(ஜனவரி 22, 2024)
எங்கு நோக்கினும் இராம மயம்
"ஜெய் ஸ்ரீராம்" எனும் தாள நயம்
உணர்ந்து கொண்டோம் நமது சுயம் - இனி
இல்லை கோவில்கள் பற்றி பயம்!
எத்தனை ஆண்டு கால தவம்
இன்று கிடைத்தது அதற்கு வரம்
ஒற்றுமை தானே நமது பலம் - என்
றென்றும் வாழ்ந்திடும் சனா தனம்!
இராம தூதன் அனுமான் அன்று
தேவி சீதையை கண்டு வந்தார்
இராமர் தூதராம் மோடி இன்று
கோவிலை நமக்கு மீட்டுத் தந்தார்!
இறைவன் இராமரின் கோவில் கொண்ட
சரயு நதிக்கரையில் மக்கள் வெள்ளம் - வான்
உறையும் தேவர்கள் வாழ்த்துச் சொல்ல
நிறையும் மகிழ்ச்சியால் மக்கள் உள்ளம்!
வாசல் தோறும் வண்ணக் கோலங்கள்
சாலை யெங்கும் மின்னும் தோரணங்கள் - அன்றைய
கோசல நாட்டின் தலைநகருக்கு வாருங்கள்
கோசலை மைந்தனின் கோவிலைப் பாருங்கள்!
அயோத்தியா என்ற அழகிய நகரம்
விழாக்கோலம் பூண்ட இனிய தருணம்
வயோதிகர் முதற்கொண்டு வருகின்ற பலரும்
புளகாங்கித மடைவர் இராமனே சரணம்!
பொறுமை என்ற சொல் லதற்கு
பொருள் என்னவென்று புரிந்த தின்று - அப்
பொறுமைக்குப் பரிசாய் கிடைத்ததே இந்த
பெருமை மிக்க கோவில் ஒன்று!
பட்ட வலிகளைப் பொறுத்துக் கொண்டு
சட்டம் வழியாய்த் தீர்வு கண்டு
கட்டுப் பாட்டுடன் செய்தத் தொண்டு - திக்
கெட்டும் புவியதை வியக்கும் கண்டு!
எண்ணி லடங்கா உயிர்களின் தியாகம்
எத்தனை ஆண்டுகள் நடந்த யாகம் - கோவிலைக்
கண்ணில் காண்கையில் சிலிர்க்கும் தேகம் - பாரத
மண்ணிலே தீர்ந்தது ஆன்மிகத் தாகம்!
பெயர் தெரியா மனிதர்கள் பெயர்களை
சுமந் திருக்கும் ஒவ்வொரு கற்களும்
உயிர் நீத்த உத்தமர் பெருமையை
தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூண்களும்!
சனாதன தர்மத்தில் வாழ்ந்து போதித்த
கதாநாயகன் நம் காவிய இராமனை
சதா நேசிக்கும் சகலரும் பூஜிக்க
புராதன ஆலயம் புதிதாய் மின்னுதே!
மத்தியில் மோடி மாநிலத்தில் யோகி
சத்திய சீலர்களின் சாதனைகள் பாரீர்
பத்தியம் இருப்பினும் பாரதம் காக்கின்ற
உத்தமர் செயல்கண்டு ஊக்கம்மிக கொள்வோம்!
இருபத்தி யொன்றாம் நூற்றாண்டின்
இருபத்தி நான்காம் ஆண்டு ஜனவரி
இருபத்தி இரண்டாம் தேதி அனைவரும்
இறைபக்தி யோடு தீபமேற்றி வணங்கிடுவோம்!
குழந்தை இராமர் இங்கு வீற்றிருப்பார்
குறைகள் யாவையும் தீர்த்து வைப்பார்
இழந்தப் பெருமையை மீட் டெடுப்பார்
இறைவன் மகிமையைப் பறை சாற்றிடுவார்!
இராமர் எனும் பெரும் அவதாரம்
மானுட அன்பு அறங்களின் ஆதாரம்
ஆன்மிக ஒழுக்கம் அவர் அடையாளம்
வாழ்வோம் இராமர் வழி நாமும்!
(இராம இராஜ்யம் கவிதையைப் படிக்க...)
இராமரின் ஆசியோடு
இராம்ஸ் முத்துக்குமரன்.