Chidhambaram Natarajar Temple

இயற்கை

Tsunami, 26 Dec 2004
Featured

சுனாமி (26, டிசம்பர், 2004)

அது
உலக வரலாற்றில் ஒரு
கருப்பு தினம் - கடல்
அலைகள் வெளிப்படுத்திய - அரு
வருப்பு சினம்,
வெளிச்சம்போட்டு காட்டியது
இயற்கை தனது கோர முகம்,
இனியும் வேண்டாமே
இது போலவொன்று; கோடி யுகம்!

ஆழிப் பேரலைகள்
ஆடிய கோரத் தாண்டவம்
ஊழிக் காலத்தை நினை
வூட்டிய அதிகார ஆணவம்!

அது கடலின்
எல்லைத் தாண்டிய ஒரு
தீவிர வாதம்,
சொல்லில் அடங்காது
ஏற்படுத்திய பயங்கர சேதம்,
நீர் இருந்தும்
ஈரம் இல்லாமல் போன ஒரு
பஞ்ச பூதம்,
உண்மையாய் கடலே
நீயொரு - நய
வஞ்சக பூதம்!

மனிதனுக்கு மட்டுமே
சொந்தமில்லை
ஆக்ரமிப்பு என்று,
ஆக்ரோஷமாய் காட்டியது
ஆர்பரித்து வந்து அபகரித்த
ஆழிப் பேரலைகள் அன்று!

கடலின் அந்த பேராசை
மனித இனத்திற்கு
அல்லவா பெருநட்டம்!

இன்று,
ஆண்டுகள் பல
உருண்டோடி விட்டது - உயிர்
மாண்டவர் குடும்பங்களில்
வெற்றிடம் இன்னும்
இருண்டுபோய் தான் உள்ளது!

பாம்பின் பற்களா
கடலைகளே நீவிர்?
உயிர்கள் அத்தனையும்
மாண்டதெப்படி
தீண்டியவுடனே?

வேலியே பயிரை
மேய்ந்தது போல
ஆழியே உயிரை
மாய்த்தது ஏன்?

பல இலட்ச உயிர்களை
சில சொற்ப நொடிகளில்
இல்லாமல் செய்த
பொல்லாத கடலே!

நீ கொன்ற உயிர்களுக்கு எல்லாம்
கல்லறை அமைத்தால்
கடற்கரையே இருக்காது
மணற்பரப்பே தெரியாது!

கடல் அலைகளே,
தாவி வரும் உம்மைக் கண்டு
ஆனந்தம் அடைந்தோம் அன்று - பெரும்
பாவி என்று உணர்ந்து
அச்சம் அடைகிறோம் இன்று!

மறைந்திருந்து தாக்கும்
மனிதர்களைப் போல
மறைந்திருந்து தாக்கியது
என்ன நியாயம்?
மனிதர் போல் மாறினால்
உன் பெருமை என்னவாகும்?

மீனினம் கரை ஒதுங்கிப்
கண்டதுண்டு - பல
மானிடர் கரை ஒதுங்கி
கண்டோமே அன்று!

அலையோசை தாண்டிக்
கேட்டதே அன்று - மக்களின்
அழும் குரலோசை,
கடற்கரை எங்கும்
மரண ஓலம்,
இரத்தச் சிவப்பாய்
அல்லவா தெரிந்தது
கடலின் நீலம்!

மக்களை
வாரி எடுத்துக் கொல்வாய்
என்று எண்ணித் தான் உன்னை
வாரிதி என்றார்களா?
ஓரிரு நொடிகளி
சாகடித்து விடுவாய்
என்று எண்ணி தான் உன்னை
சாகரம் என்றார்களா?

ஆழித்தாய் என்ற பெருமையை
அழித்தாய் என்று ஏன்
சிறுமைப்படுத்திக் கொண்டாய்?

பேரலை என்னும்
ஓர் படைக் கொண்டு
போரிட்ட கடலே,
இரத்தமின்றி யுத்தம்
என்பதை
தவறாகப் புரிந்துக்கொண்டாயா?

கால்த்தடங்களை யெல்லாம்
கழுவிச்செல்லும் கடலலையே,
எத்தனை பேரலைகள் வந்தாலும்
கழுவ முடியாது
உன்னால் ஏற்பட்ட பெரும்கறையை,
தினம் தினம் நினைவூட்டும்
உன்னால் அழிந்த
பல தலைமுறையை!

இனி
கடற்கரை என்று சொல்வதை விட
கடற்கறை என்பது தான்
பொருத்தமாய் இருக்கும்!

கடற்கரை மணலில்
வீடுகட்டி விளையாடுகையில்
அலை வந்து கவர்ந்து சென்றால்
மகிழ்ந்தோம் என்பதால்,
கரையோரம் அமைந்த
வீடுகளையுமா கவர்ந்து செல்வாய்?

அன்று
எங்கள் கண்ணீரால்
கூடியதே கடல் நீர் மட்டம்,
புவியை அழிப்பது தானா
உனது நெடுநாள் திட்டம்?
உன்னைத் தண்டிக்க இல்லையே
எம்மிடம் சட்டம்
என்று அடங்கும் உனது
இந்த அராஜக கொட்டம்?

உனது
இன்னொரு முகத்தை
காண வைத்தாயே,
கடல் அன்னையென்று
சொன்ன எங்களை
நாண வைத்தாயே - பல
காலம் மனிதர்களை
வாழ வைத்தாயே - இனி
மேலும் மனிதர்களை
வாழ வை தாயே!

சாது மிரண்டால்
காடு கொள்ளாது,
கடலே நீ மிரண்டால் - எந்த
நாடும் கொள்ளாது,
போதும் போதும் விட்டுவிடு
எமை மேலும் கொல்லாது
வாழ்த்தும் உன்னை உலகம் - பழி
யேதும் சொல்லாது!

வானம் காற்று நெருப்பு - இம்
மூன்றும் எச்சரிக்கை தருமே
ஏதோ ஒரு வகையில் - இந்த
நீரும் நிலமும் மட்டும்
ஏன் எச்சரிப்பதில்லை
ஏதும் உச்சரிப்பதில்லை,
பூகம்பமும் சுனாமியும்
வந்திடும் முன்னர்?

கடலே,
சுனாமி என்ற சொல்
தமிழில் இல்லாமல் இருந்தது,
தமிழுக்குப் புது சொல்லைத் தந்தாய்
தமிழர்களுக்கு புது தொல்லைத் தந்தாய்
இனியும் வேண்டாம்
இது போன்ற - பேர
ழிவிற்கான புது சொற்கள்!

இருபதாம் ஆண்டு
கனத்த நினைவுகளுடன்

இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sunrise in the beach

திரைகடல் கரைதனில்...

Water bodies names in Tamil

நீர் நிலைகள்

Water

தண்ணீர்... தண்ணீர்...

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net