தமிழ் மொழியைப் பற்றி நாம் எப்பொழுதும் பெருமையாகப் பேசுகிறோம். ஏனென்றால் தமிழ் மொழி மிகவும் வளமையான சிறப்புமிக்க மொழி மட்டும் அல்ல, அள்ள அள்ள குறையாத வள்ளல் மொழி. அப்படிப்பட்டத் தமிழ் மொழியில் உறவு முறைகளுக்கு (Relationships) என்னென்ன தமிழ்ச் சொற்கள் உள்ளன? எத்தனை விதமான உறவுமுறைகளுக்குப் பெயர்கள் உள்ளன, என்று தெரியுமா? நானறிந்த, எனக்குத் தெரிந்த தமிழர் உறவுமுறைகளை இங்கே தொகுத்து இருக்கிறேன்.
உலகெல்லாம் அதிகம் பயன்படுத்தும் ஆங்கில மொழியில், மிகச் சில உறவுமுறைக்கானப் பெயர்கள் தான் உள்ளன. அதிலும் பல சொற்களுக்கு Grand, Great Grand, -in-law என்று ஒரு சொல்லுக்கு முன்னோ அல்லது பின்னோ சேர்த்து புது சொற்கள் உள்ளன, தமிழைப் போன்று தனிச்சொற்கள் கிடையாது. தெரியாத உறவுகள் எல்லோருமே அங்கிள் (Uncle) ஆண்டி (Aunty) தான் அதுவும் இல்லைன்னா கசின் (Cousin) அல்லது பிரதர் (Brother) கூட கிடையாது, ப்ரோ (Bro) தான். ஆனால் தமிழில் அப்படி இல்லை, ஒரு குடும்பத்தில் என்னென்ன உறவுகள் இருக்கமுடியுமோ அத்தனை உறவு முறைகளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது.
வாருங்கள் அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
உறவுமுறைகள்
|
தமிழ் |
ஆங்கிலம் |
---|---|---|
1. |
அம்மா தாய் அன்னை யாய் ஆத்தாள் |
Mother, Mommy |
2. |
அப்பா தந்தை தாதை, அப்பச்சி அத்தன் தகப்பன் |
Father, Daddy |
3. |
தாத்தா - தந்தை அல்லது தாயின் அப்பா, பாட்டன் ஐயா/அய்யா ஐயன்/அய்யன் |
Grand Father |
4. |
பாட்டி - தந்தை அல்லது தாயின் அம்மா ஆயா அப்பத்தா அம்மாயி, அம்மாச்சி |
Grand Mother |
5. |
பூட்டன் |
Great Grand Father |
6. |
பூட்டி |
Great Grand Mother |
7. |
ஓட்டன் |
|
8. |
ஓட்டி |
|
9. |
சேயோன் |
|
10. |
சேயோள் |
|
11. |
பரன் (பரம்பரை பற்றி அறிந்துக்கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்) |
|
12. |
பரை |
|
13. |
தம்பி (தம் + பின் = தம்பி) |
Younger Brother |
14. |
தங்கை, தங்கச்சி |
Younger Sister |
15. |
அண்ணன் தமையன் (தம் + ஐயன் - இந்த இடத்தில் ஐயன் என்பது மூத்தவனைக் குறிக்கும்) |
(Elder) Brother |
16. |
அக்கா அக்காள் அக்கை அக்கச்சி தமக்கை (தம் + அக்கை) |
(Elder) Sister |
17. |
சகோதரன் (சக + உதிரன்) |
Brother |
18. |
சகோதரி |
Sister |
19. |
மகன் தனயன் மைந்தன் புதல்வன் |
Son |
20. |
மகள் தனயை புதல்வி |
Daughter |
21. |
தலைமகன் தலைச்சன் |
Elder most /First Son |
22. |
தலைமகள் தலைச்சி |
Elder most/First Daughter |
23. |
மருகன் (ஒருவனுடைய சகோதரிமகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன்) மருமகன் |
A Nephew or Son-in-law |
24. |
மருகி (ஒருவனுடைய சகோதரிமகள் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகள்) மருமகள் |
A Niece or Daughter-in-law |
25. |
மாமா |
Uncle |
26. |
அத்தை மாமி |
Aunt, Aunty |
27. |
மச்சான் மச்சினன் மாமன் அல்லது அத்தையின் மகன், சகோதரியின் கணவன் மனைவியின் சகோதரன் |
Son of maternal uncle or paternal aunt.
Sister’s husband Wife’s Brother |
28. |
மச்சாள் மச்சினி மைத்துனி மாமன் அல்லது அத்தையின் மகன் மனைவியின் சகோதரி |
Daughter of one's paternal aunt or maternal uncle Wife’s Sister |
29. |
பெரியம்மா |
Mother’s elder Sister Father’s elder brother’s wife |
30. |
பெரியப்பா
|
Father’s elder brother Mother’s elder sister’s husband |
31. |
சின்னம்மா சித்தி |
Mother’s younger sister Father’s younger brother’s wife |
32. |
சித்தப்பா |
Father’s younger brother Mother’s younger sister’s husband |
33. |
சகலை சகலன் சகலப்பாடி ஓரகத்தான் (ஓர்குடி மணாளன்) மனைவியின் உடன்பிறந்தவள் கணவன் |
Wife's sister's husband |
34. |
அண்ணி மதினி |
Elder brother’s wife |
35. |
கொழுந்தி கொழுந்தியாள் |
Wife’s sister |
36. |
கொழுந்தன் கொழுந்தனார் |
Husband’s brother |
37. |
நாத்தனார் |
Husband’s sister |
38. |
மாமனார் |
Father-in-law |
39. |
மாமியார் |
Mother-in-law |
40. |
மருமகள் (மாற்றுப்பெண் - மாட்டுப்பெண் என்று மருவிவிட்டது) தன் மகனின் மனைவி |
Daughter-in-law |
41. |
மருமகன் தன் மகளின் கணவன் |
Son-in-law |
42. |
மாப்பிள்ளை மகளின் கணவன் மைத்துனன் மாமன்மகன் மாமி மகன் தங்கை கணவன் |
Daughter's husband
Brother-in-law Maternal uncle's son Paternal aunt's son Younger sister's husband |
43. |
மணப்பெண் மணமகள் |
Bride |
44. |
மணமகன் |
Bridegroom |
45. |
சம்பந்தி மகன் அல்லது மகளின் மாமியார் , மாமனார் |
Parent of one's son-in-law or daughter-in-law |
46. |
கணவன் ஆம்படையான் (அகம் + உடையான்), ஆத்துக்காரர் (அகத்து + காரர்), வீட்டுக்காரர் கொழுநன் |
Husband |
47. |
மனைவி ஆம்படையாள் (அகம் + உடையாள்) ஆத்துக்காரி (அகத்து + காரி) வீட்டுக்காரி இல்லாள் தாரம் பெண்டாட்டி/பெண்சாதி மனையாள்/மணவாட்டி சம்சாரம் |
Wife |
48. |
பேரன் (பெயரன்) |
Grandson |
49. |
பேத்தி (பெயர்த்தி) |
Grand Daughter |
50. |
கொள்ளுப் பேரன் |
Great Grandson |
51. |
கொள்ளுப் பேத்தி |
Great Grand daughter |
52. |
எள்ளுப் பேரன் |
Son of Great grandson or Great grand daughter |
53. |
எள்ளுப் பேத்தி |
Daughter of Great grandson or Great grand daughter |
54. |
அத்தான் அயித்தான் - அத்தை மகன் அத்திம்பேர் அக்காள் கணவன்; அத்தை மகன்; அம்மான் மகன்; மனைவியின் முன்னோன்; உடன்பிறந்தாள் கணவன் |
Elder sister's husband |
55. |
அத்தைப் பாட்டி - அப்பாவின் அத்தை |
Grand mother |
56. |
ஆச்சி (தாய், பாட்டி, மூத்த தமக்கை, சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல்) |
A term of respect used in addressing elder/aged women |
57. |
தாய் மாமன் அம்மான் |
Maternal uncle |
58. |
மூத்தவன் முன்னவன் |
Eldest son |
59. |
மூத்தவள் முன்னவள் |
Eldest daughter |
60. |
இளையவன் இளவல் |
Younger son, brother |
61. |
இளையவள் இளவள் |
Younger daughter, sister |
62. |
ஓர்ப்படியாள் (ஓர் + படியாள்) ஓப்பிடியா ஓரகத்தி (கணவனுடன் பிறந்தானின் மனைவி) |
Wife of the husband's brother |
62. |
பங்காளி தாயாதி ஒரு குடியில் பிறந்த உரிமைப்பங்காளி . |
Agnate - Related on the father's side |
63. |
தம்பதி |
Husband and wife |
64. |
சகக்கழுத்தி சக்களத்தி என மருவிவிட்டது இரு தார முறை வழக்கிலிருந்தபோது தன்னைப்போலவே (சக = உடன், கூட) தன் கணவனால் தாலி கட்டிக்கொண்ட கழுத்தை உடையவள் என்ற பொருள்படும் சொல்.) (மாற்றாளான மனைவி) |
Co-wife /Joint wife / Rival wife |
65. |
சக்களத்தன் |
|
66. |
பெற்றோர் |
Parents |
67. |
உடன்பிறப்பு |
Sibling |
அம்மாடியோ... தமிழில் இத்தனை உறவுப் பெயர்கள் உள்ளனவா? வியப்பாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறதல்லவா?
தமிழில் மூன்று சுட்டெழுத்துகள் உள்ளன, அவை அ, இ, உ.(எ/க: அவன், இவன், உவன்)
இச்சுட்டெழுத்துகள் கொண்டும் சில உறவுமுறைச் சொற்கள் உள்ளன.
அம்பி - அவனுடைய தம்பி
இம்பி - இவனுடைய தம்பி
எம்பி - என் தம்பி
உம்பி / நும்பி - உன்னுடைய தம்பி
உங்கை / நுங்கை - உன் தங்கை
எங்கை - என் தங்கை
நங்கன் - நம் அண்ணன்
எந்தை - என் தந்தை
உந்தை - உன் தந்தை
தமிழ் மொழியில் மட்டும் ஏழு தலைமுறைக்கும் உறவுப் பெயர்கள் உள்ளன. அதைப் பற்றி விரிவாக அறிந்துக்கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்
இவை இல்லாமல் பிற உறவுகளான தோழன், தோழி, நண்பன், சினேகிதி, சினேகிதன், காதல், காதலி என இன்னும் நீளும்.
உறவுமுறைகளின் முக்கியத்துவம்
இத்தனை உறவுமுறைகள் மட்டுமல்ல, ஒவ்வொரு உறவுக்கும் ஒரு சில உரிமைகளையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எடுத்துக்காட்டாக, மூத்த மகனுக்கு என்று சில உரிமைகள், திருமணத்தின் போது தாய்மாமன் சீர் கொண்டுவருவது, சில உறவுகளுக்கு மட்டும் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் செய்யும் உரிமை இருக்கிறது, இது போல் ஒவ்வொரு உறவுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இவை ஒவ்வொரு சமூகத்திற்கு வேறுபடலாம், ஆனால் உறவுகளுக்கு முக்கியத்துவமும் உரிமையும் இருக்கிறது என்பது தான் நம் பாரம்பரியம்.
நம் பாரத கலாச்சாரம் இன்றும், இன்னும் காப்பாற்றபடுவதற்கு, நம் குடும்பங்களும், இந்த உறவுகளும், உறவுமுறைகளும் தான் காரணம். நம் பாரத கலாச்சாரத்தில் தான், கடவுளுக்கு கூட குடும்பமும் உறவுகளும் இருக்கிறது. இந்த உறவுகள் இல்லாமல், நம் குடும்பங்களில் எந்த ஒரு விழாக்களோ பண்டிகைகளோ கிடையாது. அப்படிப்பட்ட உறவுகளை நாம் போற்றி காக்கவேண்டும். உறவுமுறை சொல்லி அழைக்கும் பொழுது அது வெறும் சொல்லோடு முடிந்துவிடுவதில்லை, அந்த உறவுக்கான மரியாதையும் சேர்ந்து வெளிப்படுகிறது. அவர்களுக்கும் நமக்கும் இருக்கும் ஒரு நெருக்கத்தைக் காட்டுகிறது, கூட்டுகிறது.
இந்த உறவு முறைகள் அனைத்தையும் நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும். நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் உறவின் பொருளும் பெருமையும் அவர்களுக்குத் தெரியும். குடும்ப உறுப்பினர்களையும், சொந்தபந்தங்களையும் சந்திக்கும் பொழுது, சரியான உறவுமுறையைச் சொல்லி அழைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். அது பெற்றோர் கைகளில் தான் இருக்கிறது. அது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
நம் தலைமுறையில், நாம் சிறுவயதில் இருக்கும் பொழுதே இந்த உறவு முறைகளை எல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம், உறவினர் வீடுகளுக்குச் செல்வோம், உறவினர்கள் வீடுகளுக்கு வருவார்கள், உறவு முறைகள் சொல்லி அழைத்தோம். ஒருவருக்கு ஒருவர் உதவி மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஆனால் இன்றையக் காலகட்டத்தில், பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை, அல்லது அதிகபட்சமாக இரண்டு குழந்தைகள் தான் என்று ஆகிவிட்டது, சிலரோ குழந்தைகள் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், மேலே சொல்லப்பட்ட பல உறவுமுறைகள் வருங்காலத்தில் வழக்கில் இல்லாமல், காணாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது. பழங்கதைகளிலும், பழைய திரைப்படங்களிலும் தான் அவற்றைக் காணவும் கேட்கவும் முடியும். ஒரு காலத்தில் தமிழர்களில் இப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் இருந்தன என்று சொல்லும் நிலைக்கு ஆளாகிவிடுவோம்.
இந்நிலை நீடித்தால், நாம் இந்தச் சொற்களை மட்டும் இழக்கப்போவதில்லை, அந்தச் சொற்களுக்கான உறவுகளையும் இழந்துவிடுவோம், குடும்பம் என்ற கட்டமைப்பே குலைந்துவிடும்.
நம் தமிழில், செந்தமிழில் இத்தனை உறவுப் பெயர்கள் உள்ளன, இதையெல்லாம் விட்டுவிட்டு, டாடி (Daddy), மம்மி (Mummy), அங்கிள் (Uncle), ஆண்டி (Aunty) என்று ஏன் தான் தமிழன் தடம் மாறுகிறானோ தெரியவில்லை? இதே போன்று தான் இலக்கியங்களும், தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் தமிழனோ, தன் வீட்டில் உள்ள தங்கத்தின் மதிப்புத் தெரியாமல் அடுத்த வீட்டில் உள்ள பித்தளையப் பார்த்து மயங்கிப் போற்றி மகிழ்கிறான். பல விஷயங்களிலும் இது தான் அவன் நிலையாக இருக்கிறது, இது அறியாமையா? இல்லை அறியும் விருப்பமின்மையா?
தமிழின் சிறப்புக்களை அறிந்து உணர்ந்து அதை வெளிப்படுத்த வேண்டும். பெருமைக்குச் சொல்லவில்லை, பெருமிதத்துடன் சொல்கிறேன் தமிழனென்று.
விடுபட்டுள்ள உறவுப் பெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும், இப்பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்.
உறவுகளைப் போற்றுவோம்.
நன்றி
தமிழன் என்ற பெருமையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.