Chidhambaram Natarajar Temple

திருப்புகழ் / Thiruppugazh

திருப்புகழ் 114 - ஆறுமுகம் ஆறுமுகம் (பழநி)

அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ்

 

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

 

பதம் பிரித்து....

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்று பூதி

ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும்
     அடியார்கள் பதமே துணையது ...... என்று நாளும்

ஏறும் மயில் வாகன குகா சரவணா எனது
     ஈசன் என மானம் உனது ...... என்றும் ஓதும்

ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினாவில் உனை
     ஏவர் புகழ்வார் மறையும் ...... என் சொ(ல்)லாதோ

நீறுபடு மாழை பொரு மேனியவ வேல அணி
     நீலமயில் வாக உமை ...... தந்த வேளே

நீசர்கள் த(ம்)மோடு எனது தீவினை எ(ல்)லாம் மடிய
    நீடு தனி வேல் விடும் ...... மடங்கல் வேலா

சீறிவரும் மாறவுணன் ஆவி உ(ண்)ணும் ஆனைமுக
     தேவர் துணைவா சிகரி ...... அண்ட கூடஞ்

சேரும் அழகார் பழநி வாழ் குமரனே பிரம
     தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

 

பதவுரை

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்று பூதி

ஆறுமுகம் ஆறுமுகம் என ஆறு முறை முருகனின் பெயரை பக்தியுடன் கூறி, திருநீறை எடுத்து

ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும்
அடியார்கள் பதமே துணையது ...... என்று நாளும்

உடல் முழுதும் பூசிய மிகப்பெரிய தவசீலர்களின் பாத மலரை தம் தலையில் சூடி வணங்கும் அடியார்களின் அடியே (அடியார்க்கு அடியேன்) துணை என்று நாள்தோறும்

ஏறும் மயில் வாகன குகா சரவணா எனது
ஈசன் என மானம் உனது ...... என்றும் ஓதும்

மயில் வாகனத்தில் ஏறிடும் குகனே, சரவணனே, எனது ஈசனே, என் மானம் (பெருமை) உனது மானம் என்று எப்போதும் பாடுகின்ற

ஏழைகள் வியாகுலம் இது ஏது என வினாவில் உனை
ஏவர் புகழ்வார் மறையும் ...... என் சொ(ல்)லாதோ

ஏழைகளின் துன்பம்/கவலைகளை என்ன ஏது என்று நீ கேட்காமல் இருந்தால், உன்னை யார் போற்றுவார்? வேதங்கள் உன்னைப்பற்றி என்ன சொல்லும்?

நீறுபடு மாழை பொரு மேனியவ வேல அணி
நீலமயில் வாக உமை ...... தந்த வேளே

இளமை அழகுபொருந்திய திருநீறு அணிந்த மேனியை உடைய வேலவனே, நீல மயில் வாகனத்தில் வலம் வரும் உமையவள் பெற்ற முருகவேளே

நீசர்கள் த(ம்)மோடு எனது தீவினை எ(ல்)லாம் மடிய
நீடு தனி வேல் விடும் ...... மடங்கல் வேலா

இழிந்தவர்களோடு, நான் செய்த தீய வினைகள் எல்லாமும் அழிய, உனது நீண்ட வேலை எறியும், கடலுக்கடியில் இருந்து மேலெழும்பி வரும் தீயைப் போன்று வெப்பம் கொண்ட வேலவனே

சீறிவரும் மாறவுணன் ஆவி உ(ண்)ணும் ஆனைமுக
தேவர் துணைவா சிகரி ...... அண்ட கூடஞ்

சீறிவரும் யானை முகம் கொண்ட அசுரனான கஜமுகாசுரனின் உயிரைப் பறித்த விநாயகனின் தம்பியான துணைவனே, வானை முட்டும் வண்ணம் உயர்ந்த அழகான பழனி மலையில்

சேரும் அழகார் பழநி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.

வாழும் குமரனே, பிரம்மனுக்கு வரம் தந்த முருகா, இறைவனே

 

விளக்கம்

இந்தப் பாடலில், அருணகிரி நாதர், முருகனின் பெருமையையும், புகழையையும் பாடுகிறார், அதே சமயத்தில், உரிமையோடு முருகபெருமானை செல்லமாக சாடவும் செய்கிறார். ஏழைகள் எல்லாம், தங்கள் கவலைகளை உன்னிடம் சொல்லி முறையிட வருகிறார்கள், ஆனால் நீ அவர்களின் குறைகளைக்குச் செவிசாய்க்காமல் இருக்கலாமா? அப்படி இருந்தால், வேதங்கள் எல்லாம் உன்னை கேள்விக் கேட்குமே என்று ஆதங்கப்படுகிறார். முருகன் அருளால் அல்லவா அருணகிரி நாதர் பாடுகிறார், அதனால் அவருக்கு அந்த உரிமை உள்ளது.

ஆறுமுகம் ஆறுமுகம் என ஆறு முறை முருகனின் பெயரை பக்தியுடன் கூறி, திருநீறை எடுத்து, உடல் முழுதும் பூசிய மிகப்பெரிய தவசீலர்களின் பாத மலரை தம் தலையில் சூடி வணங்கும் அடியார்களின் அடியையே (அடியார்க்கு அடியேன்) துணை என்று எண்ணும் முருகனல்லவா நீ. நாள்தோறும், மயில் வாகனத்தில் ஏறிடும் குகனே, சரவணனே, எனது ஈசனே, என் மானம் (பெருமை/சிறுமை) உனது மானம் என்று எப்போதும் எண்ணிப் பாடுகின்ற ஏழைகளின் துன்பம்/கவலைகளை என்ன ஏது என்று நீ கேட்காமல் இருந்தால், உன்னை யார் போற்றுவார்? வேதங்கள் உன்னைப்பற்றி என்ன சொல்லும்? என்று உரிமையோடு கேட்கிறார் அருணகிரி நாதர்.

இளமை அழகுபொருந்திய திருநீறு அணிந்த மேனியை உடைய வேலவனே, நீல மயில் வாகனத்தில் வலம் வரும் உமையவள் பெற்ற முருகவேளே, இழிந்தவர்களான அசுரர்களை அழிக்கும் பொழுது, நான் செய்த தீய வினைகள் எல்லாவற்றையும் சேர்த்து அழிக்க, உனது நீண்ட வேலை எறிந்து, கடலுக்கடியில் இருந்து மேலெழும்பி வரும் தீயைப் போன்று வெப்பம் கொண்ட வேலவனே, சீறிவரும் யானை முகம் கொண்ட அசுரனான கஜமுகாசுரனின் உயிரைப் பறித்த விநாயகனின் தம்பியான துணைவனே, வானை முட்டும் வண்ணம் உயர்ந்த அழகான பழனி மலையில் வாழும் குமரனே, பிரம்மனுக்கு வரம் தந்த முருகா, இறைவனே, எங்க்கள் குறைகளையும் தீர்க்க வேண்டும் என்று பாடி வேண்டுகிறார் அருணகிரி நாதர்.

 

பொருள்:

பூதி                    - திருநீறு / விபூதி
ஆகம்                - உடல்
மாதவர்            - தவசி/முனிவர்
பதம்                  - பாதம்
வியாகுலம்    - கவலை/துக்கம்
ஏவர்                 - யாவர் என்பதன் மரூஉ
மறை               - வேதம்
மாழை             - இளமை/அழகு
பொரு              - ஒப்ப
வாக                - வாகனம்
வேள்               - முருகவேள், தலைவன்
நீசர்                  - கொடியவர்/கீழானவர்
நீடு                   - நீண்ட
மடங்கல்        - வடவைத்தீ /கடலுக்கு அடியில் இருந்து உண்டாகும் தீ
மாறவுணன்   - ஓர் அசுரன் (யானைமுகம் கொண்ட கஜமுகாசுரன்)
சிகரி                 - சிகரம்
அண்டகூடம் - வானம்
தம்பிரான்       - இறைவன்

 

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்

தொடர்புடைய கட்டுரைகள்

திருப்புகழ் / Thiruppugazh

திருப்புகழ் 110 - அவனிதனிலே பிறந்து (பழநி)

Arunagirinathar

ஓரெழுத்துப் பா....

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net