(சென்னை மழை - டிசம்பர் 2023)
சென்னை!
அது என்ன
வங்க கடலின் ஓர்
அங்கமா?
வந்த நீரெல்லாம் இங்கேயே
தங்குமா?
கடல் நடுவில்
தீவுகள் உண்டு,
நகர் நடுவில்
ஏன் பல குட்டித்
தீவுகள் இன்று?
தலை நகரம் - இன்று
அலை நகரம் ஆனது
நல்ல நகரம் - இன்று
வெள்ள நரகம் ஆனது!
கன அடி கணக்கில்
கணந்தோறும் நீர் வருகிறது
நிலத்தடி நீர் மட்டும்
தினந்தோறும் ஏன் குறைகிறது?
வீடுகளைச் சுற்றி
கடல் போல தண்ணீர்
வாடும் மக்களுக்கு இல்லையே
குடித்திட
ஒரு சொட்டு நன் நீர்!
பச்சிளம் குழந்தைகள்
பசிப் பொறுக்குமா?
பார்த்திருக்கும் தாயிற்கு
மனம் பொறுக்குமா?
கூடி வாழ்ந்த மக்கள் இன்று
கூடிழந்த பறவைகளாய்
வீடிருந்த போதும் - விட்டு
ஓடி ஒளியும் அகதிகளாய்!
உயர்தட்டு மக்களும் - இன்று
துயர்பட்டு உணர்ந்தனர்
நடுத்தர மக்கள் - இன்று
நடுத்தெருவில் நின்றனர்
ஏழை மக்களோ - வழக்கம் போல்
ஏனென்று கேட்க
நாதியின்றி தவிக்கின்றனர்!
சோர்ந்துப் போன மக்களுக்கு
ஆறுதல் தரவும்
ஆபத்தில் உதவவும்
தேர்ந்தெடுத்த எவரும் - ஏன்
ஓடி வரவில்லை பதறி?
கேணி திருடு போனதாக
நகைச்சுவை கண்டது உண்டு - இங்கு பல
ஏரிகளே திருடு போயுள்ளது
மிகைப்படுத்தப்படாத உண்மையன்றோ?
குளம் குட்டைக் கூட
குறைந்து போனதாலே
நிலமெல்லாம் இன்று
குளமானது யார் தவறு?
வாய்க்காலும் இல்லை
வடிகாலும் இல்லை
கால்வாயும் இல்லை - கட்டுப்படுத்த
கடிவாளமும் இல்லை!
ஆறு செல்லும்
வழித்தடங்களில் - பல
தடங்கல்கள் உண்டு - ஆனால்
ஆறு இருந்த தடயம் சொல்ல
ஆற்று மணலே
ஆற்றில் இல்லை!
ஆற்றங்கரையில் தோன்றிய
நாகரிகம் - இன்று
ஆறுகளே மறையும் அளவிற்கு
வேகமாக மாறிவிட்டது - வாழ்வை
சோகமாக மாற்றிவிட்டது!
உவரி நீர் ஒருபக்கம்
உபரி நீர் ஒருபக்கம்
நடுவில் வாழும் மக்கள்
நாட்கள் என்றும் சிக்கல்
இப்படி தேங்கிட நீர்
அப்படி தூங்கிய தார்?
அதிகாரம் கையில் கொடுத்தும் - ஒரு
பரிகாரம் இல்லையே ஏன்?
உண்மையை சொல்லவேண்டிய
ஊடகங்கள் பல
உணமையை மறைத்துப் போடுவதேன்
நாடகங்கள்?
வினா நூறு எழுகிறது
விடை காண மறுப்பது ஏன்? - பகல்
கனா கண்டு களிப்பவர்கள்
நிஜம் உணர மறுப்பது ஏன்?
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க
மறந்ததே காரணம் - இனியும்
கற்றுக்கொள்ள மறுத்தால்
ஆறாதே ஏற்படும் ஓர் இரணம்!
வரலாறு காணாத மழையென
வருடா வருடம் கூறுவதே - நாம் காணும்
வரலாறு ஆகிப் போனது - புது
வருடமும் ஆட்சியும் மாறினாலும்!
இயற்கைக்கு நாம்
ஓர் இடர் தந்தால்
இயற்கை நமக்கதை
பேரிடராய்த் தருமே!
பேராசை பெரு நட்டம்
பாலபாடம் - எண்ணிப்
பாராமல் இருந்ததனால்
காலம் காலமாய் நேருதிந்த
அவலமெல்லாம்!
மனிதனின் சுயநலம்
இயற்கையை
கொஞ்ச கொஞ்சமாய் அழிக்கிறது,
வெகுண்டு தண்டிக்கும் இயற்கை
மனிதன் திருந்திட
வாய்ப்பொன்று
மீண்டும் அளிக்கிறது!
இனி
மேலாவது நாம் முயன்று
திருந்த வேண்டும்
இல்லையென்றால் இது
போல நேரும் இன்னல் நமக்கு
மீண்டும் மீண்டும்!
நம்மிடம் இருந்து
தொடங்கட்டும் நற்பணி
நாளைய நல்வாழ்விற்கு - இன்றே
முழுதாய் உன்னை அர்ப்பணி!
மக்கள் தான் முதலில்
திருந்த வேண்டும்
இல்லையேல் உணருங்கள்
எப்பொழுதும் - பொது
மக்கள் தான் முதலில்
வருந்த வேண்டும்!
தீவுகள் கண்டோம் இன்று
தீர்வுகள் காண்பது என்று?
உங்கள் ஒரு விரலில்
இருக்கிறது பெரும் சக்தி
சிந்தித்து செயல்படுவதில்
இருக்கிறது அரும் யுக்தி!
சிந்திப்போம் செயல்படுவோம்
இராம்ஸ் முத்துக்குமரன்.