Chidhambaram Natarajar Temple

திருப்புகழ் / Thiruppugazh

திருப்புகழ் 110 - அவனிதனிலே பிறந்து (பழநி)

அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ்

 

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து....      இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து...   பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி நைந்து...    துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற....   னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த....   மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க....    வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த....      கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
    பழனிமலை மேல மர்ந்த...   பெருமாளே!

 

பதம் பிரித்து....

அவனி தனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து.... இளைஞோனாய்

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து... பதினாறாய்

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று
திரியும் அடியேனை உன்றன்.... அடிசேராய்

மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீது அணிந்த.... மகதேவர்

மனம் மகிழவே அணைந்து ஒருபுறம் அதாக வந்த
மலைமகள் குமார துங்க.... வடிவேலா

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த.... கழல்வீரா

பரமபதமே செறிந்த முருகனெனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த... பெருமாளே!

 

பதவுரை

அவனி தனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து.... இளைஞோனாய்

அவனி தனிலே பிறந்து     - இந்த உலகினில் பிறந்து,
மதலை எனவே தவழ்ந்து - குழந்தையாகத் தவழ்ந்து
அழகு பெறவே நடந்து.      - அழகாக நடந்து
இளைஞோனாய்                - சிறுவனாய்

அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதம் அதாய் வளர்ந்து... பதினாறாய்

அரு மழலையே மிகுந்து        - நிறைய அருமையான மழலை சொற்கள் மற்றும்
குதலை மொழியே புகன்று    - இனிமையான பொருளில்லாத மழலை மொழி பேசி
அதிவிதம் அதாய் வளர்ந்து   - வயதிற்கேற்ப வேகமாக வளர்ந்து
பதினாறாய்                                - பதினாறு வயதை அடைந்து

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து... துதியாமல்

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் - திருமுறை போன்ற சைவ நூல்கள், சிவ ஆகமங்கள் ஆகியவற்றை
மறை ஓதும் அன்பர்                           - வேதங்களை கற்று ஓதும் பெரியோர்கள் மற்றும் மெய்யன்பர்கள்
திருவடிகளே நினைந்த                     - ஆகியோரின் திருவடிகளை நினைத்து
துதியாமல்                                            - துதிக்காமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று
திரியும் அடியேனை உன்றன்.... அடிசேராய்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி          - பெண்கள் மீது ஆசை அதிகம் கொண்டு
வெகு கவலையாய் உழன்று             - அதன் காரணமாக பெரும் கவலையில் அலைந்து
திரியும் அடியேனை உன்றன்            - வழி தெரியாமல் திரிகின்ற அடியவனான என்னை
அடிசேராய்                                              - உன் திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?

மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீது அணிந்த.... மகதேவர்

மவுன உபதேச சம்பு                  - மௌன உபதேசம் செய்த சிவபெருமான்
மதி அறுகு வேணி தும்பை      - பிறை நிலா, அறுகம்புல், கங்கை ஆறு, தும்பைப்பூ
மணிமுடியின் மீது அணிந்த  - ஆகியவற்றை தன் மணி முடியின் மேல் அணிந்துள்ள
மகதேவர்                                     - மகாதேவராகிய சிவபெருமான்

மனம் மகிழவே அணைந்து ஒருபுறம் அதாக வந்த
மலைமகள் குமார துங்க.... வடிவேலா

மனம் மகிழவே அணைந்து     - மனம் மகிழும்படி சிவபெருமானை அணைத்துக்கொண்டு
ஒருபுறம் அதாக வந்த              - அவருடைய இடப்பாகத்தில் சரிபாதியாய் இணைந்திருக்கும்
மலைமகள் குமார துங்க          - அன்னை பார்வதி தேவியின் குமாரனே, ஒளிபொருந்திய தூய்மையான
வடிவேலா                                    - கூர்மையுடைய அழகான வேலை உடையவனே

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த.... கழல்வீரா

பவனி வரவே உகந்து              - இவ்வுலகை சுற்றி வர ஆசைக்கொண்டு
மயிலின் மிசையே திகழ்ந்து - உன்னுடைய வாகனமாகிய அழகிய மயிலின் மீது எழிலுற அமர்ந்து சுற்றி பின்
படி அதிரவே நடந்த                 - பழனி மலைக்கு வந்து, இறங்கி, படிகள் அதிர நடந்து வந்த
கழல்வீரா                                   - கால்களில் கழல்களை அணிந்த வீரனே

பரமபதமே செறிந்த முருகனெனவே உகந்து
பழனிமலை மேல் அமர்ந்த... பெருமாளே!

பரமபதமே செறிந்த                 - வீடு பேறு எனும் மோட்சம் என்பது
முருகனெனவே உகந்து         - முருகன் தான் என மனம் மகிழ்ந்து
பழனிமலை மேல் அமர்ந்த   - அந்த பழனி மலை மேல் அமர்ந்த
பெருமாளே!                               - பெருமாளே!

 

விளக்கம்

இந்தப் பாடலில் அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடிகளில் சேர அருள் புரிய வேண்டும் என மனமுருகி[ பாடுகிறார். அது தான் உண்மையான சொர்கம் என்பதை இப்பாடலில் விளக்குகிறார். அருணகிரிநாதர், தான் என்று அவர் தன்னைப் பற்றி பாடுவதாக நாம் எண்ணக் கூடாது, நமக்காக அவர் பாடுகிறார். நம்முடைய நிலையை தான், தன் நிலையாகக் கூறி முருகனிடம் நமக்காக வேண்டுகிறார்.

இந்த உலகில் பிறந்த நாம், முதலில் தவழ தான் கற்றுக்கொள்கிறோம். குழந்தை முதன் முதலில் தவழ தான் ஆரம்பிக்கிறது. அப்படி அது தவழ்வதை காணும் பெற்றோர்களுக்கு அது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்று. அப்படி தவழ்ந்து தவழ்ந்து திடீரென்று ஒரு நாள் நடக்க அந்தக் குழந்தை முயல்கிறது. அது, நம் குழந்தை தவழ்வதைக் கண்ட பொழுது வந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியைத் தரும். அப்படி தவழ்ந்து, பின் நடந்து வளரத் தொடங்குகிறது குழந்தை.

பின் ஒவ்வொரு மழலைச் சொற்களாகச் சொல்ல தொடங்கி பேச முயல்கிறது. அந்த மழலைச்சொற்கள் பெற்றோர்களுக்கு, இதற்கு முன் இருந்த மகிழ்ச்சியைவிட நிச்சயமாக கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்.. பின் அந்த மழலைச் சொற்களை சேர்த்து மழலை மொழியாகவே பேசத்தொடங்கும். இந்த மழலை மொழி கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும், பெற்றோர்களுக்கு அதைவி விட இனிமையான வேறு இசை இருக்காது. இதை தான் திருவள்ளுவரும்

"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்"

என்று கூறியுள்ளார்.

அப்படி பேசிப் பேசி வளரத் தொடங்கும் குழந்தை, சட்டென ஒரு நாள் வளர்ந்து பதினாறு வயதை அடைகிறது.

இந்த பதினாறு வயதில் தான், கற்க வேண்டிய நல்ல விசயங்களை அனைத்தையும் கற்க வேண்டும். கவனம் சிதறக் கூடிய வயது, மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பருவம். ஆனால் நம்மில் பலர் ஏதாவதொரு வகையில் நம் கவனத்தை இழந்து திசை மாறிவிடுகிறோம், இதை தான் அருணகிரிநாதரும் கூறுகிறார்.

இந்த வயதில் சைவ நூலகள், சிவ ஆகமங்கள் ஆகியவற்றை கற்றுத் தெளிய வேண்டும். அதே போல் நான்மறை வேதங்களையும் கற்க வேண்டும் அல்லது கற்க முயலவாவது வேண்டும். அப்படி கற்க நம்மால் முடியவில்லை என்றால், அவற்றை கற்றுத்தேர்ந்த மெய்யன்பர்களுடன் இணைந்திருந்து அவர்கள் மூலம் அதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அவற்றை செய்யாமல், மதிகெட்டு பல செயல்களில் திசைமாறி விடுகிறோம். வேதங்களும் ஆகமங்களும் கற்ற பெரியோர்களின் திருவடிகளை நினைக்காமல், பெண்ணாசை அதிகம் கொண்டு துன்பத்தில் விழுந்து விடுகிறோம். (தெரிவை என்றால் பெண் என்பது பொதுவான பொருள் - குறிப்பாக (25 வயது முதல் 32 வயது வரை உள்ள பெண்).

இவ்விடத்தில் தெரிவை என்று சொல்லும் பொழுது, அருணகிரிநாதர் பெண்கள் மீது கொள்ளும் ஆசையை மட்டும் சொல்லவில்லை, தேவையற்ற எல்லா ஆசைகளையும் குறிப்பாக உணர்த்துகிறார். அப்படிபட்ட ஆசைகளில் சிக்கித் தவித்து அதனால் பெரும் கவலைகள் அடைந்து அலைந்து திரிகின்ற என்னை, மீட்டு உந்தன் திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? என முருகப்பெருமானிடம் முறையிடுகிறார்.

இது வரை நம்மைப் பற்றி பாடிய அருணகிரிநாதர், இனி முருகனைப் போற்றிப் பாடுகிறார்.

சனகாதி முனிவர்களுக்கு, வாய்பேசாமல் மௌனமாக உபதேசம் செயதவர் சிவபெருமான், அவரின் நீண்ட சடைமுடியில், பிறை நிலா, அருகம்புல், கங்கை நதி, மற்றும் தும்பைப் பூவை ஆகியவை இருக்கின்றன. இவற்றை எல்லாம் தன் மணிமுடியில் அணிந்துள்ள மகாதேவரான சிவபெருமானின், இடப்பாகத்தில் மனம் மகிழ்ந்து இருக்கின்ற உமையாளின் மகனும், தூய்மையாகவும், கண்ணைபறிக்கும் ஒளி வீசும் வண்ணம், கூர்மையாகவும் இருக்கும் அழகான வேலை உடையவனும் ஆகிய முருகப் பெருமானே. உன் வாகனமாகிய அழகான மயிலின் மீது ஏறி அமர்ந்து உலகை சுற்றி வர அதிக விருப்பம் கொண்டவனே. அப்படி உலகைச்சுற்றி வந்து பழனிமலையில் இறங்கி, படிகள் அதிர அதிர, கால்களில் அணிந்த கழல்களின் ஓசை இனிதாய் கேட்க நடந்து வரும் வீரனே.

அனைவரும் விரும்பும் வீடு பேறு எனும் அந்த மேலான உலகமே நீ தான் என அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் பழனிமலை மேல் அமர்ந்த முருகப் பெருமானே எங்களுக்கு அருள் புரிய வேண்டும் என முருகனைப் போற்றிப் பாடுகிறார் அருணகிரிநாதர்.

வீணான ஆசைகளில் சிக்கித்தவிக்கும், நம் அனைவரையும் மீட்டு, மேலான வீடுபேறு எனும் தமது திருவடிகளில் இடம் தரவேண்டும் என்று நம் அனைவருக்காகவும் வேண்டிப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.

 

அருஞ்சொற் பொருள்:

அவனி                 - உலகம்
மதலை             - குழந்தை
குதலை            - இனிய மழலை மொழி
அதாய்               - அதற்கேற்ப
சிவகலைகள்  - சைவ நூல்கள்
ஆகமங்கள்      - சிவ நெறி
மறை                - வேதம்
துதி                     - வணங்கு
தெரிவை          - பெண்
உழன்று             - அலைந்து, கிடந்து
உபதேசம்          - அறிவுரை
சம்பு                     - சிவபெருமான்
மதி                       - பிறை நிலா
அறுகு                 - அறுகம் புல்
வேணி                - ஆறு (இவ்விடத்தில் கங்கையைக் குறிக்கிறது)
தும்பை               - தும்பைப் பூ
மகதேவர்           - மகாதேவனாகிய சிவபெருமான்
மலைமகள்         - பார்வதி தேவி
துங்க                    - சுத்தமான, ஒளிவீசும்
வடிவு                  - அழகு
உகந்து                 - மகிழ்ந்து
கழலி                   - கால்களில் அணியும் ஒரு ஆபரணம்
பரமபதம்            - மோட்சம், வீடுபேறு
செறிந்த              - நிறைந்த, பொருந்திய

 

மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம்.         

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்

தொடர்புடைய கட்டுரைகள்

திருப்புகழ் / Thiruppugazh

திருப்புகழ் 114 - ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி)

Arunagirinathar

ஓரெழுத்துப் பா....

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net