முதுமை என்றால் பழைமை, பழையது என்று பலரும் சொல்கிறார்கள், எண்ணுகிறார்கள். அது முற்றிலும் தவறு. இளமை தான் பழைமை. ஒவ்வொரு நாளும் இளமை போய்க் கொண்டே இருக்கிறது. அது பழையதாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் முதுமை என்பது ஒவ்வொரு நாளும் புதிது. எப்படி நேற்றை விட இன்று புதிதோ, அப்படி தான் முதுமையும். நேற்றை விட இன்று வேறு ஒரு மாற்றம் புதிதாய் இருக்கும். முதுமை ஒவ்வொரு நாளும் புதிதாய் பூக்கும்; பூவாய் சிரிக்கும். ஒவ்வொரு நாளும் முதுமை இளமை தான். முதுமை அது புதுமை! அந்த முதுமை பற்றிய ஒரு கவிதை இதோ...
முதுமை அது புதுமை
நரைமுடி என்பது
காலம் கொடுக்கும்
மணிமுடி அன்றோ
மானிடா சொல்லு? - அதை
கருப்புச் சாயமிட்டு
மறைத்து நீயும்
மாயம் செய்வதால்
என்ன மாறிடும் சொல்லு?
முதுமை என்பது புதுமை
அது
கருமை நிறமதை
வெண்மையாய் மாற்றிட
இயற்கைத் தரும்
ஒரு புது மை,
உணராமல் ஏன் இந்தக்
கருமை பூசிடும் சிறுமை?
இறகு உதிர்ந்தால்
பறவைகள் என்றும்
வருந்துவதில்லையே,
இலைகிளை விழுந்தால்
மரங்களோ செடிகளோ
மருளுவதில்லையே,
ஒரு சில முடிகள்
உதிர்ந்தால் மட்டும்,
ஒரு சில மனிதர்கள்
வாழ்வு முடிந்திடுமோ என்று
கலங்குவதேனோ?
மானிடர் ஒன்றும் - கவரி
மானினம் அல்லவே!
இயற்கைப் படைத்த
ஒவ்வொன்றிற்கும்
இத்தனைக் காலம்
என்றொரு கணக்கிருக்கு,
இயற்கைப் போட்ட
கணக்கினை மீறி
இடையினில்
மாற்றிட நினைப்பது
மனிதனின்
ஆணவச் செருக்கு!
முகத்தில் தோன்றும்
சுருக்கங்கள் சொல்லும்
முழுமையான வாழ்க்கை என்று,
அகத்தில் சுருக்கம்
இல்லையென்றால்
புன்னகைத்துக் காட்டும்
உன்முகமே உண்மை என்று!
ஒரு பொய்யை நீயும்
மூடி மறைக்கலாம்
உண்மை ஒரு நாள்
வெளிப்பட்டே தீரும்,
ஒப்பனை செய்து
உன்னையும் நீ
மூடி மறைக்கலாம்
உன் மெய்யே ஒரு நாள்
உண்மையைக் கூறும்!
வயது என்பது
எண்ணிக்கை மட்டுமே
வாழ்க்கைக்கும் வயதிற்கும்
சம்பந்தமில்லை,
நடுத்தர வயதை அடைந்துவிட்டால்
நடுக்கமும் கலக்கமும் வருவது ஏன்?
அறுபது வயதைக் கடந்துவிட்டால்
ஐயோ என்று அஞ்சுவது ஏன்?
எண்பது நூறைத் தாண்டியும்
வாழ்பவர் வாழ்ந்தவர் உண்டு
என்பதைத் தெரிந்துக்கொண்டு
இன்பமாய் வாழ்ந்திடப் பழகு!
வயது கூடினால் கூடட்டுமே
வயது தருவதேன் துயர் உனக்கு?
வயது கூடினால் பயம் எதுக்கு?
வயது கூடினால் உயர்விருக்கு!
வயதும் பெயரும் மட்டுமே
எப்பொழுதும் உன்னுடன் இருக்கும்,
செயலும் சொல்லும் சிறப்புறுமே
எப்பவும் முதுமைக்கு மதிப் பிருக்கு!
வயது கூடினால் அனுபவம் கூடும்
அது தான் உனக்கு ஆதாயம்
பயந்து வாழ்வதால் நிம்மதி போகும்
அனுபவமே வாழ்வின் பொருள் ஆதாரம்!
பூக்கள் முதிர்ந்தால் காய் ஆகும்
காய்கள் முதிர்ந்தால் கனி ஆகும்
காயைவிட கனி சுவை தானே
தூயவாழ்வில் முதுமையும் அது போலே!
தூய்மையான மனம் கொண்டு
வாய்மையும் நேர்மையும் துணை கொண்டு
வாழ்ந்தால் நிம்மதி உனக்குண்டு
வாழ்வே வெகுமதி தான் என்றும்!
வானவில்லின் வண்ணம் போல
இளமைக் கொண்ட அழகு
காணும் போதே மறைந்து விடும் - அந்த
எண்ணம் விட்டு விலகு!
மழலை அழகு இளமை அழகு
வளரும் பிறை தேய்வதைப் போல
முதுமைக் கூட அழகு தான்
முதுமை கூட அழகு தான்!
மலரும் மலரைப் போல இளமை
உலரும் காலம் உண்டு உணரு - நரம்பு
தளரும் காலம் அன்று உணரும்
இடையில் வந்தது இளமை என்று
இறுதிவரையில் இருப்பது முதுமை என்றும்!
பாதியில் சென்றிடும் இளமைக்கேன்
பாரினில் இத்தனைப் பரிதவிப்பு?
ஆதியில் இருந்து நிலைத்த துண்டா
சீரிய இளமையின் அணிவகுப்பு?
தோலும் சதையும் நாளும் மாறும்
தோளின் வலிமை குறையும் பாரு
தோழனாய் ஆகட்டும் உடலுக்கு மனது
தோற்றிடும் இளமை; முதுமையே வெல்லும்!
தோலெனும் ஆடையில் சுருக்கங்கள் அழகு - அவை
வாழ்வெனும் பாடத்தின் அனுபவ வரிகள்
வாழ்வினில் முதுமை இயற்கை நிகழ்வு - ஏற்று
வாழ்ந்திடு மகிழ்ந்து மறைந்திடும் வலிகள்!
மாறாதிருப்பது மாற்றமும் முதுமையும் - நொடி
தோறும் பார் பல மாற்றங்கள் நிகழுது
வாராதிருக்குமா வாழ்வினில் முதுமையும் - எதிர்
பாரா விருந்தினர் போலவே வருமது!
எத்தனைக் காலம் வாழ்கிறாய்
என்பது என்றும் முக்கியமில்லை
எப்படி அதை வாழ்கின்றாய்
என்பதை மட்டுமே
எப்பவும் உந்தன் நினைவினில் வை!
முதுமை என்பது செழுமை
முதுமை என்பது பெருமை
முதுமை என்பது முழுமை
முதுமை என்றுமே புதுமை!
முதுமைப் பழகு! முதுமையும் அழகு!
முதுமையை நேசிப்போம்
இராம்ஸ் முத்துக்குமரன்.