Chidhambaram Natarajar Temple

பக்தி

Shivalingam

நற்றுணையாவது நமச்சிவாயவே...

திருச்சிற்றம்பலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!

நான்காம் திருமுறையில், அப்பர் அருளிய "சொற்றுணை வேதியன்" என தொடங்கும் "நமச்சிவாயப் பத்து" பதிகத்தைக் கேட்டுக்கேட்டு, மனம் மயங்கி, என் சிற்றறிவுக்கு எட்டியவற்றை கவிதையாய் வடித்துள்ளேன். பிழை இருந்தால் பொறுத்தருள்க.

 

நற்றுணையாவது நமச்சிவாயவே...

பற்றற் றிருக்க நின்தாள் பற்றினோம்
முற்றிலும் நின்னைச் சரண மடைந்தோம்
பெற்றிட பெறுதலுக் கரியப் பெரும்பே - றெமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(1)

பிஞ்ஞகன் பிறைநிலா தங்கமாய் மின்னிட
செஞ்சடை தனிலே கங்கையும் பொங்கிட
நஞ்சினை யுண்டாய் நலம்பெற யாமும் - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(2)

ஆதியந்தம் இல்லா அற்புத சோதியே - சரி
பாதி வழங்கிய ஒப்பில்லா நீதியே
ஓதிட உம்பெயர் வரும்துயர் நீங்குமே - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(3)

அண்ட சராசரம் அதில்சிறு புவிதனில்
கண்டங்கள் தெரியும் கடுகினும் சிறிதாய் - கருணை
கொண்டதில் எமக்கு அருளைப் பொழிவாய் - அரனே
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(4)

அஞ்சிடும் மனதில் அச்சமும் விலகிட
நெஞ்சினில் என்றும் நிம்மதி பெருகிட
எஞ்சிய வாழ்வினில் ஏற்றமும் பெற்றிட - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(5)

கன்னல் கசந்திட கவலைகள் கூடினும்
இன்னல் இடையூ றெதுவந்தப் போதிலும்
உண்ணலும் உறங்கவும் முடியாது வாடினும் - நம்பினால்
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(6)

வரம்தரும் பரம்பொருள் பரமனை நினைந்து
அறநெறி தவறா தனுதினம் உழைத்து
கரமலர் குவித்துக் கைதொழும் போதெல்லாம்
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(7)

பொய்யென் றிறையை வைபவ ரிந்த
வையகம் தனிலே ஐயகோ வுண்டு
மெய்யிருந்தும் மெய்யினை வுணரா தவர்க்கும்
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(8)

சுந்தரர் தோழனே மந்திர மூர்த்தியே
சந்தங்கள் பாடிட செந்தமிழ்த் தேனிலே
சுந்தரர் இல்லையே அடியேன் இருப்பினும் - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                   ...(9)

அன்பே சிவம் திருமூலர் வாக்கன்றோ
அன்பே எம்மை உம்மிடம் சேர்க்குமே
அன்புக் கடிமை யாகும் சிவனே - அன்பினால்
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                 ...(10)

தோடுடை செவியன் எனஞானக் குழந்தையைப்
பாடிட வைத்த அம்மை யப்பனே
வாடும் எமையும் அரவணைக்கும் தாய்நீ - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                ...(11)

அப்பரடிகளைக் கல்லில் கட்டி நீசர்கள்
உப்புக்கடலில் வீசிய பொழுதும் ஈசனே - கல்லது
தெப்பமாய் மாறிட அருளிய நேசனே - எமக்கும்
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                ...(12)

சேக்கிழார் எனும்பெரும் பாக்கியம் பெற்றவர்
வாக்கிலே அறிந்தோம் அடியார் பெருமையை
தாக்கிட துன்பம் காத்திடும் ஈசனே - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                ...(13)

மணிவாசகர் அருளிய மனதை மயக்கும் - திரு
வாசகம் கேட்டு உருகிய ஈசனே - ஒரு
யாசகம் கேட்டுத் தொழுகிறோம் நாங்களும் - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                ...(14)

எண்ணம் முழுது முன்னைச் சுமந்து
எண்திசை யெங்கும் தேடி யலைந்து
எந்தையே எம்முள் உணர மறந்தும் - எமக்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                 ...(15)

உருவமாய் உன்னைக் கண்டு வணங்கினோம் - அரு
வுருவமாய் காண்கையில் மனது உருகினோம்
அருவமாய் உணரும் அரும்நிலை வேண்டுமே - அதற்கு
நற்றுணையாவது என்றும் நமச்சிவாயவே!                                 ...(16)

 

சிவனருளால்
சிறு அடியேன்
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sivam

சிவபுராணம்

இராமர் ஆலயம் - அயோத்தியா !!!

இராமர் ஆலயம் - அயோத்தியா !!!

ஓம் நமசிவாய போற்றி!!!

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net