(பிறந்த நாள் வாழ்த்து மடல் - செப்டம்பர் 17)
இவர்
அதிசயப் பிறவி அல்ல
அதிசயத் துறவி
அதுவும் அரசியல் துறவி!
கடமை தவறாத கர்மயோகி
கருணை மிகுந்த தர்மஞானி!
எல்லாப் பற்றையும் விட்டவர் - நாட்டுப்
பற்றை மட்டும் விடாதவர்!
இவர் செய்யும் தவத்தால்
பாரதம் வரம் பெற்றது
பாரிலே பலம் பெற்றது!
தேசம் காக்கும் பணியும்
தெய்வீகம் போற்றும் நெறியும்
இவரது இரண்டு கண்கள்!
மறக்கப்பட்டவர்களை
நினைவுகூறும் மாண்பு மிக்கவர் - உரிமை
மறுக்கப்பட்டவர்களை
மதித்து வணங்கும் மனிதம் மிக்கவர்!
குறை கூறுபவர்களால்
விளங்கிக் கொள்ள முடியாத
மறை பொருள் இவர் - நிலவில்
கறை காண்பவர்களால்
கண்டு அறிய முடியாத
வளர் பிறை இவர்!
தன் மீது கற்களும் - சுடு
சொற்களும் வீசுபவர்கள் மீது
சினம் கொள்ளவில்லை,
தன் மீது வீசப்பட்ட
கற்களைக்கொண்டு
வானுயரக் கோவில் கட்டிக்கொண்டார்
தன் மீது வீசப்பட்ட சுடு
சொற்கள் கொண்டு தன்னை
மேலும் உறுதியாக்கி உயர்ந்து நின்றார்!
திருடன் என்று சொன்னவர்களை
திட்டவில்லை - அவர்கள் பக்கம்
திரும்பிக் கூடப் பார்க்கவில்லை,
மரண வியாபாரி என்று சொன்னவர்களால்
மனம் சிறிதும் வருந்தவில்லை - நற்
குணம் சற்றும் இழக்கவில்லை!
போற்றுபவர்களுக்கு
சாதகமாய் ஏதும் செய்வதில்லை
தூற்றுபவர்களுக்குப்
பாதகமாய் எதுவும் செய்வதில்லை
நூற்று நாற்பது கோடி மக்களில்
போற்றுபவர்களுக்கு மட்டுமல்ல
தூற்றுபவர்களுக்கும் சேர்த்து உழைப்பவர்,
கடமையைக் கண்ணாய்
என்றும் புரிபவர்
உடைமையாய் உண்மையை
மட்டும் உடையவர்!
தனக்காக வாழாமல்
நாட்டுக்காக வாழும் உத்தமர்
குடும்ப அரசியலும்
வாரிசு அரசியலும்
நடக்கும் நாட்டில்,
குடும்பத்தை விட்டு வந்து
நாட்டையே குடும்பமாய்
ஏற்று வாழ்பவர!,
அரசியல் சேற்றில்
மலர்ந்த அரிய செந்தாமரை இவர்
புனித பாரதத்தில் பூத்த
புதிய சாணக்கியர் இவர்!
இவர் கங்கை,
எத்தனை சாக்கடைகளை
கொண்டு வந்து ஊற்றினாலும்
புனிதம் கெடுவதில்லை!
இவர் கோபுரம்,
வெறுப்புடன்
அண்ணாந்து பார்த்து
காறி உமிழ்பவர்கள்
உணர்வதில்லை - அது
தம்மீதே விழுவதை!
எத்தனை அசிங்கங்கள் வந்தாலும்
இந்த சிங்கத்தை
அசைக்க முடியாது
அசிங்கப் படுத்த முடியாது!
இந்த சிங்கம் கர்ஜித்தால்
குள்ள நரிகள்
ஓநாய்கள் - கழுதைப்
புலிகள் மட்டுமல்ல - மதம்
பிடித்த யானைகளே
அச்சப்பட்டு அரண்டு
ஓடி ஒடுங்கி விடும்!
ஒற்றை செங்கல்லை வைத்து
கேலி பேசி
பொய்ப்பரப்புவர்கள் மத்தியில் - வீரத்
தமிழன் செங்கோலை மத்தியில்
ஊன்றி வேள்வி செய்யும்
மெய்யுரைப்பவர் இவர்!
தமிழர்களை விட
தமிழின் பெருமையை
தமிழர் பெருமையை
அதிகம் அறிந்தவர்!
ஐ நா சபையிலும்
அய்யன் குறளை
அழகாய் சொன்னவர்
செல்லுமிடமெல்லாம்
தன் குரலில்
திருகுறளை சொல்லுபவர்!
பல தமிழர்களே அறியா
திருமுறையை
பாரதம் அறிய
பாராளுமன்றத்தில்
ஒலிக்க வைத்தவர்!
பல மடத்தலைவர்கள்
வெட்கித் தலைக்குனிய
பல மட தலைவர்கள் காலில்
விழுந்து வணங்கிய
திட தலைவர் இவர்!
பல மத தலைவர்களும்
போற்றும் - புது
வித தலைவர் இவர்!
எந்த நாட்டுக்குள் வர விடக்கூடாது
என சிலர் அஞ்சி
கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்களோ
அந்த நாடே
சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று
வியந்த விசித்திர தலைவர் இவர்!
ஜி20 நாடுகளின்
உச்சி மாநாட்டை
அச்சமின்றி
கச்சிதமாய் நடத்தி காட்டியவர்.
மிச்ச நாடுகளும்
மெச்சும் வண்ணம் - புது
உச்சம் தொட்டவர்!
சான்றோன் எனக் கேட்டு
ஈன்ற போதும் பெரிதுவந்த
தாய் தவறிய போதும் - தான்
கொண்ட கடமை தவறாது
பணி யாற்றிய அரும்
தலைவர் இவர் - பெரும்
தலைவர் இவர்!
இரும்பு மனிதருக்கு
சிலை வைத்த
கரும்பு மனிதர் இவர்
அந்த
இரும்பு மனிதரே
விரும்பும் மனிதர் இவர்!
பொறாமைக் கொண்டவர்களின்
வெறுப்பு நெருப்பில் குளித்து
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டு வந்தவர் - இனி மேலும்
பாரதம் காக்க
பாரது போற்ற
மீண்டும் வருபவர்!
நீடூழி வாழ வாழ்த்தும்
இராம்ஸ் முத்துக்குமரன்.