Chidhambaram Natarajar Temple

ஆன்றோர்

Padikaatha Methai Kamarajar

படிக்காத மேதை

யார் இந்தப் படிக்காத மேதை? அது எப்படிப் படிக்காமலேயே ஒருவர் மேதையாக ஆக முடியும்?

முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் ஒருவர்.

இவரிடம் கட்டுக்கட்டாகப் பணம் கிடையாது. கைக்காட்டும் தூரம் வரை நிலப்புலன்கள் கிடையாது. ஏழு தலைமுறைக்கு வேண்டிய சொத்துசுகங்கள் கிடையாது. விதவிதமாக அணிந்துகொள்ள ஆடை அணிகலன்கள் கிடையாது. சொகுசு வாகனங்கள் கிடையாது. வங்கியில் கோடியில் வேண்டாம், இலட்சத்தில் வேண்டாம். ஆயிரக்கணக்கில் கூட இருப்புக்கிடையாது. வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ சொத்துகள் கிடையாது. தனக்குப்பின் தன் பெயரைச் சொல்ல ஒருவாரிசு கிடையாது. இவரிடம் பணியாட்களும் கிடையாது, அடியாட்களும் கிடையாது.  முக்கியமாக இவர் பெயரிலோ இல்லை இவரது குடும்பதார்கள் பெயரிலோ கல்லூரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் பல பல என எதுவும் கிடையாது.  இவ்வளவு ஏன், குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது.  அது மட்டுமல்ல, இவரிடம் கர்வம், செருக்கு, ஆணவம், அகங்காரம், அழுக்காறு, அலட்சியம், வெறுப்பு என எதுவும் கிடையாது.  இத்தனைக்கும் இவர் தமிழ் நாட்டின் முக்கியப் பதவியில் பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்.

யார் அந்தப் பைத்தியக்காரர் என்று கேட்கிறீர்களா?   அவர் தான், பொற்கால ஆட்சி தந்த, கல்விக்கண் திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.

அவர் பள்ளிக்கல்லூரிச் சென்றுப் படிக்கவில்லை, உண்மை தான்.  ஆனால், வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தில், ஒழுக்கம், நேர்மை, நியாயம் போன்ற பல துறைகளில், அனுபவம் என்றப் பாடங்களைப் படித்து, மக்கள் சேவை என்ற தேர்வில் பெரும் வெற்றிப் பெற்று, கர்மவீரர், கல்வித்தந்தை, கிங்மேக்கர், வெள்ளைவேட்டித் துறவி, காலா காந்தி (கருப்பு காந்தி), பெருந்தலைவர், மற்றும் நாட்டின் உயரிய விருதான பாரத் ரதனா உட்பட எண்ணற்ற பட்டங்களைப் பெற்றார்.

ஒன்றுமே இல்லாத அவரிடம் வேறு என்ன தான் இருந்தது?

அவரிடம், உழைப்பு, நேர்மை, நியாயம், தர்மம், கருணை, கனிவு, இரக்கம், எளிமைப் போன்ற எண்ணிலடங்கா நற்குணங்கள் இருந்தன.Kamarajar kingmaker
  மக்கள் யாரும் பசியாலும், வறுமையாலும் வாடக்கூடாது என்ற தாயுள்ளம் இருந்தது. துளியும் தன்னலம் இல்லாத, மக்கள் நலத்திலும், நாட்டு முன்னேற்றத்திலும் மட்டும் நாட்டம் கொண்ட நல்லெண்ணம் இருந்தது.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, உள்ளதை உள்ளபடி பேசுகின்ற உயர்ந்த உள்ளம் இருந்தது.  அலங்காரத் தமிழில் அடுக்குமொழியில் பேசத்தெரியாத, பாமரத் தமிழனும் பட்டென புரிந்துக்கொள்ளுமாறு பேசும் வெள்ளந்தியான நல்ல மனது இருந்தது.

உயர்ந்தக் கொள்கைப் பிடிப்பு இருந்தது.

மகாகவி பாரதி சொன்னது போல், "நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்" கொண்டு, எதிரிகளை எதிர்த்து நிற்கும் துணிவும், எவரிடமும் எதையும் எதிர்பார்க்காத கம்பீரமும் இருந்தது. அதே சமயம் அனைவரையும் மதித்து நேசிக்கும் அன்பும் இருந்தது.

குடும்பச் சூழ்நிலையால், தான் கல்விக் கற்கமுடியாமல் போனதுபோல, வேறு யாருக்கும் அந்நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக இலவசமாக மதிய உணவுடன் மாநிலம் முழுவதும், மாவட்டம் தோறும் பள்ளிகள் திறந்து கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற மெய்யான ஞானம் இருந்தது. அதனால் எண்ணிலடங்கா மாணவமாணவியர்கள் பசியின்றி கல்விக்கற்கும் வாய்ப்பு உண்டானது,

அவரிடம், நாட்டு நலனுக்கானத் தொலை நோக்குப் பார்வை இருந்தது. அதற்கானத் திட்டங்களும், அதை நிறைவேற்றிடும் உத்வேகமும் இருந்தது.

விவசாயத்திற்கு ஆதாரமான நீர்த்தேவையை உணர்ந்து, மாநிலம் முழுதும் ஏராளமான சிறு பெரு அணைகள் கட்டவேண்டும் என்ற பெருந்திட்டங்கள் இருந்தன.  தான் நினைத்தது போல, அத்திட்டங்களை நிறைவேற்றியதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பசுமையானது.

வேலை வாய்ப்பினை பெருக்குவதற்கும், நாட்டின் பொருளாதார நிலைமையை உயர்த்தவும் பெரிய பெரியத் தொழிற்சாலைகளை உருவாக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனை இருந்தது. அதன் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகளும், பெரும் அரசு நிறுவனங்களும் தமிழகத்தில் தொடங்கப்பட்டன, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகின.

அரசியல் வாழ்க்கையில், பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும், எதிர்கட்சிகளின் ஏகடியத்துக்கு ஆளானபோதும் கூட, அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், பதிலுக்கு பழித்துப் பேசாமல், கடமையை மட்டும் செய்கின்ற கண்ணியமும் கடும் உழைப்பும் இருந்தது.

தாய் மீது அளவற்றப்பாசம் கொண்டிருந்தாலும், தன் கடமையில் தவறிக்கூடத் தன் குடும்பத்தார் தலையீடு இருந்துவிடக்ககூடாது என்பதற்காக, தன் சொந்த ஊரிலேயே தாயைவிட்டுவிட்டு, தனியாக வாழுகின்ற தைரியம் இருந்தது.

திருமணமே செய்துகொள்ளாமல், நாட்டுக்காகவே வாழுகின்ற கட்டுப்பாடும் உறுதியும் இருந்தது.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்தும் கூட அதை தவறாக பயன்படுத்தாத நேர்மையும் துணிவும் இருந்தது. அரசாங்கமே செலவு செய்தபோதும் கூட ஆடம்பரத்தை விரும்பாமல், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எளிமை இருந்தது.

பதவிகள் தன்னைத் தேடிவந்த போது, மறுதலித்து, இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் பெருந்தன்மை இருந்தது.

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடல்"

என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப, தகுதியான பலரைத் தேர்ந்தெடுத்து பதவி வகிக்கச்செய்த அறிவும் ஆற்றலும் இருந்தது.  அதனால் தான் அவர் "கிங் மேக்கர்" என்றும் அழைக்கப்பட்டார்.

Kamarajar3
திரைத்துறையின் கவர்ச்சியிலும் புகழுரையின் மகிழ்ச்சியிலும் சிக்காமல், புகழை விரும்பாத, புகழுக்கு மயங்காத புதுமை அவரிடம் இருந்தது. முகஸ்துதியை விரும்பாத முதல் அமைச்சர், முதலமைச்சர் அவர் தான்,

இத்தனை அரிய நற்குணங்கள் இருந்ததனால் தான், அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனபின்னும் கூட அவரைப்பற்றி இன்றும் பெருமையோடு பேசுகிறோம். அவருடைய ஆட்சிக் காலத்தைப் பொற்கால ஆட்சி எனப் போற்றுகிறோம்.

இறக்கும் பொழுது அவரிடம் இருந்தது இரண்டு வேட்டி சட்டையும், சில நூறு ரூபாய் நோட்டுகளும் தான்.

தின வாழக்கையைத் தவ வாழ்க்கையாய் வாழ்ந்த, வலிமையான, அதே சமயம் எளிமையான, துறவி அவர். ஊருக்கு உழைத்த உத்தமர் அவர். பெருந்தலைவர் என்ற பெயருக்குப் மிகவும் பொருத்தமானவர்.

தமிழகத்தை இவர் ஆண்ட காலத்தில் நாம் வாழவில்லையே என்ற ஒரு ஏக்கம் பிறக்கிறது. அதே நேரம், அவர் வாழ்ந்த மண்ணில் தான் நாம் பிறந்தோம் என்ற மகிழ்ச்சியும் பிறக்கிறது. ஆனால் இப்படிப்பட்டவரையே தோற்கடித்து மகிழந்தவர்கள் தான் நம் மக்கள் என்று நினைக்கும் போது சற்று வருத்தமாகவும் இருக்கிறது.

படிக்காத மேதை என்று ஏன் சொல்லுகிறார்கள்?

அவர் பள்ளிக்கல்லூரி சென்று படிக்கவில்லை, பட்டங்கள் வாங்கவில்லை.  ஆனால் அனுபவத்தில் பாடம் படித்தவர். அதன் மூலம் வாழ்க்கையைப் படித்தவர். அதனால் தான் அவரால் பல நல்ல செயல்களைச் செய்யமுடிந்தது. தான் படிக்காவிட்டாலும் பலர் படிக்க வழிசெய்ய முடிந்தது. பொருளாதார பட்டப் படிப்பு படிக்காமல் பொருளாதாரத்தைப் பற்றி அவர் கூறிய ஒரு சுவையானச் செய்தியைப் பார்க்கலாம்.

தேர்தல் என்றாலே, இப்பொழுதெல்லாம்,  விதவிதமாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதைப் பார்க்கிறோம்.  அதை நிறைவேற்றுகிறார்களா இல்லையா எனபதைப் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறையில்லை. ஒவ்வொரு கட்சியும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றவாறு வாக்குறுதிகளால் நம்மை திக்குமுக்காட வைக்கிறார்கள். தமிழகத்தை இலவசத்திற்கு அடிமையாக்கி, அதற்கு மக்களைப் நன்கு பழக்கப்படுத்தி விட்டுவிட்டார்கள். தேர்தல் என்றாலே, மக்கள் எல்லோரும், யார்  என்ன தருவார்கள் என்று எதிர்பார்த்து நிற்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் வாக்குறுதியாக, பணம் கொடுப்பது பற்றி பெருந்தலைவர் காமராசர் அந்தக்காலத்திலேயே என்னக் கூறினார் தெரியுமா?

அவர் முதல் அமைச்சராக இருந்த பொழுது, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராசர் அவர்கள், தனக்கே உரிய பாணியில்:

Kamarajar4

"நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....  ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை...

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு..... எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்...

அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்... இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது....

கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்...அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெயின்னு ஒன்னும் கெடைக்காது....விவசாய வேலைக்கு ஆள் வராது... ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்...எப்படி வருவான்னேன்.....?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க....கட்டு கட்டா பணம் இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்...?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்...!

ஊரே தூக்கம் வராம கெடக்கும்.... இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.... வெத்து பேப்பர்தான்னேன்....உழைப்புதான் பணம்ன்னேன்...

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்....

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது.... ஒன்னுமே கெடையாது....இப்ப தெரிஞ்சுதா...?

.உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்..."

பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்களின் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனிதன், படிக்காத மேதை ... அன்று அவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை. ஐம்பது வருடங்கள் ஆன பின்னரும், இன்னும் இலவசத்தை மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலைமையை என்னவென்று சொல்வது.

பெருந்தலைவர் காமராஜரை மறக்காத

இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Chennai Rain Nov 2023

சென்னை மழை

எங்கள் தாத்தா

எங்கள் தாத்தா

காமராசர் இன்று வந்தால்...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net