கப்பலோட்டியத் தமிழன்
செப்டம்பர் 5, 2021.
கப்பலோட்டியத் தமிழன், செக்கிழுத்தச் செம்மல், தென்னாட்டுத் தீரர் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வ. உ. சி என்று அன்புடன் அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 - நவம்பர் 18 1936) நாம் மறக்கக் கூடாத, மதிப்பு மிக்க ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வ.உ.சி அவர்கள் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில், உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர், சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞரானார். பல வழக்குகளில் சிறப்பாக வாதாடிப் புகழ் பெற்றார். வசதியற்றவர்களுக்கு இலவசமாக வாதாடினார்.
வழக்கறிஞரான அவர், மகாகவி பாரதியார் அவர்களால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
வ.உ.சியும் அவரது நண்பர் சுப்பிரமணி சிவாவும் பல பொதுக்கூட்டங்களும் ஊர்வலமும் நடத்தி சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டினார்கள். வணிகம் செய்ய வந்து, நாட்டையே ஆக்கிரமித்துக்கொண்ட ஆங்கிலேயர்களை, அதே வணிகங்கொண்டு எதிர்க்க வேண்டுமென முடிவு செய்தார். அதனால் தம் சொத்துகளை எல்லாம் விற்று, ஆங்கிலேயர் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. இரண்டு கப்பல்களை வெற்றிகரமாக இயக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
இதை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேய அரசு, இவர் மீது பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு, 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரட்டை ஆயுள் தண்டனை (40 ஆண்டுகள்) விதிக்கப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது. சிறையில் பல இன்னல்களுக்கு ஆளானார். அவர் தலைமுடி மழிக்கப்பட்டு, கை கால்களில் விலங்கிடப்பட்டு, நல்ல உணவு கொடுக்கப்படாமல் துன்புறுத்தப் பட்டார். எண்ணெய் இழுக்கும் செக்கில், மாட்டுக்குப் பதிலாக, இவரை செக்கிழுக்க வைத்துக் கொடுமைப் படுத்தினர். உதவி கேட்டு வந்தவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்து சிவந்த அவரின் கரங்கள், சிறையில் செக்கிழுத்து இரத்தம் கொட்டிச் சிவந்தது. அவரது மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் நண்பர்கள் மேல்முறையீடு செய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். ஆறு ஆண்டுகள் கடுந்தண்டனைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.
பெருஞ்செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அவர், தன் சொத்துகள் முழுவதையும் சுதந்திரப் போராட்டுத்துக்காக அர்பணித்தார். சிறையில் பெரும் துன்பம் அனுபவித்து, சிறையிலிருந்து வெளி வந்தப்பிறகு, ஒரு வேளை உணவின்றி தவிக்கும் நிலைமைக்கு ஆளானார். அவர் சிறையில் இருந்த சமயத்தில், ஆங்கிலேய அரசால் அவரது கப்பல் நிறுவனம் மூடப்பட்டது. ஏற்கனவே தமது சொத்துகளை எல்லாம் கப்பல் நிறுவனம் தொடங்குவதற்காக விற்றுவிட்டதாலும், தமது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டதாலும், சிறையில் இருந்து வந்த பிறகு, அவர் தன் நண்பர் ஒருவரின் அரிசிக்கடையில் மாத சம்பளத்துக்கு வேலைக்குச் சேரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் அந்த வேலையும் பறிபோனது. தினசரி வாழ்விற்கு மிகவும் சிரமப்பட்டார். குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார். ஆனால், வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சிக்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை. பசி என்று வந்தவர்களுக்கு உணவளித்தவர், பல நாட்கள் உணவின்றி பசியால் வாடினார். அப்படிப்பட்ட சிரமமான சூழ்நிலையிலும், அவர் தொடர்ந்து இந்திய சுதந்திரத்துக்காக தன்னால் முடிந்த வரை, முடிந்த வழிகளில் போராடினார்.
மனமுடைந்து சிரமப்பட்ட போது, தமிழ் தான் அவருக்கு கைக்கொடுத்தது. வ.உ.சி அவர்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப்பெற்றிருந்தார். தமிழ் மொழியில் உள்ள பல இலக்கியங்களைப் படித்து அவற்றை பற்றி பல கட்டுரைகள் எழுதினார். பல நூலகளையும் எழுதியுள்ளார். சில ஆங்கில நூல்களை மொழிப்பெயர்த்தும் உள்ளார். ஆன்மிகச் சொற்பொழிவு, புத்தகம் எழுதுதல் என தமது இறுதிக் காலங்களைக் கழித்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார். ஆனால் பல்லாயிரக் கணக்கான, சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போல், இவரும் சுதந்திரத்துக்கு முன்பே, 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் இறைவனடிச் சேர்ந்தார். அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது. ஆங்கிலேயர் ஆட்சி என்றக் கப்பலை மூழ்கடிக்க காரணமாக இருந்த வ.உ.சி அவர்கள் நம் மனங்களில் என்றும் கம்பீரமாக வலம் வருவார்.
"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.
(விக்கிப்பீடியா)
வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில், திரைப்படமாக வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றி, தமது சிறப்பான நடிப்பினால், வ.உ.சி அவர்களை நம் கண் முன்னே நிறுத்தினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் இத்திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார்.
இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு, நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாறு தெரியாது. வரும் தலைமுறை வ.உ.சி.,யின் தியாகத்தை அறிய வேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த கட்டுரையைப் பதிவிடுகிறேன்.
அன்புடன் என்றும்
இராம்ஸ் முத்துக்குமரன்.