தமிழெமது தருமமுது - 4
செந்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், தேன் தமிழ், சங்கத்தமிழ், தங்கத்தமிழ், அருந்தமிழ், இசைத்தமிழ், அன்னைத்தமிழ், கன்னித்தமிழ், ஞானத்தமிழ், தெய்வத்தமிழ், முத்தமிழ், நற்றமிழ் என்று தமிழின் பல சிறப்பு பெயர்களைக் கேட்டிருக்கிறோம். ஒவ்வொரு சிறப்பு பெயரும் அப்படி அழைக்கப்படும் காரணத்தை பெயரிலேயே விளக்கிவிடுகின்றன, ஆனால் இது என்ன சொற்றமிழ்? தமிழில் மட்டும் தான் சொற்கள் உள்ளனவா என்ன? சொற்றமிழ் என்று அழைக்க என்ன காரணம்?
சொற்றமிழ் பற்றித் தெரிந்துகொள்வதற்கு, நாம் முதலில், தெய்வப் புலவர் சேக்கிழார் அருளிய பெரியபுராணத்திற்குள் செல்லவேண்டும். பெரியபுராணத்தில், "தடுத்தாட் கொண்ட புராணம்" என்ற பகுதியில், சேக்கிழார், சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி பாடும் பொழுது இந்த சொற்றமிழ் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். ஆனால், அது தெய்வச்சேக்கிழார் சொன்ன சொல் அல்ல, முழுமுதல் தெய்வமான அந்த சிவபிரானே உதிர்த்த சொல்லாகும். சிவபிரான் சுந்தரரைப் பாடச்சொல்கையில், "எனை ஆட்கொண்ட இறைவா, உன் பெருமை பற்றி, இந்த அடியேன் என்ன பாடுவேன்? எப்படி பாடுவேன்?" என்று கேட்க்கும்பொழுது, சிவபெருமான், "சொற்றமிழ் பாடுக" என்று சொன்னதாக சேக்கிழார் பின்வரும் பாடலைப் பாடுகிறார்:
மற்றுநீ வன்மைபேசி
வன் தொண்டன் என்னும் நாமம்
பெற்ற றனை நமக்கும் அன்பில்
பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும்
ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக என்றார்
தூமறை பாடும் வாயார்! (70)
இந்தப் பாட்டுக்கு விளக்கத்தைப் பார்க்கும் முன், நாயன்மார்கள் நால்வரில் ஒருவராகிய, சுந்தரரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். சிவபெருமானோடு கயிலாயத்தில் இருந்தவர் சுந்தரர், அதனால் 'தம்பிரான் தோழர்' என அன்புடன் அழைக்கப்பட்டவர் சுந்தரர். பூலோகத்தில், சிவனடியார்கள் எல்லோரும், இறைவனைப் புகழ்ந்து பாடுவதைக் கேட்டு, தாமும் புவியில் பிறந்து இறைவனைப் போற்றிப் பாடவேண்டும் என்று ஆசை கொள்கிறார் சுந்தரர். அதே சமயம், சிவபெருமானும், அடியார்கள் பெருமையை சுந்தரர் மூலம் அனைவரும் அறிந்துகொள்ள செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். ஒரு கட்டத்தில், சுந்தரரின் வினைப்பயனின் விளைவாக, அவர் புவியில் பிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சிவபெருமானின் அருளால், சுந்தரர், தமிழ்கூறும் நல்லுலகில், திருநாவலூர் என்ற ஊரில், ஆதிசைவ அந்தணர் குலத்தில், சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகவாகத்தோன்றி நம்பியாரூரர் என்னும் திருநாமம் பெற்று வளர்கிறார்.
மணப்பருவம் அடைந்த சுந்தரருக்கு, திருமணம் நடக்க இருக்கிறது. அப்பொழுது, ஒரு வயதான அந்தணர் வேடத்தில் எழுந்தருளிய சிவபெருமான், சுந்தரரைத் தடுத்து, "நீ எனது அடிமை, என்னுடன் வரவேண்டும்" என்று சொல்கிறார். அதனால் கோபம் கொண்ட சுந்தரர், அந்த முதியவரை 'பித்தா" என்று திட்டுகிறார். நான் உம் அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க, உடனே அந்த முதியவர், "இதோ உம் பாட்டன் எனக்கு எழுதி தந்த ஓலை" என்று தாம் கொண்டுவந்த ஓலையைக் காட்டுகிறார். அதில் இருக்கும் கையெழுத்து, சுந்தரர் பாட்டானாருடையது என்று தீர்ப்பாகிறது. அதனால் வேறு வழியில்லாமல், அந்த முதியவருடன் செல்லும் சுந்தரர், பிறகு உண்மையறிந்து, இறைவனின் பொற்றாள் பணிந்து, தான் என்ன செய்யவேண்டும் என்று வினவுகிறார். அப்பொழுது தான் இறைவன், பக்தர்கள் அன்பினால் எனக்கு செய்யும் மற்ற எல்லா அலங்காரம், பூசைகளைவிட, பாட்டே எனக்கு மிகவும் விருப்பமானது, ஆகையினால் தமிழ்சொற்கள் கொண்டு எம்மைப் பாடுக என்று அருளினாராம். பூமாலையை விட பாமாலை தான் இறைவனுக்கு பிடித்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்துக்கொள்ளலாம்.
இந்த நிகழ்வைக் குறிப்பிடும் விதமாக தான், சுந்தரரைப் பற்றி பாடும் போது, சேக்கிழார், இப்பாடலைப் பாடுகிறார். இந்த பாடலுடைய பொருள்:
‘யாம் கூறியதை, நீ மறுத்து நம்மிடம் வலிந்து பேசியதால் வன் தொண்டன் என்று பெயர்பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனையாவது நல்ல பாடல்களே யாகும். ஆதலால் இவ்வுலகத்திலே நம்மைத் துதித்துத் தமிழ்ப் பாட்டுக்களைப் பாடுவாயாக!“ என்று மறைபாடும் தமது திருவாக்கினாலே நம்பிகளை நோக்கிச் சொல்லியருளினார்.
சரி, ஏன் சொற்றமிழ் என்று கூறினார்?
சுந்தரமூர்த்தி நாயனாரை பிறக்க வைத்ததன் நோக்கமே ‘தமிழில் பாடுவதற்கு’ தான் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார். அதனால் தான் அவர் தென்னகத்தில் பிறந்தார். ஏனென்றால், இறைவனைப் பாடுவதற்குரிய இனிய சொற்கள் தமிழில்தான் இருக்கிறது. வேறு மொழிகளில் இல்லை. அதனால் தான் நற்றமிழை சொற்றமிழ் என்று இறைவன் கூறியதாக சேக்கிழார் பாடுகிறார். கடைசி வரியில் "தூமறை பாடும் வாயார்!" என்று பதிவு செய்கிறார் சேக்கிழார். அதாவது தூய்மையான வேதத்தை பாடிய வாயால் இறைவன் கூறுகிறார் என்று அற்புதமாக விவரிக்கிறார் சேக்கிழார்.
இங்கு ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றது. அந்தந்த மொழி பேசுபவர்களுக்கு, அவர்கள் பேசும் மொழியே சிறந்தது. அதனால் தான், 'சொற்றமிழ் பாடுக" என்று சொன்ன இறைவன் "சொற்றமிழில் மட்டும் பாடுக" என்று சொல்லவில்லை. அதனால், இறைவனைப் பாட எம்மொழியும் தடையில்லை, ஆனால், தமிழர்கள் தமிழிலிலேயே பாடவேண்டும், அது தான் தமிழுக்கும் சிறப்பு, தமிழராகிய நமக்கும் சிறப்பு.
தமிழ் மொழி வளமையானது என்று பலர் கூற கேள்விப்பட்டிருப்போம். சொல்வளம் மிக்க தமிழில், சொல் வறட்சி கிடையாது, அத்தகையத் தமிழில், இறைவனைப் பாடவா சொற்கள் இல்லை. அமிழ்தைப் போன்றது தமிழ்ச்சொற்கள், அதனால் தான் 'சொற்றமிழ் பாடுக' என்று அருளியுள்ளார் இறைவன். நல்ல இனிய சொற்களுக்குப், தமிழில் பஞ்சமே கிடையாது, ஆனால் நாம் இன்று வழக்கத்தில் பயன்படுத்தும் சொற்களோ மிக மிக குறைவு தான்.
சொற்றமிழ் என சொல்வது தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. மற்றமொழிகளில் அப்படி சொல்லமுடியுமா என்றால், இல்லை என்று தான் சொல்லவேண்டும். உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் 'சொற்றமிழ் பாடுக" என்பதை "Sing in Word English" என்று சொல்ல முடியாது, "Sing in English" என்று தான் சொல்ல முடியும். ஆகையினால், மற்ற மொழிகளைவிட தமிழுக்கு, இது போன்ற நிறைய சிறப்புகள் உள்ளன. அதனால் தமிழர் என்று நாம் பெருமைக் கொள்ள வேண்டும்.
சரி, சிவபெருமான், சொற்றமிழில் பாடச்சொன்னாரே, சுந்தரர் என்ன பாட்டுப் பாடினார்? "சொற்றமிழ் பாடுக" என்று சொன்னதும், "இறைவா, எப்படித் தொடங்குவது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று தயங்குகிறார் சுந்தரர். உடனே இறைவன், "நீ தான் என்னை, எல்லோர் முன்னிலையிலும், பித்தா என்று திட்டிக் கேலிசெய்தாயே, அதனால் 'பித்தா" என்றே பாடுக என்று அருளுகிறார்.
பரமசிவன் அடியெடுத்துக் கொடுத்த பித்தா என்று முதல் சொல்லைக் கொண்டு தான், சுந்தரமூர்த்தி நாயனார், பின்வரும் பாடலைப் பாடி, ஏழாம் திருமுறையை நமக்கு அருளினார்:
பித்தாபிறை சூடீபெரு
மானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
பிரித்துப் படித்தால்:
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே!
உம்மேல் எம்மைப் பித்துக் கொள்ள வைப்பவனே, சடாமுடியில் பிறையைச் சூடிய பெருமை உடையவனே, அனைவருக்கும் அன்போடு அருள்பவனே, பெண்ணையாற்றின் தென்புறம் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்துறை என்னும் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, என் அப்பனே, உன் உள்ளத்தில் குடியிருந்து அருளும் உன்னை, எப்போதும் மறவேனே. முன்பே உன் அடியவனாக இருந்தவன், 'உன் அடியேன் இல்லை" என்று எதிர்த்து வழக்காடியது பொருந்துமோ?
தொடக்கமே இவ்வளவு சுவையான பாடல் எனும்போது, மற்ற பாடல்கள் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.