திருச்சிற்றம்பலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
சிவனவன் மகிமையை
செவி வழி துளி கேட்டு - திரு
வடி தனை தொழுது
கவி புனைந்தேன் போற்றிட - இவ்
வடியேனைப் பொறுத்தருள்க!
- * -
நமசிவாய நாதனே போற்றி
நலமதை யருளும் தேவனே போற்றி
எமைப் படைத்தாளும் ஏகனே1 போற்றி
எழிலுரு மாயத் தேகனே போற்றி (4)
ஆனந்த நடமிடும் அழகே போற்றி
ஆணவம் அழித்திடும் அனலே போற்றி
வானவர்2 வணங்கிடும் வள்ளலே போற்றி
வானெங்கு மின்னொளி வெள்ளமே போற்றி (8)
கடம்ப வனம்வந்த கடவுளே போற்றி
இடப்பக்க மிடம்தந்த இறைவனே போற்றி
விடமதை உட்கொண்ட விமலனே போற்றி
தடந்தோ3 ளுடைபெருந் தலைவனே போற்றி (12)
கயிலை மலையருட் கடலே போற்றி
கவலைகள் பொசுக்கும் கனலே போற்றி
மயிலேறு முருகனின் மாணவா போற்றி
மமதைக் கொன்றிடும் மன்னவா போற்றி (16)
அருள்தரும் ஆனந்த சோதியே போற்றி
அணுநுனி பிறழா நீதியே போற்றி
அந்தமில்லா தொரு ஆதியே போற்றி
அண்ட சக்தியின் பாதியே போற்றி (20)
விருப்பு வெறுப்பில்லா விந்தையே போற்றி
பிறப்பு இறப்பில்லா எந்தையே போற்றி
பிறப்பினி தடுத்திடும் பரமனே போற்றி
நெருப்பு மலைநின்ற நிமலனே4 போற்றி (24)
திருமறை யருளிய பரம்பொருள் போற்றி
திருமுறை எழுதிய பெருமிறை போற்றி
கருவறை தனில்அரு வுருவமே போற்றி
கருவரைக் காக்கின்ற திருவருள் போற்றி (28)
அம்பலத் தாடிடும் ஆண்டவா போற்றி
ஐம்புல மடக்கிடும் ஐயனே போற்றி
மும்மல5 மழித்திடும் மூலவா போற்றி
எம்பல முணர்த்திடும் ஏகம்பனே6 போற்றி (32)
அந்தமில்லா ஆதி முதல்வனே போற்றி
சுந்தர சோதி சொரூபனே போற்றி
எந்தையே ஈடில்லா இறைவனே போற்றி
சிந்தை நிறைசிவ பிரானே போற்றி (36)
தெய்வப் பரம்பொருள் தேவா போற்றி
சைவத் திருமுறைத் தலைவா போற்றி
வைகை நகருறை இறைவா போற்றி
கைலை மலையிறை பெருமான் போற்றி (40)
முக்கண் ணுடைய மூலவா போற்றி
சொக்க னெனும் சொக்கநாதனே போற்றி
தெக்கண மெழுந்தருள் தேவனே போற்றி
எக்கணம் மறவா ஏகனே போற்றி (44)
இதய மலர்வாழ் அரனே7 போற்றி
இமய மலையீஸ் வரனே போற்றி
பயமதை யழித்திடும் பரனே8 போற்றி
அபய மளித்திடும் அரணே போற்றி (48)
அன்பே உருவான அண்ணலே போற்றி
இன்னல் களையும் கன்னலே போற்றி
மண்ணிலம் காக்கும் மன்னனே போற்றி
விண்ணிறை நீல வண்ணனே போற்றி (52)
ஐந்தொழில்9 புரிகின்ற அரசனே போற்றி
ஐங்கரன் வலம்வந்த அறவனே10 போற்றி
அறுமுகம் வணங்கிய அழகனே போற்றி
அறியாமை யகற்றிடும் அறிவனே11 போற்றி (56)
ஏற்றம் தரும் எண்குணத்தானே12 போற்றி
மாற்றம் தரும் நல்மனத்தானே போற்றி
கூற்றனைத்13 தடுக்கும் அம்பலத்தானே போற்றி
தோற்ற மில்லா நுண்புலத்தானே14 போற்றி (60)
சுயம்பாய்த் தோன்றிய சங்கரனே போற்றி
மயங்கிட வைக்கின்ற சுந்தரனே போற்றி
பயமதைப் போக்கிடும் பிஞ்ஞகனே15 போற்றி
இயம்பிட பலம்தரும் மந்திரனே போற்றி (64)
பிறைமதி சூடிய நிறைமதியே போற்றி
சடையதில் நதிவுடை உமாபதியே போற்றி
அரைகுழுவைத்16 தோலணிந்த பசுபதியே போற்றி
தடைவெல்ல விடைசொல்லும் அதிபதியே போற்றி (68)
மாயை யகற்றிடும் மாயவனே போற்றி
நோயைத் தீர்த்திடும் தூயவனே போற்றி
தீயாய்ச் சுடர்விடும் நாயகனே போற்றி
தாயெனக் காக்குந்தாயு மானவனே போற்றி (72)
முப்புரம்17 எரித்த அப்புலிங்கமே போற்றி
எப்புறமும் இருக்கின்ற எம்பிரானே போற்றி
ஒப்புரவு18 ஒப்புவிக்கும் ஒப்பில்லானே போற்றி
இப்பிறவி தந்தயெம் அற்புதனே போற்றி (76)
பக்தருக்கு அருள்புரியும் பரமனே போற்றி
பசிபோக்க கொடைதந்த அமுதனே போற்றி - மெய்
ஞானமதைக் கற்பிக்கும் அறவனே போற்றி - அகங்
காரமதை யழிக்கும்நெற்றித் திலகனே போற்றி (80)
ஐந்தெழுத்து மந்திர முடையானே போற்றி - முழுதும்
அறிந்திட முடியாத மறையோனே19 போற்றி
பைந்தமிழில் பாடவைத்த பரம்பொருளே போற்றி
குருந்தைமர அடியமர்ந்த குருபிரானே போற்றி (84)
எஞ்ஞானமும் நீயன்றோ எம்பிரானே போற்றி
அஞ்ஞானந்தனை யகற்று மெய்ஞானமே போற்றி
கெஞ்சாது காக்கின்ற நஞ்சுண்டானே போற்றி
துஞ்சாது20 துணைநிற்கும் செஞ்சடையோனே போற்றி (88)
உலகெல்லா மென்றுதிர்த்த உத்தமனே போற்றி
அழகெல்லா மொன்றுசேர்ந்த நர்த்தகனே21 போற்றி
விலகின்நின்று விளங்கவைக்கும் வித்தகனே22 போற்றி - அற
மொழுக அருளுரைக்கும் தத்துவனே போற்றி (92)
அற்புத வுடல்தந்த கொடையானே போற்றி
நுட்பமாய் வுள்ளிருக்கு முடையானே போற்றி
சர்ப்பமதை சூடியநடு நிலையானே போற்றி - ஒளிச்
சிற்பமாய் அருளுமண்ணா மலையானே போற்றி (96)
மகுடமென முடிகொண்ட சடையோனே போற்றி
பகுத்தறிய மதிதந்த மதியோனே போற்றி
புகலிடம் தருமலர் அடியானே போற்றி
அகலாது விழிநிறையும் வடிவோனே போற்றி (100)
உயிரொடுக்கி யருளுகின்ற உருத்திரனே23 போற்றி - அவ்
வுயிர்காக்க ஓடிவரும் திருமகனே போற்றி
உயர்வான ஞானம்தந்த குருபரனே போற்றி - உம்
உயர்வான அடிசேர அருள்பவனே போற்றி (104)
இல்லாமல் இருக்குமழி வில்லானே போற்றி
எல்லாமாய் இருக்கின்ற வல்லானே போற்றி
சொல்லாமல் கொடுத்தருளும் நல்லோனே போற்றி
உள்ளாடு முயிருக்குள் உள்ளானே போற்றி (108)
மெய்
உணர்வாலே உணருகின்ற உண்மையே போற்றி
உணராது அறியமுடியா தன்மையே போற்றி
இருளுக்கு முன்நின்றத் தொன்மையே போற்றி
இருளகற்றி வொளிதரும் நன்மையே போற்றி (112)
ஆகமமாய்24 ஆகிநின்ற அம்மானே25 போற்றி
ஏகாந்தமாய் நிற்கும் எம்மானே26 போற்றி - அருட்
தாகம் போக்குகின்ற தம்மானே27 போற்றி
பாகமொரு பாதிதந்த பெம்மானே28 போற்றி (116)
பாவமதைப் போக்குகின்ற பாவகனே29 போற்றி - பரி
காரமதை யருளுகின்ற ஆகமனே30 போற்றி
சாபமெல்லாம் தீர்க்கின்ற சாதுவனே31 போற்றி - சன்
மார்க்கம்தனைப்32 போதிக்கும் போதகனே போற்றி (120)
இருளு மொளியுமாய் இருப்பவனே போற்றி
பிழைகளைத் தாயாய் பொறுப்பவனே போற்றி
வினைப்படி பிறப்பினை யறுப்பவனே போற்றி
வினைப்பயனை மறவாது தரும்சிவனே போற்றி (124)
சுழல்புவிக் காக்கின்ற அழல்வண்ணனே33 போற்றி
அழல்பசிப்34 போக்குகின்ற அம்மையப்பனே போற்றி - இட
கழல்காட்டி ஆடுகின்ற தில்லைக்கூத்தனே போற்றி - தண்
ணிழல்தந்து35 அரவணைக்கும் எல்லையில்லானே போற்றி (128)
சொல்லாமல் உணருகின்ற அத்தனே36 போற்றி - விட்டுச்
செல்லாமல் தொடருகின்ற நிருத்தனே37 போற்றி
நில்லாமல் உதவுகின்ற விருத்தனே38 போற்றி
எல்லாப்புவிக்கு மொன்றான ஒருத்தனே39 போற்றி (132)
ஓம் என்றமந்திரத்தின் உட்பொருளே போற்றி
ஒய்யார நடனமாடும் சிற்சபேசா40 போற்றி
யாமுண்டு என்றுணர்த்தும் அருட்கரமே போற்றி
ஐயமகற்றும் மெய்ஞான விற்பனனே41 போற்றி (136)
சீடனுக்கு காத்திருந்த குருநாதனே போற்றி
வேடன்விழிப் பார்வைக்கொண்ட பெருமானே போற்றி - பிறை
சூடனாக நின்றருளும் பெருந்தகையே போற்றி
ஈடனாக42 ஈந்துவக்கும் தியாகேசனே போற்றி (140)
நாவுக்கரசரை மீட்டெடுத்த நாயகா போற்றி - மாணிக்க
வாசகரை ஆட்கொண்ட மாயவா போற்றி - ஞானப்
பாலினை வூட்டியருளிய தாயுமானவா போற்றி - சுந்தரர்
தோழனாய் துணைநின்ற மந்திரமூர்த்தியே போற்றி (144)
மால்அயனும்43 மலைத்துநின்ற பேரொளியே போற்றி
வேலன்வேட்கைத் தீர்த்துவைத்த மாமணியே போற்றி
காலனுக்கு புத்திதந்த கோமகனே போற்றி - திரு
மூலனுக்கும் முக்திதந்த மூலவனே போற்றி (148)
அறுபத்திமூவரை பாடவைத்த நாயனே44 போற்றி
அறுபத்திமூவரை ஆட்கொண்ட நேயனே போற்றி
அருகில்வந்து அருளுகின்ற சேயோனே45 போற்றி
அருவுருவம் இரண்டும்கொண்ட மாயோனே போற்றி (152)
காளஹஸ்த்தியில் கண்களைப் பெற்று
வாயுலிங்கமாக நிற்கும் என்னப்பனே போற்றி
காஞ்சிபுரத்தில் மண்ணுரு பெற்று
காமாட்சி கரம்பிடித்த ஏகம்பனே போற்றி, (154)
திருவண்ணாமலையில் தீபமாய் ஒளிர்ந்து
இருளனைத்தையும் போக்கும் தேசனே போற்றி
திருவானைக்காவலில் தீர்த்தமாய் எழுந்து
அருமருந்தாய் பிணிபோக்கும் நேசனே போற்றி (156)
சிதம்பரம்தனிலே நடமதைப் புரியும்
சிரமதில் பிறையுடை சிவனே போற்றி
நிதமுனைத் தொழுதிட மனமது மகிழ்ந்திடும்
நிரந்தர அருள்தரும் ஈசனே போற்றி (158)
இனிப்பானக் கனிபோன்ற இனியவனே போற்றி
பிணிநீக்க பணியாற்றும் தனித்துவனே போற்றி - கண்
மணிபோல எமைக்காக்கும் இமையவனே போற்றி - நீறு
அணிந்தாலே துணிவூட்டும் நமசிவாய போற்றி (162)
ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய போற்றி - திரு
நாமமுனதை நாளும் சொல்வோம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய போற்றி
தேம்பாய்46 நாவும் சொல்ல இனிக்குமே நமசிவாய போற்றி (166)
சிவனருளால்
சிறு அடியேன்
இராம்ஸ் முத்துக்குமரன்.
1) ஏகன் |
தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன், கடவுள், ஒருவன். |
2) வானவர் |
தேவர் |
3) தடந்தோள் |
உயர்ந்த, அகன்ற தோள் |
4) நிமலன் |
கடவுள், குற்றமற்றவன், பரிசுத்தமானவன் |
5) மும்மலம் |
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை மலங்கள் |
6) ஏகம்பன் |
காஞ்சிபுரத்திற் கோயில் கொண்ட சிவபிரான் |
7) அரன் |
சிவன், தோழன், அரசன் |
8) பரன் |
கடவுள், சிவன் |
9) ஐந்தொழில் |
படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளுதல் |
10) அறவன் |
கடவுள், தருமவான், முனிவன், பிராமனன் |
11) அறிவன் |
நல்லறிவுடையவன், சிவன் |
12) எண்குணத்தான் |
தன்வயத்தனாதல்(self-existence), தூய உடம்பினனாதல்(immaculateness), இயற்கை உணர்வின்னாதல்(intuitive wisdom), முற்றுமுணர்தல்(omniscience), இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல்(freedom from the snares and illusions to which a derived intelligence is exposed), பேரருளுடைமை(unbounded kindness), முடிவிலாற்றலுடைமை(omnipotence), வரம்பிலின்பமுடைமை(infinite happiness) ஆகிய எட்டுக் குணங்களையுடைய கடவுள் சிவன் |
13) கூற்றன் |
யமன் |
14) நுண்புலத்தான் |
நுண்ணிய அறிவுடையவன் |
15) பிஞ்ஞகன் |
சடைமுடி உடைய சிவன் |
16) உழுவை |
புலி |
17) முப்புரம் |
பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலான அசுரக் கோட்டைகள் (மூன்று மலங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்) |
18) ஒப்புரவு |
ஒழுக்க நெறி, உலகவொழுக்கம் |
19) மறையோன் |
வேதம் தந்தவன், பிரமன், அந்தணன் |
20) துஞ்சாது |
தூக்கமில்லாது, இடையறாது |
21) நர்த்தகன் |
நடனமாடுபவன் |
22) வித்தகன் |
வல்லவன், பேரறிவாளன், வியத்தகு தன்மையுடையவன் |
23) உருத்திரன் |
சிவன் |
24) ஆகமம் |
வேதசாத்திரங்கள், இறைவன் வாக்கு, தரும நூல் |
25) அம்மான் |
இவ்விடத்தில் கடவுள் என்ற பொருளில் வருகிறது, தாயுடன் பிறந்தவன், தந்தை |
26) எம்மான் |
எம் கடவுள், எம் தந்தை, எம் மகன் |
27) தம்மான் |
தலைவன் |
28) பெம்மான் |
பெருமான், கடவுள் |
29) பாவகன் |
தூய்மையானவன், தூய்மைசெய்பவன் |
30) ஆகமன் |
சிவன் |
31) சாதுவன் |
நல்லவன், ஐம்புலன்களடக்கியவன் |
32) சன்மார்க்கம் |
நன்னெறி, ஞானனெறி |
33) அழல்வண்ணன் |
நெருப்பு வண்ணத்தனாகிய சிவன் |
34) அழல் |
நெருப்பு, வெப்பம், சினம் |
35) தண்ணிழல் |
அருள், புகலிடம் |
36) அத்தன் |
தந்தை, தலைவன், கடவுள், உயர்ந்தோன் |
37) நிருத்தன் |
நடனமாடுபவன் |
38) விருத்தன் |
மேலோன், முதுமையோன் |
39) ஒருத்தன் |
ஒப்பற்றவன் (இங்கு ஒருத்தன் என்பது கடவுளைக் குறிக்கிறது. ஒரு ஆண் அல்லது நபர் என்று குறிப்பிடுவதற்கு ஒருவன் என்றே சொல்லவேண்டும்) |
40) சிற்சபேசா |
சித்திரசபை ஈசன், சிதம்பரத்தில் குடிகொண்டுள்ள இறைவன் |
41) விற்பனன் |
கல்வியிற் சிறந்தோன், புலவன், புதுமைச் செயல்புரியும் ஆற்றலுள்ளவன் |
42) ஈடன் |
பெருமையுடைவன், ஆற்றலுடையவன், வலிமை பொருந்தியவன் |
43) மால்அயன் |
திருமாலும் பிரம்மனும் |
44) நாயன் |
கடவுள், அரசன், தலைவன் |
45) சேயோன் |
சிவன், தொலைவிலிருப்பவன், முருகக்கடவுள் |
46) தேம் |
தேன் |