"நாங்கள் எல்லாம் கவரிமான் பரம்பரை"
"நீ என்ன பெரிய இராஜ பரம்பரையா?"
""எங்க பரம்பரை இரத்தத்தில் கலந்திருக்கு"
"பரம்பரைப் பெருமையைக் கெடுக்காதே"
"அது எங்கள் பரம்பரையிலேயே கிடையாது..."
இப்படி பலவற்றை நாம் கேட்டிருப்போம்.
பரம்பரை என்பது நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல், பரம்பரை பரம்பரையாக, பரம்பரை வழக்கம், அரசப் பரம்பரை, ஆண்டப் பரம்பரை, குரு பரம்பரை, குற்றப்பரம்பரை, பரம்பரைத் தொழில், பரம்பரை வைத்தியர், பரம்பரை உரிமை, பரம்பரைச் சொத்து, பரம்பரை நோய் என பலவிதத்தில் அடிக்கடி கேட்டிருக்கிறோம், பயன்படுத்தியும் வருகிறோம்.
பரம்பரை என்றால் நமக்குத் தெரியும். வழி வழியாக, வழையடி வாழையாக, நம் மூதாதையர்களின் ஏழு தலைமுறையைக் குறிக்கும் சொல் அது. ஆனால் இந்தப் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியுமா? அதற்கு நாம் முதலில் நமது தலைமுறைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் தன்னில் ஆரம்பித்து பின்னோக்கி சென்றால் பரம்பரைக்கான பொருளை அறியலாம். அதாவது
நாம் |
முதல் தலைமுறை |
|
அப்பா + அம்மா |
இரண்டாம் தலைமுறை |
நமது பெற்றோர்கள் |
பாட்டன் + பாட்டி |
மூன்றாம் தலைமுறை |
பெற்றோரின் பெற்றோர்கள் |
பூட்டன் + பூட்டி |
நான்காம் தலைமுறை |
பெற்றொரின் பெற்றொர்களின் பெற்றோர்கள் - பாட்டனின் பெற்றோர்கள் |
ஓட்டன் + ஓட்டி |
ஐந்தாம் தலைமுறை |
பூட்டனின் பெற்றோர்கள் - பாட்டனுக்குப் பாட்டன், பாட்டி |
சேயோன் + சேயோள் |
ஆறாம் தலைமுறை |
ஓட்டனின் பெற்றோர்கள் - பூட்டனின் பாட்டன் பாட்டி |
பரன் + பரை |
ஏழாம் தலைமுறை |
சேயோனின் பெற்றோர்கள் - ஓட்டனின் பாட்டன் பாட்டி |
ஒவ்வொரு தலைமுறைக்கும் எத்தனை பேர்
நாம் |
முதல் தலைமுறை |
1 |
அப்பா + அம்மா |
இரண்டாம் தலைமுறை |
2 = 2 x 1 நமது பெற்றோர்கள் |
பாட்டன் + பாட்டி |
மூன்றாம் தலைமுறை |
4 = 2 x 2 பெற்றோரின் பெற்றோர்கள் |
பூட்டன் + பூட்டி |
நான்காம் தலைமுறை |
8 = 2 x 4 பெற்றொரின் பெற்றொர்களின் பெற்றோர்கள் - பாட்டனின் பெற்றோர்கள் |
ஓட்டன் + ஓட்டி |
ஐந்தாம் தலைமுறை |
16 = 2 x 8 பூட்டனின் பெற்றோர்கள் - பாட்டனுக்குப் பாட்டன், பாட்டி |
சேயோன் + சேயோள் |
ஆறாம் தலைமுறை |
32 = 2 x 16 ஓட்டனின் பெற்றோர்கள் - பூட்டனின் பாட்டன் பாட்டி |
பரன் + பரை |
ஏழாம் தலைமுறை |
64 = 2 x 32 சேயோனின் பெற்றோர்கள் - ஓட்டனின் பாட்டன் பாட்டி |
(*சேயோன் - என்றால் முருகன், சிவன், தூரத்தில் இருப்பவன் என்ற பொருளும் உண்டு)
பரன் + பரை சேர்ந்து தான் பரம்பரை என்ற சொல் உருவாகியுள்ளது.
பரன் + பரை சேரும் பொழுது, 'ன்' என்பது 'ம்' ஆக இலக்கணப்படி, திரிந்து பரம்பரை என்று மாறியுள்ளது. (எகா: திறன் + பட = திறம்பட). பொதுவாக 'ன்' என்பது 'ற்' ஆக திரியும். விதிவிலக்காக 'ன்' 'ம்' ஆக திரிந்து இருக்கலாம். அதே போல், தமிழில் உள்ள இன்னொரு இலக்கணப் படியும் இது சரியாக இருக்கிறது. அது இலக்கணப் போலி எனப்படும். எடுத்துக்காட்டு: அறம் - அறன், நிலம் - நிலன், முகம் - முகன் அது போல பரம் - பரன் என்றும் கூறலாம்.
பரம்பரை என்ற இந்த ஒரு சொல் எவ்வளவு பொருள் பதிந்து இருக்கிறது. ஆழ்ந்த தெளிந்த சிந்தனையுடன் ஏழு தலைமுறையையும் சேர்த்து பரம்பரை எனக் குறிப்பிட்டு நம் முன்னோர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களை நாம் போற்றவேண்டும்.
பல குடும்பங்களில், பூட்டன், பாட்டன் பெயர்களின் முதல் எழுத்துகளை தங்கள் பெயருக்கு முன்பாக எழுதுவார்கள். அதனால் நான்கு தலைமுறையின் பெயர்களை எளிதாக அடையாளம் தெரிந்துக்கொள்ளலாம், தற்போது இப்பழக்கங்கள் குறைந்து, பெயருக்குப் பின்னால் அப்பா பெயரை போடும் பழக்கமாக மாறிவிட்டதால், இரண்டு தலைமுறைக்கு மேல் அறிய முடியாமல் போய்விடுகிறது.
ஏழு தலைமுறை, அதாவது நம் பரம்பரையின் ஒவ்வொரு பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பது நம் கடமை என எண்ணுகிறேன், ஆனால், நம்மில் பலர் அதில் தவறிவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. பூட்டன் பூட்டி இன்னும் இருக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள், தங்களின் முன்னோர்களின் பெயர்களை தெரிந்து வைத்துக்கொள்ள முயலவேண்டும்.
தமிழில் உள்ள உறவுமுறைகள் பற்றி அறிய இந்த இணைப்பைப் பாருங்கள்
பரம்பரை என்பது எத்தனை ஆண்டுகள்?
ஒரு தலைமுறை சராசரியாக எழுபது ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால் கூட, ஏழு தலைமுறை என்பது 490 ஆண்டுகள், அதை 500 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம்.
ஈரேழு தலைமுறை என்றால் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள்.
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம், அதாவது ஈரேழு, பதினாலு தலைமுறை. அப்படியென்றால், கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் என்ற பொருள் கொள்ளலாம். இராஜராஜ சோழன் நமது பதினாலாவது தலைமுறையில் வாழ்ந்த மன்னன் என்று நினைக்கும் பொழுதே பெருமையாக இருக்கிறது அல்லவா?
தமிழின் சிறப்பே சிறப்பு!
(பரம்பரை - Hereditary. Lineage, Tradition, Pedigree, Inheritance, Heredity
தலைமுறை - Generation)
ஏன் ஏழு தலைமுறை?
மரபணு (Gene) அறிவியலின் படி, உங்கள் மரபணு 7 தலைமுறைகளுக்கு பெரிய அளவில் மாற்றமடையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
உதாரணமாக, உங்களிடம் 100% மரபணு உள்ளது (1 வது தலைமுறை).
உங்கள் அடுத்த தலைமுறைக்கு (2 வது தலைமுறை) உங்கள் மரபணுவில் 50% இருக்கும். (அதாவது தாயின் மரபணு 50%, தந்தையின் மரபணு 50%)
3 வது தலைமுறைக்கு உங்கள் மரபணுவின் 25% இருக்கும்.
4 வது தலைமுறைக்கு உங்கள் மரபணுவின் 12.5% இருக்கும்
5 வது தலைமுறைக்கு உங்கள் மரபணுவின் 6.25% இருக்கும்
6 வது தலைமுறை உங்கள் மரபணுவின் 3.125% யைக் கொண்டிருக்கும்
7 வது தலைமுறை உங்கள் மரபணுவின் 1.5625% இருக்கும்
(8 வது தலைமுறைக்குப் பிறகு உங்கள் மரபணுவில் மிகக் குறைவான அளவு (1%க்கும் கீழே) இருப்பதால் அதைக் கணக்கில் கொள்வதில்லை) .
இந்த சதவிகிதத்தை, நம்மிலிருந்து தொடங்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் பொருத்திப் பார்த்தால், கணக்கு துல்லியமாக இருக்கிறது.
தலைமுறை |
நபர்கள் |
மரபணு சதவிகிதம் |
முதல் தலைமுறை |
1 நாம் |
100% |
இரண்டாம் தலைமுறை |
2 = 2 x 1 நமது பெற்றொர் |
100% = 2 x 50% |
மூன்றாம் தலைமுறை |
4 = 2 x 2 பாட்டன் + பாட்டி |
100% = 4 x 25%
|
நான்காம் தலைமுறை |
8 = 2 x 4 பூட்டன் + பூட்டி |
100% = 8 x 12.5% |
ஐந்தாம் தலைமுறை |
16 = 2 x 8 ஓட்டன் + ஓட்டி |
100% = 16 x 6.25% |
ஆறாம் தலைமுறை
|
32 = 2 x 16 சேயோன் + சேயோள் |
100% = 32 x 3.125% |
ஏழாம் தலைமுறை
|
64 = 2 x 32 பரன் + பரை |
100% = 64 x 1.5625% |
இதனை நம் முன்னோர்கள் அன்றே அறிந்திருக்கின்றனர். அதனால் தான் ஏழு தலைமுறை என்று நம் முன்னோர்கள் சரியாகக் கணக்கு வைத்துள்ளார்கள்.
"அவன் முகம் அவனுடைய அம்மாவைப் போல் இருக்கிறது", "உன் கண் தாத்தாவைப் போல் இருக்கிறது", "அவன் பாட்டியின் சாயலில் இருக்கிறான்" என்பது போன்ற பலவற்றைக் கேட்டிருப்போம். அதற்கு காரணம் இப்பொழுது புரிகிறது. நமது குண நலன்கள், நம் உருவ அமைப்பு என ஒவ்வொன்றிற்கும், நம் முன்னோர்களின் மரபணுக்கள் தான் காரணம்.
மேலே உள்ள பரம்பரை வரைபடத்தைப் பார்த்தால் தெரியும், நம் ஒவ்வொருவருக்கும், நமது முன்னோர்கள் 126 பேர்களின் மரபணுக்கள், நம்மில் கலந்திருக்கிறது என்று. அதனால் அவர்கள் அனைவரின் ஏதாவதொரு குண நலன்கள் நமக்கு கட்டாயம் இருக்கும். அதனால் தான் நல்லதோ கெட்டதோ, அது ஏழு தலைமுறைகளைப் பாதிக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அவர்கள் சொன்னதில் எவ்வளவு உண்மை இருக்கிறது பாருங்கள்,
நம் முன்னோர்கள் செய்த, சொன்ன அனைத்திற்கும் சரியான காரணங்கள் இருக்கின்றது. நாம் தான் அதை முழுமையாக அறியாமல் இருக்கின்றோம்.
நாம் இன்று நல்ல அறநெறியுடன் செயல்பட்டு, ஆரோக்கியமாக இருந்தால், நமது ஏழாவது தலமுறையும் நல்வழியில் நடந்து ஆரோக்கியமாக இருக்கும். செய்வோமா?
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்,
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.