Chidhambaram Natarajar Temple

Water

தண்ணீர்... தண்ணீர்...

"பயங்கர தாகமாக இருக்கே, குடிக்க ஒரு வாய் தண்ணீர் கிடைக்காதா" என்று எல்லோருமே ஒரு முறையாவது சொல்லி இருப்போம்.

"தண்ணியில்லாம பயிரெல்லாம் காஞ்சு போச்சு"
"அவன் காச தண்ணியா செலவழிக்கிறான்"
"பால் ரொம்ப தண்ணியா இருக்கு"
"தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவாங்க..."
"காவிரி தண்ணீருக்குப் போராட்டம்"
"மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப் பட்டது"
"அதிக மழையால் தண்ணீர் வடிய நாளாகும்"
"சம்மர் வந்தாலே தண்ணி பஞ்சம் தான்"
"நல்லா தண்ணி காட்டுறான்..."

இப்படி தண்ணீர் தண்ணீர் என்று தண்ணீர் பற்றி நாம் பேசாத, எண்ணாத நாட்களே இல்லை. ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால், தண்ணீர் என்று நாம் பயன் படுத்தும் சொல், அது உண்மையாகவே நாம் என்ன நினைத்து சொல்கிறோமோ, அதற்கான சரியான சொல் இல்லை.

ஆங்கிலத்தில் "வாட்டர்" என சொல்லப்படும் அந்த திரவத்துக்குத் தான், நாம் தண்ணீர் என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் "வாட்டர்" என்ற அந்த சொல்லுக்கு, தமிழில் நீர் என்பது தான் சரியான சொல்.

தண்ணீர் என்பது குளிர்ந்த நீர், தண் என்றால் குளிர்ச்சி என்று பொருள். தண் + நீர் = தண்ணீர். சிலர், தாகத்தை தணிக்கும் நீர், தண்ணீர் என்பார்கள். அது சரியல்ல, குளிர்ந்த நீர் என்பது தான் சரி.

இதே போல் சில சொற்கள்:

கண்ணிலிருந்து வடியும் நீர் - கண்ணீர் (கண் + நீர்)
சிவப்பாக இருக்கும் நீர்        - செந்நீர் (செம்மை + நீர்)
குடிக்கும் நீர்                          - குடிநீர் (குடி + நீர்)
நல்ல நீர்                                 - நன்னீர் (நல்ல + நீர்)

எனக்குத் தெரிந்து ஆங்கிலம், ஹிந்தி, தெலுகு போன்ற மற்ற மொழிகளில் எல்லாம் நீர் என்பதற்கு இணையான சரியான சொற்களை தான் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு

வாட்டர் (Water)
கோல்ட் வாட்டர் (Cold Water)
பானி (पानी)
தண்டா பானி (ठंडा पानी)

இப்பொழுதெல்லாம், தமிழ்நாட்டில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், தம்பி "பானி" கொடு என்று ஹிந்தியில் தெளிவாக கேட்கிறோம், ஆனால் தமிழில் மட்டும் தண்ணீர் என்று தான் சொல்கிறோம். அதே நேரத்தில், குளிர்ந்த நீர் வேண்டுமென்றால், "குளிர்ந்த தண்ணீர்" அல்லது "கொஞ்சம் கோல்டு வாட்டர் கொடுங்க" என்று கேட்கிறோம்.

தமிழ்ர்களாகிய நாம் மட்டும் தான், சாதாரண நீர், குளிர்ந்த நீர் ஆகிய இரண்டுக்கும் வேறுபாடில்லாமல் எல்லாவற்றிற்கும் தண்ணீர் என்றே சொல்லிப் பழகிவிட்டோம். நம் தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை, அப்படி இருக்கையில் சரியான சொற்களை உபயோகிப்பது தான் அந்த சொற்களை நாம் மறந்துவிடாமல் இருக்க வழி செய்யும். பொது மக்கள் மட்டும் அல்ல, கற்றவர்கள், கல்லாதவர்கள், அறிஞர்கள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என எல்லாருமே நீருக்குப் பதில் தண்ணீர் என்று தான் பயன்படுத்துகிறார்கள்.

அதே போல் வெந்நீர் என்பது சுடு நீர். ஆனால் நாம் சுடு தண்ணீர் என்று சொல்கிறோம்.  சுடு தண்ணீர் என்றால், சூடான குளிர்ந்த நீர் என்று பொருள் வருகிறது. எண்ணிப்பார்த்தாலே நகைப்பாக இருக்கிறது அல்லவா?

பல தமிழ்ச்சொற்களை நாம் இப்படித்தான், சரியான புரிதல் இல்லாமல் பயன்படுத்தி வருகிறோம். எப்படி தண்ணீர் என்பது வாட்டர் இல்லையோ அப்படி தான் எண்ணெய் என்பது ஆயில் இல்லை. அது பற்றிய கட்டுரையை இங்கே காண்க...)

"நீர்இன்று அமையாது உலகு" என்றார் வள்ளுவ பெருந்தகை, தண்ணீரின்று என்று சொல்லவில்லை.

"வரப்பு உயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்" என்றார் ஔவைப்பாட்டி.

மிகவும் தாகமாக இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர், இல்லை இல்லை, நீர் அருந்திவிட்டு வருகிறேன். நான் வசிக்கும் இந்த இடத்தில் இருக்கின்ற குளிருக்கு, தண்ணீர் குடிக்கக்கூடாது, சூடான வெந்நீர் தான் குடிக்கவேண்டும்.

சரி... இந்தக் கட்டுரையைப் படித்த பின், நீர் இனி நீர் என்று தான் சொல்லுவீர் என்று நம்புகிறேன் :-)

 

நன்றி
இராம்ஸ் முத்துக்குமரன்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sunrise in the beach

திரைகடல் கரைதனில்...

Tsunami, 26 Dec 2004

சுனாமி (26, டிசம்பர், 2004)

Water bodies names in Tamil

நீர் நிலைகள்

உங்கள் மின்னஞ்சல் தேடி செய்திமடல் வர‌

என்னைப் பற்றி

எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன்.  தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.

தொடர்பு கொள்ள‌

இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net