ஆறுகள் ஏரிகள்
ஆக்ரமிக்கப்பட்டு
கொள்ளையடிக்கப்படுவதால்,
ஊருக்குள் தப்பியோடியது
நீர்!
பழுதடைந்தது
அரசு இயந்திரம்!
கோடிகள் செலவுசெய்து
சீரமைக்கப்பட்ட(?)
மழை நீர் வடிகால்களில்,
வழிந்தோடியது
அத்தனைக் கோடிகளும்!
ஒவ்வொரு வருடமும்
மழை வெள்ளத்தால்
கப்பல் ஏறுகிறது மானம்,
கவலைப்பட தான் இல்லை
யாரும்!
மூடப்படாத பள்ளங்களை எல்லாம்
வெள்ளம் வந்து
மூடிச் செல்கிறது,
மூடிய பள்ளங்களில் எல்லாம்
மரணம் ஒளிந்துக்கொண்டு
உயிர்களைத் தேடிக் கொல்கிறது!
விளம்பர மோகத்தில்
மூழ்கிவிட்டவர்களுக்கு
நீரில் மூழ்கிய நகரை
வலம்வர நேரமில்லாமல்
போய்விட்டதா?
ஒவ்வொரு வருடமும்
கொட்டித் தீர்க்கிறது
நல்மழை
ஒவ்வொரு வருடமும்
திட்டித் தீர்ப்பது மட்டுமே
நம் நிலை,
மழை மீது
பிழை இல்லை!
"எவ்வளவு மழை பெய்தாலும்
தண்ணீர் தேங்காதாம்"
உண்மை தான் - எந்த
ஆறு, ஏரி, குளம் எதிலும்
தண்ணீர் தேங்குவதில்லை!
சிங்கப்பூர் கூட
சென்னையாக மாற
ஒரு வாய்ப்புண்டு,
எத்தனை ஆண்டுகளானாலும்
சிங்காரச் சென்னை
சிங்கப்பூராக மாற
சிறு வாய்ப்பாவது உண்டா?
பருவ மழை
பெய்யும் பொழுதெல்லாம்
சென்னை
வெனிஸ் ஆக
மாறுவது மட்டும் ஏனோ
மாறுவதில்லை
வருடம் தோறும்!
அறுபதுகளோடு முடிந்துவிட்டதா
நீர் மேலாண்மை?
காமராசர் விட்ட இடத்தில்
தொடங்க - மீண்டும் அதே
கர்மவீரர் தான் வரவேண்டுமோ?
வருத்தத்துடன்
இராம்ஸ் முத்துக்குமரன்.