(ஏப்ரல் 8, 2024 மதியம் 2 மணியிலிருந்து 4.30 மணிவரை)
கவிஞர்களுக்குத் தான்
நிலவின் மீது தீரா காதல் உண்டு,
கதிரவனுக்கும் நிலவின் மீது
காதல் தோன்றியதா இன்று?
நிலவு மயங்கி சூரியனின்
அருகில் சென்றதா?
இல்லை
நிலவின் அழகில் மயங்கி
அருகில் சூரியன்
அழைத்துக்கொண்டதா?
இன்று
கதிரவனே நிலவாய் மாறிய - அரிய
காட்சிக் கண்டதே இவ்வுலகு
அது அடிக்கடி
கண்கள் காணக்கிடைகாத அதிசய
சாட்சியான ஓர் அழகு!
சுற்றும் பூமி
சூரியனைச் சுற்ற
இடையில் நிலவு
மறைத்து நின்றது,
முற்றும் இரவாய்
பகலை மாற்றி - அன்ன
நடையில் நளினமாய்
நகர்ந்து சென்றது!
வளர்பிறை தேய்பிறை எல்லாம்
நிலவுக்குத் தானே - இன்று
சூரியனே நிலவாய் மாறிய அதிசய
நிகழ்வைக் கண்டேனே!
முதலில்
பௌர்ணமியாய்த் தோன்றியது
பிறகு
தேய்பிறையாய்த் தேய்ந்தது
பின்பு முழுவதும் மறைந்து
அமாவாசையாய் ஆனது,
மெல்ல மெல்ல
வளர்பிறையாய் வளர்ந்து
மீண்டும்
பௌர்ணமியாய் ஒளிர்ந்தது
கதிரவனாய் திகழந்தது!
ஒரு குறிப்பிட்ட கணத்தில்
நிலவு சூரியன்
இரண்டும் இருந்தும்
இரண்டும் இல்லாமல் இருந்தது,
இருண்டும் புவியதை - கண்
கொட்டாமல் இரசித்தது,
இல்லாமல் இருப்பது தான்
அழகு என அது
சொல்லாமல் சொல்லியது!
நீண்ட நாட்கள் கழித்து
சந்தித்துக்கொள்ளும் காதலர்கள் போல்
தழுவிக்கொண்டனவா இரண்டும்?
உடனே ஊடல் கொண்டு
பிரிந்துவிட்டதா மீண்டும்?
சூரியன் ஒளிவாங்கி
பௌர்ணமியாய்த் திகழும்
முழு நிலவு,
சூரியன் ஒளிவாங்கி
அமாவாசையாய் ஆனது
பெரும் அழகு,
பகலும் இரவாய் ஆனது
சில நொடி,
சின்ன இரவு
பகலாய் ஆனது மறுபடி!
அமாவாசை நிலவைச் சுற்றியொரு
ஒளி வட்டம் தெரிந்தது
நமை இரசிக்க வைக்க
இயற்கைத் தீட்டிய அந்த
எழில் திட்டம் புரிந்தது!
இருண்ட வானில்
அழகாய்த் தெரிந்தது ஓர்
ஒளி வளையம்,
ஆயிரம் கரம் கொண்ட
ஆதவனுக்கு
ஒரு கரத்தில் மட்டும்
யார் அணிவித்தது ஒரு
தங்க வளையல்?
முகில்கள் கதிரவனை மறைப்பது
அன்றாடம் பார் நிகழும்
முழுமதியே கதிரவனை மறைப்பது
என்றாவது தான் நிகழும்!
வானில்
வைரக்கல் மோதிரம்
தெரிந்தது ஒரு சமயம்
வைராக்கியம் கொண்ட
கோபக்கனல் விழியாய்த்
தெரிந்தது மறு சமயம்,
நெருப்பு வளையமாய்த்
தெரிந்தது ஒரு சமயம்
கருப்பு கலயமாய்த்
தெரிந்தது மறு சமயம்,
யாரோ கடித்து விட்ட
ரொட்டித் துண்டாய்த்
தெரிந்தது ஒரு சமயம்
எவரோ வெட்டி எடுத்து வைத்த
கட்டித் தங்கமாய்
தெரிந்தது மறு சமயம்!
சூரிய கிரகணம்,
வானில் நடக்கும் ஓர்
மாய கேளிக்கை - இது
வானமே நடத்தும் ஓர்
வான வேடிக்கை!
கண்டு இரசித்தோம் இன்று
மீண்டும்
கண்டு இரசிக்க காத்திருப்போம்
2044 ஆண்டு வரை!
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.