பசும்பட்டு அணியும் நிலமங்கை - பல
வண்ணத்தில் உடுத்திய எழில் கண்டேன்
வசப்படுத்தும் இயற்கையின் அரும் ஒப்பனை - எக்
கவிக்கும் எட்டாப் பெருங் கற்பனை!
ஓவியன் தீட்டிட முடியா ஓவியம் - ஓர்
ஆயிரம் இலைகள் தீட்டிய தெங்கனம்?
தூவியதா முகில் வண்ணம் கலந்து - அழகாய்
மாறியதே புவி கண்ணைக் கவர்ந்து!
அதிகாலை வேளை அந்தி மாலை
கதிரின் பேரொளி புரியும் மாயம்
உதிரும் இலைகளின் வண்ண மாலை
புதிதாய்த் தோன்றும் ஒவ்வொரு நாளும்!
மஞ்சள் பூசிய மங்கையராய் எழில்
கொஞ்சும் மரங்களின் இலைநயமே
நெஞ்சம் மயக்கிடும் பல நிறங்கள்
வஞ்சனை இல்லாக் கலைநயமே
வெளிர் பச்சை பச்சை அடர்பச்சை
வெளிர் மஞ்சள் மஞ்சள் அடர்மஞ்சள்
வெளிர் சிவப்பு சிவப்பு அடர்சிவப்பு
குளிர் வெயிலால் பெறும்நிறம் தனிச்சிறப்பு!
வானவில்லின் ஏழு வண்ணங்கள் தாண்டி
காணவைத்த இலைகளின் வண்ணங்கள் பாரீர்
தானம்தரும் வள்ளலாய் மரங்களும் மாறி
நாணவைக்கும் வழங்கி இலைகளை வாரி!
இலையுதிர் காலம் இயற்கையின் திருவிழா
இலைகள் உதிர்ந்து கொண்டாடும் ஒருவிழா
விளையாடிக் காற்றோடு ஊரெங்கும் வரும்உலா
வலைவீசிப் பிடித்திட எண்ணுமே பிறைநிலா!
இலைகளை மலராய் மாற்றிக் கவினுற
இயற்கை செய்யும் இந்த அதிசயம்
இருவிழிகள் போதுமா இரசித்து மகிழ்ந்திட
இதயம் முழுதும் பரவுதே பரவசம்!
நிறம் மாறிடும் இலைகொள்ளும் பல நிலையே
நிறம் மாறியே கொள்ளைக்கொள்ளும் பெரும் மலையே
இலைகள் உதிர்ந்து புரியும் புது கலையே
இதற்கில்லைப் புவியில் ஒரு விலையே!
இலைகள் உதிர்ந்த வெற்று மரங்களின்
கிளைகளில் அமர்ந்து இளைப்பாறிடப் பறவைகள்
இலையுதிர் காலத்தின் அழகிய அமைதி
இசையாகி காற்றுடன் தருமே நிம்மதி!
மண்ணை மூடிடும் விழுந்திடும் இலைகள்
வண்ணமாய் மாறிடும் வறண்ட நிலங்கள்
கண்ணை கவர்ந்திடும் இலைகளின் கலைகள்
எண்ணம் நிறைந்து அழகிலே தொலையும்!
கொள்ளைக் கொள்ளும் இவ் வழகு
கொஞ்சக் காலமே பின் மறையும்
தொல்லைத் தரும்குளிர் பனி வருமே - பிர
பஞ்சத்தின் நிலையற்ற நிலை புரியும்!
மெல்ல மெல்ல இலை உதிரும் - அது
மெல்ல மெல்ல நிலம் தொடுமே
மெல்ல மெல்ல மனம் உணரும் - எதுவும்
இல்லை இல்லை நிரந் தரமே!
காலச் சக்கரம் உருண் டோடும் - பட்ட
மரங்களும் பசுமையாய் மாறிவிடும் - இள
வேனிற் வசந்தம் வரும் மீண்டும் - புண்பட்ட
மனமே காயங்கள் விரைந் தாறும்!
மரவுச்சியில் மகுடமாய் இருந்திடும் இலைகள்
நிலமதை தொட்டதும் கால்களில் மிதிபடும்
ஒருவுச்சத்தில் இருப்பதால் பெருமை என்றில்லை
நிலைமை நொடிதனில் மாறிடும் வாழ்விது!
பேராசை வெறுப்பு கடுஞ்சின மெல்லாம்
காய்ந்த இலைகளாய் உதிர்ந்துப் போகட்டும்
பேரன்பு கருணை நற்குண மெல்லாம்
பூக்களாய்ப் பூத்து நறுமணம் வீசட்டும்!
உரமாய் மாறிடும் விழும் இலைகள்
மரத்தை விட்டு உதிர்ந் தாலும்
வரமாய் மாறும் நம் செயல்கள் - உதவி
கரமாய் இருந்தால் எந் நாளும்!
உதிரும்மரம் நாளைத் துளிர் விடுமே
உதிர்ந்தவை மீண்டும் தழைத் திடுமே
எதிர்வரும் துன்பமும் மறைந் திடுமே
புதிரல்ல வாழ்க்கையும் விளங் கிடுமே!
இலைகளின் கலைகளை இரசித்து
இராம்ஸ் முத்துக்குமரன்!