Chidhambaram Natarajar Temple

இயற்கை

Sunrise in the beach
Featured

திரைகடல் கரைதனில்...

வானம் விழித்திடும் வைகறையில்
காணும் காட்சிகள் இரம்மியமே - நல்லக்
காற்று வீசும் கடற்கரையில்
காலாற நடக்கையில் பரவசமே!

ஓடி வந்திடும் கடல் அலைகள்
தாவி அணைத்திடும் அதன் கரங்கள்
நாடி நரம்பினில் சிலிர்ப்பூட்டும் - அது
தாயின் அன்பினை நினைவூட்டும்!

துயில் கலைந்து எழுந்திடும் பூலோகம்
முகில் கலைந்து சிவந்திடும் கீழ்வானம்
அலை மகிழ்ந்துப் போட்டிடும் ஒருதாளம்
அது இசைத்துக் காட்டிடும் பூபாளம்!ThiraiKadal 1

வானம் எங்கும் வண்ணச் சித்திரம்
காணும் போதே கண்கள் சொக்கிடும்
நீலக்கடலின் நிறங்கள் மாறிடும்
ஓவியன் யாரென விழிகள் தேடிடும்!

தூரத்தில் மஞ்சள் மொட்டு அரும்பிடும்
மேகம் மறைத்துப் போக்குக் காட்டிடும் - பல்
லாயிர விழிகள் பார்க்கத் திரும்பிடும்
ஆழ்க்கடல் நடுவினில் தாமரைப் பூத்திடும்!

ஆறு வருடம் கழித்து
அவுட்டர் பேங்க்ஸ் (Outer Banks) வந்த
எம்மை வரவேற்க
அலைகள்,
ஆசையுடன் ஓடி வந்தன,
ஆர்ப்பரித்து அரவணைத்து
நலமா என்றன,
எம் கால்களைத் தழுவி
எம் காதலில் உருகி
களிப்புக் கொண்டன,
எம் கால்த்தடம் காண
காலடி மண்ணையும்
அவை
கவர்ந்துச் சென்றன.

கதிரவன் உதிக்கும் முன்னர்
கடலில் கருமை நிறத்தைக் கண்டேன்
கதிரவன் உதித்தப் பின்னர்
கடலின் அருமை நிறத்தைக் கண்டேன்!

நீலக் கடலும் நிறம் மாறும்
ஆழக் கடலும் அழகாகும்
கீழக் கடலின் செந்தூரம்
மேலக் கடலில் போய்ச்சேரும்!ThiraiKadal 2

மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையில் கடலில்
ஒரு கோட்டைக் கண்டேனே,
கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
மேகம் கட்டிய
ஆகாயக் கோட்டையும் கண்டேனே!

சரி பாதி சமமாய்ப் பிரித்த
அந்தத் துல்லியம் கண்டு
வியப்புக் கொண்டேனே,
மாயக் கோட்டின் நடுவில்
மலர்ந்த அழகிய மஞ்சள்
மலரைக் கண்டேனே,

இமைக்க மறந்து
காணும் போதே
அம்மலரும் கனியாய்
கனிந்திடக் கண்டேனே,
அக்கனியைப் பறிக்க
அக்கினிப் பழத்தை விழுங்கிய
அனுமன் போல
ஆவலும் கொண்டேனே!

நுரையாடை அணிந்த
அலைப் பெண்ணே - கடற்
கரையோரம் அழைத்தாயோ
நீயும் என்னை?
விளையாட வந்தேனே
கால் நனைத்து,
இழையோடும் நீரலையில்
மனம் குதுகலித்து!ThiraiKadal 3

1,2,3,5,8 என முறை கொண்டு
வருகின்ற அந்த
அலைவரிசைக் கணக்கு,
நினைவூட்டியது,
ரிஷி பிங்கலா,
பிபோனாக்கி (Fibonacci)
ஆகியோரின்
கணிதத்தை எனக்கு,

கடற்கரையில் தெரியும்
அலைகளின் கிறுக்கல்கள்
கவிதை ஆனதோ?
கடலும் கூட மனிதன் போல
கற்பனை மிகுந்து
கவிஞன் ஆனதோ?

கடற்கரை மணலில்
கடலலை எழுதிய
கவிதை வரிகள் அற்புதம்,
ஆழிப் பேரலை
ஆசையாய் எழுதுதே
ஆயிரம் கவிதைகள் அனுதினம்,
எழுத்துகள் இல்லா
வரிகள் அவை
படித்து மகிழ்ந்தது
விழிகள் அதை!ThiraiKadal Kavithaigal

எத்தனை எத்தனை
அழகியச் சிப்பிகள்
கடற்கரை எங்கும்?
எத்தனைத் தொலைவு
கடந்து வந்ததோ - அவை
அனைத்தும் இங்கு?
அத்தனைச் சிப்பிகளுக்கும்
நிச்சயம்
ஒரு கதையிருக்குமோ?
கரை வந்து சேர்ந்த அதன்
கதையைக் கேட்டால்
நெஞ்சம் பதைபதைக்குமோ?

கடக நண்டு - கரை
கடக்கும் அழகைக் கண்டு
விழிகள் இரண்டு - இரசிக்கும்
உவகைக் கொண்டு!

கடற்கரை மணலில்
துளைகள் இட்டு
மறையுதே நொடியினில்
பார்வை விட்டு,
நீருக்கடியில் வாழும் ஒன்று
நிலத்துக்கடியிலும்
வாழ்வதைக் கண்டு,
காணும் விழிகள்
வியக்குதே இன்று,
இயற்கையின்
படைப்பினில் எத்தனை
அதிசயம் என்று!ThiraiKadal 5

கரை எங்கும் இரை தேடும்
பறவைக் கூட்டம்,
கரை ஒதுங்கும் நுரை தனிலே
அவற்றின் நாட்டம்,
விரைந்து வரும் துணிச்சலுடன்
இரையை உண்ண,
பறந்து விடும் இரைச்சலுடன்
உண்ட பின்னர்,

கடற்கரையில் தினந்தோறும்
காணும் காட்சி
கற்றுத்தரும் மனிதர்கட்கு
உழைப்பின் மாட்சி
கவின்மிகு கடற்கரையில்
இயற்கை ஆட்சி
கவலை மறந்து இலகாகும்
மனமே சாட்சி!

வைகறையில் கடற்கரையில்
நடைபயிற்சி
கைகோர்த்து நடக்கையிலே
தரும் மகிழ்ச்சி,
மெய்சிலிர்க்கும் கால்களை
அலை நனைக்க
மெய்மறக்கும் தென்றல்வந்து
அரவணைக்க!

காத தூரம் நடந்துச் சென்றோம்
கதை பேசி
பாதம் மண்ணில் புதையப் புதைய
கை வீசி
கூதக் காற்றுத் தழுவிச் செல்லும்
மணம் வீசி
சேதமின்றி உள்ளிழுக்கும்
அதை நாசி,

கயல் துள்ளி மனம் அள்ளி
வரவேற்குமே,
செயல் துறந்து மெய் மறந்து
தரும் இன்பமே,
இயல் இசை நாடக மெல்லாம்
தினம் நடக்குமே
புயல் இல்லாக் கடற்கரை
ஒரு சொர்க்கமே!ThiraiKadal fullmoon

பௌர்ணமி இரவில் கடற்கரை மணலில்
பால் நிலவை இரசித்தேன்
மௌனமாய் நிலவும் வானிலே உலவும்
பார்த்துப் பார்த்துச் சுகித்தேன்
தொய்வின்றி அலைகள் தொடரும் கலையை
அறிந்திட கால்களை நனைத்தேன்
வைகறை வரையில் திரைக்கடல் கரையில்
இருந்திட நானும் நினைத்தேன்!

கடலதன் முதுகினில்
கயலென நீந்திடும்
உடலது பெற்றிட வேண்டும்.
திரைகடல் கரைதனில்
தினம்விடு முறையினில்
திளைத்திடும் இன்பம் வேண்டும்!

 

கடற்கரையில் எனை மறந்து
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Solar Eclipse

சூரிய கிரகணம்

Tsunami, 26 Dec 2004

சுனாமி (26, டிசம்பர், 2004)

Water bodies names in Tamil

நீர் நிலைகள்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net