(வாசிக்கும் நேரம் 10 - 15 நிமிடங்கள்)
தாத்தா என்பது அழகான ஒரு தமிழ்ச்சொல். அது பெயர்ச்சொல் மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் உயர்ச்சொல். எதை வேண்டுமானாலும் தா தா என்று உரிமையோடு கேட்கக்கூடிய ஒரு உன்னதமான உறவு. எதை கேட்டாலும் உவகையோடு கொடுக்கக்கூடிய உயர்வான உறவு. தோல் சுருங்கினாலும் தோளில் தூக்கி சுமக்கும், தோழமையாய் இருக்கும் தோதான உறவு. உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது ஊக்கம் அளிக்கும் உற்சாக உறவு. பாசமழையில் நனைய வைக்கும் பரிசுத்தமான உறவு. தாயின் வழியோ தந்தை வழியோ, தாத்தா என்பது அன்பின் வழியே, என்றென்றும் அரவணைத்து நெறிகாட்டும் அவர்களின்அனுபவ மொழியே. "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற வள்ளுவர் வாக்குக்கு எடுத்துக்காட்டு தாத்தாமார்கள்.
அப்படிப்பட்ட தாத்தாவை யாருக்குத் தான் பிடிக்காது. தற்போதையச் சூழ்நிலையில் பல குழந்தைகளுக்குத் தாத்தா என்ற ஓர் உறவு இருப்பதே தெரிவதில்லை என்று சொன்னால் அது மிகையில்லை. அப்படியே இருந்தாலும் தாத்தாவின் அரவணைப்பில் வளர்வது மிக மிகக் குறைவே. தாத்தாவின் பெயரைச் சொல்ல, தாத்தாவின் பெயரைச் சுமந்த ஆண் குழந்தை தான் பெயரன் என்பது, பின்பு பேரன் என மருவி விட்டது (பெயர்த்தி என்பது பாட்டியின் பெயரைச்சுமந்த பெண் குழந்தை, பேத்தி என மருவியது). ஆனால் அப்படி பட்ட பேரன் பேத்திகளுக்கு தாத்தாவின் அருமை தெரியுமா? புரியுமா? (தற்போது யார் தாத்தா பாட்டி பெயரை வைக்கிறார்கள் என்று நீங்கள் மனதில் கேட்ப்பது எனக்கு நன்றாகவே கேட்க்கிறது.)
எங்களுக்கு தாத்தா என்றாலே தாயின் தந்தை மட்டும் தான். எங்கள் தந்தையின் தந்தை, எங்கள் தந்தை சிறுவயதில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார்கள். அதே போல் எங்களுக்கு ஆயா (தாயின் தாய்), அப்பத்தா (தந்தையின் தாய்) போன்றவர்களைப் பார்க்கும் பாக்கியமும் கிடைக்கவில்லை. அதனால் எங்களுக்கு இருந்த ஒரே உயர்ந்த உறவான தாத்தா, ஒப்பில்லா தாத்தா, தாய் வழித் தாத்தா அவர்கள் மட்டும் தான்.
நாங்கள் மதித்த, என்றும் மதிக்கும் எங்கள் தாத்தா, எங்களையெல்லாம் விட்டுச்சென்று இன்றோடு (9/10/2003 ) இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தாலும் இன்றும் எங்கள் மனதில் அவர்கள் அன்று போல் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். என்றும் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பசுமையான நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளவே இந்தக் கட்டுரை. (தாத்தாவைப் பற்றியக் கட்டுரை என்றாலும், பெரும்பாலான செய்திகள் பாட்டிக்கும் பொருந்தும். பாட்டியோடு பழக எங்களுக்கு கொடுப்பினை இல்லாததால் அந்த அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டது.)
எங்கள் தாத்தவிற்கு என் தாயையும் சேர்த்து மொத்தம் எட்டு பிள்ளைகள். அதில் இருவர், சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மீதம் இருந்த அறுவரின் குழந்தைகள், பேரன் பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் என பெரியதொரு மகிழ்ச்சியானக் குடும்பம். அன்றைய காலத்தில் எல்லோரும் ஒரே ஊரில் (பட்டுக்கோட்டை) இருந்தார்கள். திருவிழா விஷேசம் என்றால் வீடே களைக்கட்டி விடும். ஆனால் கால மாற்றத்தில் தற்போது பலர் பல ஊர்களில் இருக்கிறார்கள்.
நாங்கள் பிறக்கும் முன்பே எங்கள் ஆயா மறைந்துவிட்டதால், எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தாத்தா ஒருவரைத் தான் பார்த்து வளர்ந்தோம். அவர்களின் பாசமழையில் நனைந்து மகிழ்ந்தோம். எங்கள் தாத்தா ஆறடி உயரம் இருப்பார்கள். வாட்டசாட்டமான உருவம். எப்பொழுதும் தும்பைப் பூப்போன்ற வெண்ணிற ஆடைகள் தான் அணிவார்கள். வண்ண ஆடைகள் அணிந்து நான் பார்த்ததேயில்லை. அண்ணாந்து பார்க்கையில் வெண்பஞ்சு மேகம் படர்ந்த வானம் போல் தெரிவார்கள். சலவை செய்யப்பட்ட வெள்ளை வேட்டிச்சட்டையில், கம்பீரமாக நடந்து வரும் அந்த நெடிய இனிய உருவம், இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது, இனிக்கிறது.
திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற வகையில் நாம் இப்பொழுது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதைப் போல், அந்தக் காலத்தில் பர்மா, சிலோன், மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பல்களில் சென்று பொருள் ஈட்டி வருவார்கள். எங்கள் தாத்தாவும் அது போல சில நாடுகளுக்குச் சென்று, மிகவும் சிரமப்பட்டு பின் சொந்த ஊரில் வியாபாரம் செய்து முன்னேறியவர்கள். சிறு வயதிலேயே எங்கள் ஆயா இறந்த பின், தனிமை தவம் செய்து, தடம் மாறாமல் இறுதி வரை உறுதியாய் வாழ்ந்த உண்மையான உயர்ந்த மனிதர் எங்கள் தாத்தா அவர்கள்.
எங்கள் பெரிய மாமாவின் (தாத்தாவின் மூத்த மகன்) வீட்டில் தான் தாத்தா இருந்தார்கள். ஆனால் எங்களைப் பொருத்தவரை, அது மாமா வீடு கிடையாது, தாத்தா வீடு. வாடகை வீடு தான், ஆனால் வாடாமல்லியாய் வண்ணத்துப் பூச்சிகளாய் நாங்கள் மகிழ்ந்து திரிந்த வீடு. சிரிப்புச் சத்தமும் பேச்சு சத்தமும் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கும். எங்கள் இளமைக்கால நினைவுகள் எல்லாவற்றையும் சுமந்து மகிழ்ந்த வீடு [தற்போது அந்த வீடு இடிக்கப்பட்டு வணிக வளாகம் ஆகிவிட்டது :-( ஒரு கொடுமையான நிகழ்வு]
அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் முகப்பில் வீட்டுத்திண்ணை இருக்கும். அதுவே எல்லா வீட்டிற்கும் ஒரு அழகான அன்பான தோற்றத்தைக் கொடுக்கும், எல்லோரும் வாருங்கள், வந்து இளைப்பாறிப் பசிப்போக்கிச் செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்லும். எங்கள் தாத்தா வீட்டிலும் அப்படிப்பட்டத் திண்ணை உண்டு. நாங்கள் எல்லோரும் விளையாடிய அந்தத் திண்ணை, என்னைப் பார்த்து எங்களையெல்லாம் ஒரேயடியாக ஒழித்துவிட்டீர்களே என்று அவ்வப்போது வந்து குறைபட்டுக்கொண்டு இருக்கும்.
திண்ணை, திண்ணையை தாண்டியதும் வரும் முதல் அறை, அவை இரண்டும் தான் எங்கள் தாத்தா பெரும்பாலும் இருக்கும் இடம். திண்ணையில் இருக்கும் சாய்வு நாற்கலி (ஈசி சேர்) தான் எங்கள் தாத்தாவின் சிம்மாசனம். உறங்கும் நேரம், உணவருந்தும் நேரம் போக பெரும்பாலான நேரங்களில் அந்த சாய்வு நாற்காலியில் தான் அமர்ந்திருப்பார்கள். அந்த சாய்வு நாற்காலியில் அவர்கள் அமர்ந்திருக்கும் தோற்றமே அழகானது, அலாதியானது, ஆண்மையனது.
அதிகாலையிலேயே தாத்தா எழுந்துவிடுவார்கள். காலையில் வானொலியில் செய்தி கேட்பது தான் அவர்களுடைய முதல் பணி. பெரும்பாலும் தாத்தா எழும் நேரத்திற்குள் பால்காரரும் வந்துவிடுவார். சுடச்சுடக் காபி வருவதற்கும் செய்தித்தாள் வருவதற்கும் சரியாக இருக்கும். அப்பொழுது தாத்தா தினமணி தான் படிப்பார்கள். நாங்கள் தாத்தாவுடன் இருக்கும்பொழுது, காலையில் சீக்கிரம் எழுந்து தாத்தாவுடன் அமர்ந்து காபி குடிப்பது எனக்கும் மிகவும் பிடிக்கும். தாத்தாவிற்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எழுதும்பொழுது கூட முதலில் 'உ' (பிள்ளையார் சுழி) போட்டு தான் எதையும் எழுதத் தொடங்குவார்கள். சரியாக எட்டு மணிக்குள், கிணற்றடிக்குச் சென்று குளித்து முடித்து கந்த சஷ்டிக் கவசம் கூறி, பூஜை செய்து, சாமி கும்பிட்டு, நெற்றியிலும் உடல் முழுவதும் விபூதி அணிந்து திண்ணையில் வந்து அமர்வதைப் பார்க்கத் தெய்வீகமாக இருக்கும். சிறு குழந்தைகளை மடியில் வைத்து பாரதியார் பாட்டுக்கள் பாடுவார்கள். பல பாரதியார் பாடல்களைத் தாத்தா பாடக் கேட்டு இருக்கிறேன். சிறு குழந்தைகளோடு தாத்தா இருக்கும்பொழுது, அந்தக் குழந்தைகளின் சிரிப்பு, தாத்தாவின் சிரிப்பு இரண்டுமே வேறுபாடு காணமுடியாத, கள்ளம் கபடமில்லாத சிரிப்பு.
தாத்தாவிற்கு சுத்தம் எனபது மிகவும் முக்கியம். மூன்று வேளைகளும் கை, கால் கழுவிவிட்டு தான் சாப்பிடுவார்கள். சாப்பிடும் முன் சிறு பிரார்த்தனை செய்துவிட்டு தான் சாப்பிடுவார்கள். எங்கே வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் நுழையு முன், கால்களை நன்றாக கழுவிவிட்டு தான் நுழைவார்கள். தண்ணீர் அருந்தும் பொழுது, அண்ணாந்து தான் குடிப்பார்கள். அவர்களின் உடல், உடை, உள்ளம், உள்ளிருந்து வரும் சொல் என அனைத்தும் தூய்மையாகத் தான் இருக்கும்.
எங்கள் தெருப்பக்கம், யார் வந்தாலும் எங்கள் தாத்தவை பார்த்து மரியதை செய்யாமல் செல்ல மாட்டார்கள். எப்போதும் யாராவது எங்கள் தாத்தாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். தங்கள் வீட்டு குறை நிறைகளை சொல்லி அவர்களிடம் ஆலோசனையும் அறிவுரையும் கேட்டுச்செல்வார்கள். மாலை நேரம் வந்துவிட்டால், எங்கள் தாத்தாவின் வயதையொத்தப் பெரியவர்கள் பலர் வந்து உரையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த இடமே கலகலவென்று இருக்கும். சில சமயம் அரசியல் வாக்குவாதங்களும் நடக்கும். (கர்மவீரர் காமராசர் போன்று நாட்டுப்பற்று மிக்கவர்கள் எங்கள் தாத்தா. சுதந்திர போராட்ட கதைகள் எல்லாம் சொல்வார்கள். திராவிட கட்சிகளை அவர்களுக்கு அடியோடு பிடிக்காது.)
எங்கள் தாத்தாவிற்கு புகையிலை போடுவது சுருட்டுப் பிடிப்பது போன்ற எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. சில பெரியவர்கள் மூக்குப்பொடி போடுவார்கள் (எத்தனைப் பேருக்கு மூக்குப்பொடி என்றால் தெரியும்? டி.ஏ.எஸ் இரத்தினம் பொடி என்று ஞாபகம். இரண்டு அங்குலம் உயரம் உள்ள வட்டமான சிறு சிறு தகரப் பெட்டிகளில் விற்கப்படும். காய்ந்த வாழைமட்டையிலும் மடித்துக் கொடுப்பார்கள்) அதன் நெடி கடுமையாக இருக்கும். எனக்கு அந்த நெடி தூரத்தில் வந்தாலே தும்மல் தந்துவிடும். ஒரு சுவையான நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. என் தாத்தாவைப் பார்க்க வரும் பெரியவர்கள் சில நேரம் அங்கு விளையாடும் சிறுவர்களை அழைத்து ஏதாவது சிறு சிறு வேலை சொல்வார்கள். அந்த சிறுவர்களில் ஒரு குறும்புக்காரச் சிறுவன், ஒரு முறை ஒரு பெரியவர் மூக்குப்பொடி வாங்கி வரச்சொன்ன போது, அந்த பெட்டியில் மூக்குப்பொடி போலவே உள்ள மண்ணை நிரப்பிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டான். நல்லவேளை, அதை வாங்கியவர் அந்த பொடியின் மணம் வராததால் உடனே கண்டுபிடித்துவிட்டார்.
எங்கள் தாத்தாவிடம் எல்லோரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். தாத்தா முன் யாரும் அமரமாட்டார்கள். தாத்தாவே கேட்டுக்கொண்டால் கூட அவர்கள் முன்னால் அமர தயக்கம் கொள்வார்கள், அது தான் அன்று பெரியவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. அந்தச் சூழ்நிலையில் வளர்ந்ததால், யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே எங்களுக்கும் பெரியவர்களை மதிக்கும் குணம் தானாகவே வந்துவிட்டது. ஆனால், இப்பொழுதெல்லாம் பல சிறுவர் சிறுமியர், வயது முதிர்ந்தவர்களை, அது வீட்டில் இருப்பவர்களோ அல்லது விருந்தினர்களோ, அவர்களை துளியும் சட்டைச் செய்வதில்லை. குறைந்தபட்ச மரியாதை கொடுப்பதற்குக் கூட தெரியாமல் வளர்ந்துவிடுகிறார்கள். செயலில் மட்டுமல்ல பேச்சிலும் கூட. அவர்களின் அந்த நிலைக்குப் அவர்களின் பெற்றோர்களும் ஒரு முக்கியக் காரணம்.
எங்கள் தாத்தாவைப் பார்க்க வரும் எவரும் திரும்பிச்செல்கையில் மனது மற்றும் வயிறு நிறைந்து தான் செல்வார்கள். உதவி என்று யார் வந்தாலும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள். யார் எவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. எல்லோருடனும் அன்பாகவும் ஆதரவாகவும் பழகுவார்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்ததால் அந்த நற்குணங்கள் எல்லாம் எங்களுக்கும் எங்களை அறியாமலேயே மனதில் பதிந்துவிட்டது. எங்கள் எல்லோருக்கும் தாத்தாவிற்குப் பணிவிடைகள் செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எங்களுக்குள் யார் தாத்தாவிற்கு கை, கால் அமுக்கிவிடுவது, தாத்தா அருகில் அமர்ந்து உணவு உண்பது போன்றவற்றில் போட்டா போட்டி நடக்கும்.
எங்கள் தாத்தா மிகவும் கனிவானவர் மட்டுமல்ல, கண்டிப்பானவரும் கூட. எந்த செயலையும் சரியான முறையில் செய்யவேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம் மற்றும் எதிர்பார்ப்பு. அதனால் பலருக்கு, தாத்தாவிடம் இருந்து திட்டுகள் வாங்கிவிடக்கூடாது என்பதற்காகவே எல்லாவற்றையும் சரியாகச் செய்யப் பழகிக்கொண்டார்கள். தாத்தா எப்பொழுதும் வீட்டில் இருப்பதால், வீட்டுப்பிள்ளைகள் எங்கே சென்றாலும் முடிந்த வரை சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நேரம் தாழ்த்தி வரும் பொழுது தாத்தாவிடம் சரியான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கான வசவுகள் கிடைக்கும். சில நேரம் சிலர், தாத்தாவிற்குத் தெரியாமல் கொல்லைப் பக்கமாக வந்து வீட்டிற்குள் நுழைந்துவிடுவார்கள். ஆனால் அப்படி நுழைந்துவிட்டாலும், எப்படியோ எங்கள் தாத்தாவுக்குத் தெரிந்துவிடும். அதனால், சிரிய்வர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், எல்லோருக்கும் எப்பொழுதும் தாத்தாவிடம் ஒரு மரியாதைக் கலந்த பயம் இருக்கும். அது தான் எங்கள் எல்லோருக்கும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தது. சிலருக்கு சில நேரம் தாத்தாவின் கண்டிப்பு கசப்பாகத்தோன்றினாலும், இன்று அவர்கள் எல்லோரும் நல்லவொரு நிலையில் இருக்கிறார்கள் என்றால், எங்கள் தாத்தாவின் கண்டிப்பும் கருணையும் தான் காரணம். யாராலும் அதை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இதை தான் நம் முன்னோர்கள் அழகான ஒரு பழமொழியில் சொல்லியிருக்கிறார்கள்.
"மூத்தோர் சொல்லும்
முது நெல்லிக் கனியும்
முன்னே கசக்கும்
பின்னே இனிக்கும்" என்று!
எப்படி நெல்லிக்காய் முதலில் கசப்பாகவும், பின்னர் தண்ணீர் குடித்தவுடன் தித்திப்பாக இருக்குமோ, அது போலத்தான் பெரியவர்கள் அறிவுரையும். அவர்கள் சொல்லும் பொழுது நமக்கு கசப்பாக இருக்கும், அவர்கள் மேல் எரிச்சல், கோபம் எல்லாம் வரும். ஆனால் அவர்களின் அறிவுரை நெல்லிக்காயைப் போல் பின்னர் நமக்கு இனிமையான நன்மையைத் தரும். நம் முன்னோர்களின் பழமொழிகள் எல்லாமேஅனுபவ மொழிகள் தான்.
எங்கள் தந்தை வங்கியில் பணிபுரிந்ததால், பல ஊர்களுக்கு மாற்றலாகிச் செல்ல நேரிடும். அதனால் கோடை விடுமுறை வந்துவிட்டாலே, எங்களுக்கு எல்லாம் ஒரே மகிழ்ச்சி தான், குதூகலம் தான். ஏனென்றால் தாத்தாவைப் பார்க்க சொந்த ஊருக்குச் செல்லப்போகிறோம் என்பதால். ஊருக்குச்சென்றவுடன் தாத்தாவைப் பார்த்து ஆசி பெற்று அவர்களுடன் உரையாடியப் பின்னர் தான் மற்ற எல்லோரையும் சந்திக்கச் செல்வோம். மாலை நேரத்தில், தாத்தா தரும் 'திண்பண்டக்' காசை வாங்குவதே ஒரு மகிழ்ச்சியான தருணம். அவர்கள் தரும் நாலணா (25 காசுகள்), எட்டணா (50 காசுகள்) இன்றைய 50 ரூபாய் 100 ரூபாயை விட மதிப்பு அதிகம். அந்தக் காசில் வாங்கி சாப்பிடும் இனிப்புக் காராச்சேவு, பக்கோடா, மிக்சர், பூந்தி போன்றவற்றின் சுவை இன்னும் என் நாவில் இருக்கிறது. செய்திதாளில் பொட்டலம் கட்டிக்கொடுக்கும் அந்தப் பொட்டலத்தைப் பிரித்து மற்றவர்களோடு பங்கிட்டுச் சாப்பிட்ட நிகழ்வுகளெல்லாம் மறக்க முடியாது.
நாங்கள் தாத்தாவைப் பார்க்க ஊருக்கு வரும் முன், எங்கள் தாயார் எங்களிடம் சொல்வது, ஊரில் ஒழுங்காக நடந்துக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறாக செய்துவிட்டீர்கள் என்றால் அப்பச்சி (அப்பாவை அப்பச்சி என்று தான் அழைப்பார்கள்) 'பேசுவார்கள்' என்பார்கள். நான் கூட வேடிக்கையாகக் கேட்ப்பேன், "ஏன் அம்மா மற்ற நேரங்களில் தாத்தா பேச மாட்டார்களா?" என்று. ஆனால் என் தாய் குறிப்பிட்ட "பேசுவார்கள்" என்பதற்குப் பொருள், கோபப்பட்டு பேசுவார்கள் என்பது. மற்ற ஊர்களில் இப்படி குறிப்பிடும் வழக்கம் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை.
நாங்கள் வெளியூரில் இருந்து வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு மட்டும் ஊருக்கு வருவதால், மற்ற பேரன் பேத்திகளை விட எங்கள் மீது எப்பொழுதும் தாத்தாவிற்கு சற்று பிரியம் அதிகம். அதே போல், விடுமுறை முடிந்து நாங்கள் ஊருக்குத் திரும்பும் போது, தாத்தா அன்றைய வசதிக்கேற்பக் கொடுக்கும் ரூபாய் 20, 50, 100 போன்றவை தான் அன்று எங்களுக்கு கிடைக்கும் பாக்கெட் மணி. அதை சேமித்து வைத்து தேவையான பொழுது செலவு செய்வோம்.
அதே போல, தாத்தாவும் ஒரு வருடத்திற்கோ அல்லது இரு வருடத்திற்கு ஒரு முறையோ எங்கள் வீட்டுக்கு வந்து சில நாட்கள் இருப்பார்கள். தாத்தா வந்து எங்களுடன் இருக்கும் அந்த நாட்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும். தாத்தாவை அழைத்துக்கொண்டு நாங்கள் இருக்கும் ஊரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வது, கோவில்களுக்குச் செல்வது, கடைத்தெருவுக்குப் போவது என்று ஒரே ஆனந்தமாக இருக்கும். ஒரே ஒரு முறை எங்கள் தாத்தாவைக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு ஒரு திரைப்படத்திற்குச் சென்றிருக்கிறேன். (அந்தப் படத்தின் கதாநாயகனுக்கு இப்போது, அப்போதைய எங்கள் தாத்தவின் வயது இருக்கும் அல்லது கூடுதலாக இருக்கும், இருந்தாலும் இப்பொழுதும் கதாநாயகனாகத்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.) எனக்குத் தெரிந்து தாத்தா திரையரங்குகளுக்குச் சென்று வேறு திரைப்படங்கள் பார்த்ததாக நினைவு இல்லை.
ஏதாவது விசேஷங்கள் அல்லது விழாக்களுக்கு அதிகாலை எழுந்துச் செல்லவேண்டும் என்றால், நாங்கள் எந்த கடிகாரத்திலும் அலாரம் வைப்பதில்லை. எங்கள் தாத்தாவிடம் சொல்லிவிட்டால் போதும். குறிப்பிட்ட நேரத்தில் எழுப்பிவிட்டு, கடிகாரத்தைவிட துல்லியமாக சரியான நேரத்தில் புறப்பட வைத்துவிடுவார்கள். அன்றைய ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்சு எல்லாம் எங்கள் தாத்தா தான். காலை மற்றும் இரவு நேரங்களில் தாத்தாவிடம் அமர்ந்து கதை கேட்பது போன்ற மகிழ்வான நிகழ்வுகள் வேறு ஏதும் கிடையாது. அவர்கள் கூறும் கதைகள் நம்மை அந்த காலக்கட்டத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். அவர்களிடம் இருந்து பல பழங்கால தகவல்களைத் தெரிந்துக்கொள்ள முடியும். இன்று கணிப்பொறியிலும் ஸ்மார்ட் போனிலும் கதைக் கேட்கின்ற பொழுது கிடைக்காத உணர்வும் மகிழ்ச்சியும், நேரடியாக ஒருவர் (அது தாத்தாவோ பாட்டியோ அல்லது வேறு யாராய் இருந்தாலும்) சொல்லும் கதைகளை கேட்க்கும் பொழுது கிடைக்கும், அதுவொரு சுகமான அனுபவம். அதே போல் எங்களையும் பேச சொல்லி கேட்ப்பார்கள். நாங்கள் வெளியூரில் இருந்து வருவதால் எங்கள் ஊர், எங்கள் படிப்பு போன்றவற்றை பற்றி அக்கரையாகக் கேட்டுத் தெரிந்துக்கொள்வார்கள்.
எங்கள் தாத்தா உணவு விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதனால் ஆரோக்கியமாக இருந்தார்கள். அளவு கூடவோ, நேரம் தவறியோ உணவு உண்பதில்லை. அதே சமயம், உணவு விசயத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் கடுமைக் காட்டமாட்டார்கள். ஆனால் எங்கள் அத்தை, தாத்தாவிற்கென்று எப்பொழுதும் பார்த்துப் பார்த்து சமைப்பார்கள். தாத்தாவிற்கு வீட்டுச்சாப்பாடு தான் பிடிக்கும். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கடைகளில் வாங்கிவரும் உணவை சாப்பிட நேர்ந்தாலும் மறுக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால் எங்களிடம், அடிக்கடி 'கிளப்புகளில்' (தாத்தா ஹோட்டல்களை கிளப் என்று தான் கூறுவார்கள்) சாப்பிடாதீர்கள், உடலுக்கு நல்லதில்லை என்பார்கள். எனக்குத்தெரிந்து அவர்கள் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனை சென்றதாக நினைவு இல்லை. வயது மூப்பின் காரணமாக வரும் சில உடல் உபதைகள் தவிர அவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் தான் இருந்தார்கள்.
எங்கள் சொந்தத்தில் எங்கள் தாத்தா தான் வயதில் மூத்தவர் என்பதால், எல்லோருமே அவர்களிடம் யோசனைக் கேட்டு தான் எல்லாவற்றையும் செய்வார்கள். அதே போலத் தான் நாங்களும், எந்த செயல் என்றாலும் தாத்தாவிடம் கேட்டுத்தான் முடிவெடுப்போம். அப்படி எடுக்கும் முடிவு எப்போதுமே சரியானதாகத் தான் இருக்கும். தவறாகப் போவதில்லை, தவறாகப் போனதில்லை. வீட்டுப் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கும் முடிவுகள் ஒருபோதும் தவறாகப் போவதில்லை. இன்றையச் சூழ்நிலையில், வீட்டில் பெரியவர்கள் இல்லாமல், கணவன் மனைவி இருவருக்கிடையில் புரிதல் இல்லாமல், யாரிடமும் ஆலோசிக்காமல் முடிவுகள் எடுப்பதால், பல நேரங்களில் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். தாத்தாப் பாட்டிகள் இல்லாத தனிக்குடித்தன வாழ்க்கைமுறை தனது சுயரூபத்தை அவ்வப்போது படம்பிடித்துக் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
நான் படித்து முடித்துப் பணி புரிய ஆரம்பித்தபின், தாத்தாவுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. அப்படி சந்திக்கும் வேளைகளில் தாத்தாவின் அருகிலிருந்து அவர்களுக்குத் தேவையானப் பணிவிடைகள் செய்வேன். சிறுவயதில் என்னைக் கைப்பிடித்து நடக்கவைத்தவர்களுக்கு, நானும் அந்த உதவியைத் திருப்பிச் செய்யக் காலம் எனக்கும் சிலமுறை வாய்ப்பளித்தது. அதிலும் அயல் நாடு வந்த பிறகு அவ்வப்பது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ஒவ்வொரு முறை இந்தியா செல்லும் பொழுதும் தாத்தாவை சந்தித்து ஆசி பெற்று வருவோம். முதல் முறை செல்லும் பொழுது தாத்தாவிற்காக என்ன வாங்கிக்கொண்டு செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்பொழுதே அவர்கள் வயது மூப்புக்காரணமாகச் சற்று தளர்ந்திருந்தார்கள். அதனால் எளிதில் நீட்டி மடக்கும் வண்ணம் விசையுள்ள கைத்தடி ஒன்று வாங்கிகொடுத்தேன். அது தாத்தாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கைத்தடிப் பிடித்து நடக்கும் பொழுதெல்லாம் என் கைப்பிடித்து நடக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன். என் மூத்த மகளுக்குத் தாத்தா மடியில் அமரும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் என் இரண்டாவது மகள் பிறக்கும் முன்னரே தாத்தா மறைந்துவிட்டார்கள். இறுதியாக தாத்தாவின் திருமுகத்தைப் பார்க்க எங்களுக்கும் கொடுத்து வைக்கவில்லை.
எங்கள் தாத்தா இறுதிவரை பெரிய மாமா வீட்டில் தான் இருந்தார்கள். தாத்தாவின் இறுதி காலம் வரை, தாத்தாவிற்கு எந்த குறையும் இல்லாமல் மாமாவும் அத்தையும் பார்த்துக்கொண்டார்கள். மாமாவும் அத்தையும் தாத்தாவின் மனம் கோணாமல் நடந்துக்கொள்வார்கள். மற்ற மகன்கள் அழைத்தபோதும், மூத்தமகன் வீட்டிலேயே இறுதிவரை இருந்தார்கள். இந்தக் காலத்தில் வெகுசிலரே இது போன்று தங்கள் பெற்றோர்களை, அவர்களின் முதுமைக்காலத்தில் மதித்து, எந்தவொரு குறையும் இல்லாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரும் மகன்களும் கண்டிப்பாகப் புண்ணியம் செய்தவர்கள் தான்.
இப்பொழுதெல்லாம் ஊருக்குச் செல்லும்பொழுது, தாத்தா இல்லாத அந்த திண்ணையின் வெறுமை கண்களில் வந்து ஓங்கி அடிக்கும். இருப்பினும் அந்த திண்ணையைக் கடந்து செல்லும்பொழுதெல்லாம் எங்கள் கண்களுக்கு மட்டும், சாய்வு நாற்காலியில் அமர்ந்து தாத்தா எங்களை ஆசிர்வதிப்பது போலவே தெரியும். தற்போதெல்லாம் எந்த வீடுகளிலும் திண்ணைகள் கிடையாது. அப்படியே ஓரிரு வீடுகளில் இருந்தாலும், அத்திண்ணையில் அமர்ந்துப் பேச தாத்தாக்களும் அவ்வீடுகளில் கிடையாது. அவர்களுடன் வந்தமர்ந்து பேச முதியவர்களும் அதிகம் கிடையாது. நவீன நாகரிகத்திற்கு நாம் கொடுத்த, கொடுக்கின்ற அதிகமான விலை அது.
எந்த ஒரு பெரிய முடிவு எடுக்கும் முன்னரோ அல்லது ஏதாவது ஒரு குழப்பத்தில் இருக்கும் பொழுதோ உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் பேசி ஆலோசனைக் கேட்டு செய்யுங்கள். அது நிச்சயம் உங்களுக்குப் பலன் தரும். தாத்தாப் பாட்டி இல்லையென்றாலும் பராவாயில்லை அவர்கள் படத்தையாவது நம் வீடுகளில் மாட்டி வைப்போம். அவர்களின் படங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம் அவர்களோடு இருந்த பொழுதுகள் அல்லது அவர்கள் சொன்ன அறிவுரைகள் நம் நினைவில் வந்து செல்லும், செல்லட்டும். நாம் தெளிவில்லாமால் குழம்பி இருக்கும் பொழுது அவர்கள் படங்களைப் பார்த்தால், அவர்களைப் பற்றி சற்று நினைத்துப் பார்த்தால், அது நிச்சயம் நமக்கு ஒரு தெளிவைக் கொடுக்கும். தெளிவான முடிவுகள் எடுக்கத் துணையாய் இருக்கும்.
எங்கள் தாத்தா, நாங்கள் எல்லோரும் கரை சேர, ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டியவர்கள். இன்றும் நிலவாகவும், நட்சத்திரமாகவும் இருந்து வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
முதியவர்களை துதிக்காவிட்டாலும் பரவாயில்லை, மதிக்கக் கற்றுக்கொள்வோம். அவர்களை நேசிப்போம். நன்றி.
தாத்தாவின் பசுமையான நினைவுகளுடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.
குறிப்பு: எங்கள் தாத்தாவைப் பற்றிய எனது கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.