(செப். 10 2003 - எங்கள் தாத்தா எங்களை விட்டு மறைந்த பொழுது எழுதியது)
ஒரு ஆலமரம் சாய்ந்ததென்று
யார் சொன்னது?
இத்தனை விழுதுகள் இன்று
மரமாய் நிற்பது அதன் வேரல்லவா.
இனி ஒவ்வொரு நிமிடமும்
சொல்லும் அவர்களின் பேரல்லவா!
இந்த சூரியன்
அஸ்தமித்ததென
யார் சொன்னது?
இனி நம் வாழ்வில்
தினமும் அவர்களின்
உதயம் தானே!
ஒரு
நெடிய பயணத்திற்கு - பல
வருட தவத்திற்கு - அவர்களின்
கடின உழைப்பிற்கு - அந்த
அரிய படைப்பிற்கு,
இறைவன் தந்த
சிறிய பரிசிது - ஒரு
பெரிய ஓய்விது!
அள்ள அள்ள
கடல் நீர் குறையாது - நாட்கள்
செல்ல செல்ல
தினம் பூக்குமே - அவர்களின்
நினைவுகள் மறையாது,
நம் உயிருக்கு
வேர் அவர் - நாம்
உயிருடன் கண்ட தெய்வம்
அவர் தானே வேறெவர்?
அலைகள் போல இருந்தவர்
இனி நம் மனதில்
அவர்களின் நினைவலைகள் ஓய்ந்திடுமா?
மலரைப் போல இருந்தவர்
மலர் பறித்தால் - நறு
மணமென்ன மறைந்திடுமா?
காற்றைப் போல இருந்தவர்
இன்று நம் சுவாசத்தில்
ஒன்றாய்க் கலந்தவர்,
கதிரைப் போல இருந்தவர்
இன்று நம்
உதிரத்தில் உயிராய் கலந்தவர்!
கடும் வெயில் பட்டு
கடல் நீர் வற்றிடுமா?
பெரும் உளி பட்டு
இமயம் சிதறிடுமா?
கைகளுக்குள்
காற்று சிக்கிடுமா?
கதிரவன் மறைவதால்
பூமி நின்றிடுமா?
மறைந்ததால் அவர்களின்
நினைவுகள் அகன்றிடுமா?
சட்டென முடிந்திட
அவர்கள் வாழ்வென்ன சிறுகதையா?
அவர்கள் வாழ்க்கை ஒரு பெரும் கதை!
நம்
விழியில் ஒளியாய்
உள்ளத்தில் எண்ணமாய்
சுவாசத்தில் காற்றாய்
கலந்த அவர்கள்,
மறைந்தார் என சொல்வது
விசித்திரமே!
ஒரு நூற்றாண்டை
அளந்துப் பார்த்தவர்,
பல்லாண்டு தனிமையை
துணிந்து வென்றவர்,
ஆயிரம் பௌர்ணமி
முழுமையாகக் கண்டவர்,
பௌர்ணமியன்றே
நம்மை விட்டுப் பிரிந்தவர்,
அவர்களின் மறைவு
நம் வாழ்வை
அமாவாசை ஆக்கிவிடாது,
ஒன்றல்ல இரண்டல்ல
ஆயிரமாயிரம் விண்மீன்களாய்
இனி உள்ளத்தில் மின்னிடும்
அவர்களின் நினைவுகள்!
நான் வேதம் கற்றதில்லை
அவர்கள் சொற்களைத்தான்
வேதமெனப் பின்பற்றி வந்தேன்,
தெய்வத்தை நேரில் கண்டதில்லை
அவர்களே தெய்வமென
பாதம்தொட்டு ஒற்றி வந்தேன்,
கதிரைப் போன்று அவர் விழிகள்
பேதம் யாரிடமும் பார்ப்பதில்லை,
உண்மையே அவர் மொழிகள்
விரோதம் யாரிடமும் கொள்வதில்லை!
பிள்ளைகளுக்கு
அவர் பாசம் தித்திப்பு,
தவறுகளுக்கு
அவரிடம் உண்டு கண்டிப்பு,
அவரை எதிர்ப்பவர்களுக்கும்
உண்டு மன்னிப்பு,
அவர்களை எங்களிடமிருந்துப்
பிரித்தது யார் தப்பு?
இறக்கும் முன் சில நாட்கள்
அவர் பட்ட இன்னல்கள்
உணர்த்தும் நமக்கு
மறக்காத சில பாடங்கள்,
தவறே செய்யாத
அவர்களுக்கே இத்தனை தண்டனையா?
தெரிந்தும் தவறு செய்பவர்கள்
இனி படப்போகும் பாடு எத்தனையோ?
இந்த உலகம்
கொடுத்து வைக்கவில்லை
இவருடன் இருக்க,
அந்த சொர்க்கம்
மகிழ்ச்சிக் கொண்டது
அவருடன் வசிக்க!
இருந்தும்
இறப்பவர் பலருண்டு,
இறந்தும்
இருப்பவர் சிலருண்டு,
அந்த மிகச்சிலரில்
எங்கள் ஐயா இவருண்டு,
அவர்களின் அருளாசி
என்றும் நமக்குண்டு!
நீங்கா நினைவுகளுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்!
(குறிப்பு: எங்கள் தாத்தவைப் பற்றிய கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்)