(இது 2019 தேர்தல் சமயத்தில் எழுதியது, இன்றும் பொருத்தமாகத்தான் இருக்கிறது)
போலிசைக் கண்டு திருடன் பயப்படுவான். மருந்தைக் கண்டு கிருமிகள் பயப்படும். சிங்கத்தைக் கண்டு சிறுநரிகள் பயப்படும்.
அது போலத்தான் பலருக்கு மோடி மீதுள்ள பயம். அந்த மோடிபோபியாவைப் போக்கத்தான் இந்த கவிதை.
இந்திய திருநாட்டை
வல்லரசாக்க வேண்டுமென
நல்லரசு நடத்திக்கொண்டிருக்கும்
உத்தமர் மீது
எத்துனை வன்மம்?
நூற்றிமுப்பது கோடி மக்களையும்
போற்றி வணங்கி,
அனைவருக்கும் தானொரு
தலைமை சேவகன் என்பவரை,
ஏன்
மதம் பிடித்து
மதம் பிரித்துப் பார்க்கிறீர்கள்?
அவர்
பிற மதங்களை என்றும்
சிறுமை செய்தவர் அல்ல,
தான் ஒரு இந்து என்று
பெருமை கொள்பவர்!
தொலை நோக்குப் பார்வையில்
பணியாற்றிக் கொண்டிருப்பவருக்கு
தொல்லைக்கொடுக்கும் நோக்கில்
பழி சுமத்திக்கொண்டிருப்பது ஏன்?
சமூக விரோதிகள்
சமூக ஊடகங்களில்
சர்வாதிகாரி என
சாயம் பூசுவதேன்?
பரம்பரை பரம்பரையாய்
கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில்
பரம ஏழை ஒருவர்
பாரத பிரதமர் ஆனதை,
பாரதத்தை ஆள்வதை
பார்க்கப் பொறுக்கவில்லையா?
ஊழல் சேற்றின்
சூழலை மாற்ற
மலர்ந்த தாமரையை
போற்ற மனமில்லையென்றால்
பரவாயில்லை
தூற்றுவது ஏன்?
ஊழல் கறைப் படாமல்
வாழும் நல்லவர் மீது
சேற்றை இறைத்து வீசும்
வீணர்களே,
மாற்றுத் தலைமை
யாரென்று சொல்ல முடியுமா?
தன்னலம் கருதாமல்
தேச நலனுக்காக
தனி ஒருவராய்ப்
போராடும் இவரைப் போல்
இனி ஒருவரை
உங்களால் காட்ட முடியுமா?
ஏழையாய் இருந்து - கடும்
உழைப்பெனும்
ஏணியால் உயர்ந்து,
கோழையாய் இல்லாமல்
நேர்மையெனும்
பாதையில் நடந்து,
வேலையென செய்யாமல்
வேள்வியென
கடமையை உணர்ந்து,
நாளைய இந்தியாவை
பாரினில் தலை நிமிர
பாடுபடும் தலைவனை,
தரம் தாழ்த்திட நினைத்து
தரம் தாழ்ந்து போகும்
தீய எண்ணம் உடையவர்களே,
நாடு
வளர்ச்சிப் பாதையில் நடைபோட
கை கொடுங்கள் - இல்லை
பாதையில் முள் வீசாமல்
வழி விடுங்கள்,
நீங்கள் வீசும் முட்கள் குத்தி
காயம் பட்டாலும்,
குருதி வந்தாலும் - கொண்ட
உறுதி மாறாதவர்,
முட்களை அகற்றி முன்னேறுவார்,
நீங்கள் வீசும் தடைக்கற்களில்
படிகள் கட்டி நாட்டை முன்னேற்றுவார்,
உங்கள் வீண் ஏச்சுகள்
அவருக்கு ஏற்றம் தரும்,
முழு மூச்சுடன்
முயன்று உழைப்பதால்
நாட்டுக்கு
நல்ல மாற்றம் வரும்!
அறுபது ஆண்டுகளில்
ஏற்பட்ட அனைத்து சீர்கேட்டுக்கும்
அறுபது மாதங்களில்
தீர்வு காணவில்லையென
ஆவேசப் படுவது ஏன்?
ஆவேசமா? - இல்லை
அது வெறும் வேசமா?
மோடி மஸ்தான் என
கேலி பேசுபவ்ர்களே - அவர்
மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும்
மந்திரவாதி அல்ல,
சீரழிந்து இருந்த தேசத்தை
சீராக்க நினைக்கும்
சீர்திருத்தவாதி,
தடைப்போடும்
நடைமுறைகளுக்கெல்லாம்
விடை கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்,
உலகம் சுற்றுபவர் என்று
கலகம் செய்பவர்களே,
பணி நிமித்தம்
பிற தேசம் செல்பவர் மீது - வீண்
பழி சுமத்தும்
இழிவானவர்களே,
பிற நாடுகளுடன்
நட்புறவு கொள்வது
இராஜதந்திரம்,
கையொப்பமிடும்
ஒவ்வொரு ஒப்பந்தங்களாலும்
நாளை
நாடு பலன் பெறும்,
வாழ்க்கை வளம் பெறும்,
உண்மையாய் உழைக்கின்ற
உன்னதமான உத்தமரை
தன்மையாய் நடக்கின்ற
தன்னலமற்ற தலைவரை
பெண்மையைப் போற்றுகின்ற
பொன்மனம் உடையவரை
நன்மையை எண்ணுகின்ற
நம்பிக்கை நாயகனை
நரம்பில்லாத நாக்கால்
வரம்பு மீறி ஏசுகிறவர்களே,
அவரைத் தூற்றும்
உங்களுக்கும் சேர்த்து தான்
அவர் உழைக்கின்றார்,
தீட்டிய நல்ல பல திட்டங்களால்
ஏற்படும் பலன்
நாட்டுமக்கள் அனைவருக்கும் தான்,
மறுத்தாலும்
மறைத்தாலும்
இது தான் உண்மை!
காய்த்த மரம் கல்லடி பெறும்
என்று உணர்ந்தவர்,
அதனால் தான்
சொல்லடிகளை எல்லாம்
காலடியில் போட்டுவிட்டு
நடந்து செல்கிறார்,
நயவஞ்சகர்களை
கடந்து வெல்கிறார்!
தமிழகத்தில்
ஐம்பது வருடத்திற்குமுன்
பொற்கால ஆட்சி தந்த
நல்லவரைத் தோற்கடித்து
பெருமைப் பட்டுக்கொண்டவர்கள் தான்,
இன்று அந்த
காமராசர் ஆட்சி வேண்டுமென்று
புலம்பிக்கொண்டி ருக்கிறார்கள்,
இன்று இந்தியாவில்
நல்லாட்சி தந்துக்கொண்டிருக்கும்
நல்லவரை தோற்கடித்து
மீண்டும் அதே போன்ற
ஒரு இமாலயத் தவறை
செய்துவிடாதீர்கள்!
இலவசத்திலும்
சாராயம் எனும்
பல விஷத்திலும்,
மூழ்கி கிடக்கும் தமிழனுக்கு
தலைவர் யார்?
தற்குறி யார்?
எனத் தெரியவில்லை,
மூளை சலவை செய்யப்பட்டு
முட்டாளாகிப் போன
பல தமிழர்களிடம்,
தமிழ் நாடு
தனி நாடு
எனச் சொல்லி
தனிமைப் படுத்தி விட்டார்கள்,
இந்தியன் என்றால்
இந்தி பேசுபவன்
என்பதைப் போன்ற பிம்பம்
உருவாக்கி
நாட்டு விடுதலைக்கு
பாடுபட்டு இரத்தம் சிந்தியவர்களை
களங்கப் படுத்திவிட்டார்கள்,
இவர்கள்
இந்தி எதிர்ப்பு செய்த
கட்சியுடன் தான் - இன்று
கொஞ்சி குலாவிக்கொண்டு
இருக்கிறார்கள்
என்பதை மறந்துவிடாதீர்கள்,
திராவிடம் திராவிடம்
எனப் பேசி
நாட்டு ஒற்றுமையில்
திராவகம் ஊற்றிவிட்டது - சில
துரோக கூட்டங்கள்,
மோடியின் நாட்டுப்பற்றில்
கதி கலங்கி
சதி செய்யப்பார்க்கிறது,
பார் போற்றும்
பாரதப் பிரதமரை
Go Back Modi என
வாய் கூசாமல்
தூற்றுகிறார்கள்,
பல சமஸ்தானங்களாகப்
பிரிந்து கிடந்த நாட்டை
ஒருங்கிணைத்த
இரும்பு மனிதருக்கு,
இரும்பில் சிலை வைத்த
தங்க மனம் உடைய
சிங்கமவர்,
திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்ட
பெரும் தலைவருக்கு
விண்ணைத்
தொட்டுவிடும் அளவிற்கு
சிலை வைத்து
உயர்ந்து நிற்பவர்,
ஒவ்வொரு தேர்தலுக்கும்
விவசாய கடன் தள்ளுபடி
என்று
ஏமாற்றுவதை தவிர்த்து,
விவசாயிகளின் வாழ்க்கை
ஏற்றம் பெற,
கடன் படாமல்
முன்னேற்றம் பெற
திட்டம் தீட்டுபவர்,
ஒரு நல்லவரை எதிர்த்து
எத்தனைப் பேர்?
இதுவரை
ஒருவரை ஒருவர் திட்டி
அரசியல் செய்தவர்கள்,
இன்று ஒன்று சேர்கிறார்கள் என்றால்,
எதிர் கட்சிகள் எல்லாம்
எதிரி கட்சிகளாய்
ஓரணியில்
சேர்கிறார்கள் என்றால்,
எதிரில் இருப்பவர்
பலசாலி மட்டுமல்ல
புத்திசாலியும் கூட
என்று உணர்ந்துகொண்டதால்,
அவர் ஆட்சியில் இருக்கும் வரை
நாம் ஆட்சிக்கு வரமுடியாது
எனத் தெரிந்த்கொண்டதால்,
வீண் பழி சுமத்தி
சதி செய்தாவது
பதவி அடையவேண்டுமென்ற
வெறி கொண்டார்களோ?
குறை கண்டுபிடிக்க முயன்று
முடியாதவர்கள் தான்
நிலவில் கறை என்று
புலம்புகிறார்கள்,
நாம் ஆட்சியில் இருந்த பொழுது
ஊழல் செய்தோம்,
அதனால் இவர்களும் செய்திருப்பார்கள்
என எண்ணுவது அறிவீனம்,
கூர்மையான பார்வை கொண்ட
நேர்மையான எண்ணம் கொண்ட
தூய்மையான உள்ளம் கொண்ட
வாய்மை பேசும் தலைவர் கண்டு
வாயடைத்துப் போகிறார்கள்
வயிறெரிந்து சாகிறார்கள்,
உலகின்
எந்த நாட்டிலும்
எதிர்கட்சிகளோ - அல்லது
எதிரிகட்சிகளோ,
நாட்டின் பாதுகாப்பு விஷயங்களிலும்
இராணுவ இரகசியங்களிலும்
தலையிடுவதில்லை,
இங்கு மட்டும் தான்,
நாட்டின் பாதுகாப்பையும்
அரசியல் ஆக்குகிறார்கள்
அசிங்கப் படுத்துகிறார்கள்,
அதில்
அசிங்கப்பட்டு போகிறார்கள்,
பிணம் தின்னி கழுகுகளாய்
காத்திருக்கும்
எல்லை நாடுகளுக்கு,
தினந்த்தோறும்
விருந்து படைக்கிறார்கள்,
நாட்டை அசிங்கப்படுத்து
மகிழ்ந்துபோகிறார்கள்,
நம் நாட்டு பிரதமர்
சொல்வதை
நம்ப மறுக்கிறார்கள்,
எதிரி நாட்டு அரசு சொல்வதை
உண்மையென
பறை சாற்றுகிறார்கள்,
தேசப்பற்றை
விலைப் பேசுகிறார்கள்,
ஆல மரத்தின்
நிழல் வேண்டாமென,
நேற்று முளைத்த
காளானுக்கடியில்
ஒதுங்க நினைக்கும்
மூடர்களே,
நாட்டைக் கெடுப்பவர்களுக்கு
எடுப்பார் கைபிள்ளை தான் வேண்டும்,
தாங்கள் நினைத்ததை எல்லாம்
சாதித்துக்கொள்ள,
மோடி அதை
மீண்டும் தடுப்பார்,
நாட்டை மீட்டெடுப்பார்,
மீண்டும் பேராதரவோடு
ஆட்சி அமைப்பார்,
நம் நாட்டுக்கு தற்போது
மோடி மட்டுமே தீர்வு,
இது
மக்கள் தீர்ப்பு மட்டுமல்ல
மகேசன் தீர்ப்பும் கூட!!!
நம்பிக்கையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.