(அப்பா - மே 11, 2023)
வாசிக்க நேரமில்லையா? ஒலி வடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்
இது
தந்தையை இழந்த ஒரு
தனயனின்
கவிதை அஞ்சலி,
சிந்தை கலங்கி கனக்கும்
ஒரு மனதின்
மௌன பெருவலி!
தந்தையை இழந்தவர்களுக்கு தான்
இந்த வலி தெரியும்
அவர்களுக்கு மட்டும் தான்
அந்த வலியின்
மொழி புரியும்!
இது வரை தெரியாது என் தந்தைக்கு
நான் கவிதை எழுதுவேன் என்று,
இன்று வரை தெரியாது எனக்கு,
என் தந்தைக்கு
நான் கவிதை எழுதுவேன் என்று!
கவனமாக வாசிக்கவும்,
இது
கண்ணீரால் எழுதியது
சற்று ஈரமாக இருக்கும்,
பொறுமையாக வாசிக்கவும்,
அந்த
கண்ணீர் காயும் வரை
சற்று நீளமாக இருக்கும்!
இதோ...
மறைந்த சந்திரன்
கண்ணாடி அணிந்து
கம்பீரமாய் காட்சி தந்த
எந்தை இன்று
கண்ணாடிப் பெட்டிக்குள்
கண்மூடிக் கிடக்கும்
காட்சி கண்டு
விழியிரண்டில் கண்ணீராய்
செந்நீர் வழிகிறது
சொல்லிட மொழியின்றி
வேல் பாய்ந்த நெஞ்சாய்
உள்ளம் வலிக்கிறது!
பனிக்காலம் வந்தாலே
"என்ன இப்படி குளிர்கிறதே" என்று
குறைப்பட்டுக் கொள்வீர்களே அப்பா,
இன்று எப்படி இந்த
பனிக்கட்டிப் பெட்டிக்குள்
இத்தனை மணித்துளிகள்
படுத்து இருந்தீர்கள்?
பணி ஓய்வுக்குப்பின்னும்,
ஓய்வின்றி உழைத்தீர்களே அப்பா,
நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்
என்று தானே நினைத்தோம்,
இப்படியொரு நீண்ட ஓய்வு என்று
கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லையே?
எங்கள் வருகைக்காக
எப்பொழுதும் கால்கடுக்க
காத்திருப்பீர்களே அப்பா,
காத்திருந்து காத்திருந்து
கால்வலித்துவிட்டதா?
படுத்துக்கொண்டுக் காத்திருந்தீர்களே இன்று,
காக்கவைத்து ஏமாற்றிவிட்ட
கயவன் ஆகிவிட்டேனே!
தொலைதூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் பேசுவோமே அப்பா,
இத்தனை பக்கத்தில் இருந்தும் ஏன்
பேசாமல் இருக்கிறீர்கள்?
இத்தனை துக்கத்தில் அழுதும் ஏன்
பாராமல் இருக்கிறீர்கள்?
உங்கள் இடக்கையில்
கட்டியிருக்கும் கடிகாரத்தின்
நொடிமுள் துடிக்கும் ஓசை கேட்கிறதே அப்பா,
இடப்பக்க இதயத்துடிப்பின்
ஓசை மட்டும் ஏன் இன்று
கேட்காமல் போய்விட்டது?
அருவியாய் கொட்டும்
உங்கள் பேச்சு
அமைதியாய் எப்படி ஆச்சு?
சீரான மெல்லிய மூச்சு
சொல்லாமல் எங்கே போச்சு?
நீங்கள் தவறிவிட்டீர்கள் என்றாரகள்.
அது தவறு.
தவறு செய்யாதவர் அல்லவா நீங்கள்,
இறைவன் அழைத்துக்கொண்டான் என்பதே சரி.
இறைவன்
உங்களை அழைத்துக்கொண்டு விட்டான்,
எங்களை
அழ வைத்து விட்டான்!
இறப்பதற்கு முன்
இரு வருடங்கள்
நீங்கள் பட்ட இன்னல்கள்
கொஞ்ச நஞ்சமல்ல,
அதை கண்டு வருந்தாத
ஒரு நெஞ்சம் இங்கு இல்லை,
எந்த கடவுள் கொடுத்தது
இந்த தண்டனை,
எவர் என்றாலும்
செய்வேன் அவர்களை
நான் நிந்தனை!
வயோதிகம் உங்களிடம்
வன்முறையைக் காட்டிவிட்டது,
வைத்தியம் உங்களிடம்
தோற்றுப்போய் ஓடிவிட்டது.
இறைவனுக்கு இதயம்
மரத்துப் போய்விட்டதோ?
இதுபோன்ற இனியொருவர்
இன்னல்பட வேண்டாமே!
தினசரி,
தினசரி படித்து தொடங்குமே
உங்கள் நாட்கள்,
இனி மேல்
தினசரி அந்த
தினசரி சொல்லுமே
நீங்கள் இல்லாத இந்த செய்தியை!
உங்கள் கைப்பிடித்து
நடக்க வைத்தீர்கள் என்னை,
எங்கள் கைப்பிடித்து
நடக்க வைத்து அடையாளம் காட்டியது
காலம் தன்னை,
அன்று என் கையை விட்டுவிடவில்லை நீங்கள்,
இன்று
உங்கள் கையை விட்டுவிட்டேனா நான்?
அறுபது ஆண்டு தாம்பத்யத்தின்
இணை பிரியாத துணையை
தவிக்க விட்டுச்செல்ல உங்களுக்கு
எப்படி மனது வந்தது?
நிழலாக இருந்த அன்னை
அழுதழுது கண்ணீர் வற்றி
மெழுகாக கரைந்து இன்று
துரும்பாக இளைத்தாரே - மனம்
இரும்பாக கனக்கிறதே.
விழுதுகள் எத்தனை இருந்தாலும
வேருக்கு என்றும் ஈடாகுமோ?
அம்மாவின் நெற்றிப்பொட்டு
யார் கண்ணை உறுத்தியது,
இன்று
வெற்று நெற்றி
எங்கள் மனதையல்லவா அறுக்கிறது?
வீட்டுத் திண்ணை
கேட்டது என்னை
எங்கே நீங்கள் என்று?
வாசலில் எப்பொழுதும்
சாமரம் வீசும் வேப்பமரக் காற்று,
இன்று வியர்க்க வைக்கிறதே,
பாடும் அந்த பறவைகள் கூட
பாட மறுத்து
ஏதோ வைகிறதே!
நீங்கள் வைத்த தென்னையில்
காய்க்கும்
இனிக்கும் இளநீர் இன்று
உப்புக்கரிக்கிறதே,
எங்கள் கண்ணீர் கலந்ததா?
இல்லை கண்ணீர் விடுகிறதா?
நீங்கள் நட்ட கொய்யா மரத்தில்
கொய்யா கனி கேட்கிறது
அய்யா இனி
என்னை என்று
கொய்வார் என்று?
நாள் தவறாமல்
பூஜைக்குப் பறீப்பீர்களே
செம்பருத்திப் பூக்கள்,
இன்றும் தோட்டத்தில்
பூத்துப்பூத்துக் காத்திருக்கிறதே
உங்களை எதிர்பார்த்து அந்த
செம்பருத்திச் செடிகள்!
நறுமணம் பரப்பும்
பவழ மல்லியோ
வெறுமனே நிற்குது
பூக்கள் இன்றி!
மனிதர்களுக்கு இல்லாத குணம்
விலங்குகளுக்கு உள்ளதா?
மூன்று நான்கு நாட்களாக
உண்ணாமல் குலைக்காமல் இருக்கிறதே
நம் டைகர் (நாய்)?
நீங்கள் நடைப்பயிற்சி செய்த சாலைகள்
வெறிச்சோடித் தெரிகிறது
பலர் நடக்கும் பொழுதும்,
நீங்கள் இல்லாத
வெறுமை கண்ணில் வந்து
‘சுளீர்’ என்று அடிக்கிறது,
வீட்டில் பலர் இருக்கும் பொழுதும்.
நீங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியில்,
நீங்கள் உட்கார்ந்து இருப்பது போலவே
தெரிகிறது இப்பொழுதும்,
நீங்கள் பயன்படுத்திய
ஒவ்வொரு பொருளும்
நினைவூட்டிக்கொண்டிருக்கிறது
உங்களை எப்பொழுதும்?
நேரம் தவறாமை
உங்கள் அடையாளம் – அதை
யாரும் மீறினால் வருமே
கடுங்கோபம் – இன்று அந்த கடி
காரம் பார்க்கையில்
வரும் சோகம் - எங்கள் மன
தோரம் தருகிறதே
பெரும் பாரம்!
கனிவும் கண்டிப்பும்
ஒருசேர கொண்டு
தவறென்றால் தண்டிக்கும்
குணமும் உண்டு
அக்கறைக் கொண்டினி
கண்டிக்க யார் உண்டு
ஐயகோ எமை இப்படி
தண்டித்ததார் இன்று?
ஊருக்கு வரும் பொழுதெல்லாம்,
ஊரை வலம் வரும் இதே சாலைகளில் - இறுதி
ஊர்வலத்தில் வருவோமென
என்றேனும்
அணுவளவும் நினைத்திருப்பேனா?
இந்நிகழ்வையினி
அனுதினமும் நினைத்திருப்பேனே!
கடுமைக் காட்டும் காலம்
கொடுமைக்காரனா?
இல்லை தன்
கடமை மறக்காத அந்த
காலன் கொடுமைக்காரனா?
இறுதி ஊர்வலத்தின் போது
ஒரு சிறு பள்ளத்தில்
வாகனம் இறங்கியதால்
சற்று நான் நிலை தடுமாறிய போது,
அந்த குலுங்கலில் அசைந்து திரும்பிய
உங்கள் முகம்,
என்னைப் பார்த்து
"பாத்துப்பா"
என்று சொன்னது போலல்லவா இருந்தது!
கொள்ளி வைக்கும் உரிமையைக் கூட
பறித்துக்கொண்டதே மின் மயானம்,
தள்ளி நிற்க சொல்லிவிட்டு
உள்ளிழுத்துக் கொண்டதே
கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களை!
நெருப்பு பொறுப்பெடுக்குமுன்
திருமுகம் கண்ட அந்த ஒரு நொடி
கல்வெட்டாய் நிற்கிறது மனதில்
கல்குன்றாய் கனக்கிறது தினமும்
கல்நெஞ்சையும் கரையவைக்கும் பொழுதது
கலங்கிய மனது கையறுநிலையில்
மெளனமாய் அழுதது!
கைகளில் சாம்பலாய் வந்து சேர்ந்தீர்
கரைத்தொட்டோடும் காவிரியில்
கண்முன்னே
கரைந்து போனீர்.
இயற்கையோடு இயற்கையாய் கலந்து விட்டீர்
இயற்கையும் இறைவனென உணர்த்தி விட்டீர்!
நீருக்கு நினைவாற்றல் உண்டாம்,- இனி
நீர் அருந்தும் பொழுதெல்லாம்
நீர் தான் நீர் என்று
நினைவூட்டுமே நீர் என்றும்!
திருநீறணியும் பொழுதெல்லாம்
நீர் தான் நீறென்று - சுட்டிக்
காட்டுமே திரு நீறென்றும்!
ஊரூராய் அயராது உழைத்தீர்- அவ்
வுழைப்பாலே மலையாக உயர்ந்தீர்
யார்வந்துக் கேட்டாலும் தவறாது கொடுத்தீர்
யமனுக்குமா உம்மைக் பரிசாகக் கொடுப்பீர்?
நல்லுள்ளம் படைத்த உங்களுக்கே
சொல்லொணா துன்பமெல்லாம் வந்ததென்றால்
நல்லதே எண்ணா எண்ணற்றோர்
அல்லல் என்னென்ன அடைவர்
யாரும் அறிவாரோ?
நீங்கள் இறுதி மூச்சு
விடும் பொழுது
உங்கள் அருகில்
இருக்க முடியாத பாவி தான் நான்,
இருப்பினும் - எந்தன்
இறுதி மூச்சு வரையில்
உறுதியாய் எனக்குள்
இருக்கும் சாமி தான் நீர்!
உங்கள் அருகில் அதிகம்
இல்லாமல் இருந்திருக்கலாம் நான்
ஆனால் என் அருகில் தான்
இருந்தீர்கள் எப்பொழுதும் நீங்கள்
என் அகத்தில் தான் இருப்பீர்கள்
எப்பொழுதும் நீங்கள்!
உங்களை,
அறியாமல் மனம்நோக செய்திருந்தால்
மன்னித்து விடுங்கள் என்னை
இனியும்
அறியாமை நான் கொண்டிருந்தால்
தண்டித்து விடுங்கள் என்னை!
பூஜை அறையில்
அப்பத்தா தாத்தா,
ஆயா தாத்தா
வரிசையில்,
உங்கள் படத்தைப்
பார்க்கும் துணிவு இல்லையே எங்களுக்கு!
எல்லோருக்கும் இந்நிலை வருமென
வாழும் வாழ்க்கை உணர்த்தினாலும்
பாழும் மனது உணர மறுக்கிறதே!
பற்று வைக்கும் எதுவும்
முற்று பெறும் ஒருநாள் என்பதை
சற்றும் உணராமல் – நிலை
யற்ற பொருட்களில்- இன்
புற்றிருக்கும் மனம்
இனியாவது
கற்றுக்கொள்ளுமா?
நீர்க்குமிழி வாழ்வின் நிஜம் உணர்ந்து –
ஞானம் சிறிதாவது
பெற்றுக் கொள்ளுமா?
வானில் மறைந்த அந்த சந்திரன்
மீண்டும் வருமே - எங்கள் வாழ்வில்
மறைந்த இராமச்சந்திரன்
மீண்டு வருவாரா?
மீண்டும் வருவாரா?
வற்றாத கண்ணீருடனும்
மறவா நினைவுகளுடனும்
இராம்ஸ் முத்துக்குமரன்.