இளவேனில் - அது
காலங்களில்
இளமைக் காலம்,
பூமி புத்துணர்ச்சிப் பெறும்
புதுமைக் காலம்,
மரஞ்செடி கொடிகள் எல்லாம்
செழித்து வளரும்
வளமைக் காலம்,
பல வண்ண மலர்கள்
பூத்துக் காட்டிடும்
பதுமைக் கோலம்!
இது பூக்கள்
பூத்துக் குலுங்கும்
புன்னகைத் திருவிழா,
மனம் மயக்கும் மலர்களின்
மணம் பரப்பும்
கண்கவர் பெருவிழா!
பட்ட மரங்கள் எல்லாம்
துளிர் விடும்,
பட்டத் துயரிலிருந்து
மெல்ல வெளி வரும்,
பசுமை எங்கும்
மண்ணை மறைக்கும் - பல
வண்ண மலர்களின் அழகு
கண்ணைப் பறிக்கும்!
இது
சுகம் தரும் வசந்தம்
மனதை
வசப்படுத்தும் சுகந்தம்!
வாசம் தரும்
மலர்களின் சகவாசம்,
சுவாசம் பெறும்
மலர்களால் சுகவாசம்!
சில்வண்டு கூட
கீதம் பாடும்,
கள்ளுண்டு மயங்கி
பூவைத் தேடும்,
நுகர்ந்து நுகர்ந்து
உண்டு மகிழும்
மகர்ந்த சேர்க்கை
அங்கு நிகழும்!
ஒவ்வொரு நாளும்
வைகறை
சின்னதோர் வசந்தம்,
வசந்த காலத்தின்
கைகறையோ
பெரியதோர் ஆனந்தம்!
சிறகு விரித்து மகிழ்ந்துப்
பறவைகள் பறக்கும்,
பறவைகள் மட்டுமல்ல
இறக்கை கட்டி மகிழ்ந்து
மனதும் பறக்கும்,
புதிது புதிதாய்
மொட்டுகள் திறக்கும்,
இனிக்க இனிக்க - அதி(ல்)
மதுரம் சுரக்கும்,
பருகி மயங்கி வண்டினம்
தம்மை மறக்கும்,
இயற்கையை
இரசிக்க இரசிக்க
புது இன்பம் பிறக்கும்,
இளவேனிற் காலம்
தருமே கிறக்கம் - அதை
இரசிக்க மறந்து
இன்னுமா உறக்கம்?
இளவேனிற் காலச்
சூரியன் கூட
இதமாய் இருக்கும்,
இதயம் மகிழும் வண்ணம்
சற்று
மிதமாய் இருக்கும்!
தென்றலாய்க் காற்றும்
தேகம் வருடும்,
தெவிட்டாத இன்பம் தந்து
இளவேனிற் காலம்
இதயம் திருடும்
கோடிக் கோடி
மகரந்தத் துகள்கள் சுமந்து
காற்றும் கனக்கும்,
தேடித் தேடி
திக்கெட்டும் செல்லும் - அந்த
காற்றும் மணக்கும்!
இளவேனிற் காலம்
இயற்கைத் தீட்டும் - ஈடு
இணையில்லா
வண்ணச் சித்திரம்,
அது
இமைக்க மறந்து
விழிகள்
கண்டு களிக்க
உண்டு இரசிக்க
இயற்கை நமக்கு தந்த
இலவச அன்னச் சத்திரம்!
வசந்த காலம்
கண்ணுக்கு
அறுசுவை விருந்து.
கசந்த
கவலைக்களுக்கெல்லாம்
இளவேனிலே
இனிக்கும் மருந்து!
வருடமதை -
ஒரு நாள் என்று
வைத்துக் கொண்டால்,
வைகறை தான் அதன்
இளவேனிற் காலமா?
இளவேனில் முழுவதும்
கேட்கும் பறவைகளின்
இனிய ஓசை தான்
மயக்கும் பூபாளமா?
உதிரும் மலர்களின்
இதழ்கள் போடுதே
புவியெங்கும்
அழகியப் பூக்கோலம்,
இளவேனிற் காலத்தில்
இளங்கன்னியைப் போல
பேரெழிலுடன் திகழுதே
அழகாய்ப் பூகோளம்!
நதியோரம் இருக்கும் மரங்கள்
கரையோரம் இறைத்த பூக்கள்
நதி நீரில் மிதந்து செல்லும் - எழில்
மதி போல மனதை வெல்லும்!
அதிகாலை மட்டுமல்ல
நடுநிசி வேளையோ?
நன்பகல் மாலையோ?
இளவேனிற் காலத்தில்
எக்காலமும்
இயற்கை எழிலின்
எக்காளமே!
வேணு கானம் இனிமை - இள
வேனிற் காலமும் இனிமை,
அதை
மனது முழுதாய் இரசிக்கும்
மகிழ்ச்சி அங்கு வசிக்கும்
விழிகள் அழகைப் புசிக்கும்
பிறகு எப்படி பசிக்கும்?
பழையன கழிதலாய்
இலையெல்லாம் இழந்திடும்,
புதியன புகுதலாய்
பூவெல்லாம் மலர்ந்திடும்,
இயற்கை நடத்திடும் - இந்த
போகியும் பொங்கலும்
இரசித்து மகிழுந்திடும் - அந்த
ஞாயிறும் திங்களும்!
இந்த
இளவேனிலை இரசிக்க
இருவிழிப் போதுமா?
இரவல் விழிகள்
இன்னும் சில வேண்டுமே,
இறக்கை விரித்து
இளவானிலே பறந்து
இரசித்திடத் தோன்றுமே
இளவேனிலை வியந்து,
இனிய நிலவே உனையென்றும்
இரசித்து மகிழ்பவன் நானன்றோ?
இளைப்பாறி இரசிக்க இளவேனிலை
இடமொன்று தருவாயோ நீயின்று?
கோடையின் கொடும்
வெப்பத்தைத் தாங்கி,
ஆடி காற்றையும் - ஐப்பசி
அடைமழையையும்
அடுத்தடுத்து
அசராமல் தாங்கி,
மார்கழி தையில் - கடும்
குளிரையும் தாங்கி,
இலையுதிர் காலத்தில்
இலைகளை யெல்லாம் இழந்து
இன்னல் கொண்டு
வாடிய பின்னும்,
வசந்தம் வரும்
வளமை தரும் - என
நம்பிய மரங்களின்
பொறுமைக்குப் பரிசு தான்
பெருமைக்குரிய இவ்விள
வேனிற் காலமோ?
யானை வரும் பின்னே - மணி
யோசை வரும் முன்னே
பூக்கள் மலரும் முன்னே
இலைகள் வரும் பின்னே,
இதுவும் இயற்கையின்
ஒரு வகை அதிசயம்,
இளவேனிற் காலம் - நில
மங்கையின் அபிநயம்!
வண்ண வண்ண
மலர்கள் எத்தனை?
எண்ண எண்ண
எண்கள் பத்தலை,
ஒன்றா இரண்டா - பல்
லாயிரம் நிறங்கள்,
அவற்றை
ஒன்றாய் காண்பதே
கண்களின் வரங்கள்!
புல்லும் பூக்குமோ
இளவேனிற் காலத்தில்?
புல்லின் நுனியினில்
பனித்துளிப் பூக்குதே - கருங்
கல்லும் பூக்குமோ
இளவேனிற் காலத்தில்?
உதிர்ந்த
மலர்களின் இதழ்கள் - வெறும்
கல்லையும் கூட
கலைநயம் ஆக்குதே!
இளவேனிற் காலம்
வைகறை நேரம்
புள்ளினம் பாடும்
இன்னிசை இராகம்,
அதிகாலை எழுந்து
அமைதியாய்க் கேட்டால்
கரைந்து ஓடும்
மனதினில் சோகம்!
வசந்த காலம்
வானவில் போல
கொஞ்ச காலமே- பின்
மாறிடும் இங்கு,
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென
அழகிய வேனிலும்
அளவுடன் தங்குமே,
இன்பம் கூட
அளவு கூடினால்
இன்னலாய் மாறும் - என
இளவேனில் கூறுதோ?
இளவேனிற் காலம்
சொல்லும் பாடம்
இழந்ததை எண்ணி
வருந்தாதே,
இழப்புக் கூட
பலம்பெற வைத்திடும்
இதயத்தில்
நம்பிக்கை இழக்காதே,
பொறுமையாய் இருந்திடு
கடமையைப் புரிந்திடு
தக்க நேரம் வரும்
எல்லாம் கைகூடும்,
இயற்கையின் இரகசியம்
அறிந்துக்கொள் அவசியம்
இயல்பை மறக்காமல்
வெற்றி நடை போடு!
இளவேனிற் காலம்
நாளைப் போகும்,
முதுவேனிற் காலம்
என்றே ஆகும் - பின்
இலைகள் உதிர்ந்து
மரங்கள் வாடும்
காலச் சக்கரம் மட்டும்
நிற்காது ஓடும்!
வாழ்க்கையே சுழற்சி தான் - அதில்
வாழ்வதே மகிழ்ச்சி தான்,
நிலையில்லா இவ்வாழ்வினில்
நிலையானது இச்சுழற்சி தான்,
இருப்பது இல்லாமல் போகும்
இழந்தது இன்னொன்றாய் மாறும்,
இதை
உணர்ந்து வாழ்ந்திடும் போது
வேறு நிம்மதி அதை விட ஏது?
புள்ளினங்களின்
கேட்கத் தெவிட்டாத
இன்னிசைக் கச்சேரி,
கண்களைப் பறிக்கும்
சின்ன சின்ன மலர்களின்
வண்ண வண்ணத் தோரணம்,
தழுவிச் செல்லும் காற்று
தலையசைத்து ஆடும் நாற்று,
வாசல் வரை
வாசம் சுமந்து
தென்றல் வந்து மகிழ்விக்கும்,
பாசம் கொண்டு
பரிதி கூட
வெப்பம் குறைத்து
இளைப்பாறும்,
அலைகின்ற மேகமும்
தொலைந்து போகாமல்
தொலைவில் நின்று
நிலம் பார்க்கும்,
மழை பெய்தால் கூட - பூ
மழையாய்ப் பொழிந்து
மிதமாய் நனைத்து
நலம் சேர்க்கும்,
இவற்றை இரசித்திட
அனைவருக்கும்
அனுமதி என்றும் இலவசம்
இரசனை கொண்டோர்
அனைவருக்கும் - இளவேனில்
தந்திடும் பரவசம்!
இயற்கை நடத்தும்
இந்த வசந்த திருவிழா,
வருடம் தோறும்
நடக்கும்
உசந்த ஒருவிழா!
இளவேனிற் பொழுதில்,
இயற்கை
இரசித்து இரசித்துக்
கவிதை எழுதும்,
நிலவேம்பும் கூட
இனிக்கும் காலம் இது,
இந்த
வசந்தம் வேண்டும்
வருடம் முழுதும்!
இளவேனிலை இரசித்து
இராம்ஸ் முத்துக்குமரன்.