(ஜூலை 27, 2015)
இந்திய நாட்டின் கடைக்கோடியில் பிறந்து
இத்திரு நாட்டின் முதல்குடிமகனாய் உயர்ந்து
இளைஞர்கள னைவரின் இதயம் கவர்ந்த
இலட்சிய வீரரே; நீவிர் வாழ்கிறீர் இறந்தும்,
நீர்
கோட்டு சூட்டு அணிந்த ஒரு துறவி
கோபம் துளியும் கொள்ளாத புது பிறவி
அக்கினிச் சிறகு முளைத்த அதிசயப் புரவி
நீர் கண்ட கனவு நிஜமாகும் நாளை -
பாரதம் முழுதும் இன்று தீயாகப் பரவி,
இன்றைய இந்தியாவை அதிகமாய் நேசித்தீர் - நாளைய
இந்தியாவைப் பற்றியே எப்போதும் யோசித்தீர் - எதுவும்
மனதுவைத்தால் முடியுமென்று போதித்தீர் - அதை
மாணவர்களைத் தேடிச்சென்று சாதித்தீர்,
எளிமைக்கு என்றும் எடுத்துக்காட்டு நீர் - அயராத
உழைப்புக்கு அழகான உதாரணம் நீர்
தன்னலமறியாத தன்னம்பிக்கைத் தமிழன் நீர் - தாய்த்
தமிழுக்குப் பெருமைசேர்த்த தங்கத் தலைவன் நீர்,
அந்நியர் ஆண்ட இந்திய மண்ணில்
மின்னிய வைரமே நீர்
புண்ணியம் பண்ணிய இராமேஷ்வர
மண்ணில் பிறந்தவரே
எண்ணியதெல்லாம் உயர்வாயெண்ணிய
உத்தமரல்லவா நீர்
கண்ணியம் பேச்சிலும்; கண்ணிலே கருணையும்
உன்னிலே உயர்ந்தவர் யார்?
ஒரு
விஞ்ஞானியாக உலகுக்குத் தெரிந்தீர்
மெய்ஞானியாக உள்ளுக்குள் திகழ்ந்தீர் - பிறர்
அஞ்ஞானம் அகற்ற அனுதினமும் முயன்றீர்
எஞ்ஞான்றும் எம்தேசம் முன்னேற உழைத்தீர்,
அமைதி விரும்பும் தேசம் இது - ஆனால்
அஞ்சி இருந்திட மாட்டோமென
அணு ஆயுத சோதனை நடத்திக்காட்டி
பாரினில் பாரதம் தலைநிமிரச் செய்தீர்,
இயந்திர இளைஞரை இயங்கிட வைத்தீர்
மயங்கிய மனமதை முயன்றிட செய்தீர்
தயங்கிய போது தைரியம் தந்தீர்
பயந்தது போதும்; இனி உயர்ந்திடு என்றீர்,
பசுமை பாரதம் காணவே ஊரெங்கும்
திசையெட்டும் திரிந்து மனதினில் விதைத்தீர்
பசுமரத் தாணியாய் பதிந்ததன் விளைவாய் - நாளை
விருட்சமாய் வளர்ந் தும்புன்னகைப் பூக்குமே
சிந்திக்கத் தூண்டிய சிந்தனைச் சிற்பி நீர் - நேரில்
சந்திக்க முடியாதது பெரும் குறையானதே
நிந்திக்கும் மனமந்த மரணத்தின் தூதனை - அவன்
முந்திக்கொண்டாலும்; உமக்கோர் அந்தமு மில்லையே,
பாதம்தேய பாடுபட்டீர்; அன்று பாடம்படிக்க நீர்
பாரதம் முழுதும் பள்ளிகளில்; இன்றோர் பாடமானீர் நீர்
மீனவ குடும்பத்தில் பிறந்து எப்படி சைவம் ஆனீர் நீர்
ஆணவமில்லாத அகந்தைகொள்ளாத அதிசயம் தானே நீர்,
பதவிக்குச் சண்டை நாட்டில் நடக்கின்ற போது
உமைத்தேடி பதவிகள் ஓடோடி வந்தது - உம்
ஓய்வில்லா உழைப்புக்கு இயற்கை ஓய்வுதந்தது - உமது
ஒப்பற்ற கனவிற்குப் புத் துயிரின்று வந்தது,
இந்திய
விண்கலம் எல்லாம் உம்பெயர் சுமக்கும் - அந்த
திங்களும் உமையங்கு தங்கிட அழைக்கும்
ஐம்புலன் கைக்கட்டி; உம்சொல்படி நடக்குமே - அது
அம்பலமேறி உம்பலம் உரைக்குமே,
நீர் ஏவிய
ஏவுகணை விண்ணில் தேடும் உமை - புவி
யாவிலும் உமக்கில்லை ஈடு இணை
காவிதேசம் கண்டெடுத்த காவியமே - தென்கோடி
தீவிலுதித்து ஒளிதந்த சூரியனே,
உம் தோற்றத்தில் மட்டுமே முதுமை - நீவிர்
தொய்வில்லா உழைப்பிலோர் புதுமை
எண்ணத்தில் செயலில் என்றும் இளமை - உமைப்போல்
இனியும் கிட்டுமோ; எமக்கோர் தலைமை,
மண்ணிலே புதைத்த பின்னும்
விண்ணிலே உம்முழைப்பு மின்னும் - உம்
முன்னேறிய தேசம் என்னும் - கனவு
உயிரோடு இருக்கு இன்னும்,
உமது
வெள்ளி நிறத் தலைமுடியும்
வெண்மையான புன் சிரிப்பும்
மென்மையான உம் பேச்சும் - நினைவு
சின்னமாச்சு எம் மனதில்,
அக்கினி குஞ்சொன்றை கண்டெடுத்தார்
அன்றோர் பாரதி
அக்கினிச் சிறகை கொண்டு வந்தீர் - எம்
மக்கள் ஜனாதிபதி
முற்போக்காய் சிந்திக்கத் தூண்டிவிட்டார்
அந்த மீசை பாரதி
முன்னேறிய பாரதம்காண ஆவல் கொண்டீர்
எம் ஆசை ஜனாதிபதி,
இளைஞர்களே வாருங்கள்,
முயன்று முயன்று தினமும் நாம் முட்டிப் பார்க்கலாம்
முயற்சி செய்யத் துணிந்தபின் எவ்வாறு தோற்கலாம்
பயத்தை களைந்து சுயத்தை உணர்ந்து உறுதி ஏற்கலாம்
பறவைப் போல இறக்கை முளைத்து விண்ணில் பறக்கலாம்,
உறக்கம் தொலைக்கும் கனவுக்காண சொன்னாரே நம் கலாம் - அவர்
கனவு உண்மையாகும் வரை எவ்வாறு தூங்கலாம்
இருபது இருபதில் இந்தியா நாளை வல்லரசா கலாம் - அதை
இலஞ்சம் ஊழல் ஒழிந்த ஓர் நல்லரசாய் ஆக்கலாம்,
உறுதி கொண்டு இறுதி வரை அயராது உழைக்கலாம் - நம்
உறுதி கண்டு உயர்வு கண்டு உலகம் மலைக்கலாம்
நல்லதொரு குடிமகனாய் உருவாகலாம் - நாட்டை
பலமாக வளமாக நாம் உருவாக்கலாம்!
நம்பிக்கையுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.