தை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பொங்கலும் உழவர்களும் தான். உழவர்கள் இல்லாமல் உலகில் உணவு கிடையாது. இப்பொழுதுள்ள தலைமுறையினர் உழவைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். பசிக்குதா, ஸ்விகியிலும் ஜொமட்டொவிலும் ஆர்டர் பண்ணினா போச்சு, இல்லையென்றால் ஏதாவது ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டால் ஆச்சு என்று தான் இருக்கிறார்கள். அந்த உணவு நம் தட்டிற்கு வர உழைக்கின்ற பலரில், மிகவும் முக்கியமானவர்கள் நம் உழவர்கள்.
உழவுத்தொழில் தான் நம் நாட்டின் முக்கியமான அவசியமான ஒன்று, ஆனால் அன்றிலிருந்து இன்று வரை உழவர்கள் சிரமப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். சில சமயம் இயற்கை வஞ்சிக்கிறது, பல சமயம் செயற்கையாக வஞ்ச்சிக்கப்படுகிறார்கள். நாட்டின் ஏதவாது ஒரு இடத்தில் உழவர்களின் போராட்டங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அவ்வளவு ஏன், சில நாட்களுக்கு முன், நம் தமிழக உழவர்கள் மதுரையில் போராட்டம் நடத்தினார்கள். டங்ஸ்டன் சுரங்கத்திற்காக விளை நிலத்தை அபகரிக்க கூடாது என்று பல கிராம மக்கள் ஒன்று கூடிப் போராடியதைப் பார்த்தோம். உழவர்களை நாம் போற்ற வேண்டும், மதிக்க வேண்டும். உழவர்கள் இல்லையென்றால் நாம் இல்லை. உழவையும் உழவர்களையும், உழவிற்கு உதவிய அனைத்தையும் கொண்டாட தான் நம் முன்னோர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடினார்கள். இயற்கைக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லும் திருநாள் இது.
இத் தை திரு நாளில் நம் உழவர்களின் உழைப்பைப் போற்றி ஒரு கவிதை....
தைப் பிறக்குது....
தைப் பிறக்குது தைப் பிறக்குது
தரணி மகிழத் தைப் பிறக்குது
தைப் பிறந்தால் வழிப் பிறக்கும்
தமிழர் வாழ்வில் ஒளிப் பிறக்கும்
தை மகளை வரவேற்போம்
தரச் சொல்லி நலமனைத்தும்!
வையகத்து மானிடர்க்கு
உய்ய வுணவு உண்பதற்கு
மெய்வருத்தி உழைக்கும் உழவர்களை
கையெடுத்து தொழுதிடுவோம்
தைப் பிறக்கும் வேளையிலே!
வீட்டுக்குள்ளே செருப்பணிந்து
நடக்கும் பலர் இங்கு உண்டு
சேற்றுக்குள்ளே செருப்பு இன்றி
உழைக்கும் உழவுத் தொழிலாளிகளை
போற்றிட வேண்டும் நாமும் இன்று!
உழவு இன்றி உலகம் இல்லை
உழவன் இன்றி உழவும் இல்லை - அவன்
உழுது உழுது பண்படும் நிலமே
உழவன் அழுதால் புண்படும் (மனித) குலமே - மறந்து
உழலும் மனது உணர்வது நலமே!
கடிய நிலம் திருத்தி; கதிரில் உடல் வருத்தி
கடின உடல் உழைப்பால்; பயிரைத் தினம் வளர்த்து
கடும் பசி போக்கிட நாளும்;
கடுந்தவமாய் உழைக்கும் உழவர்
கடமை சிறிது மறந்தால்; என்ன ஆகும் நிலைமை?
கண நேரம் சிந்தித்ததுண்டா?
கண்ணை திறக்க வைக்கட்டும் இத்தை!
உடல் உழைப்பால் உயர்ந்த உழவன்
விளைவிக்கும் எல்லாப் பொருளுக்கும்
இடையினில் புகுந்து ஒருவன்
விலை வைப்பது என்ன நியாயம்?
தைமகள் ஆற்றட்டும் காயம்!
விளைகின்ற பொருளுக்கு விலையின்றி
சேமிக்கும் நடைமுறை ஒழுங்கின்றி
வீணாய்ப் போகின்ற அவலம் கண்டு
பூமியும் வருந்துமே கவலைக் கொண்டு - நல்ல
மாற்றம் வரட்டும் இத்தைப் பிறந்து!
பசிப்போக்கும் உழவன் அன்னை யல்லவா?
அவனை மறப்பது விந்தை யல்லவா?
வறுமை வாட்டும் போதும்;
கடமை மறப்பதில்லை - அவன்
அருமை மறந்து இருந்தால்;
சிறுமை அல்லவா நமக்கு
பெருமைப் படுத்த அவனை;
வருதே தை மகிழ்ந்து!
தை தை என்று தைமகள் வந்து
தைரியம் தருவாள் தமிழர்க்கு இங்கு
தைத்திடக் கிழிசல்கள் மறைவதைப் போலே
தைலங்கள் வலிதனை போக்குமே அதுபோல
தைத்திங்கள் கவலையை மாற்றிடும் பாரீர்!
அறுவடைத் திருநாள் அவணியில் ஒருநாள்
அகிலம் முழுவதும் மகிழ்ந்திடும் அதனால்
பருவ மழையது பொய்த்து விட்டாலும்
பலவகை இன்னல்கள் தொடர்ந்து வந்தாலும்
உறுதியோடு உழைப்பவர் உவக்கும் பெருநாள்!
உழவுக்கு உறுதுணையாய் இருந்த
இயறகைக்கு நன்றி கூறிடும்
பழந் தமிழரின் பாரம்பரியமே
இதயம் மகிழந்துப் படைக்கும் பொங்கல்
வளம்நலம் தரட்டும் இத்தைத் திங்கள்!
எங்கும் பசுமையாய் மண்ணும்
தங்கமாய்த் தானியம் மின்னும்
சிங்கமாய் எருதும் எண்ணும்
பொங்குமே மகிழ்ச்சி உள்ளத்தில் - இனிதாய்
பொங்கட்டும் பொங்கல் இல்லத்தில்!
உழவையும் உழவரையும் போற்றுவோம்
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.