுபடி சொல்லவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரிதான். இவ்வளவு நேரம் சொன்னதை, நாமும் கடைப்பிடிப்போமே என்று தான், ஒரு, ஓர் என்று அதே இலக்கணத்தை இங்கே சுட்டிக்காட்டினேன் :-)

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

Maruu - Grammar

மரூஉ

One letter words in Tamil

ஒரு சொல் கேளீரோ...

Thiruvannamalai Temple

உயிரோடு உயிர் சேர்ந்தால்...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net