இராமர் கோவில் திறப்புவிழா
ஜனவரி 22, 2024
இன்று
இந்திய வரலாற்றில்
இன்றியமையாத ஒரு நாள்,
அயோத்தியில்,
இராமர் மீண்டும்
திருவுருவமாய் அவதரிக்கும்
திருநாள்!
இது
ஆன்மிக மறுமலர்ச்சியின்
ஆரம்பம் - புது
ஆத்திக இறையெழுச்சியின்
ஆனந்தம்!
இராமர் அன்று
ஈரேழு வருடங்கள்
வனவாசத்திற்கு பின்
அயோத்தியா வந்தார்,
இன்றோ
ஐநூறு வருட
அநீதிக்குப் பிறகு மீண்டு,
மீண்டும்
அயோத்தியா வருகிறார்!
அன்று சீதா பிராட்டியை
மீட்டு அயோத்தி வந்தார்
இன்று இந்துக்களின் வெற்றியை - நிலை
நாட்டி அயோத்தி வருகிறார்,
நாம்
இத்தனைக் காலம்
இழந்த நம்பிக்கை
இந்துக் கலாச்சாரம்
அனைத்தையும்
மீட்டுத் தருகிறார்!
இராம ஜன்மபூமியில் - குழந்தை
இராமர் விக்கிரகத்தோடு
இராமர் ஆலயம்,
இந்நாள் நமக்கு
இன்னொரு
இராம நவமியாகும்!
இத்தனைக் காலம்
பக்தர்களின் உள்ளத்தில் வாழ்ந்த
இராமருக்கு,
பக்தர்களின் பக்திப்பரிசு - இந்த
பிரமாண்ட ஆலயம்!
யுகங்கள் பலகடந்த தொன்மையான
புண்ணிய பாரதம்,
யோகியர் பலர் கடுந்தவம்
பண்ணிய பாரதம்,
கொள்ளையடிக்க வந்த
அந்நியர் படையெடுப்பில்
பொலிவிழந்தது வேதனை!
எண்ணிப்பார்க்க முடியா
துயரங்களை அனுபவித்து
எண்ணிலடங்கா உயிர்களின்
தியாகத்தில் துளிர்த்தெழுந்து,
மின்னிடும் வைரமாய்
மீண்டு வந்தது
வியக்க வைத்திடும் சாதனை!
ஓவியம் போல
கண் கவர்ந்த அழகிய
கோவிலை அழித்து,
கட்டடம் கட்டிய
பாவிகளை மன்னித்து
ஏற்றுக்கொண்டது பாரதம் அன்று!
காவிய நாயகன்
அவதரித்த திருத்தலத்தில் - அவன்
ஏவிய சேவகன்
தலைமையில் அணிவகுத்து,
காவிகள் பலரின்
கடும் முயற்சியில்,
உயர்ந்து நிற்குது - புவி
மேவிய புதிய
ஆலயம் இன்று!
சரயு நதிக்கரையில் இன்று
மக்கள் வெள்ளம்,
மூழ்கிப்போயினர் அனைவரும்
மகிழ்ச்சி வெள்ளத்தில்!
விண்ணதிரும்
"ஜெய் ஸ்ரீராம்" என்ற
கோஷத்தில் - நம்
பாரத கலாச்சாரத்தை
கேலி செய்யும்
அருவருப்பு கூச்சல்களும்,
சனாதனத்தை வேரறுப்போம் என்ற
சில்வண்டுகளின் இரைச்சல்களும்,
சத்தமின்றி மூழ்கிவிடும்!
ஓட்டுப் பிச்சை எடுப்பவர்களுக்கு
வேட்டு வைக்கும் - இன்று
கேட்கும் சத்தம் - இது
நாட்டுப் பற்றை
மீட்டெடுக்க - வலு
வூட்டும் தர்ம யுத்தம்!
பல கட்டப் போராட்டங்களையும்
பல சட்டப் போராட்டங்களையும்
தாண்டி நீதி வென்றது,
உண்மை சில காலம் உறங்கலாம்
ஆனால் என்றும் சாகாது என்ற
கூற்றும் வென்றது!
அன்று
வானுயர்ந்த கோவில்களை
மன்னர்கள் கட்டியதாக நாம்
படித்திருக்கிறோம்,
இன்று வரை
சாட்சியாக நிற்கும் - அக்
கோவில்களை வணங்கி
வியந்திருக்கிறோம்!
அன்று
நெஞ்சைக் கொள்ளைக் கொள்ளும்
தஞ்சைப் பெரியக் கோவிலைக்
கட்டியப் பெருமை
இராஜராஜனை சாரும்,
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இன்று
அதே போன்றப் பெருமை - நம்
பாரதப் பிரதமரைச் சேரும்!
மோடி என்ற மாமனிதர்
ஒருவரால் தான் இது
சாத்தியமானது,
மோடி என்ற ஒருவருக்குப் பின் உள்ள
கோடி கோடி நல்லுள்ளங்களின்
அன்பு ஆதரவு உறுதி விடாமுயற்சி
போன்றவையே காரணம் என்ற
உண்மை சத்தியமானது!
அன்று
ஒரு பத்துத் தலை
இராவணனை
எதிர்த்து வென்றார்
தசரத இராமர்,
இன்று
எண்ணற்ற ஒற்றைத் தலை
இராவணர்களை
மோதி ஜெயிக்கிறார் - நம்
பாரத பிரதமர்!
நம் பாரத
வரலாற்றை மறந்தவர்களுக்கு,
கொஞ்சம் கொஞ்சமாய்
வரலாற்றை மீட்டெடுத்துப்
புதியதோர்
வரலாற்றைப் படைக்கும்,
தன்னலமில்லா தலைவனின்
வரலாற்றைப் புகழும்,
நாளைய
வரலாற்று நூல்களனைத்தும்!
புண்ணியம் செய்தவர்கள்
நமது முன்னோர் பரம்பரை,
அவர்களால் தான்
இராமர் கோவிலைக்
காணுகின்ற பாக்கியம்
பெற்றது நம்
இன்றைய தலைமுறை!
அன்று இராமரின்
பட்டாபிஷேகத்தை
நம்மால் காண முடியவில்லை,
இன்று இராமர் கோவில்
கும்பாபிஷேகத்தைக்
கண்டு மகிழ்வோம்!
அன்று
இராமன் எனும் நாமம்
கொண்டது
இராமபிரான் மட்டுமே,
பல்லாயிரம் ஆண்டுகள்
கடந்து இன்று,
இராமன் என்ற பெயர்
கொண்டவர்கள் எண்ணிக்கை - பல
கோடியை எட்டுமே,
இராம நாமம்
இல்லாத வீடுகளும் இல்லை,
இராம நாமம்
சொல்லாத நாவுகளும் இல்லை!
இப்படி வாழவேண்டும்
என்று அறிவுரைக் கூறாமால்,
எப்படி வாழவேண்டும் என்று
வாழ்ந்துக்காட்டிய
உதாரண புருஷருக்கு - இன்று
பிரமாண்ட கோவில்!
கண்ணைக் கவரும்
வண்ணக் கோவில் கண்டு
உள்ளம் மகிழ்ந்து,
"ஜெய் ஸ்ரீ இராம்" என
சொல்ல சொல்ல இனிக்கிறது
அனைவரின் நாவில்!
படகோட்டி குகனோ
பாமரன் மகனோ
அரசர் குலமோ
வானர இனமோ
அனைவரும் சமமென்று
சகோதரனாய் பழகியவரின்
சரித்திரத்தை - வண்ணச்
சித்திரமாய் காட்டிடும்
வானுயர பெருங்கோவில்!
இறைவனுக்கு
இரண்டு ஏக்கர் நிலம் தர
இதயம் இல்லாது
இழுத்தடித்து
இன்னல் செய்த
இரக்கமற்றவர்கள்
இன்றென்ன சொல்வார்கள்?
இனியென்ன செய்வார்கள்?
இராமரின் படிப்புக்கு
ஆவணம் கேட்ட
ஆணவக் காரர்களை
காணோமே இன்று,
கடவுளை வணங்குபவன்
காட்டுமிராண்டி என்று
ஏளனம் செய்து கொக்கரித்த
வீணர்கள் எங்கே?
கடவுளே வியக்கும் வண்ணம்
உருவான கோவிலைப் பார்
என்று கைக்காட்டுங்கள் இங்கே!
கற்பனை என்று
இராமரைச் சொன்ன
அற்பர்களே
வாருங்கள் இங்கு,
கற்பனைக்கெட்டா
கலைநயம் கொண்ட
அற்புத ஆலயத்தைக்
காணுங்கள் இன்று!
ஸ்ரீரங்க கோபுரத்தையும்
சிதம்பர கோவிலையும்
இடிக்கும் நாளே பொன்நாள்
என முழங்கியவர்கள்
இருந்திருந்தால் - இன்று
கதி கலங்கி இருப்பார்கள்,
இடிக்கப்பட்ட கோவில்கள்
கட்டப்படுவதைக் கண்டு
மனம் வெதும்பி
மதி யிழந்து தவிப்பார்கள்!
ஈசனை வணங்க
இராமர் பாதம் பட்ட
இராமேஷ்வரம்,
தமிழர்கள் நாம்
தவமின்றி பெற்ற
பேரானந்த வரம்!
இந்திய நாட்டில்
புண்ணிய தலங்கள் - பல்
ஆயிரம் உண்டு,
வடக்கில் வாரணாசி
தெற்கில் தென்காசி,
வடக்கில் அயோத்தியா
தெற்கில் ஸ்ரீரங்கம்
இராமேஷ்வரம் போன்ற
தலங்களே அதை
சாட்சியம் சொல்லும்!
வடக்குத் தெற்குப் பேதம்
என்றும் தமிழர்களுக்கு இல்லை,
வெறுப்பை விதைத்தது போதும் - இனி
வெட்டிப் பேச்சுகள் தேவையில்லை!
சனாதனம் என்றும் சாஸ்வதமானது
அழிவு அதற்கு இல்லை,
கனா கண்ட கோவிலைக்
கண்முன்னே காணும்
காட்சியே சாட்சி
மூடர்களுக்கு ஏனோ புரிவதேயில்லை,
வினா கேட்டுக்கேட்டு வீழட்டும்
விடை சொல்லத் தேவையில்லை,
சனாதன தருமத்திற்கு ஆதியுண்டு
ஆனால் அந்தம் என்பது இல்லை!
இந்துக்களின் எழுச்சி - இது
இந்தியாவின் எழுச்சி
சாதித்துக்காட்டியது பக்தி - அதுவே
சனாதனத்தின் சக்தி!
இக்கோவிலை
காக்கவும் மீட்கவும் - பல
தன்னார்வ குழுக்கள் பாடுபட்டன,
இராஷ்ட்ரிய ஸ்வயம்சேவா சங்கம்
விஸ்வ ஹிந்து பரிஷத் இரண்டும்
பாதை அமைத்தன,
இராமருக்கு உதவியது அன்று
வானர பரிவாரம்
இராமர் கோவிலுக்கு உதவியது இன்று
ஆர் எஸ் எஸ் எனும் சங்க பரிவார்!
எண்ணிலடங்கா
கரசேவகர்களின்
தன்னலமில்லா சேவையின்
வெளிப்பாடு இந்தத்
திருக்கோவில்,
இனி
உயிர் நீத்த கரசேவகர்களின்
ஆன்மா மகிழ்வுற்று
அமைதிபெறும்
இராமரின் மலர்க்காலடியில்!
கரசேவர்கள் சேவையை - இரு
கரம் கூப்பி வாழ்த்துவோம்
மறவாமல் தியாகத்தை - நம்
சிரம் தாழ்த்தி வணங்குவோம்!
அயோத்திய இராமர் கோவில்
பல நூற்றாண்டு
பாரத மக்களின் பெரும் ஏக்கம்,
அயோக்கியர் சிலரின் சதியால்
அதை மறந்து
பாரதம் கொண்டது பெரும் தூக்கம்,
அஷோக் சிங்கால் அவர்களின்
இராம ஜன்மபூமி என்ற தாக்கம்,
அத்வானி என்றொரு மாமனிதர்
நடத்திக் காட்டிய இரத யாத்திரை,
நயவஞ்சகர் பேச்சிலே மயங்கிக் கிடந்தோரை
தட்டி எழுப்பி கலைத்தது அவர் நித்திரை,
முப்பது ஆண்டுகள் கடந்து இன்று
அற்புதமாய் எழுந்த கோவில் சொல்லும்
எப்பொழுதும் தர்மமே வெல்லும் என்று!
எத்தனைக் கோடி மக்களின் கனவு
எத்தனை ஆண்டு காலக் காத்திருப்பு
எத்தனை நல்லுள்ளங்களின் அர்ப்பணிப்பு
எத்தனை தியாகிகளின் பேரிழப்பு
எத்தனையென்று எளிதாய் எண்ண இயலாது,
ஆன்மிக சிந்தனையும்; அறநெறியும்
தேசத்தின் மீது பெரும்பற்றும்
சேவை ஒன்றே உயிர்மூச்சாய்
தூய தலைவன் ஒருவன் இருக்கையில்
இனிமேல் நம்மால் என்ன இயலாது?
இனிதாக தொடங்கியது
இன்று புனித இராமர் ஆலயம்,
இனி மீண்டும் தொடங்கட்டும்
இன்றிலிருந்து
இனிதாக இராம இராஜ்யம்!
(இராமர் ஆலயம் கவிதையைப் படிக்க...)
இராமர் ஆசியுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.