உயிரோடு உயிர் சேர்ந்தால் என்ற தலைப்பைக் கண்டு, ஒருவேளை காதலர் தினத்திற்காக, எழுதப்பட்ட ஏதாவது காதல் கவிதையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அந்தக் கருத்தை உடனே அழித்துவிடுங்கள். இது நம் அழகுத் தமிழில் உள்ள ஒரு அருமையான இலக்கணம். அதை தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பொழுது, தூரத்தில் பசுமையாகத் தெரியும் அந்த மலையைப் பார்த்து இரசித்துக்கொண்டிருந்த கலைவாணி, தம் பக்கத்தில், மலையில் நடந்த களைப்புத் தீர கண்களை மூடி இருக்கையில் சாய்ந்திருந்த, தன் தந்தையைக் கூப்பிட்டாள்.
என்னம்மா கலைவாணி?
எனக்கொரு சந்தேகம், அதை உங்களிடம் கேட்க்கட்டுமா?
கேளம்மா, எனகுத்தெரிந்தால் உடனே பதில் அளிக்கிறேன், இல்லையென்றால், யாரிடமாவது கேட்டுச்சொல்கிறேன்.
நிச்சயம் உங்களுக்குத் தெரியும் அப்பா. நாம் இப்பொழுது சென்றுவந்த திருவண்ணாமலை என்ற ஊரில், அண்ணாமலை என்ற சிவபெருமான் கோவில் அமைந்துள்ளதால், சிவபெருமானைக் குறிக்கும் 'திரு' என்ற சொல்லையும் சேர்த்து திருவண்ணாமலை என்று அழைக்கப்படுவதாக சொன்னீர்கள் அல்லவா?
ஆமாம். அதற்கென்ன?
திரு அண்ணாமலை என்ற இரண்டு சொற்களை சேர்த்து சொல்லும் பொழுது, திருஅண்ணாமலை என்று சொல்லாமல், ஏன் திருவண்ணாமலை என்று சொல்கிறோம். அந்த இடத்தில் 'வ' என்ற எழுத்து எப்படி வந்தது?
அட, அருமையான கேள்வி. இந்த கேள்வியைக் கேட்டதற்காகவே உனக்கு என்னுடையப் பாராட்டுகள். அதைப் பற்றி விளக்க வேண்டுமென்றால் முதலில், தமிழ் இலக்கணத்தில் உள்ள புணர்ச்சி விதிகள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
எனக்குத் தெரியும், எங்கள் தமிழ்ப்பள்ளியில் படித்திருக்கிறேன். இரண்டுச் சொற்களை இணைத்து எழுதுவது புணர்ச்சி என்று அழைக்கப்படுவதாக எங்கள் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
நல்லது. அப்படியானால், தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி எத்தனை வகைப்படும் என்று அறிவாய் அல்லவா?
ஆமாம். இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என்று இரண்டு வகைப்படும் என்று படித்த ஞாபகம் இருக்கிறது.
அருமை. இயல்பு புணர்ச்சி என்றால், இரண்டு சொற்கள் சேரும் பொழுது எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இணைந்து ஒரு சொல்லாக மாறிவிடும். விகாரம் என்றால் மாற்றம் என்று பொருள். அதன் படி, இரண்டு சொற்கள் இணையும் பொழுது, அங்கு ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து ஒரு புது சொல் கிடைக்கும். இதைப்பற்றி இன்னொரு நாள் விளக்கமாகச் சொல்கிறேன். இன்று நீ கேட்ட அந்த கேள்விக்கு விடை என்னவென்று பார்ப்போம்.
தமிழில் உயிரெழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 உள்ளது என்று உனக்குத் தெரியும் அல்லவா? வெறும் உயிர் எழுத்துகளையும் மெய் எழுத்துகளையும் வைத்துக்கொண்டு மட்டும் நம்மால் பேசவோ எழுதவோ முடியாது, ஆங்கிலத்தில் 26 எழுத்துகளை சேர்த்து எழுதுவதுபோல், தமிழில் உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் சேர்த்து, அதிக வார்த்தைகள் எழுத முடியாது. அதுவும் உயிர் எழுத்துகள் முதலில் வந்தால் மட்டும் தான் முடியும்.
உதாரணமாக, ஆம், இல், உன், எள், எண் போன்ற சில சொற்கள் மட்டும் தான் எழுத முடியும்.
அதே போல், மெய் எழுத்துகள் அல்லது உயிர் எழுத்துகளையோ மட்டும் வைத்துக்கொண்டும் எழுதமுடியாது:
க்ம்க், க்ட்த், ப்ல்ட், வ்க்ச் - மெய் எழுத்துகள் மட்டும் சேர்ந்து பொருள் தராது
ஆஅ, ஈஉஓ, ஆஎஏ - உயிர் எழுத்துகள் மட்டும் சேர்ந்தாலும் பொருள் தராது
ஆனால், மெய் எழுத்துகளோடு உயிர் எழுத்துகள் ஒன்றாக இணைந்து உயிர் மெய் எழுத்துகள் என்று வரும் பொழுது தான் பல சொற்கள் உருவாகி, தமிழ் மொழி வளமாக இருக்கிறது.
அதே போல், சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் பொழுதும், இதே பிரச்சனை உண்டு:
தென்னை + மரம் என்பதை சேர்த்து எழுதினால் தென்னைமரம் என்ற புதிய சொல் கிடைக்கிறது. இதை சற்று ஆராய்ந்துப் பார்க்கலாம்.
அதற்கு முன், கலைவாணி உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். தென்னை + மரம் என்பதில், தென்னை என்றால் என்ன? மரம் என்றால் என்ன என்று சொல் பார்க்கலாம்?
தெரியுமே, தென்னை என்பது ஒரு சொல், மரம் என்பது மற்றொரு சொல்.
தந்தை சிரித்துக்கொண்டு, அது தான் எல்லோருக்கும் தெரியுமே. நான் கேட்டது, இரண்டு சொற்கள் இணைக்கும் பொழுது அவற்றுக்கு ஒரு பெயர் உண்டு. சரி, நானே சொல்கிறேன்:
தென்னை + மரம் என்பதில், முதலில் உள்ள தென்னை என்பது நிலைமொழி என்று அழைக்கப்படும், இரண்டாவதாக வரும் மரம் என்ற சொல் வருமொழி என்று அழைக்கப்படுகிறது.
இப்பொழுது நிலைமொழியில் உள்ள இறுதி எழுத்தைப் பார்ப்போம்:
னை = ன் + ஐ அதாவது 'ஐ' என்ற உயிர் எழுத்தில் முடிகிறது
அதே போல், வருமொழியில் உள்ள முதல் எழுத்தைப் பார்ப்போம்:
ம = ம் + அ அதாவது 'ம்' என்ற மெய் எழுத்தில் தொடங்குகிறது.
ஆக, உயிரெழுத்தும் மெயெழுத்தும் இருப்பதால் இணைகிறது.
இதே போல் இன்னொரு எடுத்துக்காட்டு:
பால் + ஆடை = பாலாடை
நிலைமொழியில் 'ல்' என்ற மெய்யும், வருமொழியில் 'ஆ' என்ற உயிரும் சேர்வதால் இணைகிறது.
தலையாட்டிக்கொண்டே தன் அப்பாவை வியப்பாகப் பார்க்கிறாள் கலைவாணி,
கலைவாணி, நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது. நாம் என்ன கேட்டோம், அப்பா வேறு என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறார்களே என்று எண்ணுகிறாய் அல்லவா? உன்னுடைய கேள்விக்கு விடை சொல்ல, முதலில், இந்த அடிப்படையான செய்திகள் தெரிந்திருக்க வேண்டும்.
சரி, இப்பொழுது உன்னுடைய கேள்விக்கு வருகிறேன்.
திரு மற்றும் அண்ணாமலை சேர்ந்தால், திருஅண்ணாமலை என்று எழுதாமல் திருவண்ணாமலை என்று ஏன் எழுதுகிறோம் என்ற ஒரு அருமையான கேள்வி கேட்டாய் அல்லவா? அதற்கான விளக்கத்தைப் இப்பொழுது பார்க்கலாம்:
திரு + அண்ணாமலை, இதில்
நிலைமொழியில் உள்ள இறுதி எழுத்து 'உ' என்ற உயிர் எழுத்து (ர் + உ). அதே போல்
வருமொழியில் உள்ள முதல் எழுத்து 'அ' என்ற உயிர் எழுத்து
இபொழுது நான் மேலே சொன்ன கருத்துக்களைப் பார். உயிரும் உயிரும் சேருமா? அதாவது உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேருமா?
சேராது. உஅ என்று தான் வரும்.
சரியாகச் சொன்னாய். இரண்டு சொற்களை இணைக்கவேண்டும் என்றால், அங்கு கண்டிப்பாக ஒரு மெய் எழுத்து வேண்டும். அதனால், இந்த இடத்தில் 'வ்' என்ற மெய்யெழுத்து தோன்றி, வருமொழியில் உள்ள முதல் எழுத்தான 'அ' வுடன் சேர்ந்து 'வ' என்று மாறி திருவண்ணாமலை என்று ஆகிறது.
இப்படி இரண்டு உயிரெழுத்துகளோ அல்லது மெய்யெழுத்துகளோ ஒன்று சேராமல் இருப்பதை, அறிவியலில் கூட பார்க்கலாம். காந்ததை எடுத்துக்கொண்டால், அதற்கு இரண்டு முனைகள் உண்டு, வடக்கு மற்றும் தெற்கு. அப்படி இரண்டு காந்தங்களை எடுத்து, தெற்கு தெற்கு அல்லது வடக்கு வடக்கு என்று வைத்தால் அவை சேராது, ஆனால் வடக்கு தெற்கு என்று மாற்றி வைக்கும் பொழுது அவை சேர்ந்து விடும். (With magnetism, there are north and south poles. Like magnetic poles repel each other, while unlike poles attract.) அது போலவே, உயிரும் உயிரும் அல்லது மெய்யும் மெய்யும் சேராது. ஆக நம் தமிழ் மொழியை அறிவியல் மொழி என்றும் சொல்லலாம் :-)
சரி, இப்பொழுது ஏன் திருவண்ணாமலை என்று சொல்லப்படுகிறது என்பது விளங்குகிறதா கலைவாணி?
ஆமாம் அப்பா, எனக்கு நன்றாக விளங்கிவிட்டது. ஆனால் எனக்கு இப்பொழுது புதிதாக இன்னொரு கேள்வி எழுகிறது?
உன்னுடைய கேள்வி என்ன என்று எனக்குத் தெரியும், அதை நான் சொல்லட்டுமா?
சொல்லுங்கள் பார்ப்போம்?
இரண்டு உயிர் எழுத்துகள் சேராது அதனால் ஒரு மெய் எழுத்து வருகிறது என்று சொன்னீர்கள். 18 மெய் எழுத்துகள் இருக்கும்பொழுது, 'வ்' மட்டும் அங்கு வர என்ன காரணம் என்று கேட்க்கப்போகிறாய் அல்லவா?
ஆமாம் அப்பா, மிக சரி. எப்படி கண்டுபிடித்தீர்கள்?
நல்லது, அதற்கான விடையை, பன்னெடுங் காலத்திற்கு முன் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள், அதை பவணந்தி முனிவர் இயற்றிய 'நன்னூல்' என்ற இலக்கண நூல் விளக்குகிறது. அதற்கு முன், இப்படி வரும் மெய் எழுத்துக்கு என்ன பெயர் என்று தெரியுமா?
தெரியாது அப்பா?
அதற்கு உடம்படு மெய் எழுத்து அல்லது உடன் படு மெய் எழுத்து என்று பெயர்.
இப்படி உயிரும் உயிரும் உடன்படாமல், சண்டையிட்டுக் கொண்டு, பேசாமல் நிற்கும் இரண்டு நண்பர்கள் போல் விலகி நிற்கும் பொழுது, அவர்களை சமாதானபடுத்தி இணைக்க வரும் பெற்றோர், ஆசிரியர் அல்லது இன்னொரு நணபனைப் போல், ஒரு மெய் எழுத்து வந்து அவர்களை உடன் பட வைப்பதால், அவை உடன்படு மெய் என்று அழைக்கபடுகிறது.
சரி, எந்தெந்த மெய்யெழுத்துகள் உடன்படு மெய்யாக வரும் எனபதை நன்னூல் இவ்வாறு கூறுகிறது:
"இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்
"ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும்" (நன்னூல் 162)
அதாவது,
நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் (இறுதி எழுத்து) வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பின் யகரம் வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.
உடம்படுமெய்யாக வரும் ய், வ் என்ற இரண்டு மெய்யும், வடிவத்தால் மெய்யெழுத்தின் தன்மையும் உச்சரிப்பால் உயிரெழுத்தின் தன்மையும் பெற்றிருக்கிறது. ஆகவேதான் ய், வ் என்ற மெய்களை உடம்படுமெய் என்று சொல்லி இருப்பார்கள் போலிருக்கிறது.
சரி அவற்றுக்கான சில உதாரணங்களைப் இப்பொழுது பார்க்கலாம்:
நிலைமொழியின் இறுதி எழுத்தாக இ, ஈ, ஐ என்ற எழுத்துகள் வந்தால் 'ய்' வரும்:
மணி + அடித்தது = மணியடித்தது (மணி (ண் + இ) அடித்தது)
கரி + அமிலம் = கரியமிலம் (கரி (ர் + இ) அமிலம்)
தீ + எரிந்தது = தீயெரிந்தது (தீ (த் + ஈ) எரிந்தது)
தேனீ + ஒன்று = தேனீயொன்று (தேனீ (ன் + ஈ) ஒன்று)
மலை + அடிவாரம் = மலையடிவாரம் (மலை (ல் + ஐ) அடிவாரம்)
பனை + ஓலை = பனையோலை (பனை (ன் + ஐ) ஓலை)
நிலைமொழியின் இறுதி எழுத்தாக அ,ஆ,உ,ஊ,எ,ஒ,ஓ,ஔ என்ற எழுத்துகள் வந்தால் 'வ்' வரும்:
என்ன + என்று = என்னவென்று (என்ன (ன் + அ) என்று)
அப்பா + உடன் = அப்பாவுடன் (அப்பா (ப் + ஆ) உடன்)
அம்மா + ஐ = அம்மாவை (அம்மா (ம் + ஆ) ஐ)
மா + இலை = மாவிலை (மா (ம் + ஆ) இலை)
கரு + அறை = கருவறை (கரு (ர் + உ) அறை)
திரு + அருட்பா = திருவருட்பா (திரு (ர் + உ) அருட்பா)
பூ + அரசி = பூவரசி (பூ (ப் +ஊ) அரசி)
கோ + இல் = கோவில் (கோ (க் + ஓ) இல் - இலக்கணப்படி கோவில் எனபதே சரி, ஆனால் இப்பொழுது கோயில் என்று அழைப்பது வழக்கமாகி விட்டது)
நிலைமொழியின் இறுதியில் 'ஏ' என்ற எழுத்து வந்தால், 'ய்', 'வ்' இரண்டும் வரலாம்:
சே + அடி = சேவடி (சே (ச் + ஏ) அடி)
சே + அழகு = சேயழகு (சே (ச் + ஏ) அழகு)
அவளே + அழகி = அவளேயழகி (அவளே (ள் + ஏ) அழகி)
தே + ஆரம் = தேவாரம் (தே (த் + ஏ) ஆரம்)
தே + இலை = தேயிலை (தே (த் + ஏ) இலை)
இந்த இரண்டு உடன்படு மெய் எழுதுகளும் வரும் ஒரு சொல் ஒன்று சொல்லவா?
திருவையாறு என்ற ஊரை நீ கேள்விப்படிருக்கிறாயா? தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ள ஊர். அந்த ஊர் பெயரில் தான் இரண்டு உடன்படு மெய்களும் இருக்கிறது:
திரு + ஐ + ஆறு = திருவையாறு
(இது திரு + ஐந்து + ஆறு என்று தான் வரும், விகார புணர்ச்சியில் 'ந்து' என்ற எழுத்துகள் மறைந்துவிடும். ஏற்கனவே சொன்னது போல், இவற்றை பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்)
அதாவது திரு + ஐ (தி ர் + உ + ஐ = உ என்ற உயிரில் முடிவதால் 'வ்' உடன்படு மெய் வந்து 'திருவை' என்று மாறுகிறது)
அடுத்து திருவை + ஆறு (திரு வ்+ஐ + ஆறு, ஐ என்ற உயிரில் முடிவதால் 'ய்' என்ற உடன்படு மெய் வந்து 'யாறு' என மாறுகிறது)
[குறிப்பு: காவிரி ஆறு, இங்கு ஐந்து ஆறுகளாக பிரிந்து செல்வதால், ஐயாறு என்று பெயர் பெற்றது. அந்த ஐந்து ஆறுகள் - காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு மற்றும் வடவாறு ]
உனக்கு இன்னொன்று தெரியுமா கலைவாணி? தமிழ் இலக்கணத்தில் உள்ள இந்த புணர்ச்சி என்பது, தமிழ் மொழியில் இருக்கின்ற பல சிறப்புகளில் ஒன்றாகும். ஆங்கிலத்தில் இரண்டு சொற்களை இணைத்து எழுத முடியாது, தனித் தனியாக தான் எழுதவேண்டும்.
உதாரணமாக மணியோசை அல்லது மாவிலைகள் என்பதை BellSound MangoLeaves என்று எழுதமுடியாது. மீறி அப்படி கணிணியில் எழுதினால், உடனே சிவப்பு அடிகோடிட்டு உன்னை எச்சரிக்கும். ஆனால் தமிழில் அவற்றைத் தனி தனியாகவும், சேர்த்தும் அழகாக எழுதமுடியும்.
இப்பொழுது உனக்கு நன்றாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை உன் நண்பர்களுக்கும் சொல்லிக்கொடு. சரியா?
ஆமாம் அப்பா, எனக்கு இப்பொழுது உடன்படு மெய் என்பது நன்றாக விளங்கிவிட்டது, ரொம்ப நன்றி அப்பா.
சரி கலைவாணி, எனக்கும் சற்று களைப்பாக இருக்கிறது, நான் சற்று ஓய்வெடுக்கப் போகிறேன். அதற்கு முன்பு உன்னிடம் ஒரு கேள்வி. நீ சிறு வயதில், அ,ஆ எப்படி படித்தாய் என்று ஞாபகமிருக்கிறதா?
ஓ... நன்றாக ஞாபகமிருக்கிறது.
எங்கே சொல்லுப் பார்க்கலாம்?
ஆனா (அ)
ஆவன்னா
ஈனா (இ)
ஈயன்னா
ஊனா (உ)
ஊவன்னா
ஏனா (எ)
ஏயன்னா
ஐயன்னா
ஓனா (ஒ)
ஓவன்னா
ஔவன்னா
அருமையாக இராகத்துடன் பாடினாய். அதிலொன்று கவனித்தாயா? ஆவன்னா, ஈயன்னா என்று உடம்படு மெய் வருவதை.
ஆமாம் அப்பா.
(சிரிக்கிறார்கள்)
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.
குறிப்பு: இந்த உடன்படு மெய்யெழுத்துகளுக்கு, நம் இந்து சமய ஆன்மிக விளக்கமும் உண்டு. அதை இன்னொரு பதிவில் பார்ப்போம்.