Chidhambaram Natarajar Temple

ஆன்றோர்

தமிழ்த் தாத்தா

தமிழ்த் தாத்தா

தமிழ்த் தாத்தா (2/19/1855 ‍- 4/28/1942)

எல்லோருக்குமே, அவர்களுடைய தாத்தாவை மிக பிடிக்கும், ஆனால் தமிழரென பெருமையாய் சொல்லும் நம் எல்லோருக்கும் பொதுவான ஒரு தாத்தா உண்டென்றால், அவர் தான் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, தமிழ்த் தாத்தா, உ.வே.சா என்று அழைக்கப்படும் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர் அவர்கள்.

அந்த தமிழ் மேதையின் பிறந்த நாள் தான் நேற்று, அதாவது பிப்ரவரி 19.  தமிழ் கூறும் நல்லுலகிற்கு மகத்தான சேவை செய்த அந்தப் பெரியவரை, தமிழ் படித்து என்ன பயன் என்று கேட்பவர்களும், பணத்திற்கு தங்கள் வாக்கை விற்பவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.  அதுவும், பிபரவரி 19, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாள் என்றால், சொல்லவே  தேவையில்லை. 

தமிழ் தமிழ் என்று பேசும் தலைவர்களும், தமிழன் வஞ்சிக்கபடுகிறான் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்களும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் வளரும் என்று நினைப்பவர்களும், மக்களை பரபரப்பாகவே வைத்து 'BREAKING NEWS' என்று போடும் தமிழ் நாட்டு ஊடகங்கள் என யாருமே கண்டுகொள்ளாதது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழக மக்களை வஞ்சிக்கிறார் என்று நம்மூர் அரசியல்வாதிகளால் அதிகம் பழிசுமத்தப்படும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களை நினைவு கூர்ந்து, அவரின் பெருமையை, தமது 'ட்விட்டர்' பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

tamil thaatha modiji

நம் செந்தமிழின் ஈடு இணையற்ற இலக்கியங்கள் மற்றும் படைப்புகளை, இன்று நாம் அறிந்து பெருமைப் படுவதற்கும், படித்து இரசித்து சுவைத்து மகிழ்வதற்கும், முக்கிய காரணம் யார் என்று சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்தப் பெருமைக்குச் சொந்தகாரரான உ.வே.சா ஐயர் அவர்கள் தான், நம் மனக் கண்ணில் கம்பீரமாக காட்சித் தருவார். பிராமணர்கள் தமிழை வளர்க்கவில்லை தமிழுக்கு என்ன செய்தார்கள் என பலர் கேட்டதுண்டு, கேட்பதுண்டு, ஆனால் ஒரு பிராமணர் தான், ஓலைச்சுவடிகளில், அழியும் நிலையிலிருந்த, பண்டைய தமிழ்க் காப்பியங்களையும், இலக்கியங்களையும், தனியொரு ஆளாய் துணிந்து நின்று, அச்சில் ஏற்றி, நம் தமிழ் சொத்தை மீட்டுத் தந்தவர். அவரின் அந்த அளப்பரியத் தொண்டு தான், தமிழுலகே அவரைத் தமிழ்த்தாத்தா என்று கொண்டாட வைத்தது.

பன்னெடுங்காலம் பாரம்பரியம் வாய்ந்த நமது பல்வேறு பைந்தமிழ் இலக்கியங்கள், தமிழன்னைக்கு, சங்கப் புலவர்கள் தங்கத்தமிழால் சூடிய அணிகலன்கள், அதன் பெருமதிப்புத் தெரியாமலும், சரியாக பராமரிக்கப் படாமலும், ஒழுங்கான முறையில் பாதுகாக்கப் படாததாலும், கரையான் அரிப்புக்கும், செந்தீ நாக்குகளுக்கும், பகைவர்களின் படையெப்பிலும் அழிந்தது போக மிச்சமிருந்த தமிழ்ச் செல்வங்களை, காப்பாற்றி மீட்டெடுத்து, புத்துயிர் கொடுத்து,  அடுத்த தலைமுறை அனுபவிக்க விட்டுச்சென்றவர் நம் தமிழ்த்தாத்தா உவேசா அவர்கள்.

கரையானுக்கும், கடுந்தீயிற்கும் இருந்த அந்த அதீத தமிழ் பற்று, அன்று நம் மக்கள் பலருக்கு இல்லாதது வருத்தந் தரக் கூடிய செய்தி தான்.  ஆனால், அன்றைய மக்களுக்கு, நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என இன்றைய நிலையும் இருப்பது தான் மிகவும் கொடுமை.  ஆனால் ஒரேயடியாக அப்படியும் சொல்லிவிட முடியாது. ஏடுகளில் இருந்தவற்றை அச்சில் ஏற்றிய பெருந்தகை தமிழ்த்தாத்தா உவேசாவின், நல்லுள்ளம் படைத்த பேரன் பேத்திகள் பலர் இன்று, அச்சில் உள்ளதை அடுத்த தலைமுறைகாக கணிணியில் ஏற்றி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை தமிழ்த்தாத்தா நிச்சயம் வாழ்த்தி ஆசீர்வாதிப்பார்.

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி பேசியத் தமிழ் மொழியை, ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர் பெருமக்கள் பலரும், பல இலக்கியங்கள் இயற்றி, அதன் வளமையும் வண்ணமும் குன்றாமல் பாதுகாத்து வந்தார்கள். ஆனால், கால ஓட்டத்தில், பல இலக்கியங்கள் அழிந்து விட்டன. அழியாமல் இருந்த சிலவற்றை தான் தமிழ்த்தாத்தா அவர்கள், அரும்பாடுபட்டு மீட்டெடுத்தார். மீட்டெடுத்த அந்த சிலவற்றைப் பார்த்து தான் நாம் மலைத்து நிற்கிறோம். அதனை வைத்து தான் தமிழ் மொழியின் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறோம்.  ஆனால் மீட்கப்படாமல் போனவை எத்தனை எத்தனை? தமிழன்னையைத் தவிர யாரறிவர்?

உ.வே.சா அவர்களின் இளமைப் பருவம்

உவேசா அவர்கள், 1855 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, சோழ வள நாட்டில், தஞ்சைத் தரணியில், இன்றையத் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, உத்தமதானபுரம் எனும் நல்லூரில், வேங்கட சுப்பையருக்கும், சரஸ்வதி அம்மையாருக்கும், வீட்டின் தலைமகனாக, தமிழன்னையின் தவப்புதல்வனாகப் பிறந்தார்.  உ.வே.சா, சிறுவயதிலேயே தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டு கல்வி பயின்றார்.

அவரின் தந்தையார் இசைக் கச்சேரிகளும், பிரசங்கங்கள் செய்தும் வாழ்க்கை நடத்தி வந்தார்.  ஆனால் அது அவர்கள் வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. அவர்கள் குடும்பம் வறுமையில் வாடியது. சரித்திரத்தை உற்று நோக்கினால், பெரும்பாலும், தமிழ் புலவர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், வறுமை தான் எப்போதும்,  இணைபிரியாமல், துணையாக இருந்து வந்திருக்கிறது, என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.  உவேசா வருங்காலத்தில் மிகப் பெரிய தமிழறிஞர் ஆவார் என்பதை முன் கூட்டியே தெரிந்ததோ என்னவோ, அவரின் சிறுபிராயத்திலிருந்தே வறுமை அவருடன் தொடர்ந்து வந்தது.

வறுமையின் காரணமாக, அவர்கள் பல ஊர்களுக்கு செல்ல நேர்ந்தது, இருப்பினும், மனம் தளராத உவேசா, அந்தந்த ஊர்களில் உள்ள தமிழறிஞர்களிடம், விடாமுயற்சியுடன், தமிழ் கற்றுத் தேர்ந்தார். நாகப்பட்டின மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனல், தமிழ் கற்பித்துக்கொண்டிருந்த புகழ்பெற்ற, பெரும் தமிழறிஞராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் ஐந்து ஆண்டுகள், தமிழ் கற்று, மகாவித்துவானிடம் தமிழ் கற்க வேண்டும் என்ற அவரின் வேட்கையும் ஒரு வழியாக நிறைவேறியது.

உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டு

தமிழாசிரியராக தமது வாழ்க்கையைத் தொடங்கிய, உ.வே.சா அவர்கள், தமது 23 ஆம் வயதில், தமிழ் நூல் ஒன்றைப் பதிப்பித்து வெளியிட்டார்.  அதை தொடர்ந்து,  நூற்றுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களுக்கு அச்சு வடிவம் கொடுத்தார்.  கும்பகோணம், சிதம்பரம், சென்னை என பல ஊர்களில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த போதும், தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியையும் செய்து வந்தார். தமிழ் நூல்களை அச்சுப் பதிப்பித்தது மட்டுமன்றி, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏட்டுச் சுவடிகளையும், கையெழுத்து ஏடுகளையும் சேகரித்து வைத்து இருந்தார்.

உ.வே.சா, பழந்தமிழ் இலக்கியங்கள், மற்றும் ஓலைச்சுவடிகள் இருக்கும் இடங்களைத் தேடி தேடி அலைந்து அவற்றை எல்லாம் U V Swaminatha Iyer 2006 stamp of India
சேகரித்தார்.  அவற்றை கண்டுபிடிக்க அவர் பெருமுயற்சி செய்தார். அதன் விளைவாக, அவரால் பல நூல்களை பதிபிக்க முடிந்தது.  ஓலைச்சுவடிகளை பதிப்பிப்பதற்கு முன், அவற்றை எல்லாம் முழுதுமாகப் படித்து, கரையான் அரிப்புகளால் அல்லது வேறு காரணங்களால் அழிந்தோ மறைந்தோ போன எழுத்துகள், சொற்களை ஆகியவற்றை இனம் கண்டு, அவற்றையெல்லாம் சரி செய்தபின்னர் தான் பதிப்பித்தார்.  அதோடு மட்டுமல்லாமல், அந்த நூலைப் பற்றிய குறிப்புகள், நூலாசிரியர் பற்றியக் குறிப்புகளையும் தொகுத்து வழங்கி அந்த நூல்களைப் பதிப்பித்தார். இதற்காக அவர் பட்ட துன்பங்கள் பல.  தமது சொத்துகளையும் விற்க நேர்ந்தது.  ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தமிழ்த்தாயிற்கு தலைமகனாகத் அருந்தொண்டாற்றினார்.

சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நாம் பேசி மகிழ்வதற்கு உ.வே.சா அவர்கள் தான் முக்கிய காரணம்.  இவரது இந்த அரிய பணி இல்லாதிருந்திருந்தால், தமிழ் உலகம் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பற்றி தெரிந்துகொள்ளாமலேயே போயிருக்கும்.  புறநானூறு பற்றி புரிந்துகொள்ளாமலேயே போயிருப்போம்.

உ. வே. சா அச்சில் பதிப்பித்த சில முக்கிய இலக்கியங்கள்:

சீவக சிந்தாமணி

மணிமேகலை

சிலப்பதிகாரம்

புறநானூறு

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப் பாட்டு

பட்டினப் பாலை

மலைபடுகடாம்

தன் கடைசி மூச்சு வரை அவர் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வந்துள்ளார்.  உ.வே.சா அவர்கள் பதிப்பித்த மொத்த நூல்களின் விவரம்:

நீலி  இரட்டை மணிமாலை     1874

வேணுவனலிங்க விலாசச் சிறப்பு     1878

திருக்குடந்தைப் புராணம்   1883

மத்தியார்ச்சுன மான்மியம் 1885

சீவக சிந்தாமணி     1887

கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது  1888

திருமயிலைத் திரிபந்தாதி  1888

பத்துப் பாட்டு மூலமும் உரையும்     1889

தண்டபாணி விருத்தம்     1891

சிலப்பதிகாரம்   1892

திருப்பெருந்துறைப் புராணம்     1892

புறநானூறு 1894

புறப்பொருள் வெண்பா மாலை  1895

புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த

சங்கம்    1898

மணிமேகலை  1898

மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898

ஐங்குறு நூறு   1903

சீகாழிக் கோவை     1903

திருவாவடுதுறைக் கோவை     1903

வீரவனப் புராணம்    1903

சூரைமாநகர்ப் புராணம்     1904

திருக்காளத்த் நாதருலா    1904

திருப்பூவண நாதருலா     1904

பதிற்றுப் பத்து  1904

திருவாரூர்த் தியாகராச லீலை  1905

திருவாரூருலா 1905

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்     1906

தனியூர்ப் புராணம்    1907

தேவையுலா    1907

மண்ணிப்படிக்கரைப் புராணம்    1907

திருப்பாதிரிபப் புலியூர்க் கலம்பகம்    1908

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்

பிரபந்தத் திரட்டு 1910

திருக்காளத்திப் புராணம்   1912

திருத்தணிகைத் திருவிருத்தம்   1914

பரிபாடல்  1918

உதயணன் சரித்திரச் சுருக்கம்   1924

பெருங்கதை    1924

நன்னூல் சங்கர நமச்சிவாயருரை     1925

நன்னூல் மயிலை நாதருரை    1925

சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்    1928

தக்கயாகப் பரணி     1930

தமிழ்விடு தூது 1930

பத்துப் பாட்டு மூலம் 1931

மதுரைச் சொக்கநாதர் உலா     1931

கடம்பர் கோயிலுலா 1932

களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932

சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்  1932

பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது   1932

பழனி பிள்ளைத் தமிழ்     1932

மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932

வலிவல மும்மணிக் கோவை   1932

சங்கரலிங்க உலா    1933

திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933

பாசவதைப் பரணி    1933

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்

சரித்திரம் – பகுதி 1   1933

சங்கர நயினார் கோயிலந்தாதி  1934

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்

சரித்திரம் – பகுதி 2   1934

விளத்தொட்டிப் புராணம்   1934

ஆற்றூர்ப் புராணம்   1935

உதயண குமார காவியம்  1935

கலைசைக் கோவை  1935

திரு இலஞ்சி முருகன் உலா    1935

பழமலைக் கோவை  1935

பழனி இரட்டைமணி மாலை    1935

இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை  1936

கனம் கிருஷ்ணயைர் 1936

கோபால கிருஷ்ண பாரதியார்   1936

திருநீலகண்டனார் சரித்திரம்     1936

திருமயிலை யமக அந்தாதி     1936

திருவள்ளுவரும் திருக்குறளும்  1936

நான் கண்டதும் கேட்டதும் 1936

புதியதும் பழையதும் 1936

புறநானூறு மூலம்    1936

பெருங்கதை மூலம்  1936

மகாவைத்தியநாதையைர்  1936

மான் விடு தூது 1936

குறுந்தொகை   1937

சிராமலைக் கோவை 1937

தமிழ்நெறி விளக்கம் 1937

திருவாரூர்க் கோவை 1937

நல்லுரைக் கோவை பகுதி 1     1937

நல்லுரைக் கோவை பகுதி 2     1937

நினைவு மஞ்சரி – பகுதி 1 1937

அழகர் கிள்ளை விடு தூது 1938

சிவசிவ வெண்பா    1938

திருக்கழுக்குன்றத்துலா    1938

திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை    1938

திருமலையாண்டவர் குறவஞ்சி 1938

நல்லுரைக் கோவை பகுதி 3     1938

குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு   1939

தணிகாசல புராணம்  1939

நல்லுரைக் கோவை பகுதி 4     1939

புகையிலை விடு தூது     1939

மகரநெடுங் குழைக்காதர் பாமாலை   1939

கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940

திருக்குற்றாலச் சிலேடை வெண்பா   1940

வில்லைப் புராணம்  1940

செவ்வைச் சூடுவார் பாகவதம்   1941

நினைவு மஞ்சரி – பகுதி 2 1942

வித்துவான் தியாகராச செட்டியார்    1942

உத்தமதானபுரத்திற்கு அருகாமையில் உள்ள கும்பகோணத்தில் தான், சுவாமி மலை எனும் திருத்தலத்தில், தந்தைக்கு மந்திரம் உபதேசித்த, தமிழ்க்கடவுள் என நாம் அன்புடன் அழைக்கும் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.  அவரின் பெயரைத்தான், உவேசா அவர்களுக்கு, அவரின் பெற்றோர் தெரிந்தோ, தெரியாமலோ சூட்டினார்களா, தெரியவில்லை.  தந்தைக்கு உபதேசித்து பெயர் பெற்றார் அந்த சுவாமி மலை நாதன். தமிழ் இலக்கியங்களை, மீட்டெடுத்து தமிழ் கூறும் நல்லுகிற்கு பரிசளித்துள்ளார் இந்த சுவாமிநாதன்.

உத்தமதானபுரத்தில் உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லம் ஆக்கப்பட்டுள்ளது. 1942-ல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) டாக்டர் உ. வே. சா நூல்நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

u.v.swaminathaiyar Residence

தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் அளப்பரியத் தமிழ்த்தொண்டை என்றும் மறவாதிருப்போம்.

தமிழ்த் தாத்தாவின் ஆசிர்வாதத்தோடு

இராம்ஸ் முத்துக்குமரன்

தொடர்புடைய கட்டுரைகள்

Three languages

மும்மொழி

International Mother Language Day

என் மொழி

வானம் மறைவிதில்லை...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net