(14-05-2024 - என் தாய் மறைந்தபோது எழுதியது)
அம்மா...
அன்று
நீங்கள் பாடிய தாலாட்டுக்
கேட்டுக் கண் மூடி உறங்கினேன்,
இன்று
நான் பாடும் தாலாட்டைக்
கேட்காமல் கண்மூடிய தேனோ?
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு....
நொடிநேரம் ஓயாத - உன்
கடிகார உழைப்புக்கு
விடிவு காலம் வந்ததென்று
நிம்மதியாய்க்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு...
உன்
விழிகளில் வழிந்த
கண்ணீர்த் துளிகள் - நீ பட்ட
வலிகளின் ஒலிகளாய்க்
கேட்டதே எமக்கு,
அந்த வலி தீர்க்க
இது தான் ஒரே வழியா?
இனிமேல் நிம்மதியாய்க்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு...
ஈரைந்து மாதங்கள்
பட்ட வலிகளைக் காட்டிலும்
இறுதியில்,
ஈரேழு நாட்கள்
பட்ட வலிகளே
கொடுமை என்று உணர்ந்தோமே,
இனியாவது வலியின்றி
நிம்மதியாய்க்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு...
எத்தனை இரவுகள்
எங்களுக்காக
உறக்கம் தொலைத்தாயோ?
எத்தனை வேளைகள்
எங்களுக்காகப்
பட்டினிக் கிடந்தாயோ?
எத்தனை இன்னல்கள்
எங்களுக்காக
நித்தம் பொறுத்தாயோ?
இத்தனை நாட்கள்
பட்டது போதும்
இனி ஒவ்வொரு நாளும்
நிம்மதியாய்க்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு...
அன்பின் உருவமான
எம் அன்னையே,
அன்பில் கட்டிப்போட்ட
எங்களை எல்லாம் விட்டுவிட்டு
முன்பின் தெரியாத
எங்கோ ஒரு உலகிற்குச்
திடீரென்று சென்றது ஏன்?
நல்லோர் உலகில்
அமைதியாய்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு...
அக்னி நட்சத்திரம்
சுட்டெரித்த
நெருப்பு நாளிலும்.,
அந்தி வேளையில்
உங்கள்
அந்திம யாத்திரையில்
எங்களைப் போல
வானமும் கண்ணீர் சிந்தியதா?
இல்லை,
உங்களை வரவேற்க அந்த
வானகம் பன்னீர்த் தூவியதா?
நிம்மதியாய்க்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு...
அப்பாவுடன்
அறுபது ஆண்டு காலம்
இணைபிரியாது வாழ்ந்தீர்,
ஆனால் ஒரு வருடம் கூட
பிரிந்து இருக்க முடியாமல்
விரைந்து சென்றுவிட்டாயோ?
இனி பிரிய வாய்ப்பில்லை
என
இதயம் மகிழ்ந்து
நிம்மதியாய்க்
கண்ணுறங்குத் தாயே
கண்ணுறங்கு....
கண்களில் கனிவு கொண்ட உமக்கு
கடவுள் கருணைக் காட்டவில்லை,
அதிர்ந்துப் பேசா உங்கள் குரல் - அந்த
தெய்வத்தின் செவிக்குக் கேட்கவில்லை,
இதயத்தில் சுரக்கும் அன்பு அதை
இறைவன் ஏனோ அறியவில்லை
தாயன்பிற்கு ஏங்கி அழைத்துச் சென்றானோ
ஆண்டவன் கணக்குப் புரியவில்லை
அன்னையே எனக்குப் புரியவில்லை!
பத்துத் திங்கள் பத்திரமாய்
பாதுகாத்துப் பெற்றாய்,
பள்ளிச் சென்று வரும் வரையில்
வீதிப் பார்த்து நின்றாய்,
கல்லூரி செல்லும் காலத்திலும்
தூங்காது காத்து இருந்தாய்,
அயல் நாடு சென்று வரும் வரையில்
ஏங்கி எமக்காகக் காத்துக் கிடந்தாய்,
பக்தனுக்கு காத்திருந்த
கடவுள் தானே நீயும் - உமைக்
காக்க வைத்து காக்க வைத்து
ஏய்த்து விட்ட பாவி தானே நானும்,
மருந்துகளுடன் மல்லுக்கட்டி
மன உறுதி பெற்றாய்,
அருந்தும் நீர் அளவு குறைந்தும்
அகம் நிறைந்து இருந்தாய்,
வருந்தும் வண்ணம் இறுதி நாட்கள்
இருந்தும் இன்னல் வென்றாய்,
சிறந்த எங்கள் தாயே
ஏன் எங்களை இன்று
வருந்த வைத்துச் சென்றாய்?
புழுப்பூச்சிக்கும் தீங்கிழைக்கா
இளகிய உள்ளம் கொண்டாய்,
உனக்கு
உடல் வறுத்தும் வலிமிகுந்த
அல்லல் யார் தந்தார்?
உடல் மெலிந்து பின்னர்கூட
உள்ளம் உறுதி கொண்டாய்,
உனது உறுதி கண்டு தானோ
அவனும்
உன்னை அழைத்துக்கொண்டான்?
இனி
என்று காண்போம்
கருணை பொங்கும்
அழகிய உமது விழிகளை?
என்று கேட்போம்
மனதை வருடும்
இனிய உமது மொழிகளை?
என்ன சொல்லி
நிறுத்த முடியும்
பெருகும் கண்ணீர்த் துளிகளை?
என்ன சொல்லி
தேற்ற முடியும்
அழுத்தும் மனதின் வலிகளை?
நாங்கள் அறிந்தோ அறியாமலோ
செய்த தவறுகளுக்கு
எங்களைக் கண்டித்திருக்கலாம்
இப்படி தண்டித்திருக்கத் தேவையில்லை,
இடி விழுந்த வானம்
இரண்டாய் ஆனது போல
இடி விழுந்து வாழ்வும்
இருண்டுப் போய்விட்டது,
இனி
எப்போதும் பௌர்ணமியாய் இருந்து
ஓளி காட்டுங்கள்,
மறையாத நட்சத்திரமாய் இருந்து - நல்
வழி காட்டுங்கள்,
தவித்து நிற்கும் எங்களின்
வலியைப் போக்குங்கள்,
தெய்வமாக இருந்து எங்களை
வலிமை ஆக்குங்கள்!
இன்று
இல்லத்தில் மட்டும் அல்ல
உள்ளத்திலும் நிரப்பமுடியாத
ஒரு பெரும் வெற்றிடம்,
உங்கள் நினைவுகள் மட்டுமே
அதை
ஒவ்வொரு நாளும் பொழுதும்
முழுதாய் நிறைந்து நிரப்பிடும்!
காயம் ஆறிப்போனாலும் - உடலில்
மாறாத வடு இருக்கும்,
நீங்கள் சாம்பலாய் எரிந்து
கங்கையில் கரைந்து
மாயமாய்ப் போனாலும்,
உள்ளத்தில் என்றும்
அழியாத உங்கள்
உருவம்
சித்திரமாய் பத்திரமாய்ப்
பதிந்து இருக்கும்.- இனி
ஒவ்வொரு நாளும்
உங்களால் தானே விடிந்திருக்கும்!
நீங்கா நினைவுகளுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.