ஓர் எழுத்து சொற்களையும் (படிக்க... ) ஓர் எழுத்து வரிசை சொற்களையும் (படிக்க... ) இதற்கு முன் பார்த்தோம். இன்று அப்படி, ஓர், ஓர் எழுத்து வருக்கச்சொற்கள் கொண்டு எழுதப்பட்ட ஓர் அருமையானப் பாடலைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்,
அருணகிரி நாதர் இயற்றியப் பாடல்:
(இது கந்தர் அந்தாதியில் உள்ள 54 ஆவது பாடலாகும்)
வில்லிப்புத்தூரார் என்ற ஒரு பெரும் புலவர், வக்கபாகை என்ற ஊரில் வாழ்ந்து வந்தார். இந்த வில்லிப்புத்தூரார் தான் 'மஹாபாரதத்தை' தமிழில் இயற்றியவர். அவர் இயற்றிய அந்த செய்யுள் 'வில்லிபாரதம்' என்று அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவரின் புலமையைக் கண்டு வியந்த, அந்த நாட்டு அரசன் அவரை தன் அவையில் புலவராக அமர்த்திக்கொண்டார். அவருடைய புலமையால் மகிழ்ந்து அவரை சிறப்பித்து பரிசளிக்க எண்ணினான் அரசன். ஆனால் பரிசை மறுத்த வில்லிப்புத்தூராரோ, தனக்கு வேறொரு உரிமை வேண்டும் என்று கேட்டுப் பெற்றுக்கொண்டார். அதாவது, தன்னோடு சந்தப் பாடல் போட்டியில் போட்டிப்போட்டுத் தோற்பவர்களின் காதை அறுத்துவிடவேண்டும் என்று. (இது உண்மையா இல்லையா என்று தெரியாது, செவிவழி கேட்ட செய்தி தான்). என்ன ஒரு வினோதமான கொடூரமான ஆசை. அரசருக்கு அதில் விருப்பமில்லையென்றாலும், வாக்களித்துவிட்டதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். அதற்காக காதை அறுக்க குறட்டு என்ற கருவியையும் பெற்றுக்கொண்டார். அன்றிலிருந்து, அவரோடு போட்டியிட்டுத் தோற்ற பல புலவர்களின் காதை அறுத்து ஆணவத்துடம் வலம் வந்துகொண்டிருந்தார் வில்லிப்புத்தூரார்.
மற்றப் புலவர்கள் மூலம் இக்கொடுமையை அறிந்த அருணகிரி நாதர், வில்லிப்புத்தூராருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார். வில்லிப்புத்தூராரிடம் சென்று தாம் போட்டிக்கு தயாராக இருப்பதாக கூறினார். தன்னை யாராலும் வெல்லமுடியாது என்ற இறுமாப்பில் இருந்த வில்லிப்புத்தூரார், தம்மைத் தேடியே போட்டியிட ஒருவர் வருகிறார் என்றால், கண்டிப்பாக அவரும் ஒரு பெரும்புலவராக தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒருவேளை அருணகிரி நாதர் வென்றுவிட்டால் தமக்கு அது மிகுந்த அவமானமாகி விடும் என்பதால், மிக மிக கடினமான போட்டியாக இருக்கவேண்டும் என்று திட்டம் தீட்டினார், அதனால் இப்பாடல் போட்டிக்கு, ஏதாவது ஓர் எழுத்து வரிசையைக் கொண்டு மட்டும் தான் பாடலின் சொற்கள் இருக்கவேண்டும் என்று போட்டியின் நிபந்தனையை விளக்கினார். அருணகிரி நாதரும் அதற்கு ஒப்புக்கொண்டு, தமது கைகளிலும் குறட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்த பாடலுக்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும், தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துறட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார் அருணகிரி நாதர். பல போட்டிகளில், பலரை வென்று அகந்தையில் இருந்த வில்லிப்புத்தாரார், ஓரெழுத்துக் கொண்டு யாராலும் பாடமுடியாது என்று உறுதியாக நம்பியதால், அருணகிரி நாதரின் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
போட்டி தொடங்கியது. அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே ...(54)
இப்பாடலை கேட்ட வில்லிப்புத்தூரார், அரண்டு போய் விட்டார், கர்வம் தலைக்கறி இருந்தவரின் சப்த நாடியும் ஒடுங்கி அடங்கியது. பாடலுக்குப் பொருள் கூற முடியாமல் தன் தோல்வியை உடனே ஒப்புக்கொண்டார். (இப்போது என்றால், தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், இது பாடலே இல்லை, ஏதோ வாயில் வந்ததை எல்லாம் உளறி இருக்கிறார் என்று குற்றம் சுமத்தி, அவமானப்படுத்த முயல்வார்கள். கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்துவதாக எண்ணி தம்மைத்தாமே இழிவுபடுத்திக் கொள்ளும் வீணர்களும் வாழும் காலம் அல்லவா?). இப்பாடலின் பொருள் தெரியாமல் தோல்வியை ஒப்புக்கொண்ட வில்லிப்புத்தூராருக்கு அருணகிரிநாதரே, தமது பாடலின் பொருளை விளக்கினார்.
வல்லவனுக்கு வல்லவன் இப்புவியில் உண்டு என்பதை உணர்ந்த வில்லிப்புத்தூரார், தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தன் காதுகளை அரிந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருணகிரி நாதர் அதற்காக வரவில்லையே? வில்லிப்புத்தூராரின் தவறை உணரவைத்து, அவரை திருத்துவதற்காக அல்லவா வந்தார். அதனால் வில்லிப்புத்தூராரின் காதுகளை அரியாமல், இனிமேல் இது போன்ற வினோதமான புலமைப்போட்டிகளை நிறுத்திவிட்டு, ஆரோக்கியமான அர்த்தமுள்ள போட்டிகளை நடத்துமாறு வில்லிபுத்தூராருக்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூராரும் தமது தவறுக்கு பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதி மேலும் புகழ் பெற்றார். வில்லிப்புத்தூரார் சிறந்த புலவர், ஆனால் அவரது கர்வம் அவரை அழித்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் இறைவன் இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இந்த பாடலைப் பிரித்து படிக்கும் முறை:
திதத்தத் தத்தித்தத் திதி தாதை தாத துத்தித் தத்தி தா
திதத் தத்து அத்தித் ததி தித்தித்ததே துத் துதித்து இதத்
தாதி தத்தத்து அத்தித் தத்தை தாத திதே துதை தாது அதத்
துதி தத்து அத்து அத்தித் தித்தி தீ தீ திதி துதி தீ தொத்ததே
சரி, வில்லிப்புத்தூராருக்கே பொருள் தெரியவில்லையே, எங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதுபோன்ற பாடல்களுக்கு கற்றறிந்த சான்றோர் தான் பொருள் கூற முடியும். இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அழகாக பின்வருமாறு விளக்குகிறார்.:
பதவுரை:
திதத்தத் தத்தித்தத்: திதத்தத் தத்தித்தத் என்னும் தாள வரிசைகளை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் எடுக்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கொண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமாலும்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: பேரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: இரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
அருணகிரி நாதர் தீவிர முருக பக்தர். தன் உயிர் இந்த உடலிலிருந்து விடைபெறும்போது, முருகனிடம் சென்று ஐக்கியமாகி விடவேண்டும் என்பதை தான் இந்த பாடலில் இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் தாளலயத்துடனும் பாடியிருக்கிறார்.
பொருளுரை:
தா தை தக்கத்தை என்று நாம் பரத நாட்டிய தாளத்தை சொல்வோம் அல்லவா, அது போல, திதத்தத் தத்தித்தத் என்ற தாள லயத்துடன், திருச்சிற்றம்பலத்தில் ஆனந்த நடனமாடும் உனது தந்தையாகிய சிவபெருமானும், நான்முகனாகிய பிரமனும், ஆயர்பாடியில் இனிப்பான தயிரை உண்டவனும், தன்னுடலில் புள்ளிகள் கொண்ட, படமெடுத்து ஆடும் ஆதிசேஷனாகிய நாகத்தின் முதுகில் படுத்துக்கொண்டு, திருபாற்கடலில் வாசம் செய்யும் திருமாலும் ஆகிய இம்மூவரும் போற்றி வணங்கும், பேரின்ப சொரூபனாக விளங்கும் ஆதி மூலப்பொருளானவனே, இந்திரனனின் ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்று அழகான தேவயானையின் தாசனே, பிறப்பு இறப்புக்கு இடமாகவும், பல தீய எண்ணங்களைக்கொண்ட, இரத்தம் சதை எலும்பு முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டு தோல் மூடிய இந்த உடலை, தீயினால் எரிக்கப்படும் அந்நாளில், அந்தபொழுதில், இது வரை உன்னை துதித்து வந்த என ஆன்மாவை, என் சித்தத்தை உன்னுடைய திருவடியில் நீ ஆட்கொள்ள வேண்டும் என முருகப் பெருமானிடம் வேண்டுகிறார் அருணகிரி நாதர்.
எவ்வளவு அழகான, ஆழமான பொருள் பொதிந்த அற்புதப் பாடல் இது. உலகில் இப்படி பட்ட ஓரு பாடலை, இறையருள் இல்லாத யாராவது ஒருவரால் பாட முடியுமா? ஒரே ஒரு தமிழ் எழுத்தை எடுத்துக்கொண்டு, அந்த எழுத்தின் வரிசையை மட்டும் பயன்படுத்தி ஒரு பாடலை இயற்ற முடியும் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என்னே அருணகிரி நாதரின் திறமை. எல்லாம் அந்த பரம்பொருளால் படைக்கப்பட்ட முருகபெருமானின் திருவருளால் தான் சாத்தியம், இது சத்தியம்.
இந்தப் பாடலில் இன்னொரு சுவையான செய்தி என்னவென்றால், இந்தப் பாடலைப் படிக்கும்பொழுது, படித்துமுடிக்கும் வரை, உதடுகள் ஒட்டவே ஒட்டாது. உலக மாயையில் ஒட்டுதல் இன்றி, எம்பெருமான் முருகனைத் தவிர வேறு எதிலும் பற்றின்றி வாழ்ந்தவர் அருணகிரி நாதர், அதனால் தான் என்னவோ, த வரிசையில், இரு உதடுகளும் ஒட்டாது வண்ணம் அருமையாகப் பாடியுள்ளார்.
அருணகிரி நாதர் போலவே இன்னொரு பெரும்புலவர் ஒருவரும் இதே போன்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவரும் நிச்சயம் இறையருள் பெற்றவராகத் தான் இருக்கவேண்டும். அதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
நன்றி!!!
தித்தித்ததே...
படித்தேன்... சுவைத்தேன்... தமிழ்த்தேன்!!!
அன்புடன் என்றும்
இராமஸ் முத்துக்குமரன்.